வேங்கையின் வாய்

குருதிவிடாய் கொண்டு திறந்து காத்திருக்கும் வேங்கையின் வாய் என்பது குருக்ஷேத்திரம்தான். வேங்கையின் வாய் குருதி ஊறி குருதியால் ஆனது என சிவந்திருக்கிறது. அதன் வாயில் இருந்து குருதி குருதியை தேடுகிறது. குருக்ஷேத்திரம் மகாபாரதத்தில் போரின் நிலம் என்றே சொல்லப்படுகிறது. அங்குதான் இந்திரன் விருத்திராசுரனை கொன்று குருதிபெருக்கினான். அன்றுமுதல் அது சிவந்திருந்தது. சிவப்படைய வெறிகொண்டிருந்தது

குருக்ஷேத்திரத்தை அறநிலம் என்கின்றன நூல்கள். ஏனென்றால் அங்கே நிகழ்வது அறத்திற்கான போர். என்றும் எங்கும் அறமே அறுதியாக வெல்லும் என்பது தொல்நூல்களின் கூற்று என்பதனால் அறுதிப்போர் நிகழும் களம் என்பது அறநிலமே. குருக்ஷேத்திரத்தில் சொல் வென்றது. அழியாச்சொல். ஆகவே அது அவன் சொல்விளைந்த வயல்

குருக்ஷேத்திரம் உருவாகி எழுவதன் பெருங்காட்சியைக் காட்டும் நாவல் இது. அங்கே இரு தரப்பினருடைய படைகளும் வந்து சேர்கின்றன. முகத்தோடு முகம்நோக்கி நிற்கின்றன. போர் அணுகுகிறது. ஒரு பெருவேள்விக்கான ஒருக்கங்கள் போல. முதற்குருதி விழுகிறது. எரியில் விழும் முதல்துளி நெய்போல.

போரெழுகையின் ஓவியம் இந்நாவல். போர் என்பது புறத்தே நடப்பது மட்டுமல்ல. குருக்ஷேத்திரன் போர் எவ்வகையிலோ எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அனைத்து உயிர்களிலும். அனைத்து உடல்களிலும். அனைத்து உள்ளங்களிலும். இது அந்த முடிவிலாச் சமரின் கதை.

குருக்ஷேத்திரம் அத்வைதத்தின் விளைநிலம். அவ்வேள்வியில் எழுந்த தெய்வம் அதுவே. இந்நாவலை அத்வைத மரபினரும் மலேசிய கூலிம் பிரம்மவித்யாரண்யத்தின் முதலாசிரியருமான சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைவெண்முரசு-திசைதேர் வெள்ளம்- முன்பதிவு
அடுத்த கட்டுரைஅ.கா.பெருமாள்- மக்களைக் கலைப்படுத்துதல்- சுரேஷ் பிரதீப்