நீரினில் மூழ்கி நினைப்பொழிதல் ஒரு விடுதலை. ஆனால் நீத்தோருக்கு நெறியின்மை இழைத்தோருக்கு அவ்விடுதலை இல்லை. வஞ்சத்தால், சினத்தால், பிழை விழைவால் மட்டுமல்ல அன்பால், குருதியுறவால்கூட நெறியின்மையை இழைக்கலாகும். அவரவர் எச்சம் என காணப்படும் மைந்தருக்கே அக்கடன் எஞ்சவும் கூடும்.
குருக்ஷேத்திரத்திற்குப் பிந்தைய நீர்க்கடன்களினூடாக நிகழ்ந்த ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரும் தொகுத்துக் கொள்வதன் சித்திரம் இந்நாவல். ஒவ்வொருவருக்கும் எஞ்சுவது வெறுமையும் துயரும்தான். வாழ்க்கையை அளித்துப் பெற்றுக்கொள்பவை வாழ்க்கைக்கு நிகரென்று ஆவதில்லை என எளிய மானுடர் உணரும் தருணங்கள்.
குருக்ஷேத்திரப்பெருங்களத்தில் எஞ்சிய நெருப்பை அணைத்துப் பெய்த மழையின் தொடர்ச்சி. அழியாநீர் என ஒழுகும் கங்கையின் கரை. முதற்கதிரின் ஒளியில் புலிமுனைப் பனித்துளி செஞ்சுடர் என ஒளிர்கிறது. சருகுகளை, பசும்புல்லை,பெருங்காட்டை எரித்துவிடும் என்பதுபோல. அது அனலேதான், நீரிலெழும் அனல். குளிர்ந்தது, சினம்தணிந்தது, எனினும் ஒளியால் அது எரியே.எனில் கங்கை என்பது மாளாதீக்கொழுந்து. கடல் என்பது அனல்பெருவெளி.
அனலென்று சுடும் நீரின் கதை. நீரையும் அனலாக்கிய சிலவற்றின் கதை இந்நாவல்.
என் தந்தை மேல் எனக்கு அன்பிருந்தது என்று நான் உணர அவர் மறைந்து பத்தாண்டுகள் கடந்து எனக்கு மைந்தன் பிறக்கவேண்டியிருந்தது. அவர் என் அம்மாவை நடத்தியமுறை மேல் எனக்கு கண்டனம் இருந்தது. அதை அவரிடம் நான் சொல்லவில்லைதான், சொல்லத்தேவையிருக்கவில்லை. அவ்வண்ணம் தந்தையை கண்காணிக்க, மதிப்பிட மைந்தனுக்கு உரிமையில்லை என உணர மேலும் இருபதாண்டுகள் ஆகியிருக்கின்றது.
என் எழுத்தின்மேல் ஆர்வம் கொண்டவர் அல்ல. தடுக்கமுயன்றவரும்கூட. ஆனால் என் வெற்றிகளை விரும்பியிருந்தார், என்னைப்பற்றிப் பெருமிதம்கொண்டிருந்தார் என நான் அறியும்போது அவர் உயிருடன் இல்லை. இந்நாவல்நிரையின் அனைத்துநூல்களும் என் இலக்கியப்பயணத்தில் ஆசிரியர் என்று அமைந்தவர்களுக்கு படைக்கப்பட்டவை.அருண்மொழிக்கும் அவ்வாறே. எவ்வகையிலும் என் இலக்கியத்திற்குத் தொடர்பற்றவர் என் தந்தை. ஆனால் இருந்திருந்தால் முழுமகிழ்வை அவரே அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன்
நீத்தார் மறைந்தவரே ஒழிய அழிந்தவரல்ல என்று இன்று அறிவேன். நாம் இங்கிருப்பது ஒரு தொடர்ச்சியே என்றும் எனவே இனியிருப்பதும் தொடர்ச்சியே என்றும் அறிவேன். ஆகவே இப்போதும் சொல்லிக்கொள்ளமுடியும், அப்பா இது உங்களுக்காக என்று. பிழைபொறுத்தல் என்றும் இந்நூலை அவருக்காக படைக்கமுடியும். அவ்வண்ணமே.
வயக்கவீட்டு எஸ்.பாகுலேயன் பிள்ளைக்கு அடிபணிந்து.
ஜெ