நிர்வாணமான இசை

எங்கள் இலக்கியநிகழ்ச்சிகளில் மட்டுமல்ல தனிப்பட்ட சந்திப்புகளில்கூட முடிந்தபோதெல்லாம் எவரையாவது பாடவைப்பது வழக்கம். பதிவுசெய்யப்பட்ட பாடல் பிழையற்றது. பிழைகளைந்தது என்று மேலும் குறிப்பாகச் சொல்லவேண்டும். நேரடியாகப் பாடும்போது ஒரு படி குறைவாகவே சுதியும் ஒத்திசைவும் இருக்கும்.

ஆனால் எப்போதுமே நேரடியாகப் பாடிக்கேட்பதென்பது முற்றிலும் புதிய அனுபவம். நான் இளையராஜாவின் சிறந்த பாடல்களை அவரே பாடி கேட்டிருக்கிறேன். அவர் சிறந்த பாடகர்களின் குரலில் பதிவுசெய்த வடிவில் அந்த உயிர்ததும்பும் உணர்ச்சிகள் நிகழ்வதில்லை. அவரே பாடினாலும்கூட.

கஸ்தூரிமான் படத்துக்காக அவர் வெறுமே ஆர்மோனியத்துடன் பாடிய பாடல் இன்றும் என் செவிகளில் இருக்கிறது. அதை எவரெவரோ பாடி என்னிடமிருந்து அகற்றினாலும் இனிய நினைவாக அதை வைத்திருக்கிறேன். அதை லோகி பதிவுசெய்திருந்தார். அதை காப்பாற்றி வைத்திருக்கலாமோ என ஏங்கியிருக்கிறேன்

ஒருமுறை அதைப்பற்றி இளையராஜாவிடம் கேட்டிருக்கிறேன். “அது எப்பவுமே அப்டித்தான். பாட்டு உதடுகளிலே இருந்து வெறும்காதுக்கு போகவேண்டிய ஆர்ட்ஃபாம். உணர்ச்சிகள் ஒவ்வொரு ரிகர்சலுக்கும் குறையும். சுதியும் லயமும் சேர்ந்தாலே அது வித்தையா ஆயிடும்” என்றார் ராஜா. லோகி சொன்னார் “நல்ல பாட்டுங்கிறது ஒரு பெருமூச்சு மாதிரி சுத்தமானது. மலையூற்றிலே இருந்து வாய்வைச்சு தண்ணீர் குடிக்கிற மாதிரி”

எம்.எஸ்.விஸ்வநாதனின் குரலில் அவர் இசையமைத்தபாடல்களை கேட்பது பேரனுபவம் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். சும்மா ஸ்பூலில் பதிவுசெய்யப்பட்ட ஒரு பாட்டை கேட்டிருக்கிறேன். அதன் பதிவான வடிவை பாடிய சுசீலா உணர்ச்சியே இல்லாமல் பாடியிருப்பதாக உடனே தோன்றிவிட்டது. அந்தப்பாடலை அதன்பின் நான் கேட்பதே இல்லை.

என்ன நடக்கிறது? பாடுபவரின் முகம், பாவனைகள், அவர் அந்த இசையின் அலைகளினூடாக ஒழுகிச்செல்லும் விதம், அவருடைய நேரடியான உணர்ச்சிகரம். நம் முன் ஒரு மனிதன் நின்றுகொண்டிருக்கிறான். அவனில் இசை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இந்த வேறுபாடு நாடகத்துக்கும் சினிமாவுக்கும் உண்டு. நாடகத்தில் ஒருவர் கண்முன் நின்று நடிக்கும்போது நாம் அடையும் உணர்வுகளை சினிமாவில் அடைவதில்லை. ஏனென்றால் அது பிம்பம் என நம் அகம் அறிந்திருக்கிறது. நாடகத்தில் அடிப்பது போன்ற வன்முறைநிகழ்வுகள் நடிக்கப்பட்டால் நம் உடல் அதிர்கிறது.

ஆனால் கர்நாடக இசைக்கலைஞர்கள் செயற்கையாக அளிக்கும் கையசைவுகளும் கஷாயம்குடித்ததுபோன்ற முகபாவனைகளும் இசைக்கு நேர் எதிரானவை என்பது என் எண்ணம். அவர்களிடம் பெரும்பாலும் உண்மையான உணர்ச்சிகள் வெளிப்படுவதில்லை. நூறுமீட்டர் ஓட்டப்பந்தயத்தை ஓடிமுடிக்க முயல்பவரின் பரிதவிப்பும் மூச்சிளைப்பும்தான் நிகழ்கின்றன

ஒரு நண்பர்குழாமில் இயல்பாக பாவனைகளேதுமில்லாமல் பாடும் ஒருவர் அமைவது ஒரு நல்லூழ். அச்சந்திப்பை இனிதாக ஆக்க அவரால் முடியும். மலையாள சினிமாவில் பெரும்பாலானவர்கள் நல்ல பாடகர்கள். குடிநிகழ்வுகளை இசைக்கொண்டாட்டங்களாக ஆக்கிவிடுகிறார்கள்.

பாபுராஜ் இசையமைத்த “பாதிராவாயில்ல” மலையாளத்தின் புகழ்பெற்ற மெல்லிசை மெட்டு. இசைப்பின்னணி பெரிதாக இல்லை. ஜேசுதாசின் குரலின் அழகு வெளிப்படும் மென்மையான பாடல்களில் ஒன்று. ஒரு கார்ஷெட்டில் வைத்து ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் [அகம் இசைக்குழு] எந்த கருவியும் இல்லாமல். செல்பேசியின் சுருதியோசையை மட்டுமே ஆதாரமாக்கி, தாளமில்லாமல் அதைப் பாடுகிறார்.மூலத்தை விட பலமடங்கு மேலே சென்றுவிட்டது பாடல்.

அதை கேட்பவர்களுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன். அசல்வடிவை விட இந்த மறு இசைப்பைத்தான் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள்

படம் மனஸ்வினி 1968
இசை எம்.எஸ்.பாபுராஜ்

பாடல் பி.பாஸ்கரன்

பாடகர் ஏசுதாஸ், எஸ்.ஜானகி

பாதிராவாயில்ல பௌரணமி கன்யக்கு
பதினேழு பதினெட்டு பிராயம்
மூவந்தி பொய்கையில் முங்ஙி நீராடி
பாவாட மாற்றிய பிராயம்
தாரக கண்ணெழுதி
விண்ணிலே தூவெள்ள தாமரப் பூவொந்நு சூடி
வெண்முகில் தூவால துன்னி இரிக்குந்நு
கண்ணில் கவிதயுமாய்
மணிவீண கம்பியெ சும்பிச்சு உணர்த்துந்ந
மலரணிக்கை விரல் போலே
ஹிருதயத்தின் தந்த்ரிகள் தட்டியுணர்த்துந்நு
அனுராக சுந்தர ஸ்வப்னம்
பாதிராவாயில்ல பௌரணமி கன்யக்கு
பதினேழு பதினெட்டு பிராயம்

பாதி இரவாகவில்லை பௌரணமி கன்னிக்கு
பதினேழு பதினெட்டு பிராயம்
அந்தி எனும் பொய்கையில் மூழ்கி நீராடி
பாவாடை அணிந்துவரும் பிராயம்
நட்சத்திரக் கண்ணில் மையிட்டு
விண்ணின் தூயவெண்ணிற தாமரைபூ ஒன்று சூடி
வெண்முகில் கைக்குட்டையை தைத்தபடி அமர்ந்திருக்கிறாள்
கண்ணில் கவிதையுடன்
மணிவீணைக் கம்பியை
முத்தமிட்டு எழுப்பும்
மலரழகுகொண்ட கைவிரல்போல
இதயத்தின் தந்திகளை தொட்டு எழுப்புகிறது
காதலின் அழகிய கனவு
பாதி இரவாகவில்லை பௌரணமி கன்னிக்கு
பதினேழு பதினெட்டு பிராயம்
முந்தைய கட்டுரைநான்காம் தடம் – எனும் குர்ட்ஜிப்பின் சுழற்பாதை
அடுத்த கட்டுரைமுதற்கனலில் இருந்து…