அஞ்சலி: கே.எஸ்.

கே.எஸ். அவர்களை ஜெயகாந்தனின் ‘சபை’யில்தான் முதலில் அறிமுகம் செய்துகொண்டேன். ஜே.கே ‘கேஎஸ் வந்தாச்சா?”என்று கேட்டுக்கொண்டே இருந்தர். அமைதியிழந்தவரைப்போல, எதையோ எதிர்பார்ப்பவரைப்போல. கே.எஸ் வந்ததும் புன்னகை, ஓரிரு சொற்களில் உரையாடல். அவ்வளவுதான், மேற்கொண்டு ஒன்றும் நிகழவில்லை, ஜேகே அமைதியாகிவிட்டார்

கே.எஸ். உலகவங்கி போன்ற நிறுவனங்களில் மிக உயர்பதவிகளில் இருந்தவர். ஜெயகாந்தனின் வாசகராக அறிமுகமாகி இறுதிநாள்வரை அணுக்கமான நண்பராக இருந்தவர். ஜெயகாந்தனின் படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதை தன் வாழ்நாள் பணியாக எடுத்துக்கொண்டவர். ஜெயகாந்தனின் உரையாடல்தோழர், அவரால் இடைவெளியில்லாமல் நட்புடன் கேலிசெய்யப்பட்டவர்

கே.எஸ்.அவர்களுடன் நல்ல உரையாடல்கள் பல நிகழ்ந்துள்ளன. எல்லாமே ஜெயகாந்தனைப் பற்றி. ஜே.கே இருந்தபோதே அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து ஜே.கேயுடனான அனுபவங்களை பகிர்ந்துகொள்வார். மறைந்தபின் ஓரிருமுறை அழைத்தார். அப்போதும் ஜேகே உயிருடன், அண்மையில் இருப்பதுபோலவே இருக்கும் அவருடைய பேச்சு.

பெரும்பாலும் ஜெயகாந்தனின் படைப்புக்களை மொழியாக்கம் செய்து நூலாகவெளியிட்டு அவற்றை எனக்கு அனுப்பியபின்பு கிடைத்ததா என்று கேட்கும்பொருட்டு செய்யப்படும் அழைப்புக்கள். பேச்சு அப்படியே ஜெயகாந்தனின் நினைவுகளுக்குச் செல்லும். ஓர் எழுத்தாளன் இன்னொருவரின் உள்ளத்தில் அத்தனை ஆழமாக ஊடுருவி நிறைந்து அவருடைய வாழ்வின் பொருளென்றே ஆகமுடியுமா என்ற வியப்பு ஏற்படும்.

கே.எஸ். மொழியாக்கம் செய்துகொண்டே இருந்தார்.ஜெயகாந்தனின் இருபத்தைந்து நூல்களுக்குமேல் அவருடைய மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஆனால் அது ஒரு அந்தரங்கமான செயல்பாடு, ஜெயகாந்தனுடன் ‘பேசிக்கொண்டிருப்பதற்காக’ செய்வது. ‘பழைய காதல் கடிதங்களை படிச்சு பாக்கிறது மாதிரி ஒரு அனுபவம். உண்மையிலே ஜேகேயை வாசிக்கத்தான் மொழியாக்கம் பண்றேன்’

அதனால் கே.எஸ் அந்நூல்களின் செம்மையாக்கம், வெளியீடு ஆகியவற்றுக்கு போதிய முயற்சிகள் எடுத்துக்கொள்ளவில்லை. அவை முதல்கட்டமொழியாக்கங்கள், சற்று பழைய மரபான ஆங்கிலத்தில் அமைந்தவை. பெரும்பாலும் பாடநூல்வெளியீட்டாளர்களால் நூல்வடிவம் பெற்றவை. பொதுவாசகர்கள் நடுவே அவை அதிகமும் கவனிக்கப்படாமல் போயின. ஆனால் ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட்டதற்கு அந்த மொழியாக்கங்கள்தான் முதன்மைக்காரணம்

கே.எஸ்.அவர்களுக்கு அஞ்சலி. ஜெயகாந்தனின் பெயருடன் அவர் பெயரும் எப்போதும் நினைவில் நின்றிருக்கும்

*

 

அனுபவச்சுவடுகள் கே.எஸ்.சுப்ரமணியன்

 

முந்தைய கட்டுரைமலைநிலத்து குமரன்
அடுத்த கட்டுரைகமல், மகாபாரதம் பற்றி மேலும்