காந்தி உரை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

காந்தியிடம் செல்ல வழிகாட்டியவர்கள் என்ற சுருக்கமான உரையை பார்த்தேன். வழக்கம்போல புத்தம்புதிய கோணம். காந்தியை நாம் அறிந்துகொள்வது எப்போதுமே அமைப்புக்கும் ஆசாரங்களுக்கும் அடங்கிய ‘ஒழுக்கமான’ மனிதர்களிடமிருந்துதான். அந்த அறிதல் காந்திக்கு நியாயம்செய்வதில்லை. காந்தியை நல்லுபதேசம் செய்த ஒரு வயோதிக மனிதர் என்ற அளவிலேயே புரிந்துகொள்கிறோம். அது நமக்கு காந்தியை மிகமிகத் தவறாக அடையாளம் காட்டுகிறது. அதோடு இளமையின் துடிப்பில் காந்தியை நிராகரிக்கவும் ஏளனம் செய்யவும் வழிவகுக்கிறது

காந்தி ஒரு அராஜகவாதி. ஒரு போராளி. அராஜகவாதிகளும் போராளிகளும்தான் காந்தியை முறையாக அறிமுகம் செய்யமுடியும். காந்தியை நீங்கள் அப்படிப்பட்ட அராஜகவாதிகள் போராளிகளிடமிருந்து அறிமுகம் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது மிகமிக முக்கியமான ஒரு விஷயம். எம்.கோவிந்தன், பி.கே. பாலகிருஷ்ணன், ஜான் ஆபிரகாம் ஆகிய மூவரைப்பற்றிய நினைவுகூர்தல் அழகு. அது உங்களுக்கு ஒருவகையான உணர்ச்சிமேலிடலை உருவாக்கியதனால் உரை நேரடியாகவும் அழகாகவும் இருந்தது

ஜி.சண்முகநாதன்

எம்.கோவிந்தன்
பி.கெ.பாலகிருஷ்ணன்
ஜான் ஆப்ரகாம்

அன்புள்ள ஜெ

காந்திக்குச் செல்ல வழிகாட்டியவர்கள் என்ற உரை அற்புதமானது. தயாரிப்பே இல்லாமல் தடையில்லாமல் பேசினீர்கள். மேடைப்பேச்சாளர்களுக்குரிய செயற்கையான தெளிவான உச்சரிப்பு இல்லை. இயல்பாக கம்மியும் எழுந்தும் குரல் ஒலித்தது. ஆனால் ஆழமான உரை. காந்தியை மிக அணுக்கமாக அறியமுடிந்தது

காந்தியை ஒரு சம்பிரதாயவாதி என்றும் ஒரு பழமைவாதி என்றும் அறிமுகம் செய்கிறார்கள். காந்தி பாடநூலில் இடம்பெற்றதனாலேயே அப்படி ஆகிவிட்டது. காந்தியை அறிமுகம்செய்ய தகுதியானவர்கள் இவர்கள்தான். காந்தி ஓர் அராஜகவாதி என்ற அந்தக் கோணம் பலமுறை நீங்கள் சொன்னதுதான். இப்போது மீண்டும் தெளிவாக உள்ளது

அன்புடன்

அருண்குமார்

அன்புள்ள அருண்

காந்தியை நாம் கண்டடைவது நாம் சமகாலத்தில் சந்திக்கும் வெவ்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தேவைக்காகத்தான்

ஜெ

முந்தைய கட்டுரைசுந்தர ராமசாமி, மார்க்சியம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமனு இன்று