வெற்றுப்பாடல்

அன்புள்ள ஜெ.,

எப்போதோ எண்பதுகளின் இறுதியில் சென்னைத் தொலைக்காட்சியில் வளைகுடா நாட்டில் நடந்த ஜேசுதாஸ் கச்சேரி ஒன்றைக் காட்டினார்கள். அப்போது அவர் பாடிய ‘சங்க்ருத பமகரி’ என்ற இந்த மலையாளப் பாட்டு ரொம்ப புதுசாக இருந்தது. பாட்டின் ஆரம்பத்தில் அவரே சொன்னார் ‘அர்த்தம்லாம் ஒண்ணும் பெரிசாக் கிடையாது. சும்மா அப்பிடியே பாடறதுதான்’ என்று.

தமிழில் முதன் முதலாக நான் கேட்ட வெற்றுப்பாடல் ‘சந்திரலேகா’ படத்தில் என்.எஸ்.கே – டி.ஏ.மதுரம் பாடிய ‘அய்யிலோ பக்கிரியாமா’ – சிலோன் ரேடியோவில். இதற்கடுத்த தரத்தில் ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் வரும் ‘தான்ன நன்ன நான்னா தன்ன நான்னா தன்ன நான்னா….நினைத்தாலே இனிக்கும்’ என்ற பாட்டு. எஸ்.பி.பி பாடியிருப்பார். முழுப்பாட்டும் அந்த ஒரே வார்த்தைதான் ‘நினைத்தாலே இனிக்கும்’ – வெவ்வேறு ஸ்வரங்களில்.

கமல் ஒரு பழைய பேட்டியில் இந்தப் பாட்டைப் பற்றி சொல்லும்போது ‘நாங்கல்லாம் அந்தக் காலத்துல ‘பாலும் பழமும் கைகளில் ஏந்தி’ பாட்டையே இப்பிடிப் பாடுவோம்’ என்று பாடியும் காட்டினார்.  பா..லும் பழமும் கைகளில் ஏந்தி, பாலும் பழமும் கைகளில் ஏந்தி…,பாலும் பழமும் கை…களில் ஏ…ந்தி..’ தான் முழுப் பாட்டும். ஒவ்வொரு முறையும் நீடித்த ஒலிப்பு (lingering note) வெவ்வேறு எழுத்துக்களில் அமர்ந்திருக்கும். சிரிப்பாக இருந்தது. சில பாடல்களைத்தான் இப்படிப் பாட முடியும்.

எஸ்.பி.பி பின்னாளில் ‘நீ பாதி நான் பாதி’ படத்தில் நிவேதா…என்றொரு பாடல் பாடியிருப்பார். நடுவிலே ஸ்வரம் போட்டு கர்நாடக சங்கீதம் பாடினாலும் ஒரே வார்த்தை ‘நிவேதா…’ தான்.   ‘அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…அவளும் நானும் சும்மா சும்மா..’ என்றெல்லாம் பாடல் வந்தாலும் இவையெல்லாம் சும்மாப்பாட்டு வரிசையில் வராது. சும்மா கிடைத்து விடுமா அந்த தகுதி?

‘ஜென்டில்மேன்’ படத்தில் வரும் ‘முக்காலா முக்காபுலா’ பாடலில் வரும் முக்காபுலான்னா என்ன? என்று கேட்டபோது ஏ.ஆர்.ரகுமான் ‘அது ஒரு catchy word ‘ என்றார். ஒரு அர்த்தமும் இல்லாத வெற்றுவார்த்தை என்பதே உண்மையான அர்த்தம். சிவாஜி படத்தில் வருகிற ‘பல்லேலக்கா பல்லேலக்கா’, காக்க காக்க படத்தில் வரும் ‘உயிரின் உயிரே’ பாடலின் ஆரம்பத்தில் வரும் ‘ஒமஹாசீயா’, டிஷ்யூம் படத்தில் வரும் ‘டைலாமோ டைலாமோ’, முதல்வனில் வரும் ‘ஷக்கலக்க பேபி’, ‘அண்டங்காக்கா கொண்டைக்காரி’ பாடலில் வரும்  ‘ரண்டக்க ரண்டக்க’ எல்லாமே வெற்று வார்த்தைகள் தான்.

இப்படி ஒவ்வொரு வெற்றுவார்த்தைகளாகப் பொறுக்கி எடுத்துப் போட்டு செய்த பாடல்தானே முழுமையான வெற்றுப்பாடலாக இருக்கும். இப்பிடிச் செய்யப்பட்ட பாடல்தான் ‘தமிழ்ப் படம்’ படத்தில் வந்த ‘ஓ..மகா..சீயா’ என்ற பாடல். அந்தப் படமே மற்ற படங்களை கிண்டல் பண்ணி எடுத்த வெற்றுப்படம் தான். இந்த பாடல் காட்சியிலேயே மற்ற பாடல்களை பகடி செய்திருப்பதைப் பார்க்கலாம்.

‘மிர்ச்சி’ சிவா போன்ற ‘யுனிவெர்சல் ஹீரோ’ வும் சேரும்போது (ஹரிஹரனின் பிருகாவிற்கு அவர் கொடுக்கும் மெய்ப்பாட்டைக் கவனிக்கவும்) வெற்றுப்பாடல் புதிய பரிமாணத்தை அடைந்து விடுகிறது. இந்த வெற்றுப்பாடலுக்கு ‘உயிர்’ கொடுத்திருக்கும் பாடகர்கள் ஹரிஹரன், ஸ்வேதா மோகன். சிரிக்காமல் பாட எத்தனை ‘டேக்’குகள் வாங்கினார்களோ? இசையும், மொழியற்ற வார்த்தைகளும் சேர்ந்து காதுக்கு இனிமையான ஒரு பாடல். புதிய முயற்சி.

முன்பெல்லாம் இத்தனை ஆயிரம் வாக்குகளைப் பெற்று இந்த  இடத்தைப் பிடித்த பாடல் என்று ஒரு பாடலை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒலிபரப்புவார்கள் சிலோன் ரேடியோவில். எனக்குத் தெரிந்து ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் வரும்’சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ என்ற பாடல்தான் மாதக்கணக்காக முதல் இடத்தில் இருந்தது. என்னைப் பொறுத்தவரை வெற்றுப்பாடலில் என்றும் முதலிடம் ‘ஓ..மகா..சீயா’ வுக்குத்தான் .

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

நினைத்தாலே இனிக்கும்

சந்திரலேகா பாடல்

சங்க்ருத பமகரி

முந்தைய கட்டுரைவெண்முரசும் மகாபாரதமும் கமல் ஹாசனும்
அடுத்த கட்டுரைமனு- கடிதங்கள்