மனு- கடிதங்கள்-2

மனு இன்று

அன்புள்ள ஜெ

இணையத்தில் நீங்கள் எழுதியவற்றை திரித்துவசைபாடும் வெறி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீங்கள் எழுதியதை ஒருவர் மறுக்கலாம். உங்கள்மேல் நம்பிக்கையில்லாமல் ஒருவர் தன் தரப்பையே சொல்லிக்கொண்டிருந்தால்கூட அது ஒரு வெறி என்று கொள்ளலாம். ஆனால் நீங்கள் எழுதியதற்கு நேர்மாறாக, நீங்கள் உத்தேசிக்காததை சொல்லி வசைபாடுகிறார்கள்

ஜெமோவின் லாஜிக் படி… பெண்களை நாலு இடத்தில் விபச்சாரி என திட்டினாலும் இரண்டு இடத்தில் தெய்வமே என பாராட்டி எழுதி இருக்கும் மனு மிகவும் நல்லவர். ஆகா!

இது இணையத்தில் வந்த ஒரு டிவீட். இப்படி ஒரு நூறு டிவீட்கள். இவையெல்லாமே திட்டமிட்ட பிரச்சாரங்கள். இவர்களை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை

ஆர்.மாணிக்கவாசகம்

அன்புள்ள மாணிக்கவாசகம்

மற்றவர்களை விடுங்கள், இந்த டிவீட் போட்டவரை எனக்குத் தெரியும். உண்மையிலேயே அவருக்கு அவ்வளவுதான் புரியும், அதற்குமேல் அவருக்கு எதையும் எவரும் புரியவைக்க முடியாது.  மூவாயிரம் வார்த்தைகளை அவர் வாசிப்பதெல்லாம் கற்பனையே செய்யமுடியாது. எங்காவது நான்குவரி வாசித்திருப்பார். பெரும்பாலானவர்கள் அந்த தரம்தான்

ஜெ

இனிய ஜெயம்

சமீபத்திய சோழ நிலப் பயணத்தில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் சென்றிருந்தேன். கோவிலை சுற்றிய முதல் தெருவில் வசித்த  செளராஷ்டிரா பட்டு நூல் குடும்பங்கள் ஒன்றின் உறுப்பினர் வசம் பேசிக்கொண்டிருந்தேன். தலைமுறைகளாக இங்கே வசிப்பவர்களில் இவர்கள் இரண்டாம் ராஜராஜ சோழன் காலத்தில் இங்கே வந்தவர்கள். அதன் பிறகு வட இந்தியாவில் அந்நியர் படையெடுப்பால், இங்குள்ள செளராஷ்டிரர்கள் கொடுத்த நம்பிக்கையில் புலம் பெயர்ந்து வந்தவர்கள், மதுரையில் திருமலை நாயக்கர் காலத்தில் இப்போட்டி புலம் பெயர்ந்து வந்தவர்கள் என ஒரு வரிசை.

இப்படிப் படையெடுப்பால் புலம்பெயர்ந்து இங்கே வந்த தெலுங்கர்கள் என வண்ணமயனான கலாச்சார வேறுபாடுகளின் அடுக்குகளால் கட்டப்பட்டது தமிழ் சமூகம். இப்படி ஒவ்வொரு சமூகமும் புலம்பெயர்ந்து இங்கே வந்து அமையும்போது, அவர்கள் தொழில் குல மேன்மைக்கு நிகராக இங்கே இருந்த அடுக்கு அதை எப்படி எதிர்கொண்டிருக்கும்? ராஜராஜ சோழன் காலத்தில் கடுமையான இடங்கை வலங்கை பிரிவினை அடுக்குகள் தொகுக்கப்படுவதை வரலாறு சுட்டுகிறது.  அனந்தர்ங்க பிள்ளை நாட்குறிப்புகள் வழியே இந்த அடுக்குகளின் குழுக்களுக்கும்  எல்லைக்கள் குறித்த சண்டைகள் தொடர்வதை காண்கிறோம்.

இப்படி வரலாற்றுப் போக்கின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு அரசும் இந்த சாதி அடுக்குகள் கலைந்து மீண்டும் வேறு வகையில்  அமையும் செயல்முறையில்   முதல் கவனத்தை பதித்ததை காண்கிறோம்.  ஆசிரியர் அம்பேத்கார் அவர்களும் இந்த பின்புலத்தில் வைத்தே மனு ஸ்ம்ருதியின் வரலாற்றுத் தேவையை புரிந்து கொள்கிறார்.

வேத காலத்தில் துவங்கும் அம்பேத்கார், மானுட இடப் பெயர்ச்சியில் அடிப்படையில், உயிரியல் மானுடவியல் அடிப்படையில், பண்பாட்டு மானுடவியல் அடிப்படையில், மொழிக்குடும்ப அடிப்படையில், ஆரிய வந்தேறிகள் எனும் கருத்தாக்கத்தை தக்க சான்றுகள் அடிப்படையில் மறுத்த பிறகே வேத காலம் குறித்த ஆய்வுக்குள் செல்கிறார்.

வர்ணங்கள் குறித்த அம்பேத்கார் அவர்களின் ஆய்வு மிக முக்கியமானது.  வர்ணத்திலும் மேல் கீழ் கற்பிக்கப்படாத தன்மையை சான்றுகளுடன் முன்வைத்த பிறகு, மஹாபாரத ஆய்வுக்குள் நுழைகிறார். சூத்திரர் என்றொரு சமூக அடுக்கு எவ்வாறு உருவானது என்று அங்கிருந்து விளக்கியபடியே வந்து, மனு ஸ்ம்ருதி சகல அதிகாரத்துடன் அரங்கத்துக்கு வந்த வரலாற்று சூழலை விவரிக்கிறார்.

புராண கால மனு கடந்து, வரலாற்று மனு ஸ்ம்ருதி குறைந்தது இரண்டு முறை தொகுக்கப்பட்ட ஒன்று என்கிறார். மூன்றாவதாக தொகுக்கப்பட்டதே( குறிப்பாக அத்யாயம் 4 முதல்) இன்றைய மனு ஸ்ம்ருதி என்கிறார். இந்த மனு ஸ்ம்ருருதி, பிருகுத்ரக மொளரியன் எனும் பௌத்த அரசனை கொன்றுவிட்டு, பட்டத்துக்கு வரும் புஷ்ய மித்ர சுங்கன் காலத்தில் கி மு 150 இல் நடைமுறைக்கு வருகிறது. பௌத்தம் வழியே அதிகாரத்தை இழந்த பிராமண மதம் (வேள்விகள் சடங்கு ஆசாரங்கள்  லௌகீக சுகங்கள் அரசியல் அதிகாரம்  மட்டுமே இலக்காக கொண்டு பிரம்மத்தை ஊறுகாய் என ஆக்கியவர்கள் கிட்டத்தட்ட இன்றைய இந்துத்துவர்கள்) முன்னிலும் வலிய அதிகாரத்தை எய்துகிறது.

சங்கர மடங்கள் வழிமொழிந்த அந்த ஸ்ம்ருதியே ஆங்கிலேயர்கள் காலத்திலும் வழக்குகளில் பயன்பட்டிருக்கிறது. தொடர் குடியேற்றங்கள் வழியே கலைந்து கலைந்து மாறும் இந்த அடுக்கில் மேலும் மேலும் தலித்துகள் கீழே கீழே சென்றுகொண்டிருக்க, இந்த அடுக்கை சட்டங்கள் வழியே அப்படியே ‘உறைய வைக்கும்’ பணியில் இறங்குகிறது ஆங்கிலேய அரசு.

காய்தல் உவத்தல் இன்றி மனு ஸ்ம்ருதியை அணுகும் அம்பேத்கார், அன்று உலகின் ஒளிவிளக்கு என்று நம்பப்பட்ட ஐரோப்ப்பிய சமூகத்தை விட பெண்களின் சமூக இடம் குறித்த சட்டங்கள் இந்தியாவில் சிறப்பான ஒன்றாகவே இருக்கிறது என்பதை குறிப்பிடுகிறார். அத்தனை அம்சங்களையும் கணக்கில் கொண்டு இறுதியாகவே அம்பேத்கார் மனு ஸ்ம்ருதியை முற்றிலும் நிராகரிக்கிறார். காரணம் இனி இக் கணம் முதல் தலித்துகளின் நிலை இது மட்டுமே  என வெள்ளையர் சட்டம் மனுவின் அடிப்படையில் சாதிகளை அதன் படிகளை நிரந்தரமாக உறையவைக்கிறது என்பதே. இந்த உறையவைக்கும் நியதிக்கு எதிரான போக்கே மனு ஸ்ம்ருதியை அம்பேத்கார் எரித்த நிகழ்வு.

இன்று அம்பேத்கார் தலைமையில் உருவான ஸ்ம்ருதியின்பாலமைந்த குடியரசில் வாழ்ந்து வரும் சூழலில், மனு ஸ்ம்ருதி காலாவதி ஆகிவிட்ட ஒன்று என்பது உண்மையா எனில் இல்லை என்பதே நிஜம்.

சின்மயி me too விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக எழுந்த பிராமண மதத்தின் குரல், ஏன் லீனா மணிமேகலைக்கு துணை நிற்கவில்லை என்று கேட்டுப்பாருங்கள் . மனு தனது ஸ்ம்ருதியில் பெண்களுக்கு எதிராக சொன்ன அத்தனை ஸ்லோகங்களையும் தேவ பாஷையில் ஒப்பிப்பார்கள்.

இன்று காலை (அக் 28) எட்டேகால் மணிக்கு கண்டேன், சங்கரா தொலைக்காட்சியில் ஒரு சாமியார் பேசிக்கொண்டு இருந்தார், அன்னார் பேசியவற்றில் சில

$ கத்தி  மேல குறை சொல்லி கத்திய தூக்கி எறிஞ்சுட்டா நஷ்ட்டமோன்னோ, கத்திய சரியா பயன்படுத்த தெரிஞ்சுக்கணும் அதுதான் அழகு.

$ ஜல்லிக்கட்டு மாட்ட காப்பாத்தனும்கிறா, ப்ராமணா எல்லோரையும் கொல்லணும்கறா, இந்த லோகம் விளங்குமா. அவாள்ட இருக்க அறிவு பிரித்தியாருக்கு வராது.

$ அவா அவா, அவா அவா வர்ண கடமையை பண்ணிண்டிருந்தா அதுவே லோக ஷேம மார்க்கம்.

அன்னார் இன்று எடுத்தது பகவத் கீதை வகுப்பு. இவரது பெயர் பூஜ்ய ஸ்ரீ ஓம்கார நந்தா. இவர்தான் திருமாவை வன்மையாக கண்டித்து, அரசுகளை மத வன்முறையை தூண்ட முயலும் திருமாவை கைது செய்ய சொல்லி தமிழக அரசை வலியுறுத்தி, (அம்பாளை ஸேவிச்ச பிறகு) காணொளி வெளியிட்டு இருக்கிறார்.

இது அவருடன் முடிந்து விடும் சமையல்கட்டு விஷயம் இல்லை. புஷ்ய மித்ர சுங்கன் காலத்தில் நேரடியாக துவங்கி, சுதந்திரத்துக்குப் பிறகு அந்தர்யாமியாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒன்று. சாட்சியமாக br மகாதேவன் அவர்களின் மனுவை ஆதரிக்கும் கவிதை துவங்கி, பல நூறு பதிவுகளை சும்மா ஒரு சொடுக்கில் காண முடியும்.

திருமா ஒரு மத விரோதி, அரசியல் பச்சோந்தி, அன்னியக் கைக்கூலி இந்தக் குற்றச் சாட்டுகள் எதுவும் நிகழ்வில் அவ்வாறே நீடித்துக்கொண்டிருக்கும் ஒரு கீழ்மையை இல்லை என்று ஆக்கி விடாது  .அம்பேத்கார் அன்று மூட்டிய நெருப்புக்கான தேவை, இன்றும் இப்போதும் அவ்வாறே நீடிக்கிறது என்பதே உண்மை.

கடலூர் சீனு

அன்புள்ள சீனு
இந்த ஒட்டுமொத்த விவகாரத்தின் அபாயமே இதுதான் இந்தமாதிரியான பழைமைவாதிகளிடம் சமூக – அரசியல் அதிகாரம் சென்று சேர்வது. இந்துமுல்லாக்கள் உருவாவது என்று இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். விவேகானந்தர் முதல் காந்திவரை நூறாண்டுக்கால சீர்திருத்தவாதிகள் இயற்றிய அனைத்தையும் அழித்துவிடுவார்கள் இவர்கள்
ஜெ

 

அன்புள்ள ஜெ

இன்று உங்கள் கட்டுரை வாசித்தேன். மிகப் பெருமளவு உங்களோடு ஒத்துப் போகிறேன். ஒரு முறை ஜெயகாந்தன் திருச்சியில் பெரியார் முன்னிலையில் பேசும்போது, பிராமணர்கள் செய்வதும் அவருடைய பணியே என்பதால் அவர் அவர்களை அவர் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று sarcastic ஆக கூறியதாகத் படித்ததுண்டு.

இங்குள்ள தொன்மையான மரபு நூல்களும் வேத உபநிடதங்களும்   பொது வெளியில் அனைவருக்கும் ஆக இருக்க வேண்டும் என்பதே என் உள்ளக்கிகிடக்கை. ஆயினும, கல்விசசாலைகளில் ஒரு entry requirement என்று ஒரு வரையறை வகுப்பதுண்டு. அது இது போன்ற தத்துவ நூல்களுக்கும் மறைகளுக்கும் ஆக வகுக்கையில் மரபு வழிப் பின்புலங்கள் சிலருக்கு அனுகூலமாக அமையும். மரபு வழிப் பின்புலம் ஒன்று மட்டுமே தகுதி ஆகாது. பொதுத் தளத்தில் இவை வரும்போது ( இப் போதே பொதுத் தளத்தில் இவை கிடைக்கப் பெறுகின்றன) அவை தவறுதலாக பொருள் கொள்ளப் படலாம். இது போன்ற சிக்கல்கள் பற்றி என்ன செய்வது?

உண்மையாக முறைப்படி வேதபொருள் உணர்ந்து சாஸ்திர கல்வி கற்றவர்கள் பொது மேடையில் இது போன்ற விவாதங்களுக்கு வர மாட்டார்கள்.  வேதம் படிதத பிராமணர்கள் அனைவருமே சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்பதும் ஐயப்பாடுதான்.

நான் நினைப்பதை சரியாகப் பதிவிட முடியவில்லை. எல்லாக் கல்விக் கூடங்களைப் போலவே எல்லா ஆசிரியர்களைப் போலவே வேத ஆசிரியர்கள் இடையேயும் பல நிலை ஆசிரியர்களும

உண்டு. இருப்பினும் வேத கல்வி பொதுமைபடுத்துவது பற்றிய தங்கள் எண்ணம் என்ன?

 

கண்ணன்.

பெங்களூரு.

 

அன்புள்ள கண்ணன்,

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கும் புரியவில்லை. இந்தவகையான சிந்தனைக் குழப்பங்கள் எல்லாமே அடிப்படையில் ஒரு சிக்கலில் இருந்து வருகின்றன. சாதிமேட்டிமையை உள்ளே தக்கவைத்துக்கொள்ள முயல்வது.

ஆன்மிகம், மதம் எதுவும் மானுடசமத்துவம் என்னும் அறச்சார்புக்கு எதிராக நிலைகொள்ளலாகாது என்ற உறுதிப்பாடு இருந்தால் எந்தக்குழப்பமும் எழுவதில்லை. நம் தரப்பை நாம் எண்ணும்போது நம்மால் பழிக்கப்படும் ஒதுக்கப்படும் மக்களின் தரப்பிலும் ஒருகணம் நம்மை வைத்துப் பார்க்கமுடிந்தால் எந்த ஐயமும் எஞ்சாது

 

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு இசைக்கொண்டாட்டம் -முன்னோட்டம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் வாசிப்பு- கடிதங்கள்