நான்காம் தடம் – எனும் குர்ட்ஜிப்பின் சுழற்பாதை

அன்புள்ள  ஜெ  சார்.

ஓஷோவை இரண்டு வகையான  மனிதர்கள் பின்தொடர்ந்து செல்வதுண்டு , ஒன்று  ‘தனிமனித  அகந்தையை உடைத்து நொறுக்கும் ” யுக்திக்காக.  மற்றொன்று தனிமனித   ஆன்மீக தேடல் மற்றும் செயல்பாடுகள் சார்ந்த எல்லையை  மேலும் மேலும் விரித்துக்கொண்டே செல்வதற்கான வழிமுறைகள் சொல்கிறார் ” என்கிற யுக்திக்காக.

இந்த இரண்டு செயல்பாடுகளிலும் ஓஷோ கையில் எடுக்கும் கருவி என்பது , இயேசு , புத்தர் ,கிருஷ்ணன் ,எனும்  மாபெரும் ஆளுமைகளை தான் . இந்த ஆளுமைகளை , பகடி செய்தல், அவர்களின் மேன்மைகளை கூறுதல் , அவர்களை மனதுக்கு அணுக்கமாக உணரவைத்தல் , அவர்களிடம் விலக்கமும் , அச்சமும் கொள்ளச்செய்தல், என  பல படிநிலைகளில் இவர்களை  முழுமையாக பயன்படுத்திய இந்த நூற்றாண்டின்  ஆசிரியர் எனில் ஓஷோவை மட்டுமே சொல்லமுடியும்.

அந்தவகையில்  அவர் அடிக்கடி குறிப்பிடும் மற்றொரு   ஆளுமை ”  குர்ட்ஜிப் ‘George Ivanovich Gurdjieff  ஓஷோ இவரை  சமகால ”தந்த்ரா ‘ மார்க்கத்தின்  உச்ச குரு என்கிறார்.

குர்ட்ஜிப்  பற்றி தமிழில்  எழுதப்பட்ட  சிறந்த நூல் எனில்   இரா.ஆனந்தக்குமார்  அவர்கள் எழுதிய  ” நான்காம் தடம்  எனும்  ”ஒரு போக்கிரி ஞானியின் கதை ”  நூலை குறிப்பிட வேண்டும்.  இங்கிலாந்து அறிஞர்  ஜேம்ஸ் மூர் என்பவர் எழுதிய            ” குர்ட்ஜிப் காலவரிசை ” {GURDJIEFF CHRONOLOGY}  எனும் குறிப்புகளிலிருந்து, குரிட்ஜிபின் வாழ்வின் ஒவ்வொரு பயணத்தையும் , தேடலையும் , அனுபவத்தையும் , ஒரு நாவல் என  செம்மையாக  தொகுத்து மிக அழகாக கதை சொல்லியிருக்கிறார், ஆனந்த்.

நாவலின் மற்றுமொரு சிறப்பு குர்ட்ஜிப்பை, புனிதப்படுத்தியோ , அவரின் மேன்மைகளையும் , ஆன்மீக மாயாஜாலங்களையோ, வியந்து பாராட்டாமல்,  சாமானியனுக்கு இருக்கும்  அத்தனை  நலிவுகளையும்  உள்ளடக்கியே, ஆனந்த் இந்த நூலை  சமர்பிக்கிறார்.

நாவல் மிகவும் வித்தியாசமான ”ஆர்மேனியா ” எனும்  கிழக்கும்,  மேற்கும்  சந்திக்கும்  ஒரு குறுக்குச்சந்தில், பிரளயத்தின் போது  நோவா பயணித்த கப்பல் {ARK OF NOAH} கடைசியாக தட்டிநின்ற  ”அராரத் ” மலையில், தொடங்குகிறது .    குர்ட்ஜிப்பின்  பால்யகால குறிப்புகள் பெரிதும் கிடைக்காததால்  அவருடைய  யவன காலத்திலிருந்தே கதை  தொடங்குகிறது ,  கிழக்கு ,  மேற்கு என்கிற இரண்டு முனைகளிலும் உள்ள தத்துவார்த்த  சிந்தனையில் , நம்பிக்கையில் , பயிற்சிகளில்  பயணித்து  இருக்கிறார் , திளைத்திருக்கிறார் , ஏராளமாக குழம்பியும் இருக்கிறார்.

குர்ட்ஜிபின்  தந்தை ‘யானிஸ்’ ஒரு நாட்டாரியல் அறிஞராக , கதைசொல்லியாக  இருந்திருக்கிறார் , ஆகவே கதைகளினுடே,  அவனுடைய இளமைக்காலம் நகர்ந்திருக்கிறது,  குர்ஜிபின்  வார்த்தைகளில் சொல்வதானால்  ” என்  தந்தையின் நாட்டுப்புறக் கதைகளே , என்னை ஒரு பெரும்  பயணத்திற்கும் , மெய்த்தேடலுக்கும்  உசுப்பி விட்டது, நீங்காத  தடையங்களாக  அது எப்போதும் என்னுடன்  பயணித்திருக்கிறது, அவ்வுணர்வுக்கள்  என் சுயபுரிதல்களை, படிகங்களாக்க பெரிதும் உதவியும் இருக்கிறது ”-

ஒருநாள், குர்ட்ஜிப்க்கு  ஒரு  உடல் கடந்த, { out of body experience}   மரணத்திற்கு அணுக்கமான அனுபவம் { near to death experience}, வாய்க்கிறது, அங்கிருந்து  அவனுடைய  தேடல்களும் , பயணங்களும்  தொடங்குகிறது.  இந்த இடத்தில  நூலாசிரியர் ” ரமண மகரிஷியின்  மரணானுபவமும் , குர்ட்ஜிபின்  மரண பயமும் ஒன்றே . ஆனால் பயணம் முற்றிலும்  வெவ்வேறானது ”-  என்கிறார் .எனினும்  குர்ட்ஜீப்   விட்டு விடுதலை அடைகிறானா? மெய்மையை கண்டுகொண்டானா ? போன்ற பல கேள்விகள்  நாவல் முடிவில்  தொக்கி நிற்கிறது  என்பதே  உண்மை.

கிரேக்க , இஸ்லாமிய , துருக்கிய ,ரஷ்ய  மற்றும் இந்திய யோகமரபு  என  பல்வேறு  வகையில் ஞான மார்க்கத்தில் , பயிற்சிகளில் வாழ்நாள் முழுவதும்  அலைந்து திரிந்து முட்டி மோதியபடியே  இருக்கும், குர்ட்ஜீப்பிற்கு எங்கு சென்றாலும்  ஆசிரியர்களும் , போதனையும் கிடைத்தவண்ணம் இருக்கிறது  கூடவே  அதில் ஒரு  போதாமையும் , நிறைவின்மையும்.

இன்று தத்துவார்த்தமான சிந்தனைகளில்  நாம்  மேலும் முன்னர்கார்ந்து இருக்கிறோம்,  எனினும்   ”இறப்பிற்கு பின்  என்ன  நிகழும் ? –   ”நான் எதற்காக  இங்கே  இருக்கிறேன்? –  ”என்  பயணம்  எதை நோக்கி?”-   போன்ற  அடிப்படை  கேள்விகள்  மேற்கு உலகில், ”அகத்தை உலுக்கும்” கேள்விகளாக  1800களில்  இருந்திருக்க வேண்டும் ,  ஏனெனில்  இதுபோன்ற  கேள்விகள்  எல்லாம்  நம்  மரபில்  மிகவிரிவாக  கேட்கப்பட்டு , விவாதிக்கப்பட்டுள்ளது . ”கோஹ்ன்  அஹம்? ” குதோ  ஜகத்? ” போன்ற  சிந்தனைகளுக்கு ஒரு  கிராமத்து  நாட்டுப்புற  பாடல்களிலோ, சித்தர் பாடலிலோ, போகிற போக்கில்  ஒரு வரியில்  விளக்கி / விலக்கிவிட்டு  சென்றுவிடுவோம்.  எனவே  குர்ட்ஜீபிடம் இருந்து இது போன்ற கேள்விகளுக்கு  நாம் ஒருபோதும்  விடை பெற்றுக்கொள்ள முடியாது .  ஏனெனில்  ஏற்கனவே இருக்கும்  மரபை  மாற்றி அமைத்தல் , அதை  நிராகரித்தல்  என்பதை  1800ன் குர்ட்ஜீப் முதல்  2000தின்  ஓஷோ வரை, அகத்தேடுதலுக்கான இன்றைய கருவி  என்றும்  ”பழைமையான ஒன்றை நிராகரித்தல்”, ”சரியான விடை”  என்றும்  நம்புகிறார்கள், அதையே போதனையும்  செய்கிறார்கள் ,  ஆனால்  ஒரு கிழக்கின்  மனதோ  வேறு  வகையில்  இயங்குவது ,

”mAhaM brahma nirAkuryAm |
”mA mA brahma nirAkarot |

இங்கிருக்கும்  அனைத்தும்  பிரம்மமே , ஆகவே, அந்த பிரம்மம்  என்னை  நிராகரிக்காமல்  இருக்கட்டும் , நானும்  பிரம்மத்தை  நிராகரிக்காமல்  இருப்பேனாக ”-  என்கிற  சாந்தோக்ய உபநிஷத்  வரிகள்  மேற்கின் மற்றும் கிழக்கின்  அத்தனை  கேள்விகளுக்குமான  ஒற்றை பதில் .  எனினும்,  கால,தேச,வர்த்தமானம்  கருதி  குர்ட்ஜீப் போன்ற  அலைந்து  திரியும்  ஆளுமைகளை  நாம்  ”ஜிஜ்ஞாஸா” என்கிற  வகைமைக்குள் மட்டுமே  கொண்டுவர முடியும், இவர்களும்  மாற்றத்தை, பயிற்சி முறைகளை , போதனைகளை , செல்லவேண்டிய  பாதையை  என  தொடர்ந்து  உருவாக்கி உலகுக்கு  தந்தவண்ணம்   உள்ளார்கள்.

குர்ட்ஜீப், அதுவரை  அங்கே  இருந்த  ஒட்டுமொத்த உலக ஞான மரபுகளை , ‘துறவியின் பாதை’, ‘பக்கீரின்  பாதை’ , ‘யோகியின்  பாதை’, என மூன்றாக  பிரிக்கிறார் , இந்த  மூன்றையும்  உள்ளடக்கியும் , தாண்டியும் , ‘நான்காம்  தடம்”  எனும்  புதிய  பாதையை  உருவாக்குகிறார் , அதன்படி  உடல்-மனம்-ஆத்மா,  இவற்றின்  சங்கமமே  முழுமையான வாழ்வு.   இல்லையெனில்  நீங்கள்  சிறைக்குள்  இருக்கிறீர்கள், அல்லது  நீங்களே  சிறை,’- என்கிறார் . இந்த  சங்கமத்தை  உருவாக்க , ஒரு பயிற்சி திட்டமும் பரிந்துரைக்கிறார்.

இன்றும்  ஓஷோ  ஆஸ்ரமத்தில்  பயிற்றுவிக்கப்படும் , ” மெதுவாக, தொடங்கி  நடனமாடி  உச்சகட்ட ஆட்டத்தின்போது, அனைத்து  அசைவுகளையும் நிறுத்திவிட்டு  சிலையென  அப்படியே  நிற்றல் , அல்லது  விழுந்து கிடந்தபடி, உடல்,மன  ஓட்டங்களை கவனித்தல்.  குர்ட்ஜீப்  இதை  டெர்விஷ்  மரபிலிருந்து  உள்ளிழுத்துக்கொள்கிறார் ,  தீட்ஷை  பெற்று  தீவிரத்துடன்  பயிற்சியில்  ஈடுபடும்  மெளலவிகள்  இந்த ” சுழலும்  டெர்விஷ் கள்” { whirling dervish} Whirling Dervishes  சதுர்வேத பாராயணம்  செய்யும்  இடங்களில்  ” சாமவேதம் ” உச்சரிக்கும் பகுதியில் மட்டும்,  யாவருக்கும் ஒரு ”ஓர்மை ” கைகூடும்  அப்படியான  ஓர் அனுபவம் இவை

மூச்சுப்பயிற்சி மற்றும் , யோக  பயிற்சிகளை இந்திய  யோக மரபிலிருந்தும் , சூஃபி , மற்றும் கிருத்தவ மடாலயங்களில் இருந்தும்  என  பல்வேறு  மரபுகளில் இருந்து  தான் கற்ற, பயிற்சிகளை கொண்டு ஒரு  பாதையை  அமைக்க முயல்கிறார்.

சுவாமி  சிவானந்தர் போன்ற  இந்திய யோக -ஞான மரபிலிருந்து வந்த  எனக்கு, குர்ட்ஜிப்  சொல்லும் பயிற்சிகள் எல்லாம்  பாலபாடம்  தான், இப்படி நாவல்  வடிவில்  நமது , சங்கரர் , ராமானுஜர் , மத்வர் , ரமணர் , பற்றி ஒரு  வாழ்வியல் நூல்  எழுதப்பட்டால் , ஒவ்வொரு பக்கத்திலும்  நூற்றுக்கணக்கான உவமானங்கள் , கோட்பாடுகள் , தத்துவார்த்த  விவாதங்கள்  என  எவ்வளவு  செறிவுள்ளதாக  இருந்திருக்கும்  என்று  நினைத்துக்கொண்டேன்.  எனினும் , இந்த  நாவல்  அதன் கதை சொல்லும்  தன்மைக்காகவும் , ஒரு ஜிஞாஸூவின்  அலைக்கழிந்த  பயணக்குறிப்புக்காகவும் , 1800களின்  ரஷ்ய ,கிரேக்க , ஆர்மீனிய , ஆசிய  என ஒரு பரந்துபட்ட பயண அனுபவங்களுக்காகவும், அன்றைய  வாழ்வியல்  சித்திரங்களுக்காகவும். மேற்கிலிருந்து நாம் பெற்றுக்கொள்ள, எனும்  சில  வாசல்களை  திறந்து விடுவதாகவும் மிக முக்கியமான  ஆக்கம்  எனலாம்.

பொதுவாக,  கிழக்கில் தத்துவங்களை மட்டும்   ஏற்படுத்துவதில்லை  ஒவ்வொரு  தத்துவத்திற்கும்  அதனை ஒட்டிய  ஒரு தீவிர பயிற்சி,  அதற்கான  அதிகாரி  { தன்னை  தயாரித்துக்கொள்ளும் நபர்  என்கிற  அர்த்தத்தில்} அதற்கான கால- தேச-வர்த்தமானம் , மற்றும்  அதன் பலன்.  என மிகத்துல்லியமான  அளவுகோல்கள்  அமைக்கப்படும்.   குர்ட்ஜீப்  வாழ்நாள் முழுவதும் , அத்தனை  அல்லல்களுக்கு மத்தியிலும் , தொடர்ந்து  மெளலவிகள் ,  சூஃபிகள்  மடாலய துறவிகள் , தேவாலய  பாதிரிகள் , யோகிகள் என  சந்தித்தும்  ஆசி பெற்றும்  வந்ததால்  ஓரளவு கிழக்கின்  சித்தாந்தங்களுக்கு  அணுக்கமாக  வருகிறார்.

– அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா – ப்ரஹ்மத்தை தேடுபவனே  கேள் –  என்று  தொடங்கும் பிரம்ம சூத்திரத்தின் முதல்  வரி  அதற்கான  அதிகாரிகளையும் , அதாவது  தேடுபவனையும் , பிரம்மத்திருக்கு நிகராகவே  கருதுகிறது.  வெண்முரசின்  இமைக்கணத்தில், இளைய  யாதவன் காட்டுக்குடிலில்  அமர்ந்திருக்க , அவனை காண வரும்   ”கர்க்கர்”  எனும் முனிவர்  ”பிரஹ்மம்  எது ? நீ  தான்  அந்த பிரம்ம வடிவமா ? என  ஆதங்கத்துடன் கேட்க ,  பீலி சூடியவன்  புன்னகையுடன்  சொல்கிறான்  ” அது நானே ”  ”கர்க்கரே  ”அது ”வென தன்னை  உணரும்  அனைவரும்  அப்பேருருவை  கொள்ளலாகும் என  உணர்க ”-  இப்படியான ஒரு  உச்சத்தை  தொட  பெரும்பாலும்  கிழக்கு சிந்தனையால் எளிதாக முடிந்திருக்கிறது  என்பதே  நாம்  பெருமிதமும், மேலும் கனிவும் கொள்வதற்கான  அடிப்படியாக  அமையட்டும் .

ஒரு போக்கிரி ஞானியின் கதை  எனும் இந்த நூல்  முதல்  தொகுப்பு.  ” தேடலும் , விட்டு விடுதலையாதலும் ” என குறிப்பிடுகிறது.  எனினும்  நூல் முழுவதும்  ”தேடல்” மட்டுமே  பேசப்படுகிறது , நூல் இரண்டு  வரும்போது  ”விட்டு விடுதலையாதல் ” பேசப்படும்  என்று  எண்ணுகிறேன்.  ஆனந்த் அவர்களுக்கு  வணக்கமும்  அன்பும்,வாழ்த்துக்களும்

செளந்தர்.G

வாழ்க்கை, வண்ணம்: காட்டின் நடுவில் ஒரு தரிசனம்...

முந்தைய கட்டுரைபௌத்தம்,விஷ்ணுபுரம்
அடுத்த கட்டுரைநிர்வாணமான இசை