மலைமுடித் தனிமை

இருட்கனி என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். கம்பன் ராமனைச் சொன்ன சொல் அது. சில அருஞ்சுவைக் கனிகள் கரியவை. குறிப்பாக நாவல்கனி. ராமனின் நிறத்தை அவ்வாறு கம்பன் சொல்கிறான். அச்சொல்லில் இருந்து உள்ளத்தை நீக்கமுடியவில்லை. வெண்முரசின் இருபத்தொன்றாவது நாவலான இது மகாபாரதப்போரின் இறுதியைச் சொல்லத் தொடங்குகிறது. இதற்கு முந்தைய நாவல் கார்கடல். கருமை இங்கே இருளெனத் துளித்துவிட்டிருக்கிறது.

குருஷேத்ர கொலைக்களத்தில் குருதியெனும் அந்தியில் கதிரவன் மைந்தன் மறையும் காட்சியுடன் நிறைவடையும் இந்நாவல் மானுடவாழ்க்கையின் உச்சகணங்கள் சிலவற்றைச் சொல்கிறது. பிறக்கும் கணம் முதல் அடையாளங்களை எடையென சுமந்த ஒரு மாவீரன் தன்னை அவை ஒவ்வொன்றிலிருந்தும் விடுவித்துக்கொண்டு தன்னை தானே வரையறைசெய்து களத்தில் ஓங்கி நின்றிருக்கும் கதை. வீழ்வதனூடாக எழுந்தவர்கள் வரலாற்றில் எப்போதுமுண்டு.

போரினூடாக விரியும் முகங்கள் ஒவ்வொன்றாக உடைந்தழியும் குமிழிகள்போல் தோன்றுகின்றன இந்நாவலில். போர் என்பது உச்சகணங்களின் தொடர்நிரை. உச்சகணங்களில் மட்டுமே வெளிப்படும் தரிசனங்களாலானது இது. நூற்றுக்கணக்கான அன்றாடங்கள் வழியாக ஆராயப்பட்டவை இங்கே செறிவும்கூர்மையும் கொண்ட அரியதருணங்கள் வழியாக மீண்டும் ஆராயப்படுகின்றன. அடிவாரப் பசுமையின் உண்மைகள் உச்சிமுடியின் வெறுமையால் மறுபடியும் உசாவப்படுகின்றன.

வெண்முரசை எழுத அருந்துணையாக அமைந்த பெருநூல் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வெட்டம் மாணி அவர்களால் உருவாக்கப்பட்ட புராணக் கலைக்களஞ்சியம். எண்ணிப்பார்க்கவும் அரிதான மாபெரும் பணி அது. வெட்டம் மாணி அவர்களின் நினைவுக்கு இந்நாவலை பணிவுடன் படைக்கிறேன்

ஜெ

மரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி

வெட்டம் மாணியைப்பற்றி

வெட்டம் மாணி:கடிதங்கள்

முந்தைய கட்டுரைநிழல்வெட்டுகள்
அடுத்த கட்டுரைசுந்தர ராமசாமி, பிள்ளைகெடுத்தாள்விளை -கடிதங்கள்