அன்புள்ள ஜெ
வெண்முரசு முடிந்தபின்னர் திரும்பிநோக்கி எழுதிய ஒரு கடிதத்தில் அதற்கு வந்த தடைகளைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். வெண்முரசு ஒரு மாபெரும் சாதனை. தமிழில் மட்டுமல்ல, உலக இலக்கியத்திலேயேகூட. அத்தகைய செயலுக்கு வரும் தடைகள் என்னென்ன? அதை எவ்வகையில் வகுத்துக்கொள்கிறீர்கள்?
என்.ராகவேந்திரன்
அன்புள்ள ராகவேந்திரன்,
பெருஞ்செயல் எதுவானாலும் அதற்கு நான்கு படிநிலைகள் உள்ளன என்பது என் எண்ணம். அவற்றிலுள்ள தடைகளின் அடிப்படையில் அவ்வாறு பகுத்துக்கொள்ளலாம்.
அ.தொடக்கத்தயக்கம்
பெருஞ்செயலை செய்ய எண்ணி நெடுங்காலம் கனவுகண்டும்கூட அதை தொடர்ச்சியாக ஒத்திப்போடுதல் நம் வழக்கம்.அதற்கான காரணங்களை நாம் கண்டுபிடிப்போம். நாம் தயாராகவில்லை என்று நினைப்போம். இன்னும்கொஞ்சம் ஆராய்ச்சி செய்வோம் என்று சொல்லிக்கொள்வோம். இன்னின்ன வேலைகளை முடித்தபின் தொடங்கலாம் என்று திட்டமிடுவோம். நமக்கு தகுதியுண்டா என ஐயம்கொள்வோம்
ஒத்திப்போட்டே வாழ்நாளைக் கடந்தவர்கள் உண்டு. ஒத்திப்போடாமலிருக்க முடியாத தருணங்கள் உண்டுதான். ஆனால் நம் கையை பிடித்து தடுப்பது பெருஞ்செயல்களை தடுக்க எண்ணும் ஊழின் இடக்கையாக இருக்கலாம். பெருஞ்செயல்களை நம்முள் கனவுகளாக மூட்டுவது அதன் வலங்கை. இது இந்தப்புடவியின் பெருநாடகங்களில் ஒன்று.
ஆ. எதிர்ப்புகளும் தடைகளும்
ஒரு அருஞ்செயலை நாம் அறிவித்ததுமே வரும் புற எதிர்ப்புகள் மற்றும் தடைகள். அவை சிலசமயம் நமக்கு மிக அன்பானவர்களிடமிருந்து மிகுந்த நல்லெண்ணத்துடன் சொல்லப்படுபவையாக இருக்கும். எதிரிகளால் எதிர்ப்பும் எள்ளலுமாகச் சொல்லப்படும். சிலர் தர்க்கபூர்வமாகவே அச்செயலின் பொருளின்மையையும் அதன் நடைமுறைத்தன்மையின்மையையும் சுட்டிக்காட்டுவார்கள்.
ஆச்சரியமென்னவென்றால் நாம் அப்பெருஞ்செயலை பிறருக்கு அறிவிக்கக்கூட வேண்டியதில்லை, நமக்கு நாமே அறிவித்துக்கொண்டால்கூட எப்படியோ அந்த எதிர்ப்புகள் பின்னிழுப்புக்கள் உருவாகி வந்து முன்னால் நிற்கின்றன. அதற்கு தர்க்கமே கிடையாது. விளக்கிச் சொல்லத்தக்க ஒரே தர்க்கம், நம்முடைய மொழியும் பாவனையும் மாறியிருக்கலாம் என்பது மட்டுமே
எதிர்ப்புகள் சிலசமயம் நன்மைக்காகவே கூட இருக்கலாம். ஆனால்நாம் பார்க்கவேண்டியது நமக்குள் அச்செயலைச் செய்யவேண்டுமென்ற ஆழ்ந்த அகத்தூண்டுதல் உள்ளதா என்று மட்டுமே. அதன்பொருட்டு இழக்கவேண்டியவற்றை இழப்போமா, அதைச் செய்வதே அதன் பலன் எனக்கருதி மேலே எதையும் எதிர்பாக்காமல் இருக்க நம்மால் முடியுமா என்று மட்டுமே. எனில் அதைச்செய்யவேண்டியதுதான்
இ. உளச்சோர்வு
பெருஞ்செயலைச் செய்ய ஆரம்பித்த சிலநாட்களிலேயே மலைப்பு தட்டும். ஒட்டுமொத்தமாக அச்செயலின் பேருருவை நாம் பார்ப்போம். அது நம்மை உளம்தளரச் செய்துவிடும். ஒரு மலைப்படியில் ஏறுகிறோம், பல ஆயிரம் படிகளுக்கு அப்பால் தெரியும் மலைமுடியை பார்த்துவிடுவதுபோல.
முதலில் ஒரு வகையான தாழ்வுணர்ச்சி வந்து சோர்வுறச்செய்யும்.நம்மால் முடியாது, விழுங்கமுடியாததைக் கவ்விவிட்டோம் என்று தோன்றும். நிறுத்திவிடலாம், அதுவே விடுதலை என்ற உந்துதல் ஏற்பட்டு நாட்கணக்கில் அலைக்கழிக்கும். நிறுத்திவிடுவதை பற்றி கற்பனைசெய்ய ஆரம்பிப்போம். அந்த விடுதலை உணர்வு, அந்த சுமையிழப்பின் பரவசம் நம்மை ஆட்கொள்ளும். ஒரு செயலை தொடங்கி நிறுத்திவிடுபவர்கள் அதை நிறுத்திக்கொள்வதைப் பற்றி பலவாறாகக் கற்பனை செய்திருப்பார்கள்.
அடுத்தபடியாக இத்தனை பெரிய செயலைச் செய்வதனால் என்ன பயன் என்னும் வெறுமையுணர்ச்சி எழுகிறது. அது மிகமிக தர்க்கபூர்வமாகவும் தோன்றும். இதைப்போல முன்னர் பலர் செய்து நிறைவுசெய்த பெருஞ்செயல்கள் பல கவனிக்கப்படாமல் போனதன் உதாரணங்களை நாமே தேடித்தேடி எடுப்போம்.
எண்ணி எண்ணி நம்மை நாமே சோர்வடையச் செய்வோம்.உளச்சோர்வு என்பது ஒரு இனிய நோய். உளச்சோர்வுள்ளவர்கள் மேலும் உளச்சோர்வை முயன்று திரட்டிக்கொண்டு அதில் மூழ்கி திளைப்பார்கள். வேறெந்த நோயிலும் அந்நோயிலிருந்து விடுபடும் துடிப்பு இருக்கும். உளச்சோர்வுநோய் அந்நோயிலேயே மூழ்கும் விருப்பத்தை நம்மிடம் உருவாக்கும்.
பெருஞ்செயல்கள் மிகமிகத் தீவிரமான உளச்சோர்வை உருவாக்கும். பெரிய இழப்புகள் உருவாக்கும் உளச்சோர்வை விடவும் அழுத்தமான உளச்சோர்வு அது. கைகால்களை தளையிட்டதுபோல நம்மை செயலிழக்கச் செய்யும்.ஒரு வார்த்தை எழுதமுடியாது, ஒரு சொல் எண்ணமுடியாது. உள்ளம் நாணவிழ்ந்து கிடக்கும்.
அத்துடன் அதில் ஒருமாயமும் உள்ளது. அச்சோர்வு அப்பெருஞ்செயலால் வந்தது என்பதனால் அதுவும் அப்பெருஞ்செயலின் ஒரு பகுதியே என்று எண்ணிக்கொள்வோம். அதில் பெருமிதம் அடைவோம். அச்சோர்வைப்பற்றி நிறைய சொல்லிக்கொள்வோம். உண்மையில் சோர்வு அப்பெருஞ்செயலின் பகுதி அல்ல, அதற்கு எதிரான விசை
அதைக் கடக்க ஒரேவழிதான். சென்றுசேரும் ஊரையும், செல்லும் பாதையையும் முழுமையாக மறந்து காரின் முகப்புவெளிச்சத்தில் தெரியும் பாதையை மட்டுமே பார்த்து ஓட்டிச்செல்வது. உடனே செய்யவேண்டியவற்றை மட்டும் முழுமூச்சாக செய்வது. அறுதியிலக்கை எண்ணியும் பார்க்காமலிருப்பது.
அன்றன்றைய செயலின் வெற்றியும் நிறைவும் உளச்சோர்வை கடக்க உதவும். உளச்சோர்வின் மிகச்சிறந்த கூறு என்னவென்றால் எப்படியும் அது நெடுநாட்கள் நீடிக்காது – அது மருத்துவஉளநோய் என்றாலொழிய. [clinical depression னை முறையான மருந்துகள், சிகிழ்ச்சைகள் வழியாகவே வெல்லமுடியும்] ஆகவே அந்த நாட்களை கடந்துவந்தாலே நாம் மீண்டுவிடுவோம். மீண்டதும் மேலதிக ஊக்கமும் உருவாகிவிடும்
ஈ. இழப்புகள்
பெருஞ்செயல்கள் சமானமான சிலவற்றை இழந்தாலொழிய அடையமுடியாதவை. நாம் நேரத்தை அளிக்கிறோம். உழைப்பை அளிக்கிறோம்.உறவுகளை அளிக்கிறோம். அதற்குரிய இழப்புகள் தராசின் மறுதட்டில் ஏறிக்கொண்டே இருக்கும். துறப்பு இல்லாமல் எய்துதல் இல்லை
அவ்வண்ணம் துறக்கையில் அவ்வப்போதேனும் துறக்கப்பட்டவை பற்றிய ஏக்கம் வந்து அழுத்தும். இழப்புணர்வும் குற்றவுணர்வும் உருவாகும். ஆனால் அது அப்படித்தான், வேறுவழியில்லை. என்று நாம் நம்மை ஊக்குவித்துக்கொள்ளவேண்டியதுதான்
உ.சிறுமைகளைச் சந்தித்தல்
பெருஞ்செயல்களின் மிகப்பெரிய சிக்கல் இதுதான், உண்மையில் வெளியே நாம் சந்திக்க நேரும் மிகப்பெரிய தடை இது. ஊழால் சமைக்கப்படுவது என்றே நினைக்கிறேன். பெருஞ்செயல் பிறரை சிறியவர்களாக அவர்களுக்கே காட்டுகிறது. அவர்களின் ஆணவத்தைச் சீண்டுகிறது.
ஒரு பெருஞ்செயல்முன் சீண்டப்படாமலிருக்க இருசாராரால்தான் முடியும். தன்னைப்பற்றிய நிறைவுணர்வுகொண்டவர், தானும் பெருஞ்செயல்செய்பவர். பெருஞ்செயல்முன் தன்னை எளிமையாக நிறுத்திக்கொள்ளும் தன்னடக்கம் கொண்டவர். ஆனால் பலர் அப்படி அல்ல.
அவர்கள் எப்படி எங்கே சீண்டப்படுகிறார்கள் என்றே அறியமுடியாது. மிக அணுக்கமானவர்களாக இருந்திருப்பார்கள். உண்மையான மதிப்புடையவர்களாகவும் இருந்திருப்பார்கள். ஆனால் சீண்டப்பட்டதுமே அவர்களிடமிருந்து நம்பமுடியாத சிறுமை வெளிப்படுகிறது.
அச்சிறுமை ஊழின் ஆணை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அறிவும் தன்னுணர்வும்கொண்டவர்கள்கூட அச்சிறுமையால் ஆட்கொள்ளப்படுகையில் அற்பமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்களிடமிருந்து நாற்றமடிக்கும் உளநிலைகள் வெளிப்படுகின்றன. அழுக்காறு, காழ்ப்பு, ஏளனம், பகடி.
தன் சட்டையின் காலர் கொஞ்சம் கோணலாக இருந்தாலே தாங்கமுடியாதவர் மிகமிக கீழ்மையுடன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள தயங்காததை நாம் காண்போம். உயரிய எண்ணங்களால் ஆனவராக இருந்தவர் பெருந்தன்மையை இழப்பதை, அறிவாளி மூடராவதைக் காண்போம்
அத்தனை பாவனைகளும் மேலெழுந்து வந்து நின்றாடும் ஒரு கூத்துக்களத்தைப் பார்ப்போம். அறியாமையின் ஆடல். அதைவிட கீழ்மைகொண்ட திரிந்த அறிவின் ஆடல். ஆணவ வெளிப்பாடுகள். அதை அறமென்றும் நெறியென்றும் முன்வைக்கும் நடிப்புகள். பல்வேறு பற்றுகளை பொய்யாக சமைத்துக்கொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் உளச்சிக்கல்கள்.
உண்மையில் அது பெரிய துயர். மானுடம் பற்றிய நம் நம்பிக்கையே அழிகிறது. நாம் சார்ந்திருந்த பல அடித்தளங்கள் நொறுங்குகின்றன. அந்த இடிபாடுகள் வழியாக நடந்து நாம் நம் பாதையை தொடர்ந்தாகவேண்டும்.
உண்மையில் அது எளிதல்ல.பெருஞ்செயல்களுக்கு குருவருள், குருவின் ஆணையே தேவை எனப்படுவது அதனால்தான். குருவின் சொற்கள் நினைவிலெழுகையிலேயே நாம் நம் நம்பிக்கையை மீட்டுக்கொள்கிறோம். குருவின் நம்பிக்கை நம் மீதிருந்தது என்பதே நம்மை நாம் நம்பச்செய்கிறது
தீமைகளில் உக்கிரமானது சிறுமையே. நாம் எதிர்கொள்ளும் தீமை நம்மை அச்சுறுத்துகிறது, ஆனால் நம் ஆற்றலையும் கூட்டுகிறது. நாம் எதிர்கொள்ளும் சிறுமை நம்மையும் அச்சிறுமையின் தளம்நோக்கி இழுக்கிறது. அதனுடன் மோதும்போது நாம் ஆற்றலிழந்து சிறியவர்களாகிவிடுவோம்.
அதை தவிர்த்துச்செல்வதே ஒரே வழி. அதற்கு நம் அகஆற்றலை முழுக்க திரட்டிக்கொள்ளவேண்டும். முற்றாகப் புறக்கணித்து மேலே செல்லவேண்டும்.ஆனால் அதற்கு ஆழ்ந்த அகத்திண்மைதேவை. அது ஒரு தவம்.
ஏனென்றால் சிறுமையில் திளைப்பவர்கள் அவ்வுலகின் தலைவர்கள். அவர்கள் மிக எளிதாக நம் சிறுமைகளை கண்டடைந்துவிடுவார்கள். மிகச்சரியாக அங்கே அடிக்க, நம்மை துடிக்கச்செய்ய அவர்களால் முடியும்.
நாம் அவர்களை புறக்கணித்துச் செல்லுந்தோறும் அவர்கள் மேலும் சீண்டப்படுவார்கள். மேலும் வெறிகொள்வார்கள். சலிப்பே அடையமாட்டார்கள். ஒருவகை பேய்பீடிப்புபோல அந்த சிறுமை அவர்களை ஆட்கொண்டு ஆட்டிவைக்கும்
அது ஊழின் ஒரு அறைகூவல். எந்த தவத்தையும் தெய்வங்கள் தடுக்க எழுகின்றன. புத்தரின் மெய்மைக்கு முந்தைய கணத்தில் மாரனே எழுந்தான். அவரை அலைக்கழித்து மயக்கி ஞானத்தின் பாதையை ஆயிரம்மடங்கு சிக்கலானதாக ஆக்கினான். எல்லா செயல்களுக்கும் அந்த தடை உண்டு. செயல் பெரிதாகுந்தோறும் தடைகளும் பெரிதாகும்.
செய்துமுடித்தபின் நாம் உணர்வோம், அந்த தடைகள் வழியாகவே நாம் அதைச் செய்து முடிப்பதற்கான ஆற்றலை ஈட்டிக்கொண்டோம் என. அது ஒரு பயிற்சிசாலையே என. ஏதோ ஒருவகையில் எல்லாருமே நம் நன்றிக்குரியவர்களே.
ஜெ