அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஒரு வாரம் முன்பு சற்றே சோர்வான மனநிலையில் இருந்தேன். அப்போழுதே அதைப் பற்றி எழுத வேண்டு என்று நினைத்தேன். அப்பொழுது எழுதியிருந்தால் வெறும் புலம்பலாகத்தான் இருந்திருக்கும். அதிலிருந்து மீண்டு வந்த பிறகுதான் உங்களூக்கு எழுத வேண்டும் என முடிவு செய்துகொண்டேன்.
காந்தி ஜெயந்தி அன்று வாட்ஸப்பில் நண்பர்களுக்குள் நடந்த விவாதத்தில் இந்த நாட்டை இரண்டாக பிளந்தவர் காந்தி என்று ஒருவர் சொல்ல, நான் இது முழுக்க தவறான புரிதல் மட்டுமல்ல, விஷமத்தனமான பிரச்சாரம் கூட என்றேன். பொதுவாக இதுபோன்ற வாட்ஸப் விவாதங்களில் பங்குகொள்ள மாட்டேன். இருந்தாலும் அன்று மனது கேட்கவில்லை, மற்றும் சில விஷயங்களை சொல்லவேண்டும் என்று தோன்றியது.
எப்படி அக்கருத்து, அவர் வாழ்நாள் முழுக்க எடுத்த நிலைபாட்டுக்கு எதிரான ஒன்று என்று கூறினென். பின்னர் காந்தி அதைவிட அதிகமாக முயன்றிருக்க வேண்டும் என்றனர். ஒரு மனிதன் தன் உயிரயே கொடுப்பதைவிட மேலாக என்ன முயற்சி செய்ய முடியும் என்று கேட்டேன். அது அவரது பிடிவாதத்தால் வந்த விளைவு என்றனர். கடைசியாக, அவரும் மனிதர்தானே, தவறு செய்யக்கூடியவர்தான் என்று தீர்ப்பு எழுதப்பட்டது.
நான் விடாப்பிடியாக, வசதியாக சம்பளம் வாங்கிக்கொண்டு, சுயநலமாக வாழும் சராசரி மனிதர்களாகிய நம்மோடு ஒப்பிடாதீர்கள் என்றேன். பொதுவாக நான் காந்தியை மகாத்மா என்று சொல்வதில்லை. அனால் அன்று அவர் அவ்வாறு மட்டுமே அழைக்கப்படவேண்டும் என்று எண்ணினென்.
இரண்டு நாட்கள் கழித்து, அலுவலக நிமித்தமாக ஒரு சந்திப்பில், ஜெர்மனியில் இருந்த ஒரு சக ஊழியர் எதற்காக விடுமுறை விட்ப்பட்டது என்று கேட்டார். காந்தி ஜெயந்தி இந்தியாவில் தேசிய விடுமுறை எனக் கூறினேன். அதற்கு அவர் இந்தியாவில் பெரும்பான்மையினர் காந்தியை வெறுப்பவர்களாமே, அது உண்மையா என்று கேட்டார். அப்படி ஒட்டுமொத்தமாக சொல்ல முடியாது என்றும், ஆனால் முன்முடிவுகளோடு, சுயமாக சிந்திக்க தெரியாத, சரியான புரிதல் இல்லாமலும், உண்மையை தெரிந்து கொள்ள விருப்பமில்லாமலும் நிறைய மனிதர்கள் இங்கு உள்ளார்கள் என்றேன். உலகம் முழுக்க இதே நிலைதான் என்றார்.
ஆனால் இந்தியர்களுக்கு காந்தியை பிடிக்காது என்பதுதான் நாம் உருவாக்கிக்கொண்ட பிம்பம். இது முதன்முறையல்ல என்றாலும், அக்கேள்வி பெரும் சோர்வை உருவாக்கியது. சில வருடங்களுக்கு முன்பு, ஜெர்மனியில் இருக்கும் எங்கள் தலமையகத்திற்கு சென்றபோது, என்னுடன் வந்த சக உழியர்(தமிழகத்தை சேர்ந்தவர்தான்), ஜெர்மனியை சேர்ந்த மற்றோரு ஊழியரிடம் “Gandhi is a bastard, he is a politician” . அப்படி என்றால் என்ன என்று கேட்டேன், அந்த ஒரு வரியை தவிர வேறு எதுவும் சொல்லவிலை, சொல்லத்தெரியவில்லை. ஆனால் ஆணித்தரமாக அதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.
வாட்ஸப் வந்தபிறகு இந்துத்வராக மாறிய ஒருவர்களில் என் தந்தையும் ஒருவர், “கோட்சே சுட்டது சரிதான், கொஞ்சம் லேட்டா சுட்டுட்டான்” என்றார், ஏன் என்று கேட்டபோது அவரிடமும் பதிலில்லை. இந்த ஒரு வரி வியாக்கானங்கள் தரும் நம்மிக்கை, நம்பமுடியாத அளவில் உள்ளது.
உண்மையில் ஒரு கட்டத்தில் நானும் அப்படித்ன் சரியான புரிதல் இல்லாமல் இருந்தேன், உங்கள் கட்டுரைகளை படிக்கும் வரை. பெரிதாக விமர்சனம் இல்லையென்றாலும், காந்தியைப் பற்றி பாடப்புத்தகத்தில் வரும் ஒரு தட்டையான புரிதலே இருந்தது. ஆனால் உங்கள் உரைகள், இன்றை காந்தி கட்டுரைகள், உரையாடும் காந்தி போன்ற புத்தகங்கள் வழியாக அறிந்து கொண்ட காந்தி முற்றிலும் வேறு. அவர் தேசப்பிதா மட்டுமல்ல, தேசியம், மொழி, மதம் என்று எந்த வரையறைக்குள்ளும் சிக்காத; பல திறப்புகளை தரக்கூடிய ஒரு மாமனிதன் அவர்.
உங்களின் வழியாகவே குகாவை படிக்க ஆரம்பித்தேன். காந்தியைப் பற்றி பல கட்டுரைகளைத் ஆங்கிலத்தில் தேடி படிக்க ஆரம்பித்தேன். ஆனால் பெரும்பாலான கட்டுரைகளில் இல்லாத ஒன்று உங்களின் கட்டுரைகளில் உள்ளது. காந்தியத்தைப் பற்றிய ஆழமான புரிதல், தனித்துவமான ஒட்டுமொத்தமான பார்வை, வெற்று லட்சியவாதமாக இல்லாமல், இன்றைக்கும், நாளைக்குமான நடைமுறைக்கு பொருத்தமான கருவியாக எப்படி இருக்கின்றது, பல்வேறு காந்தியர்களின் அறிமுகம், பல்வேறு துறைகளில் காந்தியத்தின் தாக்கம் என உங்கள் கட்டுரைகள் விரிந்துக்கொண்டே போகின்றன.
இந்தியாவில் எந்த எழுத்தாளரும் இந்த அளவிற்கு விரிவாக உரையாடி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. புதுவை பல்கலைக்கழகத்தில் காந்தியத்த்தில் படைப்பூக்கம், புதுமை மற்றும் அசல்தன்மைப் பற்றிய உரையை கேட்டபோது, என் ஒட்டுமொத்தப் பார்வையையும் மாற்றியது. வாட்ஸப்பில் என் நன்பர்களுடன் நடந்த விவாதத்திற்கு பிறகு, உங்கள் கட்டுரைகளைத்தான் அவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவர்களுக்கு யாருக்கும் தமிழ் தெரியாது. உங்களுடைய எல்லா படைப்ப்புகளையும் போல, காந்தியைப் பற்றிய அனைத்து படைப்புகளும் மிக முக்கியமானவ, மிக தனித்துவமனவை. இன்றைய சூழலில் மிக முக்கியத்துவம் பெறுகின்றது.
அதனாலேயே அவை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப் படவேண்டியவை. அதனாலேயே சென்ற வாரம் ஒர் இரவு உங்களின் “காந்தி என்ன செய்தார்?” (https://www.jeyamohan.in/133260/) கட்டுரையை மொழிப்பெயர்த்தேன். என்னுடைய அரைகுறை ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு, கூகிள் டிரான்ஸ்லேட் கடித்துத் துப்பிய வரிகளையும்(கூகிள் ஒரளவிற்கு சிறப்பாக மொழிப்பெயர்த்தாலும், பல இடங்களில் முற்றிலு தவறான அர்த்தத்தயும், பல இடங்களில் அர்த்தமே இல்லாமலும் இருந்தது) வைத்து ஒருவாறாக மொழிப்பெயர்த்து, அன்று விவாதத்தை ஆரம்பித்த என் நண்பருக்கு அனுப்பிவத்தேன்.
சிறிது நாட்கள் கழித்து படித்துவிட்டு “மிகச்சிறப்பான கட்டுரை, காந்தியம் இன்றைக்கும் எங்கெங்கு உயிர்ப்புடன் இருக்கிறது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் என்னால் மனம் மாறமுடியவில்லை, காந்தியைப்பற்றி முறையாக தெரிந்துக்கொள்ள அவரைப்பற்றி படிக்க ஆரம்பிக்கின்றேன்” என்றார். காந்தியின் மீது கசப்புடன் இருந்தவரிடமிருந்து அந்த வார்த்தைகளை எதிர்ப்பார்க்கவில்லை.
தங்களின் அனுமதி இல்லாமல் மொழிப்பெயர்த்து இன்னொருவருக்கு பகிர்ந்தமைக்கு மன்னிக்கவும்.
‘இன்றைய காந்தி’ போன்ற புத்தகங்கள் ஆங்கிலத்தில் இந்நேரம் கிடைத்திருக்கவேண்டும். குஹாவின் புத்தகங்கள் போல உலகெங்கும் போயிருக்க வேண்டும். இந்தியாவின், உலகின் தலைசிறந்த எழுத்தாளராகிய உங்களின் எழுத்தை என்னைப் போன்றவர்கள் மொழிப்பெயர்த்து மற்றவர்களுக்கு கொடுப்பது ஒரு வகையில் துர்பாக்கியமானது. சில இலக்கணப்பிழைகளை தவிர, மொழிப்பெயர்ப்பு நன்றாக இருப்பதாக நண்பர் சொன்னார். அவரால் மூலத்தை படிக்கமுடியாதே.
நான் நல்ல சமையற்காரன் இல்லை, ஆனால் நல்ல உணவின் சுவைத் தெரியும். இறுதியில் நன்பர் காந்தியை தெரிந்துக்கொள்ள முயற்சிக்கின்றேன் என்று சொன்னது நிறைவை தந்தது. உங்களுடைய வார்த்தைகளின் சக்தியாகவேப் பார்க்கின்றேன்.
என் மொழியை கூர்த்தீட்டிக்கொண்டு, பயிற்சியுடன் உங்கள் எழுத்துக்களை மொழிப்பெயர்க்க வேண்டும் என்ற உந்துதல் வந்துள்ளது. அதற்குள் யாராவது ஒரு நல்ல மொழிப்பெயர்ப்பாளர் அந்த காரியத்தை செய்துவிட வேண்டும்.
மன்னிக்கவும், மொழிப்பெயர்ப்பை உங்களுக்கு அனுப்ப தைரியம் வரவில்லை.
உங்கள் வாசகன்,
ராஜசேகர், பெங்களூர்.
அன்புள்ள ராஜசேகர்
காந்தியைப் பற்றிய நம் பாவனைகள் முடிவே அற்றவை. மூன்று தரப்பினரை அவர் எரிச்சலையடைய செய்கிறார்
அ.கருத்தியல், நம்பிக்கை, ஆசாரம் சார்ந்த புறாக்கூண்டுகளுக்குள் வாழ்பவர்கள். அவர்களுக்கு காந்தி விரிந்த ஓர் உலகை காட்டுகிறார். அவர்கள் எத்தனை இழிந்த சிறிய உலகில் வாழ்கிறார்கள் என்று காட்டுகிறார். அவரை நிராகரிக்காமல் அவர்கள் அந்தச் சேற்றுக்குழியில் இன்புற்று திளைக்கமுடியாது. இந்துத்துவர்கள் உட்பட மதவெறியர்கள், சாதிப்பற்றாளர்கள், கண்மூடித்தனமான கட்சிப்பற்று கொண்டவர்கள் இந்த வகையினர். இவர்கள் ஒருவகையான கருத்துக்குருடர்கள்.
ஆ. தனிப்பட்ட முறையிலும் ஒரு சமூகமாகவும் நாம் கொண்டிருக்கும் தோல்விகளை இன்னொருவர் மேல் சுமத்தி தப்பித்துக்கொள்ள நினைப்பவர்கள். சாமானியர்களில் பெரும்பாலானவர்கள் இத்தகையவர்கள். ‘காந்தியாலேதான் எல்லாம் கெட்டுப்போச்சு’ என்பார்கள்.
இ. இளமையின் முதிர்ச்சியின்மையால் எதையாவது அதிரடியாகச் சொல்லி தன்னை காட்டவேண்டும் என நினைப்பவர்கள். இளமை போனபின்னரும் அதே முதிர்ச்சியின்மையில் நின்றுவிடுபவர்கள் உண்டு
மூன்றாம்வகையினரிடமே நாம் பேசமுடியும். இரண்டாம்வகையினரை ஓரளவு பேசி புரிந்துகொள்ளவைக்க முடியும். முதல்வகையினர் எந்நிலையிலும் காந்திக்கு எதிரிகள். அவர்களிடம் பேசவே முடியாது. அது “சாத்தானிடம் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லி மதமாற்றம் செய்யவைப்பது போல” என்று ஒருமுறை கேரளச் சிந்தனையாளரும் பாதிரியாரும் நித்ய சைதன்ய யதியின் தோழருமான ஃபாதர் வடக்கன் சொன்னார்
ஜெ