கமல் -ஒரு பழையபாடல்

செண்பகம் பூத்த வானம்

இனிய ஜெயம்

செண்பகம் பூத்த வானம் பதிவு கண்டேன். முன்பு வாசித்திருப்பினும் அப்போது அகம் தீண்டாத அப்பதிவு என் நினைவிலேயே இல்லை. இப்போது, குறிப்பாக நேற்று இரவெல்லாம் அப்பாடலை திரும்ப திரும்ப கேட்டதில் இந்த பதிவே முற்றிலும் புதிதாக துலங்கி வருகிறது.

உண்மையில் நிறைய இழந்து விட்டேன் என்பதை அன்றைய classic  மலையாள சினிமாக்களை இன்று பார்க்கையில் ஒரு மெல்லிய ஏக்கமாக உணர்கிறேன். கொஞ்ச தூரம்தான் என்றாலும் அந்த நிலம் விட்டு இந்த நிலத்துக்கு மலையாள திரைப்படங்கள் வருவது அறிது. நானறிந்து நெல்லையில் அரங்கில் பார்த்த இரண்டு மலையாள திரைப்படங்கள் ஒன்று லோகிதாஸ் எழுதிய கௌரவர். மற்றது வைசாலி.

கடலூர் நிலவரம் சுத்தம். மலையாளத்தில் மாபெரும் வெற்றி அடைந்த படங்கள் ஏதேனும் மூன்று நான்கு வருடத்துக்கு ஒரு முறை வெளியாகும். பெரும்பாலும் மம்மூட்டி துப்பறிவார். சமீபத்தில் தனி யாவர்தனம் என்றொரு படம் பார்த்தேன். லோகிதாஸ் எழுதியது. உணவூட்ட எழுந்த கைக்கு மறுபுறம் சட்டென குட்டிக் குழந்தைஎன மாறி வாய் திறந்து அந்த நஞ்சை உண்ணும் காட்சியில் என் உணர்வு இன்றியே கண்ணீர் வழிய அக் காட்சியை கண்டேன் என பின்னர் அறிந்தேன். கையருகே இருந்தும் கைவராமலே சென்று விட்ட ஒன்று. அவையெல்லாம்   அன்றே காண கிடைத்திருந்தால் என் பதின்மம் இப்படி நெல்லை கடலூர் மொட்டை வெயிலில் கருகிய ஒன்றாக இருந்திருக்காது.

இப்போதுதான் புரிகிறது அந்த நிலையில் சற்றேனும் ஆசுவாசம் அளித்தவர் கமல். சிறு வயதில் அப்பா நாயகன் படம் பார்த்துவிட்டு வந்து கதை சொன்னார். பிறகொருநாள் படத்துக்கும் அழைத்து சென்றார். பாடலி என்றொரு அரங்கம். மிக பழைய அரங்கம். இரவில் மட்டுமே படம் பார்க்க முடியும். பகலில் உடைந்த கதவுகள் ஓட்டை கூரை என திரையில் எதுவுமே தெரியாது. திரையும்  சாக்குத் துணி போல இருக்கும். மேலே மின்னும் வெள்ளி வண்ணம் பூசி இருப்பார்கள். திரைக்கு பின்னே கூம்பு ஸ்பீக்கர். மொத்தமாக எல்லா உரையாடலும் எதிரொலித்து ஒரே களேபரமாக இருக்கும். அரங்கில் எந்த நாற்காலியில் அமர்ந்தாலும் முன்னாள் இருப்பவர் தலை மட்டுமே தெரியும். அதை சுற்றி ஒளி வட்டம் போல படம் தெரியும். அதிலும் ப்ரொஜெக்டரில் கார்பன் சரியாக முழு அளவில் இருந்தால் மட்டுமே அந்த அதிர்ஷ்டமும். இல்லையேல் ஒரு புறம் வெளிச்சமும் ஒரு புறம் இருளுமாக படம் ஓடும்.

இப்படித்தான் இந்த அரங்கில்தான்  அப்பா மடியில் ஏறி அமர்ந்து எட்டி எட்டிப் பார்த்து நாயகன் படம் பார்த்தேன். கமல் போலீஸ் ஒருவரை அடித்து கொல்லும் போது, நிலா அது பாடலில் இளையராஜா குரல் எழும்போது, மொத்த அரங்கிலும் எழுந்த களிவெறிக் கூச்சல். அதை ஒருவர் நேரில் பார்த்தாலன்றி எந்த சொல் கொண்டும் உணர்த்திவிட  முடியாது. இளையராஜாவும் கமலும் தமிழ் சமூக ஆழ் மனத்தின் எந்த ஆழத்திலிருந்து அந்தக் களிவெறி எழுகிறதோ அங்கே அமைந்து போனவர்கள்.

இந்தக் கமல் மட்டுமே நானறிவேன். இந்த நிலையிலிருந்து இந்தப் பாடலைப் பார்க்கையில் கமல் முற்றிலும் வேறொரு மனிதர் போல இருக்கிறார். கிட்டத்தட்ட தன்னை உடைத்து மறுவார்ப்பு செய்து மலையாளத்துக்கு மாறி இருக்கிறார். அதே போல மீண்டும் தன்னை உடைத்து மறுவார்ப்பு செய்து தமிழுக்கு மாறி இருக்கிறார்.

இளையராஜா பழைய நேர்காணல் ஒன்றில் கமலின் முதல் பாடல் குறித்து சொல்கிறார். ரிகர்சலில் கமல் ‘பன்னீர் புஷ்பங்ஙளே’ என்றே துவங்க, இப்போ தமிழில் பாடுங்க, அப்புறமா மலையாளத்தில் டப்பிங் பண்ணிக்கலாம் என்று கிண்டல் செய்திருக்கிறார். அப்படி மாறி இருக்கிறார் கமல். அந்தக் கமல்தான் இந்தப் பாடலில் எத்தனை அழகு.

கேமராவுக்குப் பின்னால் இந்த பாடலின் கமல் romance மொத்தத்தையும் இந்த பாடல் நாயகியின் வருங்கால கணவர் அமர்ந்து பார்த்தார் எனும் வரியில் திகைத்து விட்டேன். அடப்பாவமே என்று இருந்தது.  பாய் பெஸ்டி என்பவன் கனவுகளால் அல்ல கண்ணீரால் ஆனவன் அப்டின்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வெச்சிருக்காங்க.

இந்தப் பாடல்தான் எத்தனை அழகு. இந்தப் பாடலின் இசையும், வரிகளும் (ஸ்ரீ குமாரன் தம்பி) கனவோ என்பதை போன்ற கருப்பு வெள்ளை சட்டகமும், ஆம் நீங்கள் எழுதியது நிஜம்தான், இது அனைத்தும் கூடி, கமலை அன்றைய மலையாள (இளமையின்) ஆழ்மனதின் நாயகனாக்கி இருக்கிறது.

அன்று திறக்காத இந்த பாடலுக்கான மனம், நேற்று இரவு ஏன் திறந்தது? மெல்லிய நீல ஒளியில், ஆங்காங்கே பயணிகள் உறங்கும் பேருந்து, மெல்ல  விரையும் ஜன்னல் காட்சிகளின் குளிர் தென்றலுக்கு மேலாக பாதி நிலா, எதற்க்கோ ஆனா ஏக்கம். எது?  இந்தப் பாடலின் கஸல் வடிவம் கேட்கையில்தான் உணர்ந்தேன். இந்த இசை எனக்குள் திறந்து கொள்ள ஒரு சிறிய முன் பயிற்சி என்னையறியாமலேயே நிகழ்த்தி இருக்கிறேன்.

சில மாதங்கள் முன்பு இரவில் பண்டிட் பீம் சென் ஜோஷி அவர்களின் இசைக்கோவை ஒன்று கேட்டேன். டிஸ்க்ரிப்ஷன்ல் அது பாகேஸ்ரீ ராகம் என்று கண்டிருந்தது. ஒவ்வொரு இரவும் பாகேஸ்ரீ என்று தேடி, ஒரு நாள் அஷ்வினி பைதி, ஒரு நாள் கிஷோரி அமோன்கர், ஒரு நாள் பண்டிட் ஜஸ்ராஜ், ஒருநாள் பண்டிட் வெங்கடேஷ் குமார் என ஒரு மாதம் முழுக்க இரவுகளில் வெவ்வேறு குரல்களில் இந்த ராகத்தை கேட்டுக்கொண்டு இருந்தேன். ( இசை இலக்கணமோ ஆழமோ அறியேன் உள்ளுணர்வின் ஒளியில் சொல்கிறேன் இந்த  வரிசையில் இந்த ராகத்தின் இணையற்ற வெளிப்பாடு பண்டிட் வெங்கடேஷ் குமாரில் நிகழ்வது) இந்த மலையாளப் பாடல் ஒரு மெல்லிய பாகேஸ்ரீ ராகப் படலத்தால் போர்த்தப் பட்டு இருக்கிறது. மனதில்முன்பு பாகேஸ்ரீ ஓடிய தடத்தில் இந்தப் பாடல் இப்போது  ஒழுக, இந்த இசையும் ஏசுதாஸ் அவர்களின் தெய்வீக குரலும், எனது இந்த இரவை நிறைத்து விட்டது.  இந்தப் பதிவினை தொடர்ந்து உங்கள் பழைய புகைப்படம் ஒன்றினை தேடி எடுத்துப் பார்த்தேன். சரிதான்

கடலூர் சீனு

அன்புள்ள சீனு

கமல் மலையாளி அல்ல. ஆனால் நெடுங்காலம் மலையாளநடிகராகவே அறியப்பட்டார். அவர் மலையாள உடல்மொழி ஒன்றை உருவாக்கிக் கொண்டார். மலையாள இளைஞனாகவே ஆனார். மலையாளத்தின் அடுத்த தலைமுறை இளம்நடிகர்கள் மட்டுமல்ல, மலையாள இளைஞர்களிடையேகூட அந்த உடல்மொழி பரவி நிலைகொண்டது என்பது மிக வியப்பூட்டுவது.

கமல் மலையாள சினிமாக்களில் நடிக்காமலான பின்னர்கூட மலையாளத்தில் கமலைப்போலவே அசைவுகளில் பாவனைகளில் தோற்றமளித்த பலநடிகர்கள் வந்தனர்.நீண்டநாட்கள் அவர்கள் செல்வாக்கு செலுத்தினர். ரவிக்குமார், மோகன்,ரஹ்மான்,ராமச்சந்திரன், ஜோஸ்… ஆரம்பகால மோகன்லாலில் தெளிவாகவே கமலின் செல்வாக்கு உண்டு. எப்போதுமே கமல் போல ஒரு நடிகர் இருந்துகொண்டிருப்பார்.பின்னாளில் ஒருவர் நகல் கமல் ஆகவே வந்து கமலுடன் சேர்ந்து நடித்தார்- ஒருதலைராகம் ரவீந்தர்

ஏனென்றால் கமல் மலையாளத்திற்கு வரும்போது மிக இளைஞர். அன்று மலையாளத்தில் துடிப்பான இளம்நடிகர் என எவரும் இல்லை. சோமன் சுகுமாரன் அனைவருமே நடுவயதினர். மலையாள சினிமாவில் துடுக்குத்தனமான காதலன் என்ற ஒரு கதாபாத்திரத்தையே கமல்தான் உருவாக்கினார்.

அது ஒரு காலகட்டத்தின் கனவு

ஜெ

ரஹ்மான்
ரவீந்தர்
ரவிக்குமார்
ராமச்சந்திரன்
மோகன்
ஜோஸ்
மோகன்லால்
முந்தைய கட்டுரைவெண்முரசு- பெருஞ்செயலும் தடைகளும்
அடுத்த கட்டுரைசெயல்வழி ஞானம் – காந்திகிராம் நிகழ்வு