கதைகள் சிந்தனைகள் கடிதங்கள்

வணக்கம்ங்க.. இப்பத்தான் சோற்றுக்கணக்கு கதை படிச்சு முடிச்சேன். சத்தியமா நான் அதிகமா சிறுகதைகள் படிப்பதே இல்லை. அப்படியே படிச்சாலும் நகைச்சுவையான கதைகள் மட்டுமே படிப்பேன். ஆனா இந்தக் கதை படிக்கும்போது பல இடங்களில் சிலிர்ப்பினை உணர்ந்தேன். இந்தக் கதையின் தாக்கத்தில் இருந்து வெளியே வருவதற்கு கண்டிப்பா இரண்டுநாட்களுக்கு மேல ஆகும். கண்ணுல தண்ணி வருதா இல்ல , எனக்கு இப்ப என்ன ஆகுதுனே தெரியாம இருக்கேன். என் மனதினை முழுவதும் உள்ளவந்து உட்கார்ந்தது போல இருக்கு. இனிமேல் இங்க இருக்கிற எல்லா சிறுகதைகளையும் படிக்கணும். நானும் சிறுகதை எழுதுவேன்னு அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனா இனிமேல் அந்த நினைப்பு வரதுக்கே நிறையநாள் ஆகும். ஒரு கதையோ கவிதையோ படிக்கிறவங்களோட மனச பிடிச்சு உலுக்கனும்கிற மாதிரி இருக்கு. எனக்கு இதப் பத்தி சொல்லுறதுக்கே தெரியல. வயிறு முட்ட கெத்தேல் சாகிப் கையாள சாப்பிட்டுட்டு பணம் எவ்ளோ போடுற அளவுக்கு நம்ம கிட்ட பணம் இல்லையேன்னு சொல்லுறமாதிரி என்னோட இந்தப் பின்னூட்டம். உங்க கதைக்கு பின்னூட்டம் போடுறதுக்கு நானும் போய் படிச்சிட்டு வரணும்போல உணருறேன்.

அன்புடன்

கோமாளி செல்வா

www.selvakathaikal.blogspot.com www.koomaali.blogspot.com

அன்புள்ள செல்வா

நன்றி நல்ல சிறுகதைகள் இன்னொருவரை எழுத தூண்டவேண்டும். இலக்கியமென்பது ஒரு நீண்ட தொடர்ச்சி. நெருப்பு போல. ஒன்றில் இருந்தே இன்னொன்று பற்றிக்கொள்ள முடியும் எழுதுங்கள்

ஜெ

அன்பிற்கினிய ஜெ,

ஊமைச்செந்நாய் என்ற தங்களது குறுநாவல் முன்பு நான் படித்துள்ளேன், அதன் சாரத்தில் ஒன்றுபடும் நான் வெள்ளையர் அதிகார வர்க்கத்தின் மீது எந்த மயக்கமும் கொண்டிருக்க வாய்ப்பில்லை. வெள்ளையர் காலத்தில் சட்டம் மிக பொல்லாததாக இருந்தது அவர்களுக்கு சாதகமாக. இந்தியர்களுக்கு ஒரு நீதி வெள்ளையர்களுக்கு ஒரு நீதி என நமது வளங்களை எல்லாம் கொள்ளையடித்ததை காலம் மறக்காது. அவர்கள் நாட்டில் இருப்புப் பாதை அமைத்திட மூணார் பகுதியில் உள்ள மழைக்காடுகள் சூறையாடப்பட்டதும், பிறர் கேலி செய்யும் அளவிற்கு வைகை காய்ந்து போனதும், எனக்கு அவர்கள் அதிகாரத்தின் மீது பிரமிப்பு எதுவும் கிடையாது. ஆனால் நான் சொல்லவந்தது அவர்கள் பெருமையை அல்ல. அதிகாரத்தின் பிரதிநிதியாக இருந்தபோதும் அவர்களில் நீதிமான்கள் இருந்தார்கள் என்பதை சொல்லவந்தேன். அது மட்டுமல்ல வெள்ளையர்களால் திட்டமிடப்பட்ட சென்னை எழும்பூர் ரயிலடி இன்றும் ஸ்திரமாக உள்ளதே, அப்படி திட்டமிட ஊழல் நிறைந்தவர்களால் முடியாது என்பதற்காக அவர்கள் கொண்டிருந்த நிறவெறியையும் ஆதிக்க மனோபாங்கையும் ஏற்றுகொண்டதாக இல்லை. அது ஏன் நம்மவர்களால் முடிவதில்லை. தகவமைந்துவிட்ட நம் பாரம்பரியமான வாழ்க்கை முறைகளை குருட்டு ஏளனம் செய்து, அதனை சிதறடித்து நூற்றாண்டுகாலமாக நம்மை மேற்கத்திய கலாச்சாரத்தின்பால் அடிமைப்படுத்தி, வேறு வழியில்லாமல் செய்ததை நம் பகுத்தறிவு மன்னித்தாலும் நெஞ்சு ஆறுவதில்லை. —

Kannan KK

அன்புள்ள கண்ணன்

வெள்ளையர்களில் நீதிமான்கள் இல்லை என்று நான் சொல்வதே இல்லை. மாறாக அன்று நமக்கிருந்த பொது நீதியுணர்ச்சியை விட அவர்களின் நீதியுணர்ச்சி அதிகம் என்பதே என் எண்ணம். நம்முடைய அன்றைய ஆட்சியாளர்களைவிட அவர்களின் தகுதி அதிகம். ஆகவேதான் அவர்களை நம் சமூகம் ஆட்சியாளர்களாக ஏற்றுக்கொண்டது. மிகச்சிறந்த நீதிபதிகள் அன்றிருந்தார்கள். பொறியாளர்கள் இருந்தார்கள். கலை ஆர்வலர்கள் இதழாளர்கள் இருந்தார்கள். ஏன், காந்தி லண்டன் சென்றபோது அவரை வரவேற்க திரண்டு வந்த கரித்தொழிலாளர்களும் சலவைக்காரர்களும் கண்டிப்பாக உயர்ந்த பண்பாடு கொண்ட மக்கள்தான்

ஜெ

அன்புள்ள ஜெ,

நான்கள்’ இப்பொதுதான் வாசித்தேன். ’மேகம்போன்ற வடிவம் கொண்டதாக இருக்கும் அவன் அகம்‘ என்று கட்டுரையில் வரும் வாக்கியம் ஒரு நல்ல அக அனுபவத்தை அளித்தது. சட்டென்று மேகங்களின் வடிவமும் வடிவமின்மையும் இயக்கமும் காட்சியாகி மனதை மேகமாக்கியது. நெருப்பு போல எனும் போது மேலும் உக்கிரம் கொள்கிறது. அப்படி வாழ்வது எவ்வளவு அழகு. மனதின் உணர்வுகளை, உள்ளுணவர்களை வார்த்தையாக்க எனக்கு போதுமான திறன் இல்லை. எவ்வளவு சிக்கலாக அவை தோன்றினாலும் வார்த்தையாக்கி தொகுத்து கொள்ளுதல் சிந்தித்தி முன்னகர்வதற்கும் தொடர்புறுத்தலுக்கும் மிக அவசியம் என நினைப்பேன். இதற்கு ஒருவிதமான பயிற்சி அவசியம் என்றே தோன்றுகிறது. ஆனால் உங்கள் எழுத்துன் வீச்சு அவற்றை வெகு சுலபமாக சொல்லிச் செல்லும். மேலும் சிந்தனையைத் தூண்டும். உதாரணமாக, முழுவதும் அகங்கார அழிவு நிகழ்ந்தால் என்ன நிகழும் என்ற சந்தேகம் எனக்கு இருக்குகிறது. முன்பு அது சந்தேகம் கூட இல்லை. ஒரு உணர்வு மட்டுமே. ஆனால் இப்போது வார்த்தையாகிவிட்டது. ’ ஞானியின் அகம் எப்படி இருக்கும்’ என்ற வரியுடன் சேர்ந்து கொண்டு விரிகிறது. ஏனெனில் வார்த்தையான மனதை புரிந்துகொள்வதிலேயே இத்தனை சிக்கலென்றால் வார்த்தையாகததை நோக்கி எப்படி செல்வது என்ற சந்தேகமும் உண்டு. ( இது சரியாக வரவில்லை)

நன்றியுடன்,

ராஜா.

அன்புள்ள ராஜா

கதைகளை வாசிக்கையில் சொற்களை காட்சிகளாக ஆக்குவது ஒரு மனநிலை. தொடர்ச்சியான வாசிப்பு மூலம் அது நிகழும். சிலசமயம் பல நல்ல வரிகள் அப்போது நம்மை தீண்டாது போகும். ஆனால் அவை எப்போதோ நம்மில் முளைக்கும் பொதுவாக கதைகளை அழகிய வரிகளாகவும் வாசிப்பது முக்கியமானது

ஜெ

கதைகளின் முடிவில்..

 

முந்தைய கட்டுரைமூங்கில் இசை கலைஞர்கள்
அடுத்த கட்டுரைவாசிப்பு -கடிதங்கள்