குருஷேத்ரக் களத்தில் இருண்டவை அனைத்தும் பெய்தொழியும் இறுதி நிகழும் நாவல் இது. போரின் முடிவில் அனைத்தையும் எரித்தபடி எழுகிறது பேரனல். அது விரித்த சாம்பலை கரைந்து ஒழுகியபடி பொழிகிறது பெருமழை. மண் தன்னை தன்னைக்கொண்டே மூடிக்கொள்கிறது. மாபெரும் வயிறென ஆகிறது. அனைத்தையும் செரித்துக் கொள்ளத் தொடங்குகிறது
எஞ்சுவதென்ன என்பது குருஷேத்ரம் எழுப்பும் வினா. எஞ்சியவை வஞ்சமும் ஆறாத்துயரும் மட்டுமே. வெற்றியும் தோல்வியும் பொருளற்றவை ஆயினர். உயிர்க்கொடையும் அருந்திறல்நிகழ்வும் வீணென்றாயின. மானுடரை சருகு என எரித்து அங்கே தன்னை நிறுவிக்கொண்டது ஒரு பேரனல். தீயின் எடை அந்த அனலைப்பற்றிய நாவல்.
போர் உச்சத்திலிருந்து சரியத் தொடங்குகிறது. துரியோதனனின் சாவில் முடிவடைகிறது. கிருபரும் அஸ்வத்தாமனும் இயற்றும் பெரும்பழியில் அதுசெல்லத்தக்க கீழ்மையைச் சென்றடைகிறது. தீயின் எடை என்ன? எடையற்ற ஒன்று இப்புவியிலுள்ள பேரெடைகளைக்கூட எல்லாம் இன்மையென ஆக்கும் விந்தை என்ன? இங்கே உடலென்றும் உளமென்றும் தன்னை மண்ணில் அழுத்திக்கொண்டு வாழும் மானுடர் அந்த எடையின்மையின் ஒளிரும் நாவால் உண்ணப்படுகிறார்கள்.
இது குருஷேத்ரத்தில் திகழ்ந்த தீயின் கதை. அந்த தீயைப் பற்றித்தான் முதற்கனல் பேசத்தொடங்கியது.
இந்நாவலை என்றும் மகாபாரதத்தின் மாபெரும் வாசகனாக திகழ்ந்த ஓவியமேதை எம்.எஃப்.ஹுசெய்ன் அவர்களின் நினைவுக்குப் படைக்கிறேன். இந்நாவல்களின் ஆக்கத்தின்போது எத்தனையோ முறை அவருடைய மகத்தான மகாபாரத ஓவியங்களின் முன் நீண்டநேரம் விழிமலைத்து ஊழ்கத்திலாழ்ந்து அமர்ந்திருக்கிறேன்
ஜெ