அன்புள்ள ஜெமோ,
வணக்கம். என் பாட்டி ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டார்.”கல்யாண” சாவு. உறக்கத்திலே இறந்துவிட்டார். கோரானா அறிகுறி ஏதும் இல்லை. ஆனால் கோரானா காலத்தில் இதற்கு போவதா இல்லையா என்று குடும்பத்தில் மிக பெரிய குழப்பம். செய்தி வந்து ஒரு மணி நேரத்தில் போக வேண்டாம் என்று நானும் என் மனைவியும் முடிவு செய்து சொல்லிவிட்டோம்.
எனக்கு பாட்டி பற்றிய பெரிய நினைவுகளோ ஒட்டுதலோ இல்லை. ஆனால் நேரம் செல்ல செல்ல ஒரு குற்ற உணர்வும், அழுத்தமும் அதிகரத்து கொண்டே இருந்தது..எத்தனை காரணங்களை சொல்லி கொண்டாலும் மனது அடங்கவில்லை… சில மணி நேரங்களுக்கும் முன் எடுத்த முடிவின் திடம் இப்பொழுது இல்லை… மனதளவில் பாட்டியிடம் மன்னிப்பு கோரும் நிலைக்கு சென்று விட்டேன்…
இது கண்டிபாக மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதினால் அல்ல…என் நண்பர்களிடம் கேட்டதிற்கு அவர்களில் சிலரும் இந்த பேரிடர் காலத்தில் “இதே” நிலைக்கு ஆளாகி உள்ளனர்…குழப்பங்கள்.. ஊசலாட்டங்கள்…நீங்கள் கூட ஒரு உறவினர் மரணத்திற்கு சென்றது குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள்…மனதின் இந்த ஊசலாட்டங்களை கவனிக்கையில் பிரமிப்பாக ,பயமாக இருக்கிறது…
மரணத்திற்கான சடங்குகள்,இறந்தவர்க்கான கடன்கள் நம்முள் மிக ஆழமாக படிந்துள்ளதா.?இல்லை இது வெறும் ஒரு குற்ற உணர்ச்சியிறன் வெளிபாடா. ?இரண்டுமா…?
பி.கு
என் உறவினர்கள் பலர் ,மனைவி அனைவரும் உங்கள் வளைதளத்தின் வாசகர் என்பதால் பெயர்.வெளியிட வேண்டாம்…
எஸ்.
***
அன்புள்ள எஸ்,
வாழ்க்கையின் அடிப்படையான பல விஷயங்கள் நம்முடைய தர்க்கமனம் சார்ந்தவை அல்ல. பிறப்பு, திருமணம், சாவு ஆகியவை நம்மில் நேரடியான வாழ்க்கைநிகழ்வுகளாக எப்படி உள்ளனவோ அதேபோல, அதைவிட ஆழமாக குறியீடுகளாக ஆழுள்ளத்தில் பதிந்துள்ளன. அன்றாட வாழ்க்கையில் தர்க்கபூர்வமாக முடிவுகளை எடுக்கலாம், சிலவற்றைச் செய்யலாம், அதற்கு அப்பாற்பட்ட ஆழுள்ளத்து நிகழ்வுகளை நம்மால் தர்க்கபூர்வமாக வகுத்துக்கொள்ள முடியாது
ஆழுள்ளம் படிமங்களால் ஆனது. குறியீடுகளால் மட்டுமே அதை நம்மால் கையாளமுடியும். இதன்பொருட்டே இங்கே சடங்குகள் உருவாகி வந்திருக்கின்றன. இச்சடங்குகள் ‘உருவாக்கப்பட்டவை’ அல்ல. மிகமிகமிகத் தொன்மையானவை. மதம், மொழி ஆகியவற்றைவிடவும் தொன்மையானவையாக இருக்கலாம். அவற்றை மதம் எடுத்துக்கொண்டது, மொழி விளக்கமளித்துக்கொண்டது. அவை அத்தனை தொன்மையானவை என்பதனாலேயே நாம் அவற்றை எளிதில் உதறமுடிவதில்லை
சிலர் மிகுந்த தர்க்கபுத்தி கொண்டவர்கள், கலையிலக்கியம் இசை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் வணிகம் தொழில் அரசியல் போன்றவற்றுக்குரியவர்கள். அவர்கள் தங்கள் தர்க்கபுத்தியால் ஆழுள்ளத்தை கடந்துசெல்லக்கூடும். அதுகூட ஐயம்தான். அப்படி கடந்துசென்றதாகத் தோன்றும், அது ஒத்திப்போடல் மட்டுமே. என் மாமனார் திக காரர். தந்தை இறந்து இருபதாண்டுகளுக்குப்பின் காசிக்குச் சென்று அவருக்கான சடங்குகளைச் செய்தார். அதுவரை தாக்குப்பிடித்தார்.
கற்பனைத்திறனும் கலையிலக்கிய ஈடுபாடும் உடையவர்கள் குறியீடுகளிலிருந்து தப்ப முடியாது. அவர்களின் உள்ளமே குறியீடுகள் வழியாகச் செயல்படுவது. காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது ஒரு வீட்டுவாசலில் குலைவாழை கட்டப்பட்டிருப்பதைக் கண்டதும் மனம் மலர்கிறது. ஒரு தூரத்து நாதஸ்வர ஒலி நிறைவை அளிக்கிறது. புழுதியில் படிந்திருந்த ஒரு குழந்தையின் காலடித்தடம் கண்டு மகிழ்ச்சி அடைந்ததை ஒரு நண்பர் சொன்னார். அவரைப்போன்றவர்கள் குறியீடுகளை தவிர்க்கவே முடியாது
சாவு போன்றவை நேரடியாக நம் உள்ளத்தால் ஒருவகையில் புரிந்துகொள்ளப்படுகின்றன. நம்மால் அளக்கவேமுடியாத வகையில் ஆழுள்ளத்தால் உள்வாங்கப்படுகின்றன. ஒருவரின் சாவு நமக்கு முக்கியமே அல்ல என்று நினைப்போம். ஆனால் அவர் நம் கனவில் வருவார்.அது ஏன் என்றே சொல்லமுடியாது. ஒருவர் நமக்கு ஆழுள்ளத்தில் எவ்வகையில் பொருள்படுகிறார் என ஆராய்ந்தால் வீணாக வெட்டவெளியில் சென்று நிற்போம். மறைந்தவர் அவருடைய உடல், தோற்றம் காரணமாக உங்களுக்கு உங்கள் அன்னையை நினைவூட்டலாம். அல்லது இனிய வேறொன்றை நினைவூட்டலாம். அதை கண்டுபிடிக்கவே முடியாது
சாவுச்சடங்குகளின் பணி சாவை உள்ளத்தால் ஏற்கச்செய்வதுதான். சாவு இரண்டுவகையான திகைப்பை மனதுக்கு அளிக்கிறது. நம்மால் ஒருவர் இருந்து திடீரென மறைவதை ‘நம்ப’ முடிவதில்லை. நம் உள்ளம் ஏற்க மறுக்கிறது. இருக்கிறார் என்றும் வருவார் என்றும் எண்ண விழைகிறது. என் நண்பன் தற்கொலைசெய்துகொண்டான். ஆஸ்பத்திரியில் அவன் உடல் கிடந்தது. நான்தான் அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றேன். ஆனால் அவன் இறந்ததும் அவன் வீட்டில் இருப்பான் என்று நினைத்துக்கொண்டேன். இருட்டில் ஓடியே வீட்டுக்கு வந்துவிட்டேன். அவன் எரியுண்டபிறகும் எங்கோ போயிருக்கிறான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். இது மானுட உள்ளத்தின் நிலை
இரண்டாவது திகைப்பு ஏதாவது எஞ்சியுள்ளதா என்ற எண்ணம். இறந்தவரிடம் நாம் சொல்ல, அவர் நமக்குச் சொல்ல ஏதேனும் உள்ளதா? இனி செய்வதற்கு ஏதாவது உள்ளதா? அதாவது மரணம் ஒரு முடிவு. ஆனால் உள்ளம் மேலும் கொஞ்சதூரம் ஓடித்தான் நிற்கும். அந்த ஓட்டம் பெரிய அலைக்கழிப்பு.
மரணச்சடங்குகள் இவ்விரு திகைப்பையும் இல்லாமலாக்கி நம் ஆழ்மனதுக்கு சாவை உறுதிசெய்கின்றன, சாவுடன் உள்ளமும் நிலைகொள்ளச் செய்கின்றன.சாவுச்சடங்குகள் எல்லாமே குறியீடுகள்தான். ஒருவர் நீராடி ஆடையணிந்து உணவுண்டு எங்கோ கிளம்பிச் செல்வதைப்போல அவை நடிக்கின்றன என்பதைப் பாருங்கள். ஆகவே சாவுச்சடங்குகளை செய்வதென்பது நாம் இயல்பாக விடுதலை அடைவதுதான். நீத்தார்கடன்களும் அவ்வண்ணமே.
அதற்கு வேறு ஆழ்ந்த அர்த்தங்களும் உண்டு. இங்கே அவற்றை பேசவிரும்பவில்லை. இங்கே நம் உளவியலை மட்டுமே பேசுகிறேன். இந்த கொரோனா காலகட்டத்தில் நாம் சாவுவீட்டுக்குச் செல்லமுடிவதில்லை. சாவுச்சடங்குகளை முறைப்படிச் செய்யவும் முடிவதில்லை. அந்நிலையில் அதற்குச் சமானமான பிற சடங்குகளைச் செய்தால்போதும். அவை நம்முடைய அலைச்சலை, நாமுணரும் குறையை ஈடுசெய்துவிடும்
உதாரணமாக, இளையராஜா எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்குச் செல்லமுடியவில்லை. ஆனால் திருவண்ணாமலையில் மோட்சதீபம் ஏற்றினார். அது போதும். ஒரு சாவுச்சடங்குக்குச் செல்லமுடியவில்லை என்றால் ஓர் ஆலயத்தில் மாண்டவரின் பொருட்டு ஒரு பூசை அல்லது வழிபாடு செய்தால்போதும். அதற்கான சடங்குகள் உள்ளன.
அணுக்கமானவர், உறவினர் என்றால் மோட்சதீபம் ஏற்றலாம். நெருக்கமானவர் அல்ல என்றால் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி மாண்டவரின் நிறைவுக்காக வேண்டிக்கொண்டால்போதும். அது விரைவான ஒப்புக்கான வழிபாடாக இருக்கக்கூடாது, சற்றுநேரத்தை ஆலயத்தில் செலவிடவேண்டும். உண்மையாகவே விடுதலை அடையமுடியும்.
சரி, நாத்திகர் என்றால்? அதற்குரிய ஏதேனும் அறக்கொடையைச் செய்தால் போதும். மாண்டவரின் பொருட்டு ஒரு கொடையளியுங்கள். அது எந்த அளவுக்கு பயனளிக்குமென எனக்கு தெரியவில்லை—ஏனென்றால் நாத்திகம் என்பது நம் தர்க்கநிலைபாடு. உள்ளூர நாம் எவர் என நமக்கே தெரியாது. செய்து பார்க்கலாம்
ஜெ