சுந்தர ராமசாமி, மார்க்சியம்- கடிதங்கள்

சுந்தர ராமசாமி மார்க்ஸியரா?

பிள்ளைகெடுத்தாள் விளை -சுந்தர ராமசாமியின் பிற்போக்குப் பார்வையா?

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,

சுந்தர ராமசாமி அவர்கள் மார்க்சிய ரா? என்ற கேள்வி எழும்போது ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

தங்களையும் சுந்தரராமசாமி அவர்களையும் ஒரே காலத்தில் தான் தொடர்பு கொண்டேன்.

அவரது “அக்கரை சீமையிலே ” எனும் கதையை மொழியாக்கம் செய்து மலையாளத்தில் வெளியிட அனுமதித்த பின்பு அவரை நேரில் சந்திக்க துவங்கினேன்.

நாகர்கோவில் டவரில் உள்ள அவரது “சுதர்சன் ஜவுளிக்கடை”யில் எண்ணற்ற முறை சந்தித்து வந்தேன். அப்போதெல்லாம் அரசியல் பற்றி பேசி வந்தார். சோவியத்து பின்னடைவு  காலத்தில் நடைபெற்றுவந்த அரசியல் நிலைகளையும் என்னிடம் பேசிக்கொண்டே இருந்தார்.

ஒவ்வொரு முறையும் அவர் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவலோடு அவரை நாடிச் சென்று கொண்டே இருந்தேன்.

இன்னும் அவரது “கிளர்ச்சி” மற்றும் “குரங்குகள்” கதைகளையும் மொழியாக்கம் செய்து மலையாள இதழ்களில் அனுப்பிவைத்து பிரசுரமும் ஆனது.

ஒரு நாள் ருமேனியா அதிபர் செஷஸ்க்யு செய்த பயங்கரமான ஊழல் விஷயங்கள் பத்திரிகையில் வந்த நாளில் அவரை சந்தித்து பேசும் பொழுது கவலையோடு தான் இடதுசாரிகளின் தார்மீக வீழ்ச்சியை சுட்டிக்காட்டினார், குத்திக்காட்டினார். தொடர்ந்து மிக வருத்தத்தோடு #ஸ்டாலின் என்ற ஒரு சிறு புத்தகத்தை என்னிடம் ஒப்படைத்துவிட்டு படித்து ஒரு  விமர்சன கட்டுரையை காலச்சுவடுக்கு எழுதுங்கள் என்றார். படித்தபோது அன்று ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து எழுதும் மனோ நிலையில் நான் இருக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோட்ட தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகியாக செயல்பட்டு வரும் என்னால் அன்று அவ்வாறு சுரா கேட்டுக்கொண்டபடி எழுத முடியவில்லை.

அன்று சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த பி பெருமாள் அவர்களிடமும் தலைவராக,தமிழ்நாடு சிஐடியு தலைவராகவும் பரிணமித்த ஜெ .ஹேமச்சந்திரன் அவர்களிடமும் தெரிவித்தேன்.பி.பெருமாள் அப்போது தான் சுரா பற்றி பேசினார்.

பெருமாள்,சுரா, டாக்டர் பாலமோகன்தம்பி (பனாரஸ் பல்கலை கழக பேராசிரியர்,கேரளா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு வகித்த மார்க்சிய அறிஞர்) ஆகியோர்  நாகர்கோவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளையில் உறுப்பினராக செயல்பட்டதை தெரிவித்தார். சுராவிற்கு அரங்கமாக இலக்கியப்பணி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இங்கு இதை தெரிவிப்பதற்கு காரணம் எதிர்காலத்தில் அவர் மார்க்சியர் ஆக இருந்தது இல்லை என்று சிலர் வாதிட வாய்ப்பும் உண்டு.

குறிப்பு– முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1936ல் உத்தரபிரதேசத்தில் துவங்கியது. கல்கத்தா என்று கூறப்பட்டது தவறாக பதிவாகிவிட்டது என கவனப்படுத்துகிறேன்.

—பொன்மனை வல்சகுமார்.

 

அன்புள்ள வல்சகுமார்

திருத்திவிட்டேன். நன்றி

ஜெ

சுந்தர ராமசாமி 

அன்புள்ள ஜெ

சுந்தர ராமசாமி முற்போக்கு எழுத்தாளரா என்ற கட்டுரை ஒரு புதிய பார்வையை முன்வைத்தது. உண்மையிலேயே அந்தக்கோணத்தில் நான் யோசித்ததே இல்லை. நீங்கள் எழுதிய பின்னரே நான் நீங்கள் ஜெயகாந்தன் பற்றி எழுதிய கட்டுரையை வாசித்தேன். ஜெயகாந்தனை முற்போக்கு இலக்கியத்தின் முதன்மை முகமாக நீங்கள் அடையாளப்படுத்துகிறீர்கள்

இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது சுராவுடன் அறிமுக உள்ள மூத்த நண்பர் சுந்தர ராமசாமி வைக்கம் முகமது பஷீர் பற்றிச் சொல்லும்போது “முற்போக்கு இலக்கியத்தின் அசல்” என்று சொன்னதை [அந்த தலைப்பில் எழுதிய கட்டுரை ஒன்று உண்டு என நினைக்கிறேன்] சொன்னார். அதுவும் ஆச்சரியமானதுதான். பஷீரைப்பற்றிய அப்படிப்பட்ட பார்வையே நம் சூழலில் இல்லை. பஷீர் பற்றி சுந்தர ராமசாமி சொன்னதன் நீட்சியே சுந்தர ராமசாமி பற்றி நீங்கள் சொன்னது

இரண்டு வரையறைகள் உள்ளன. முற்போக்கு என்றால் கம்யூனிஸ்டுக் கட்சிகளில் ஒன்றைச் சார்ந்து இருப்பது என்றுதான் இங்கே பொதுவாக வரையறை செய்யப்படுகிறது. முற்போக்கு எழுத்து என்பது மார்க்சிய இலட்சியவாதம், மார்க்சிய தத்துவப்பார்வை, மார்க்சிய வரலாற்றுப்பார்வை ஆகியவற்றை கொண்டிருந்தால்போதும், கட்சிகளின் அரசியலுக்கு மாறுபட்டிருந்தாலும் அது முற்போக்கு எழுத்துதான் என்று நீங்கள் சொல்வதாகவே புரிந்துகொள்கிறேன். அந்தவகையிலேயே பஷீரும் சுராவும் ஜெயகாந்தனும் முற்போக்கினர்

சிவக்குமார் எஸ்

அன்புள்ள ஜெ

சுரா முற்போக்கு எழுத்தாளரா என்ற கட்டுரையையும் பிள்ளைகெடுத்தாள்விளை கதைக்கு நம்மூர் முற்போக்காளர் அளித்த வசைகளையும் பார்த்தேன். இங்கே முற்போக்கு முகாம் எந்த அளவுக்குச் சாதியில் ஊறிவிட்டிருக்கிறது, சாதிக்கு அப்பால் எதையுமே பார்க்கமுடியாதவர்களான ஆதவன் தீட்சணியா, யமுனா ராஜேந்தரன் போன்றவர்கள் மார்க்ஸியம் பேசுவதன் அழிவு எப்படி இங்கே முற்போக்குத்தரப்பே இல்லாமலாக்கிவிட்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டேன். மார்க்சியர்கள் தி.க பேச்சாளர்களாக ஆனதுதான் இந்த இருபத்தைந்தாண்டுகளின் மிகப்பெரிய அழிவு

ஸ்ரீனிவாஸ்

முந்தைய கட்டுரைகமல், மகாபாரதம் பற்றி மேலும்
அடுத்த கட்டுரைகாந்தி உரை- கடிதங்கள்