சிறுகதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வரிசையாகத் தந்து என் போன்ற வாசகர்களைத் திக்குமுட்டச் செய்து கொண்டிருந்த (சந்தோஷத்தினால்) உங்கள் நல்ல கதைகளுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று தெரியவில்ல. ஏற்கனவே நிறையப் பேர் எழுதியாகி விட்டது. அந்தக் கதைகளில் அறமும், சோற்றுகணக்கும், பெருவலியும எனக்கு மிகவும் பிடித்தவை.

நான் இப்போது எழுதுவது உங்கள் மாத்ருபூமி பேட்டியைப் படித்துவிட்டு எழுந்த சில கேள்விகளினால் தான். அதில் ஓ.விஜயனை  உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் என்று சொல்லியிருக்கிறிர்கள். அனால்  கசாக்கிண்டே இதிகாசம் பற்றி நீங்கள் எழுதினதாகக் காண கிடைக்கவில்லை. எனக்கு மிகவும் பிடித்த நாவல் அது. அதைப் பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை ? விஜயனே பாத்துமாவின் ஆடு தன மலையாளத்தின் சிறந்த நாவல் என்று கூறியிருந்தாலும், எனக்கென்னவோ  கசாக்கிண்டே இதிகாசம் தான் சிறந்தது என்று பட்டது. அதில் வரும் எழுத்துக்களுக்கு MANTRIC QUALITY இருக்கு. பஸ்யந்தி வாக் என்று சொல்லுவது போல.

இப்படிக்கு.
சீதாராம் நெல்லிச்சேரி

அன்புள்ள சீதாராம்

விஜயன் நான் விரும்பும் நாவலாசிரியர். ஆனால் பஷீரிடம் (

பஷீர் : மொழியின் புன்னகை)

உள்ள ஒன்று விஜயனிடம் இல்லை. அது எளிமை. எல்லாமே கலங்கி அடையும் சூஃபியின் எளிமை அது. அந்த தன்னிச்சையான எளிமை என்பது இலக்கியப்படைப்பின் உச்சகட்ட அழகுகளில் ஒன்று.

கசாக்கிண்டே இதிகாசம் ஒரு மகத்தான நாவல். ஆனாலும் பஷீரின் பாத்துமாவின் ஆட்டை விட ஒரு படிக் குறைவானதே. விஜயனின் சிறுகதைகள் பல முக்கியமானவை. அவற்றில் பொதிச்சோறு போன்ற சில கதைகளை நான் 1988ல் மஞ்சரி மாத இதழில் மொழியாக்கம்செய்திருக்கிறேன். இன்று என் கையில் அவை இல்லை.

விஜயனைப்பற்றி தமிழில் எழுதாததற்குக் காரணம் ஒன்றே. அவரது ஆக்கங்கள் தமிழில் கிடைப்பதில்லை. நான் தமிழில் கிடைக்கும் நூல்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன்.

மாத்ருபூமியில் என்னுடைய நீண்ட பேட்டி வெளிவந்திருக்கிறது என்றார்கள். [வாள் போல ஒளிரும் தண்டவாளங்கள்] நான் இங்கே கோதாவரிக்கரையில் இருப்பதனால் பார்க்கவில்லை. தொடர்ச்சியாக மிகச்சிறந்த கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன.

ஜெ

அன்புள்ள சார்.

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இன்னும் ஆந்திராவில் தான் இருக்கிறீர்களா? சாட்டில் பதில் அடிக்கும் முன் உங்கள் தொடர்பு போய்விட்டது. இதுவே நான் எழுத விரும்பியது.

ஓலைச் சிலுவை இந்த வாரம்தான் படித்தேன். முதல் வரியிலிருந்தே கதையின் நடுவில் கொண்டு நிறுத்திய சக்திவாய்ந்த கதை. ஆரம்பத்திலே வந்த இந்த கட்டம் ஒரு கோணத்தில் யோசிக்க வைத்தது.

“..இந்த கால்சக்கறத்த கொண்டு போயி சந்தமுக்கு சாத்தாவுக்கு போட்டுட்டு வா…’ என்றாள்.நான் அவள் தன் வேட்டிமடியில் இருந்து எடுத்த செம்புதுட்டை வாங்கிக்கொண்டேன். ‘லே, என்னன்னு சொல்லி போடுவே?’ நான் பேசாமல் நின்றேன் ‘அப்பனுக்கு செரியாகணும் சாத்தாவே. அனாதைகளாக்கும் சாத்தாவே. கெதியில்லாத்தவங்களாக்கும் சாத்தாவே. எட்டுகுட்டிகளோட தெருவிலே நிக்கேன் சாத்தாவேண்ணு சொல்லி போடணும்…என்னலே?’ சொல்லும்போதே மீண்டும் அழ ஆரம்பித்தாள்..”

இது போல இறைவனிடம் இறைஞ்சுவது தானே சார் பெரும்பாலான மக்களுக்கு (இருப்பவன், இல்லாதவன் , ஜாதி, மதம், இடம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல்) நிதர்சனமான உண்மை? . எப்போதும் இல்லை என்றாலும் ஏதோவொரு தருணத்தில் பெரும்பாலனவர்கள் இது போன்ற கட்டத்தை ஒருமுறையாவது கடந்து வந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் இயற்கையே கடவுள், விஞ்ஞான ரீதியாய் உலகம் பிறந்த விளக்கங்கள் எப்படி உதவும். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு . தெரிந்த கொஞ்சம் கை விடும் போது ( தினமும்..! ) கடவுள் நம்பிக்கையே கை கொடுக்கிறது. என்னால் முடியவில்லை ஆனால் முடித்த ஒருவரிடம் சொல்லி இருக்கிறேன் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை, கஷ்டப்படும்போது ஒரு பெரிய நிம்மதி. தொடர்ந்து என்னாலானதைச் செய்ய ஒரு சிறு தெளிவு கிடைக்கிறது. அளவுக்கு அதிகமாய் போய், யாரிடம் ஏமாறாமல் இருக்கும் வரை கடவுள் இருக்கிறார் என்ற நேரடி நம்பிக்கை வாழ்க்கைக்கு நல்லதே என்று நம்புகிறேன்.

ஒருவேளை நான் வாழ்கை, ஆன்மிகம், பக்தி, விஞ்ஞானம், பகுத்தறிவு எல்லாவறையும் போட்டு ரொம்பவும் குழப்பிக் கொள்கிறேனோ என்று கூட நினைக்கிறேன். கேட்கலாம் என்று தான் எழுதுகிறேன்

நேரம் கிடைக்கும் போது முடிந்தால் பதில் போடவும்.

நன்றி.

அன்புடன்
ஆனந்த கோனார்

அன்புள்ள ஆனந்தக்கோனார்

உண்மைதான்.

மனிதர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் முற்றிலும் தனியர்களாக முடிவின்மை நோக்கித் திரும்பி நிற்பதுண்டு

ஜெ

ஜெ,

மயில் கழுத்து -நான் எழுத விழைந்ததை நீங்கள் எழுதி விட்டீர்கள்
மனதை ஒவ்வொரு பிகோ செகண்டும் அனுபவித்து அதிலேயே திளைத்து ஒரு குடிகாரனின் விட்டேத்தியுடன் அதைக் கொடுத்துள்ளீர்.

அவசர கதியில் எழுதும் எழுத்தல்ல. வார் ஸ்டோரி அல்ல…மனதில் நிகழும் போராட்டம்…ஆனால் மேலோட்ரமடிக் ஆகா இல்லாமல் இயல்பாக உள்ளது…

என் மனதை நானே கவனிப்பது உண்டு…அது தான் என் உண்மையான பொழுது போக்கு ….அதை உங்கள் கதையை படிக்கும் போது மட்டுமே உணர முடிகிறது

அது மட்டும் தான் உங்கள் வெற்றி …பெரு வெற்றி …உங்கள் வெற்றிக்கு உதவிய எந்தன் மனதையும் அறிவையும் ஆத்மாவையும்
நான் பாராட்டுகிறேன். அதற்கு தேவையான அளவு சரியான ருசியுடன் உணவு படித்தமைக்கு நன்றி

ஸ்ரீதர் விஸ்வநாத்

அன்புள்ள ஸ்ரீதர்,

உங்கள் கடிதம் திடீரென்று மயில்கழுத்து கதையை நினைக்கச்செய்தது. வேறு யாருடைய கதையோ போல நினைவில் எங்கோ கிடக்கிறது அது. அந்த உணர்ச்சிகரமான தன்னுரையின் போது அவர் முகம் உருகுவதை மட்டும் தெளிவாகக் கண்டேன்

நன்றி.

ஜெ

அன்புள்ள ஜெயன்,
யானை டாக்டர் சிறுகதை படித்தேன்
மனிதனாய் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்.
காட்டில் ஒரு வன மிருகமாய் பிறந்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு பேரானந்தமாய் இருந்திருக்கும்?
சகல கீழ்மைகளோடும் வாழ பயிற்றுவிக்கப்பட்டு,பணத்தின் பின்னால் மூச்சிரைக்க விரைந்தோடும் வாழ்க்கை.
உள்ளுணர்வுக்கு உண்மையாய் இருப்பதே மாபெரும் தவறு இங்கு.
இயற்கை நம்மை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது இல்லையா ?
அந்த யானை டாக்டர் காட்டை துல்லியமாய் கவனிப்பது போல,,,

பேரன்பு,
சரவணன்.ல.ம

அன்புள்ள சரவணன்,

கருணையால் நாம் பிற உயிர்களைக் கண்ட காலம் மறைந்துவிட்டது. சமத்துவத்தால் கண்டாகவேண்டிய காலம் வந்துள்ளது. அதை அக்கதை நினைவூட்டியதென நினைக்கிறேன்

நன்றி

ஜெ

 

கதைகள்


உலகம் யாவையும்

கோட்டி

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

 

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

 

முந்தைய கட்டுரைகிறிஸ்தவம் பற்றி…
அடுத்த கட்டுரைமாத்ருபூமி பேட்டி குறித்து