கமல், மகாபாரதம் பற்றி மேலும்

வெண்முரசு- கமல்ஹாசன் சொல்வது சரியா?

வெண்முரசு,மகாபாரதம்,கமல்- விவாதங்கள்

வெண்முரசு,கமல் ஹாசன்

கமல், மகாபாரதம்,மரபு

அன்புள்ள ஜெ

கமல் அவர்கள் மகாபாரதம் பற்றி பேசியதும் உடனே உருவான இணையக்கூச்சல்களும் எனக்கும் பெரிய குழப்பத்தையே அளித்தன. ஆனால் நீங்கள் தெளிவாக எழுதிய கட்டுரைகள் மிகப்பெரிய தெளிவை அளித்தன. கூடவே மேலும் தெரிந்துகொள்ளவும் செய்தன

கமல் இங்குள்ள சராசரிகளைவிட வேறொரு இடத்தில் இருக்கிறார். எழுதுகிறார் வாசிக்கிறார். அவருடைய பேட்டிகள் ஆழமானவை. அவருக்கு நடனம் தெரியும் கலை தெரியும் இசை தெரியும். ஆகவே நம் மரபும் தெரியும்

ஆனால் நாம் ஒரு புத்தகம் வாசிக்காமல், ஒன்றையும் தெரிந்துகொள்ளாமல் மேதாவிகளைப்போல அவரை விமர்சிக்கிறோம். அவரை நையாண்டி செய்கிறோம். ஆலோசனைகள் சொல்கிறோம்

இப்போது கமல் பற்றி எழுதியவர்களை வாசிக்கும்போது இந்த நபர்கள் எல்லாம் யார், என்ன செய்திருக்கிறார்கள், என்ன தெரியுமென்று இப்படி தன்னம்பிக்கையுடன் எழுதுகிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது

ஜான் சுந்தரராஜ்

அன்புள்ள ஜான்

அசடுகளை அசடுகள் என்று அறிவது ஒரு முக்கியமான பரிணாம வளர்ச்சி.

ஜெ

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,


நீங்கள் வெண்முரசு முழுவதும் சாபம் எனும் சொல்லுக்கு நிகராக தீச்சொல் எனும் சொல்லைப் பயனபடுத்தி இருந்தீர்கள் ஆனால இனறைய பிள்ளை கெடுத்தாள் விளை குறித்த கட்டுரையில் மீண்டும் சாபம் என்ற சொல்லே பயன்படுத்தப பட்டுள்ளது. தீஞ்சொல் என்ற சொல்லும்் தீசசொல் என்ற சொல்லும் நேர் எதிர் மாறான பொருளில் பயன்படுத்தப் படுவதால் அச்சொல்லை தவிர்ததீர்களா? ஆனால் உசாவல்கள மற்றும் உள நுண்மைகள் ஆகிய வெண்முரசு சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. விளக்க முடியுமா?

நன்றி
என்றென்றும நன்றியுடன்

V. தேவதாஸ்

 

அன்புள்ள தேவதாஸ்

தீச்சொல் போன்ற சொற்கள் வெண்முரசுக்காக உருவாக்கப்பட்டவை. அவை அந்நாவல்தொடரின் மொழிப்புலத்தைச் சேர்ந்தவை. ஒவ்வொரு நாவலுக்கும் அதற்கான ஒரு மொழிப்புலம் உண்டு. அதைத்தான் நடை என்று நாம் சொல்கிறோம். வெண்முரசு தூயதமிழில் எழுதப்பட்டது

ஆனால் அந்த நடைக்குள் நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. ஒவ்வொரு நாவல் முடிந்தபின்னரும் அதிலிருந்து வெளியே வருவேன். நூறுகதைகளே அதற்கான முயற்சிதான். ஆனால் அவ்வளவு எளிதாக வந்துவிடவும் முடியாது. ஒரு மொழி நம்மில் நிகழ்ந்துவிட்டால் அதன் தடங்கள் நம்மில் நிரந்தரமாக நீடிக்கின்றன

சாபம் என்ற சொல் அவ்வாறு வெளியேறும் முயற்சியால் என்னிடம் வந்தது. மற்றசொற்கள் என்னையறியாமலேயே நீடிப்பவை

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

மிகமிகத் தெளிவாக ஆணித்தரமாக மகாபாரதம் எப்படி இந்தியப்பெருநிலத்தின் பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இத்தனை தெளிவாகச் சொல்லி அதை மீண்டும் மீண்டும் சொல்லி சலிக்காமல் எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் பொறுமையை எண்ணி வியக்கிறேன்

ஆர்.ஸ்ரீரங்கன்

அன்புள்ள ஸ்ரீரங்கன்,

இது ஒரு தருணம். சில புதியவர்கள் வந்து வாசிக்கிறார்கள். அவர்களுக்கு கலை, மரபு ஆகியவற்றைப் பற்றிய சில அடிப்படைகளைப் புரியவைக்கலாமென நினைக்கிறேன். எப்போதுமே விவாதங்களை நான் இப்படித்தான் பயன்படுத்திக்கொள்கிறேன் என்பதை கவனித்திருப்பீர்கள்.

தமிழகத்தின் நூறாண்டுகால நவீன இலக்கிய வரலாற்றிலேயே இத்தனை தெளிவாக, இத்தனை ஆணித்தரமாக இவையெல்லாம் இதற்கு முன் சொல்லப்பட்டதில்லை. அந்த எண்ணமே எனக்கு ஒரு பெருமிதத்தை அளிக்கிறது

ஆனால் என் மின்னஞ்சல்பெட்டியில் வந்திருக்கும் கடிதங்களை நீங்கள் பார்க்கவேண்டும். எதிர்ப்புக் கடிதங்களில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று இம்மிகூட பொருட்படுத்தாத மூர்க்கம். அவர்களுக்கு என்ன தெரியுமோ அதையே ஆவேசமாக கூவுகிறார்கள். என்னுடைய ஒருசொல், ஒரு தர்க்கம்கூட அவர்களைச் சென்றுசேரவில்லை.

இந்த எதிர்ப்புகளுக்கு அர்த்தமே இல்லை. பெரியாரியர்கள் அவர்களுக்குரிய ஒற்றைவரி ஒன்றை உருவிக்கொண்டு கூச்சலிடுகிறார்கள். இந்துத்துவர்கள் அவர்களுக்குரிய ஒற்றைவரியை உருவிக்கொள்கிறார்கள். மூர்க்கம்தான் ஒரே விசை. எதையும் புரிந்துகொள்வதற்கான அடிப்படை முயற்சிகூட இல்லை. குறைந்தபட்சம் அக்கட்டுரையையேகூட வாசிக்கவில்லை.

ஐயங்கள் கேட்கிறவர்கள் இன்னும் சோர்வடையச் செய்கிறார்கள். நம் சூழலில் ஒரு கருத்தைப் புரிந்துகொள்ளச் செய்வது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் நிலைமை சலிப்படையச் செய்கிறது. முழுமையாகப் படிப்பதில்லை. முதல் பத்திமட்டும் படித்துவிட்டு கேட்கிறார்கள். முற்றப் படித்துவிட்டு முன்னரே எண்ணியதையே கேட்கிறார்கள்

பாறைவெடிப்புக்குள் ஒரு சொட்டு நீர் புகவேண்டும் என்றால் இரவெல்லாம் அடைமழை பெய்யவேண்டும். அதைப்போலத்தான் தமிழ்ச்சூழல்.

இங்கே ஏதேனும் ஒரு கருத்தைச் சொல்பவரிடம் அந்தக் கருத்து எப்படிச் சென்று சேர்ந்திருக்கும்? அக்கருத்து நூலாக எழுதப்பட்டு, பத்திரிகைகளில் குறிப்புகளாக வெளிவந்து, மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேசப்பட்டு, சினிமாவாகி, சினிமாப்பாடல்களாகி, லியோனியாகி வெற்றிகொண்டானாகி, மீம்ஸ் ஆகி, ஒற்றைவரி டிவீட் ஆகி, அரட்டைகளில் ஆயிரம் முறை பேசப்பட்டு ஒருவழியாக அந்த மண்டைக்குள் சென்று படிந்திருக்கிறது. ஒரு கட்டுரையால் அதை அகற்றிவிடமுடியாது

ஆனால் நான் நோய்க்கூறு என்று சொல்லுமளவு அர்ப்பணிப்புள்ளவன். என் பணி எதுவோ அதில் வெறியுடன் ஈடுபடுபவன். கடமையைச் செய் பயன் கருதாதே என நம்பும் வேதாந்தி. என் விளக்கம் இங்கே இருக்கவேண்டும், அது ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கவேண்டும், அவ்வளவுதான். அதைத்தான் செய்கிறேன்

ஆனால், நேர்த்தியாக விடாப்பிடியாக செய்யப்படும் செயல்கள் எல்லாமே பயனளிப்பவையே. பத்தாண்டுகளுக்கு முன் இணையத்தில் நான் காந்தி பற்றிப் பேசும்போதும் இதைவிட மோசமான சூழல் இருந்தது. இன்று என்குரலையே எதிரொலிகளாக எனக்குச் சுற்றும் கேட்கிறேனோ என்று தோன்றுகிறது. சொல்வெல்லும் என நம்பாமல் ஒருவன் எழுத்தாளனாக இருக்கமுடியாது.

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி: கே.எஸ்.
அடுத்த கட்டுரைசுந்தர ராமசாமி, மார்க்சியம்- கடிதங்கள்