பூட்டிய அறைக்குள் தனிமை

ஆசியருக்கு வணக்கம்,

கப்பல் செல்வதற்குமுன் பத்து தினங்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு பின் தான் பணியில் சேர வேண்டுமென என நிறுவனம் வகுத்துள்ளது .

நான் கடந்த 25ஆம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து விமானம் ஏறி மும்பையை வந்தடைந்தேன். நாகர்கோவிலிலிருந்து மூன்று நண்பர்கள் ஒன்றாகத்தான் வந்தோம்.

மும்பை விமான நிலையத்திலேயே எங்களை தனியாக பிரித்து விட்டனர்.தனித்தனி கார்களில் விடுதியறைக்கு வந்த்தோம் .வாட்டர் ஸ்டோன்ஸ் எனும் நட்சத்திர விடுதி. விடுதியறைக்குள்ளேயே இருக்கவேண்டும் யாரையும் சந்திக்கக்கூடாது .எங்கும் செல்ல இயலாது .அறை வாயிலில் உணவு வந்துவிடும்.

மறுநாள் காலை அனைவருக்கும் நோய்தோற்று சோதனை செய்தார்கள்.உங்களது அடவியும் அறைகளும் பதிவை படித்தவுடன்.வீட்டிலிருந்தே விடுதிக்கு போன் செய்து  விடுதியில் இருப்பதிலேயே மேலே உள்ள மாடியில் எனக்கு அறை ஒதுக்குமாறு வேண்டினேன்.

இங்கு வந்தும் ஆறாவது மாடியில் உங்களுக்கு அறை என்றார் வரவேற்பறையில் இருந்த குல்தீப்.

“நான் போனில் உன்னிடமா பேசினேன்” என கேட்டேன்.

“ஆம்” என புன்னகைதான் .

முதல் நாள் அறைக்குள்ளே இருக்கிறேன் என உணர்வு வந்ததும்.    கண்ணாடி ஜன்னலுக்கு அருகில்  பென் பேக்கை போட்டு அமர்ந்து  கீழே அடர்பச்சையில் தெரியும்  தென்னை மரங்களை பார்த்துக்கொண்டிருந்தேன் . அது  அய்யன் மலை உச்சியில் அமர்ந்திருக்கும் உணர்வை தந்தது .

அதிகாலை தொழுகைக்குபின் மானுடர் துயில் கலையும்முன் அறைக்கு வெளியில் அரைமணிநேரம் நடை முடித்து அறைக்குள் வந்துவிடுவேன் .நண்பர்கள் யாரவது போனில் அழைத்தால் பேசுவது,உணவு,குளியல் வேறொன்றும் செய்யவில்லை.நாற்பத்தி எட்டு அங்குல தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்யவே இல்லை,பகல் தூக்கமும் இல்லை. நண்பர்கள் பலரும் யோகா சாதனை செய்யலாம் ,நிறைய வாசிக்கலாம் ,எழுதலாம் என்றார்கள்.நான் ஒன்றுமே செய்யவில்லை.

ஏழாவது  நாள் நண்பன் அசோக் அழைத்தார்.

“ஷாகுல் என்ன செய்கிறாய்,பொழுது எப்படி போகிறது”என .

“ஒன்றுமே செய்யவில்லை,பொழுது சீக்கிரமாக போய்விடுகிறது”என்றேன் .

“உன் வாழ்வில் ஏழு நாட்களை நீ வீணடித்து விட்டாய்,சும்மா போன் பேசுனேன்,வாட்ஸ் அப் பார்த்தேன் என்பதை என்னால் ஏற்கமுடியாது ஏழு கட்டுரைகள் நீ எழுதி இருக்க வேண்டும் .வாசிப்பதற்கும் நிறைய உன்னிடம் இருக்கிறது.நீ ஒரு படைப்பாளி,என்னால் எதையும் படைக்கமுடியாது .இழந்த நாட்கள் திரும்பி வராது” என கடிந்து கொண்டார்.

தொடங்கி முடிக்காமல் இருந்த இரு கப்பல் காரன் டைரியில் ஒன்றை அன்று இரவுணவுக்கு பின் தொடங்கி அதிகாலை இரண்டு மணிக்கு வலையேற்றம் செய்தபின் படுக்கைக்கு சென்றேன்,அதிகாலை ஐந்து மணிக்கு முன்பாக விழித்து மீண்டும் எழுத துவங்கினேன் அன்று நாள் முழுவதும் எழுதிக்கொண்டே இருந்தேன் களைப்பே இல்லை .

ஐந்து நட்சத்திர விடுதியறை என்ற போதும் இங்குள்ள உணவை ஐந்து நாட்களுக்கு மேல் சாப்பிட இயலவில்லை.நெஞ்செரிச்சல் துவங்கியது ஏழாவது நாள் முதல்  இங்குள்ள ,கறிகள் (குழம்பு)வகைகள் எதுவும் வாங்குவதில்லைகாலை உணவாக சீரியல்ஸ்,அவித்த முட்டை .இரவில் பச்சை காய்கறிகளும்,வெள்ளை சாதமும் வாங்கி அறையில் தண்ணீர் சுட வைத்து உப்பும் மிளகு தூளும் கலந்து கஞ்சி . நெஞ்செரிச்சல் பிரச்னையும் இப்போது இல்லை.

இன்றோடு பனிரெண்டு நாட்கள் ஆகிவிட்டது,. இந்த பூட்டிய அறைக்குள் கிடந்தது எனக்கு சிரமமேதும் இல்லை. முன்பு யோசிப்பேன் நீங்கள் எப்படி ஒரு மாதம் அறைகளுக்குள் இருந்து எழுதுகீறீர்கள் என .இப்போது என் அனுபவத்தில் அதை புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.எல்லாம் நோய் காலத்தின் உபயம் .

இனி எங்கும் தனிமையில் என்னால் வாழ்ந்து விட முடியும் .

ஷாகுல்  ஹமீது .

முந்தைய கட்டுரைகாந்தி- கடிதம்
அடுத்த கட்டுரைசு.ரா- ஒரு பழைய பேட்டி