கமல், மகாபாரதம்,மரபு

வெண்முரசு- கமல்ஹாசன் சொல்வது சரியா?

வெண்முரசு,மகாபாரதம்,கமல்- விவாதங்கள்

அன்புள்ள ஜெ

கமல் ஹாசன் அவர்கள் மகாபாரதம் பற்றிச் சொன்ன வரிகளை ஒட்டி திருமாவளவன் மனுநீதி பற்றிச் சொன்னவையும் சேர்ந்துகொண்டன. இது தேர்தல்வரும் நேரம். மொத்த தேர்தல்விவாதத்தையும் இந்து- இந்து எதிர்ப்பு என்று கட்டமைக்க விரும்புகிறார்கள் என நினைக்கிறேன். அது பாரதிய ஜனதாவுக்குத்தான் ஆதாயமளிக்கும்.

பாரதிய ஜனதாக்கட்சி இன்றைக்கு வலுவான கட்சி அமைப்பு, அறியப்படும் தலைவர்கள் ஆகியவை இல்லாததனால் வாக்குகளை வாங்கி ஜெயிக்கமுடியாத நிலையில் இருக்கிறது.ஆனால் இங்கே பலர் நினைப்பதைவிட மிக ஆழமாக அது இங்குள்ள நடுத்தர மக்களின் மனதில் வேரூன்றிவிட்டது.

சொல்லப்போனால் தௌகீத் ஜமாஅத் என்னும் இயக்கம் ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்ற பேரில் இந்து தெய்வங்களை எதிர்த்து நடத்திய பிரச்சாரம்தான் அந்த மனமாற்றம் தொடங்கும் புள்ளி. அதை தொடர்ச்சியாக இந்துத்துவர்கள் வளர்த்து வருகிறார்கள்.அதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் தவறவிடுவதில்லை. கறுப்பர்கூட்டம் விவகாரம் மனுநீதி விவகாரம் எல்லாமே அதற்குத்தான் பயன்படுத்தப்பட்டன.

பேசப்படுவதை ஒற்றைவரியாக திரித்து செண்டிமெண்டாக தாக்குவது திராவிட இயக்கம் கொண்டுவந்த அரசியல்பிரச்சார முறை. ‘தனித்தமிழ்நாடு கோரிக்கை என்பது நான்சென்ஸ்’ என்று நேருஜி சொன்னார். அவர் தமிழர்களை நான்சென்ஸ் என்று சொல்லிவிட்டார் என்று சொல்லி அதையே உச்சகட்ட பிரச்சாரமாக ஆக்கிவிட்டார்கள். நான்சென்ஸ் என்றால் கேவலமான கெட்டவார்த்தை என்று அன்றெல்லாம் மக்களில்பலர் நம்பினர். உண்மையாகவே தமிழகத்தில்நேருவின் புகழ் மங்கிவிட்டது.

அதே உத்தியை இன்னமும் கேவலமாக இந்துத்துவர்கள் இவர்களுக்கு எதிராக இன்றைக்குப் பயன்படுத்துகிறார்கள். திருமாவளவன் மனுநீதி பெண்களை இழிவுசெய்கிறது, அது இந்துமதத்தின் குரல் என்றால் இந்துமதமும் பெண்களை இழிவுசெய்கிறது என்று சொன்னார். இந்துப்பெண்கள் இழிவானவர்கள் என்று திருமாவளவன் சொல்கிறார் என்று திரித்து உச்சகட்ட பிரச்சாரமாக ஆக்கிவிட்டார்கள்.

இன்றைக்கு தமிழகத்தில் இந்தப்பிரச்சாரம் எடுபடுகிறது. இதை திமுக உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்த விவாதத்தில்தான் நம்மவரும் மாட்டியிருக்கிறார். அவருக்கு இந்த கேவலமான அரசியல் தெரியாது. அவர் தான் நினைத்ததை சுதந்திரமாகச் சொல்கிறார்.அதை எப்படியெல்லாம் திரிப்பார்கள் என்று நினைப்பதே இல்லை.

அவர் மகாபாரதம் நம் மரபின் கதை, அது ஆத்திகர்களுக்குரிய சொத்தெல்லாம் அல்ல, நாத்திகவாதிகளுக்கும் உரியதுதான் என்கிறார். உடனே ‘இதோ கமல் மகாபாரதம் புனிதமான மூதாதையர் கதை என்று சொல்கிறார், பூணூல் தெரிகிறது ,சங்கி’ என்று ஆரம்பித்துவிட்டார்கள். இன்னொருபக்கம் ‘மகாபாரதம் நாத்திகம் என்கிறார்’ என்று ஒருகுரல்.

இன்றைக்கு கமல் இந்துத்துவர்களின் ‘டார்க்ட்’ அல்ல. அவரை அவர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவர்களின் டார்கெட் ஆக அவர் ஆனால் உடனே கமல் மகாபாரதத்தை இழிவுசெய்கிறார், திரௌபதியின் துகிலுரிதலை திரிக்கிறார் என்று ஆரம்பித்து வசைபாடியிருப்பார்கள். ஏற்கனவே அவர் மகாபாரதத்தைப் பற்றி சாதாரணமாகச் சொன்ன ஒரு கருத்தைவைத்து வழககுகள் தொடுக்குமளவு சென்றார்கள்.

இப்படித்தான் இன்றைக்கு அரசியல்சூழல் இருக்கிறது. இங்கே வெண்முரசோ, மகாபாரதமோ, மனுவோ எது பேசப்பட்டாலும் இன்றைக்கு அரசியலாக ஆகி விடுகிறது. இங்கே எதையுமே பேசமுடியாத நிலை உள்ளது.

எம்.கே.ராஜ்குமார்

அன்புள்ள ராஜ்குமார்

நான் கமல் ஹாசனை இருபதாண்டுகளாக அறிவேன். அன்றுமுதல் இன்றுவரை அவர் தெளிவான நாத்திகர். மதச்சடங்குகள் செய்ததில்லை, நம்பிக்கைகள் கொண்டதுமில்லை.

ஆனால் ஒருவர் இயல்பாக மதநம்பிக்கை இல்லாதவராக இருப்பதற்கும் நாத்திகத்தை ஒரு கொள்கையாக எடுத்துக்கொண்டு, அதை பிரச்சாரம் செய்வதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. நாத்திகத்தை ஒரு கொள்கையாக எடுத்துக்கொள்வதற்கும் அரசியல்நிலைபாடாக கொள்வதற்கும் அதேபோல பெரிய வேறுபாடு உண்டு

இயல்பாக நாத்திகராக இருக்கும் ஒருவர் அந்நிலைபாட்டை தன் அடையாளமாகக் கொண்டிருப்பதில்லை. எந்த விலைகொடுத்தும் அதை பேணிக்கொள்ள முயல்வதில்லை. அதை பிரச்சாரம் செய்வதுமில்லை. அவர் ஆத்திகர்களை மறுப்பது எள்ளிநகையாடுவது எதையும் செய்வதில்லை. அவர் சொல்வது, என்னால் நம்பமுடியவில்லை என்று மட்டும்தான். நம்மில் பாதிப்பேரின் நிலை இதுதான்

ஆகவே, இயல்பாக நாத்திகராக இருக்கும் ஒருவர் ஆத்திகர்கள் சொல்வதை கேட்டுக்கொள்வார். அதை பரிசீலிக்க தயாராக இருப்பார். தன் நம்பிக்கை உடையக்கூடாது என்று பொத்திவைக்க மாட்டார். முடிந்தால் உடைத்துக்காட்டு, ஏற்றுக்கொள்கிறேன் என்றுதான் சொல்வார். நானறிந்தவரை கமல் கொண்ட நாத்திகம் இப்படிப்பட்டது. அவர் தன் சினிமாக்களில் அதை வெவ்வேறுவகையில் சொல்லியிருக்கிறார்\.

நாத்திகத்தை கொள்கையாக வைத்திருப்பவர்கள் ஒட்டுமொத்தமாக மதத்தை நிராகரிப்பவர்களாக இருப்பார்கள். அதை அரசியல் நிலைபாடாக வைத்திருப்பவர்கள் அதற்கேற்ற அரசியலை சொல்லிக்கொண்டிருப்பார்கள். இயல்பாகவே நாத்திகராக இருப்பவர்கள் மதத்தை கூர்ந்து கவனிப்பார்கள். அதில் கொள்ளவேண்டியவை எவை என்று எப்போதும் ஆராய்வார்கள்

கமல் மதங்களிலிருந்து பண்பாட்டுக்கூறுகளையும் வரலாற்றையும் ஏற்றுக்கொள்ள எப்போதுமே முயல்பவர். அவர் இசையிலும் நடனத்திலும் தேர்ச்சிகொண்ட கலைஞர். இந்திய இசையும் இந்திய நடனக்கலையும் நேரடியாக மதத்துடன் தொடர்பு கொண்டவை. பக்தி இல்லாமல் இந்திய இசையும் நடனமும் இல்லை.

நாத்திகத்தை கொள்கையாகவோ அரசியல்நிலைபாடாகவோ கொண்டவர் ஒட்டுமொத்தமாக இசை.நடனம் எல்லாவற்றையும் ‘பக்திக்குப்பை’ என்று தூக்கி வீசிவிடுவார். கமல் அப்படிச் செய்யமுடியாது. அவர்  ‘எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் கலை எனக்குத் தேவை’ என்ற நிலைபாட்டையே எடுக்கமுடியும். ஏனென்றால் அவர் கலைஞர்.

‘எனக்கு பக்தி இல்லை, ஆனால் அந்த உருக்கமான மனநிலை பாடுறப்பவோ ஆடுறப்பவோ எனக்கு வந்திரும்’ என்று அவர் ஒருமுறை சொன்னார். இல்லாவிட்டால் பரதநாட்டியமோ கதக்கோ குச்சிப்புடியோ பயில முடியாது. நம்மில் இலக்கியம், கலை ஆர்வம் கொண்ட பலரும் கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் ஒரு பக்திப்பாடலை கேட்டால் மனமுருகி அழுதுவிடுபவர்கள்தான்.

‘கேளுசரண் மகாபாத்யாயா ராதையா ஆடுறதைப் பாத்தா கிருஷ்ணனை ரொம்ப ஃபீல் பண்ண முடியும்’ என்று சொல்பவரால்தான் ஒடிசியை அணுகமுடியும். ‘ஆனா அவரு ஆடினாத்தான் கிருஷ்ணன் இருக்காரு. இல்லேன்னா காலண்டரில்தான் பாக்கணும்’ என்று உடனே சேர்த்துக்கொள்வார் கமல்

அந்த மனநிலைகொண்ட ஒருவர்தான் ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ போன்ற பாடலில் ராதாபாவத்தை, பெண்ணுக்குரிய அசைவுகளுடன் உணர்ந்து ஆடவும் முடியும். அதை ஆடும் கமலுக்கு ராதையை அப்போது மிக நன்றாகவே தெரியும். அவரும் கேளுச்சரண் மகாபாத்யாயவின் அதே பக்திபாவத்தில்தான் அப்போது திகழ்கிறார்

அவர் கிறிஸ்தவத்தையும் அவ்வண்ணமே பார்க்கிறார். ‘காஸ்பல் மியூசிக் கேக்கிறப்ப மட்டும் கொஞ்சம் கிறிஸ்தவனா இருந்துக்கலாம்’ என்று சொன்னார்.

இங்கல்ல, உலகம் முழுக்க கலைஞர்களின் எழுத்தாளர்களின் வழி அதுவே. முழுமறுப்பும் மூர்க்கமான நிராகரிக்கும் வரண்ட அரசியல்வாதிகளுக்குரிய பாதை. அவர்களுக்கு கலை, இலக்கியம், கலாச்சாரம் எதுவுமே ஒரு பொருட்டல்ல. அவர்களின் கண்மூடித்தனமான வெறிக்கு கலைஞர்கள் இரையாவது ஒரு பெரிய துயர்

பாமரர்களுக்கு கலைஞனின் இந்த ஏற்பும் மறுப்பும் எப்படி நிகழ்கிறது என்று தெரியாது. நீ நாத்திகன் என்றால் ஒட்டுமொத்த மதமும் பக்தியும் தேவை இல்லை என்று சொல், குழப்பாதே என்று சொல்வார்கள். அவர்களின் அறிவின் எல்லை அது.

ஆனால் உலகமெங்கும் அறிவுஜீவிகள் இந்த வேறுபாட்டை புரிந்துகொண்டவர்கள். நல்ல எழுத்தாளர்கள் கலைஞனின் மனநிலையை ஆதரிப்பவர்கள். தமிழ்நாட்டில்தான் அறிவுஜீவி என்றபேரில் அரசியல்வாதியைவிட வரண்ட ஆத்மாக்கள் உலவுகின்றன.

கமல் நாத்திகர், தர்க்கபூர்வமாகவே மரபை ஆராய்பவர். அதேசமயம் உணர்வுரீதியாக கலைகளையும் அக்கலைகளுக்கு அடிப்படையான பண்பாட்டையும் அணுகுபவர். அதில் முரண்பாடேதும் இல்லை. கடவுள்நம்பிக்கை இருந்தால்தான் மதத்தில் உள்ள பண்பாட்டுக்கூறுகளை பயிலவேண்டும், அதிலுள்ள கலைகளில் ஈடுபடவேண்டும் என்று எவர் சொல்லமுடியும்?

மகாபாரதம் நம் முன்னோர்களின் பண்பாட்டுத்தொகை என்று சொல்வதனால் ஒருவர் ஆத்திகராக, கடவுள்நம்பிக்கை கொண்டவராக இருக்கவேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் ஆழமான மகாபாரத ஆய்வுகளைச் செய்த பலரும் நாத்திகர்களே. அவர்களில் பி.ஆர்.அம்பேத்கரும் உண்டு.

ஏனென்றால் இந்தியப்பெருநிலத்தில் நிகழ்ந்த வாழ்க்கையைப் பற்றி நமக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பதிவு மகாபாரதமே. மிகத்தொன்மையானதும் அதுவே. இந்தியாவின் வரலாற்றையும் பண்பாட்டையும் மகாபாரதத்தை ஆராயாமல் அறியமுடியாது – எம்.என்.ராய், தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய, பி.ஆர்.அம்பேத்கர், டி.டி.கோசாம்பி போன்ற நாத்திகர்களும் அவ்வண்ணமே ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்

டி.டி.கோசாம்பி

நம்முடைய பிரச்சினை என்னவென்றால் ஈவேரா முன்னோடியாக இருப்பதுதான். அம்பேத்கரும் டி.டி.கோசாம்பியும் ஆராய்ந்தனர். ஈவேரா எதிர்த்தார். ஆராய்வதற்கு அறிவும் பயிற்சியும் தேவை. எதிர்ப்பதற்கு மூர்க்கம் மட்டும் போதும், அறிஞராக இருக்கவேண்டுமென்பதில்லை. நம்மூரில் எளியவழியை நாடும் பாமர மனங்களுக்கு ஈவேரா உவப்பாக இருக்கிறார். மகாபாரதம் என்றால் என்னவென்றே தெரியாது, ஆனால் அதை வெறுப்போம் மறுப்போம் என்பதே இவர்களின் நிலைபாடு.

ஏன் மகாபாரதம் தேவையாகிறது? வரலாற்று, பண்பாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு அது ஒரு மாபெரும் செய்திக்களஞ்சியம். அதைப்பேசாமல் இந்தியாவில் எப்பகுதியின் எந்தப்பண்பாட்டையும் பேசமுடியாது. ஆனால் அதைவிட முக்கியமானது அது இந்தியக் கலைகளுக்கும் இலக்கியத்திற்கும் அடிப்படையானது என்பதே.

எப்படி? கலைகளும் இலக்கியங்களும் சில அடிப்படைக்கூறுகளையே பயன்படுத்துகின்றன. அவற்றை படிமங்கள் [images] தொன்மங்கள் [myths] ஆழ்படிமங்கள் [archetypes] என்று விமர்சகர் சொல்கிறார்கள். அவை இல்லாமல் கலை செயல்பட முடியாது

இலக்கியவிமர்சனத்தில் மிக விரிவாகப் பேசப்பட்டது இது. இவ்விவாதத்தில் புதியவர்களுக்காக சுருக்கமான ஒரு விளக்கம். திரௌபதியின் அவிழ்ந்த கூந்தல் ஒரு படிமம். ‘தலவிரிக்கோலமா வந்தா’ என்று நாம் சாதாரணமாகச் சொல்கிறோம். அது எதைக்குறிக்கிறது என நமக்குத்தெரியும். ஒன்றைச் சொல்லி பலவற்றை உணர்த்துவது படிமம்.

திரௌபதி சபையில் அவமதிக்கப்பட்டது ஒரு தொன்மம். பாரதி அதை பாஞ்சாலிசபதமாக பாடினான். துகிலுரியப்படும் இந்தியாதான் திரௌபதி என்று காட்டினான். இது தொன்மம். புராணக்கதைகள் எல்லாமே தொன்மங்கள்தான். ‘ஆண்களில் ராமன் கிடையாது’ என்று ஒரு சினிமாப்பாட்டில் வந்ததும் ஏன் அதன் உட்பொருள் புரிகிறது? ஏனென்றால் ராமன் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவன் என்னும் தொன்மம் நமக்குத் தெரியும். நாம் அப்படி பல ஆயிரம் தொன்மங்களை அறிந்து அவற்றைப் பயன்படுத்தித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

தீயில் தோன்றியவள் திரௌபதி. அனல்மகள் என்று சங்கப்பாட்டிலேயே குறிப்பிடப்படுபவள். இது ஒரு ஆழ்படிமம். அதாவது உக்கிரமான பெண். தீ போன்று தூய்மையானவள், கூடவே பேரழிவை உருவாக்கக்கூடியவள். அந்த ஆழ்படிமம் நம் உள்ளத்தில் கிடக்கிறது. கண்ணகியை நாம் அதனுடன் இணைத்துக்கொள்கிறோம்.

சினிமாவில் கடைசியில் ஆவேசமாக வில்லனைக் கொல்ல கதாநாயகி எழும்போது பின்னணியில் தீ எரியவிட்டால்போதும் நமக்கு அந்த உணர்ச்சி வந்துவிடும். படிமங்களை புல் என்றால் அந்தப்புல்லை முளைக்கவைக்கும் புல்வேர்தான் ஆழ்படிமம். நம் மனதில் அவை உறைகின்றன. அறியாமலேயே.

எம் என் ராய்

இவை நம் மரபிலிருந்து வந்து நம் ஆழ்மனதில் வளரவேண்டும். எது நம் கனவில் நம்மையறியாமலேயே வருகிறதோ அதுதான் இலக்கியத்துக்கான மூலப்பொருள். அதை நாம் முடிவுசெய்ய முடியாது. நம் முன்னோர்கள் எதை தங்கள் வாழ்விலும் சிந்தனையிலும் வைத்திருந்தார்களோ அதுதான் நம்மில் ஆழ்மனமாக ஆகிறது

அப்படி நம் மரபில் ஈராயிரமாண்டுகளாக மகாபாரதம் இருந்திருக்கிறது. அதை இன்று நாம் மாற்ற முடியாது. அது அவ்வாறு இருந்தமையால் அது நம் மரபுதான், நம் கனவிலும் நம் மொழியின் ஆழத்திலும் அது இருந்தே தீரும். அவ்வாறு அது இருப்பதனால் அதுவே நம் கலைகளின் அடிப்படையாக அமையும். அதை போற்றிபுகழவேண்டும் என்பதில்லை, அதை எதிர்மறையாகவும் பயன்படுத்தலாம். எப்படியானாலும் அதுவே நம் மரபு. அதிலிருந்தே கலைகளும் இலக்கியமும் உருவாகமுடியும்

ஆகவே கலைஞர்கள் ஒருபோதும் மரபை கண்மூடித்தனமாக நிராகரிக்க முடியாது. நிராகரிப்பவன் முச்சந்திப் பேச்சாளனாகலாம். கலைஞனாக படைக்க முடியாது. கலைஞனின் வழி மரபை அறிவார்ந்து ஆராய்வதும் கூடவே உணர்ச்சிகரமாக ஈடுபடுவதும் அதையும் கடந்து கனவால் அந்த மரபுடன் தொடர்புகொண்டிருப்பதும்தான்

அந்த மரபை எந்த அசல் கலைஞனும் அப்படியே திருப்பி முன்வைப்பதில்லை. அது அவனில் உருமாறுகிறது. அவனுக்கு மட்டும் உரியதாகிறது. அவன் வழியாக அது சமகாலத்தையதாகிறது. கலையின் விரிவின் வழியாக உலகுக்கு உரியதாகிறது. உலகின் மகத்தான கலைகள் இலக்கியங்கள் எல்லாம் அப்படித்தான் உருவாகியிருக்கின்றன.

ஜெ

வெண்முரசு,கமல் ஹாசன்