சிந்தனையும் மொழியும்

அன்புள்ள ஜெ.,

ஆதிமூலத்தின் படிம ஓவியங்களை (கித்தான்ல பெயிண்ட கொட்டி, ஜீப்பை குறுக்கு நெடுக்க ஓட்டி உழுதாப் போல – ஓவியர் நடிகர் சிவகுமார்) எழுத்துருவில் கண்டாற்போல இருந்தது நான் படித்த பிரேம் ரமேஷின் ‘பேச்சு -மறுபேச்சு’ (சாரு, தமிழவன், பிரம்மராஜன், இளையராஜா உடனான நேர்காணல்கள்).

இன்ன புத்தகம் படிக்கிறேன் என்று வாட்சப்பில் சொன்ன உடனேயே ‘மொழி என்ற அர்த்த உற்பத்தி அமைப்பில் அமைந்த பிரதியின் வழியிலான குறிப்பான்கள் குறிப்பிடும் அர்த்தங்களை உற்பத்தி செய்ய இதுவரை பெருங்கதையாடல் உற்பத்தி செய்திருந்த அமைப்பின் தகர்வின் பின்பான மையமழிந்த நிலையில் எழும் வாசிப்பானது…’ என்று பொங்கி வந்தார் கடலூர் சீனு. நல்ல சரஸ்வதி கடாட்சம் இருந்தால்தான் இப்படியெல்லாம் வரும் என்று நினைத்துக்கொண்டேன்.

நேர்காணல்கள் என்றால் சொல்லாடல்கள், கதையாடல்கள், வம்பாடல்கள் எல்லாம்தான். புதுமைப்பித்தனும், மௌனியும் என் பீக்குச் சமானம் – சாரு (அடேயப்பா, கழிவே இவ்வளவு காத்திரமாக இருந்தால் என்னமாதிரியான சாப்பாடு உள்ளே போயிருக்கணும் என்று நினைத்துக் கொண்டேன்.)

சு.ரா.வைக் கேளுங்கள் என்று குமுதம் தீரா நதியில் வந்த பதில்களில் அவர் கூறிய ‘நம் தமிழ் மண்ணில் அரை வேக்காடுகள், பிறரைப் பயமுறுத்த உதவுமென அவர்கள் நம்பும் நூல்களை மேய்ந்து விட்டு, நம்முன் வந்து நாள்தோறும் கழிவதைப் பார்த்து வருகிறோம். கழிக்கும் ஜென்மங்களுக்குள் இன்று கடுமையான போட்டி நிலவுவதால் ஏக காலத்தில் நிகழும் எண்ணற்ற கழிப்புகளால் நம் சுற்றுப்புறம் பாழ்படத்தான் செய்யும். நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். நாம் இந்த மண்ணில் வாழ விரும்புகிறோம். இயன்ற அளவு சுத்தப் படுத்தவும் விரும்புகிறோம்.’ என்ற பத்தியை எடுத்துக்கொண்டு அவரை அறிவு விவாத மறுப்பிற்காதரவான  பிராமண மரபின் முகமாக நிறுவும் கட்டுரை எல்லாம் உண்டு.

உங்களுடைய விஷ்ணுபுரம் பற்றி அவர்கள் வார்த்தைகளில். ‘எங்களுடைய நாவலான புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும் வெளிவந்தபோது அதை அணுக போதுமான ஆய்வு முறை, வாசிப்பு முறை இல்லாமலிருந்தது. நாங்கள் முன்வைத்த பல்வேறு இலக்கிய நுட்பங்கள் மறுக்கவும், ஒதுக்கவும் பட்டன. ஜெயமோகன் இலக்கியம் பேசிய தருணங்களில் எல்லாம், எழுதிய பக்கங்களில் எல்லாம் நாங்கள் முன்வைத்த பிரதியாக்கம் பற்றிய கருதுகோள்களை ஏதோ ஒருவகையில் தெரிந்தோ தெரியாமலோ கடுமையாக மறுத்து வந்திருக்கிறார். ஆனால் தமிழின் மிக முக்கியமான பிரதியாக அமைந்துள்ள ‘விஷ்ணுபுரம்’ நாவலோ பன்முகப் பிரதி என்று நாங்கள் கூறிவந்த Metafiction வகையில் அமைந்துள்ளது. தற்போது அதை வாசிக்க நாங்கள் இதுவரை திருகித் திருகிக் கூறிய ஆய்வுமுறைகளைத்தான் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் அது ஒரு சரித்திர நாவலாக வாசிக்கப்பட்டு மறக்கப்படவேண்டியதாகவே மீறும்’

இதில் அவர்கள் திருகித் திருகிக் கூறிய ஆய்வு முறைகள் தெரியாததால்தான் கணிசமானவர்களால் விஷ்ணுபுரத்திற்குள் நுழைய முடியவில்லையா? நுழைந்தவர்களுக்கு அந்த ஆய்வு முறைகள் தெரிந்ததினால்தான் நுழைய முடிந்ததா? தெரிந்திருந்தால் (இரண்டுமுறை படித்தபின்னும்) நுழைய முடியாத என்போன்றவர்களுக்கு எளிதாக இருந்திருக்குமா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

ரமேஷ் பிரேதன்

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,

இந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒன்றைப் பற்றிய தெளிவை முன்வைக்க விரும்புகிறேன். கடலூர் சீனு சொல்வது சிற்றிதழ்களில் புழங்கும் முற்றிய வாசகர் ஒருவரின் நையாண்டி. அது எப்போதும் இங்குள்ளது, இயல்பானது. உண்மையில் அது வெறுமே நடையைத் திருகி எழுதி அறிவுப்பூச்சை காட்டிக்கொள்ளும் போலிகளுக்கு எதிரானது. அத்தகையோர் சூழலில் என்றுமுண்டு. இன்றும் தமிழில் வரும் சிற்றிதழ்களில் பாதிக்குமேல் இத்தகைய கட்டுரைகளே. சுந்தர ராமசாமி சொல்வதுபோல அப்படியே தூக்கி வெந்நீரடுப்பில் செருகவேண்டியவை.

ஆனால் நாம் பேசிக்கொண்டிருப்பது இணையச்சூழலில். இங்கே புதியவாசகர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இந்த விமர்சனமோ கேலியோ வேறுவகையான உளப்பதிவை உருவாக்கிவிடும். அவர்களை மழுங்கடிக்க உகந்த வேறுசில உரையாடல்கள் இங்கே மிக வலுவாக உள்ளன. அதை  ’பொதுமொழியின் வன்முறை’ அல்லது ‘பாமரவாசிப்பின் வன்முறை’ என்று சொல்லலாம். அதைப்பற்றிய எச்சரிக்கையையே சொல்லவிரும்புகிறேன்.

பொதுவாக புதியசிந்தனைகள் எவையாக இருந்தாலும் அவை ஒரு மொழியில் புதிய கலைச்சொற்களுடன் புதிய சொற்றொடரமைப்புகளுடன் மட்டுமே அறிமுகமாகும். ஆகவே மொழிச்சிடுக்குகள் உருவாகாமலிருக்க வாய்ப்பே இல்லை. பேசப்பேசத்தான் அவை தெளிந்து மொழி இயல்புநடையை அடையும். ஒரு புதிய கருத்தைச் சொல்லும் கட்டுரையே சிலமுறை எழுதப்பட்டாலொழிய தெளிவாக அமையாது

அன்றாடத்துக்கு அப்பாற்பட்ட தத்துவம், சட்டம் போன்றவற்றைப் பேசும் மொழிநடையும் செறிவாகவும் சிக்கலாகவுமே அமையும். தமிழில் இவை இப்போதுதான் வரத்தொடங்கியிருக்கின்றன. முந்நூறாண்டு பாரம்பரியம் கொண்ட ஆங்கிலத்திலேயே சட்டம் தத்துவம் ஆகிய துறைகளில் மொழி அத்துறைகளில் ஈடுபடுபவர்களுக்கே புரியுமளவுக்குச் சிக்கலானதாகவே இன்றும் உள்ளது.

இலக்கியவிமர்சனம் என்பது பெருமளவுக்கு தத்துவத்திற்கு அணுக்கமானது. கோட்பாட்டு விமர்சனமோ ஏறத்தாழ தத்துவமேதான். அதில் பயின்றுவரும் மொழிநடை தத்துவத்திற்குரிய

அ. வரையறைசெய்யும்தன்மை’

ஆ. செறிவாகச் சொல்லும்தன்மை’

இ. கலைச்சொற்கள்மேவிய தன்மை

ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.ஆகவே மொழிச்சிடுக்கை தடுக்கவே முடியாது.

இந்தவகையான நடைகளை மீமொழிகள் [metalanguage] எனலாம். மொழிக்குள் செயல்படும் தனிமொழிகள் இவை. அவற்றை தனியாகக் கற்றே ஆகவேண்டும். அதற்குரிய உழைப்பை அளித்தாகவேண்டும். அவை நம் அன்றாடமொழியில், நாம் நேரடியாக புரிந்துகொள்ளும்படி இருக்கவேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அவற்றில் புதிய பேசுபொருட்கள் வருமென்றால் மேலும் உழைப்பை அளித்தே ஆகவேண்டும்.

ஏனென்றால் நாம் அன்றாடப்பேச்சுமொழியிலேயே நம் அகமொழியை உருவாக்கியிருக்கிறோம்.அந்த மொழிக்கு அண்மையான மொழியே ‘இயல்பான’ மொழி என்றும் ‘சரளமான மொழி’ என்றும் நாம் நினைக்கிறோம். சரளம் என்றால் என்ன? நாம் தங்குதடையின்றி ஒழுகிச்செல்லவைப்பது. எளிய வாசிப்புக்கு வழியமைப்பது.

சரளமான மொழி என்பது ஒரு முதன்மைப் பாராட்டாகவே இங்கே சொல்லப்படுகிறது.ஒருவர் மொழி சந்திக்கும் எந்த அறைகூவல்களையும் எதிர்கொள்ளாமல், சராசரியான புழங்குமொழியில் பிழையின்றி மாறாமல் எழுதிக்கொண்டிருந்தால் “அவரோட நடை நல்லா இருக்கும். சும்மா ஆற்றோட்டமான நடை” என்று இங்கே பாமரர் சொல்லிவிடுவார்கள்.

நல்ல நடை என்பது முன்பிலாத புதியதன்மை ஒன்றைச் சென்றடைந்தது. அந்த ஆசிரியனுக்குரிய தனியடையாளம் கொண்டது. அகத்திலும் புறத்திலும் மேலும் மேலும் நுண்மைதேடும் சவால்களை எதிர்கொள்வது. அறிவுத்தர்க்கம் உணர்ச்சிகரம் உள்ளுணர்வின் தரிசனம் ஆகிய மூன்றையுமே வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பேச்சுமொழியின் வண்ணங்கள் அனைத்தையும் காட்டுவது.அறிவுத்தள மீமொழிகள் அனைத்தையும் தொட்டுக்கொண்டு விரிவது.

அத்தகைய நடை வாசகனுக்கு ஒரு தடையை அளிக்கும். எந்த நல்ல புனைவும் வாசகனுக்கு தடையையே முதலில் அளிக்கிறது. ஏனென்றால் அந்த தடை என்பது ஒரு திசைமாற்றம், அவனறிந்த பொதுமொழியிலிருந்து அவ்வாசிரியன் அவனை வெளியே கொண்டுசெல்வதையே அவன் தடை என உணர்கிறான்.அந்த மீமொழியை கற்கவேண்டிய கட்டாயம் நிகழ்கிறது. அதையே தடை என உணர்கிறான்.

எண்ணிப்பாருங்கள் ,எங்கே அப்படி ஒரு தடையை உணர்ந்து நம கடந்துசெல்கிறோமோ அந்த புனைவுகளையே நாம் நீண்டகாலம் நினைவில் வைத்திருக்கிறோம். அந்தப் புனைவே நம் அகமொழியை ஊடுருவி அதை உருமாற்றம் செய்கிறது.

தடையற்ற எளிய வாசிப்பு எவ்வண்ணம் இயல்கிறது? ஏற்கனவே ஒரு தடம் உள்ள இடத்தில் நீர்வழிந்தோடுவதுபோல மனம் செயல்படுகிறது. நாம் நம்முள் அமைத்துக்கொண்டிருக்கும் மொழித்தடத்தில் நாம் வாசிக்கும் மொழி அமையுமென்றால் நாம் இயல்பாக அதனூடாக ஒழுகிச்செல்கிறோம். அதுவே சரளமான மொழியோட்டம் என்று சொல்லப்படுகிறது

அன்றாடப் பொதுமொழியில் ஏன் எல்லாவற்றையும் சொல்லமுடியாது? முதன்மையான காரணங்கள் இரண்டு.

கலைச்சொற்கள். பொதுவாக ஒவ்வொரு துறையும் அதற்கான கலைச்சொற்களை உருவாக்கியிருக்கும். உதாரணமாக பிணை என்பது ஒரு சட்டக்கலைச்சொல். அதை பயன்படுத்தினால் சொல்லவந்ததைச் பொருள்மாறுபாடில்லாமல் சுருக்கமாக தெரியவைக்கலாம். அச்சொல் இல்லையென்றால்  ‘ஒருவரை தற்காலிகமாக விடுதலைசெய்வதற்கு உறுதிப்பாடாக அமையும்வகையாக பணமோ அல்லது சொத்தோ அளித்தல்’ என்று விளக்கவேண்டியிருக்கும். ஒவ்வொருமுறையும் அவ்வாறு விளக்கமுடியாது.

அவ்வாறு பலநூறு கலைச் சொற்களால்தான் எந்தச் சிந்தனையும் தொடர்புறுத்தப்படும். துறைசார் மொழிக்கும் பொதுமொழிக்குமான வேறுபாடே கலைச்சொல்தான். கலைச்சொல் உருவாக்கம் வேறுவழியே இல்லாமல் எல்லா அறிதல்களங்களிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நம் அப்பாக்களுக்கு தெரியாத ஆயிரம் கலைச்சொற்களாவது நமக்கு தெரியும்.தாசில்தார் என்பது ஒரு கலைச்சொல். வட்டாட்சியர் என்பது இன்னொரு கலைச்சொல்.

வரையறைகளாலான மொழிநடை. ஒவ்வொரு சொற்றொடரும் ஒரு பொருளை வரையறைசெய்தபடியே பேசிச்செல்வது எல்லா அறிவுத்துறைகளிலும் உண்டு “ஒரு பொருளின் எடை என்பது அந்த பொருளின் மீது ஈர்ப்பின் காரணமாக ஏற்படக்கூடிய விசை” என்பது ஒரு வரையறை. அறிவியல் இவ்வாறு வரையறைகளை அடுக்கியபடியே செல்லும் மொழியில்தான் பேசும்.

நாம் இந்த மொழிக்கு அயலானவர்கள் அல்ல. சைவசித்தாந்தம் இப்படித்தான் பேசிக்கொண்டிருந்தது. “ உப்பானது தண்ணீரில் கரைந்து தன் வடிவத்தை இழந்து தண்ணீரின் வடிவத்தை ஏற்பது போல, இரண்டற்ற பிரம்மவஸ்துவின் (மெய்ப்பொருளின்) வடிவத்தை அடைந்த சீவனின்  வடிவமானது (எண்ணங்கள்/விருத்தி இரண்டுமே) மறைந்துவிடுகிறது. இரண்டற்ற பரபிரம்மம் மட்டுமே பின்னர் எஞ்சுவதாக உணரப்படுகிறது”- இது நமக்கு போலியானது என்று படவில்லை. உழைத்து புரிந்துகொண்டுதான் இருந்தோம் இல்லையா?

ஏன் இந்த தனிமொழி தேவைப்படுகிறது? பொதுமொழி பேசுபவருக்க்கு ஏற்ப மாறுபடுவது. வட்டாரத்தன்மை கொண்டது. சூழலுக்கு ஏற்ப பொருள் கொள்ளப்படுவது. அந்தமொழியில் தத்துவம், சட்டம் போன்ற துறைஞானங்களைப் பேசமுடியாது. அறிவுத்துறைகளில் தெளிவான நிலையான அர்த்தங்களை வகுத்தளித்துப் பேசவேண்டியிருக்கிறது. அதற்கு வரையறைகளாலான மொழிநடை தேவையாகிறது. ஆகவேதான் மொழிக்குள் தனிமொழிகள் உருவாகி வருகின்றன.

மீமொழிகள் இல்லாமல் எவரும் எந்த தளத்திலும் செயல்பட முடியாது. அறிவியலுக்கு தொழில்நுட்பத்திற்கு தனிமொழிகள் உள்ளன. சாதாரண வாழ்க்கையிலேயே கூட ஒரு விவசாயி விவசாயம் அறிந்தவருக்கு தெரிந்த ஒரு தனிமொழியை உருவாக்கிக் கொள்கிறார். ஒரு கொத்தனாரின் தொழில்மொழி, ஒரு மெக்கனிக்கின் தொழில்மொழி நாம் அதை கொஞ்சம் கவனித்துப் பயிலாவிட்டால் பிடிகிடைக்காது.

ஆகவே பேசப்படுவன எல்லாமே நாமறிந்த பொதுமொழியில்தான் இருக்கவேண்டும் என்ற கோரிக்கை அறிவுச்செயல்பாட்டுக்கு எதிரானது என நாம் உணரவேண்டும். ஓர் அறிவுத்துறையை, ஒரு தனி அறிவை கற்க அந்த மீமொழியை படித்தேயாகவேண்டும். அது அறிவுச்செயல்பாட்டில் உலகமெங்கும் உள்ள வழிமுறை

எல்லாவற்றையும் பொதுமொழியில் பேசிவிடலாம் என்றும், பொதுமொழியில் பேசாதவர் மொழியறியாதவர் என்றும், மீமொழியில் பேசுபவர்கள் வேண்டுமென்றே மொழியை திருகி தெரியாத சொற்களைப் போட்டுப்பேசுபவர் என்றும் இங்கே பொதுத்தளத்தில் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பேச்சு மிகமிக அபத்தமானது

இங்கே பொதுமொழி புழங்கும்தளம் என்றால் செய்தி மற்றும் கேளிக்கை ஊடகத்தில்தான். அங்கே அதற்கான பயிற்சியைப் பெற்ற சிலர் எந்த மொழியறிவும் இல்லாமல், புதிய அறிவுமுறைகள் மேல் ஈடுபாடோ மதிப்போ இல்லாமல், அந்த பொதுமொழியைக் கொண்டே ஓர் இலக்கணமுறைமையை உருவாக்கிக்கொண்டு அதை அனைத்து மீமொழிகளின்மீதும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தினர் அறிவுச்செயல்பாடுகளில் பொதுமொழியின் அளவைகளைக்கொண்டு ‘பிழை’ கண்டுபிடிப்பது ,தூயஅறியாமையின் விளைவான நக்கல்களில் ஈடுபடுவது ஆகியவற்றைச் செய்கிறார்கள். நம் சூழலில் அறியாமையில் திளைப்பவர்களே மிகுதி. அவர்கள் இவர்களுடன் சேர்ந்துகொள்கிறார்கள். இது ஒரு சிறந்த சமூகஊடக பாவனையாக மாறியுள்ளது. இந்த சிறுமைக்கு நம்மை நாம் அளிக்கலாகாது

ஆங்கிலத்திலேயேகூட பல நவீனச் சிந்தனைகள் அறிமுகமாகும்போது மிகமிகச் சிக்கலான மொழிநடையில்தான் இருக்கின்றன. எண்பதுகளில் பிரேம் போன்றவர்களால் பின்நவீனத்துவச் சிந்தனைகள் இங்கே அறிமுகமானபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு கட்டுரையை மூன்றுநாட்கள் வாசித்திருக்கிறேன். அந்த மொழிநடை ஓரு மோசடி என நானும் எண்ணியதுண்டு.

மீமொழி பற்றி இங்கே நான் சொல்லும் இந்த தெளிவை நித்யசைதன்ய யதியே அளித்தார். நான் பின்நவீனத்துவ ஆசிரியர்களின் சில கட்டுரைகளை எடுத்துவைத்து வரிவரியாக மொழியாக்கம் செய்து புரிந்துகொண்டேன்.நான்செய்த அந்த மொழியாக்கங்கள் நண்பர்கள் நடுவே கொஞ்சகாலம் கைப்பிரதிகளாகப் புழங்கின.  பின்னர் ஜெர்மானிய தத்துவசிந்தனையாளர் சிலரை வாசித்தபோது அந்த மொழிநடைக்கு இதெல்லாம் எவ்வளவோ மேல் என்ற எண்ணத்தை சென்றடைந்தேன்.

பிரேம் நம் சூழலின் மெய்யான அறிஞன். அவர் சொல்வது எந்தவகையான ஒவ்வாமையை உருவாக்கினாலும்கூட அந்த உண்மை மாறுபடுவதில்லை. அவருடைய மொழிநடையின் சிக்கல்களை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். அந்த மொழிநடையையும் கலைச்சொற்களையும் நகலெடுத்துக்கொண்டு ராஜன் குறை போன்ற போலிகள் அறிஞர்களாக நம் முன் வரும்போது வேறுபடுத்திப்பார்க்கும் கவனமும் நமக்குத்தேவை.

இங்கே பண்பாட்டுத்தளத்தில் அறிவார்ந்த உழைப்புக்கு எதிரான உளநிலை நிலவுகிறது. அதைநோக்கி நாம் அடுத்த தலைமுறையினரை செலுத்திவிடக்கூடாது என்பதனாலேயே இதை எழுதுகிறேன்.

*

ஐயமே இல்லாமல் தமிழில் பிரேம்- ரமேஷ் [பிரேதா-பிரேதன்] ஒரு காலகட்டத்தை தொடங்கிவைத்தனர். தமிழில் பின்நவீனத்துவச் சிந்தனைகளைச் சொல்லமுயன்றனர். அதன் தடைகளை சந்தித்தனர். அதன்விளைவான மொழிச்சிடுக்குகள் அவர்களிடமுண்டு. அச்சிந்தனைகளை தமிழ்விவாதக்களத்திற்குள் செலுத்தும்பொருட்டு அவற்றை அவர்கள் சற்று உருமாற்றியதும் உண்டு.ஆனாலும் அறிவுச்சூழலில் அது ஒரு பெருங்கொடையே

இன்று பிரேம் அவருடைய அந்த அறிவியக்கத்தை அவரே துறந்துவிட்டவராகத் தோன்றுகிறார். அவர் முன்புபேசிய தத்துவச் சிக்கல்களை உதறி மிக எளிமையான அரசியல்கோஷங்களையும் அதுசார்ந்த ஒற்றைப்படை உணர்ச்சிநிலைகளையும் எழுப்பிக்கொண்டிருக்கிறார். அரசியலை முன்வைத்து அறிதலின் நுட்பங்களையும் கலையின் அலைவுகளையும் முரட்டடியாக தாக்கிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருடைய கொடை வரலாற்றில் அவ்வண்ணமேதான் இருக்கும்.

ரமேஷ் இன்றும் ஒவ்வொரு புனைவிலும் சொல்லப்படாத புதிய தளங்களை நோக்கிச் சென்றுகொண்டேதான் இருக்கிறார். அவருடைய உலகம் தமிழ்ச்சமூகவாழ்வுக்கும் பண்பாட்டுக்கும் அப்பால் நிலைகொள்ளும் ஒரு செயற்கை உலகம்போல வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்டது- ஆனால் அதற்குள் அது தமிழ்ப்பண்பாட்டின் சிக்கல்களையே பேசிக்கொண்டிருக்கிறது.பின்நவீனத்துத்தின் உடைத்துச் சிதறடிக்கும் கலைப்பார்வைகொண்டிருந்தவர் அவ்வுடைவுகளினூடாக திரண்டுவரும் ஓர் ஆன்மிகத்தை இன்று சென்றடைந்துகொண்டிருக்கிறார். இன்று உன்னதத்தருணங்கள் [sublime] கொண்ட ஆக்கங்களாக அவை மாறியிருக்கின்றன.

பிரேம் சொல்வது உண்மை, மீபுனைவு பற்றி அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் விஷ்ணுபுரத்தின் வாசிப்புக்கு உதவின. இல்லையென்றால் வேண்டுமென்றே சிக்கலாக்கப்பட்ட ஒரு வரலாற்றுநூல் என்றே அதை வாசித்திருப்பார்கள்.அன்றுமின்றும் ஒரு பெருந்திரள் ஒற்றைப்படையாக ஓர் அரசியல்வாசிப்பையே அதற்கு அளிக்கிறது. ‘அது ஒரு இந்துத்துவப்பிரதிங்க’ என்று கடந்து செல்கிறது.

அப்படிப்பட்ட அசட்டுவாசிப்புகளுக்கு அப்பால் விஷ்ணுபுரம் சென்றமைக்கு பின்நவீனத்துவ அறிமுகம்கொண்ட வாசகர்களே முதன்மைக் காரணம். அவர்களின் உருவாக்கத்தில் பிரேம்- ரமேஷ் இருவரும் உண்டு.விஷ்ணுபுரம் தன்னைத்தானே உடைத்துக்கொள்ளும், எதையும் நிறுவாமல் முன்செல்லும் ஒரு பிரதி என்பதை சில வாசகர்களேனும் வாசித்தமைக்கு அவர்களே காரணம்.

விஷ்ணுபுரம் அறிந்த வரலாற்றுக்கு ஓர் இணைவரலாற்றை புனைந்துகொள்கிறது, வெவ்வேறு கூற்றுக்களின் தொகுப்பாகவும் கூற்றுக்களின் கூற்றாகவும்  அந்த இணைவரலாற்றைப் புனைகிறது, அது புனைவல்ல புனைவாடல்- என்பதை பிரேம்-ரமேஷ் உருவாக்கிய விமர்சனமுறைமையே இங்கே நிறுவியது

அந்த விமர்சனக்கொள்கைகளை பிரேம்-ரமேஷ் முன்வைத்தபோது முதலில் எதிர்ப்புகள் வந்தன, நானும் எதிர்த்து எழுதியிருக்கிறேன். அதுவும் உண்மை. முதலில் சொன்னதுபோல அந்த மொழிச்சிக்கல் ஒரு காரணம். ஒரு புதியசிந்தனை அறிமுகமாகும்போது உருவாகும் சிடுக்குகள் அவை.

அதோடு அவர்கள் முதற்காலகட்டத்தில் ஒருவகையில் அந்தரத்தில் நிற்கும் கருத்துக்களாகவே அவற்றை முன்வைத்தனர். தமிழ்ச்சூழலின் உண்மையான பண்பாட்டுக்கேள்விகளுடன் அச்சிந்தனைகளை இணைத்து அவர்கள் பேசத்தொடங்கியது அடுத்த காலகட்டத்தில்தான்.அதன்பின்னரே அவர்கள் சொல்லவருவதென்ன என்பது தெளிவுபட்டது.

குற்றாலத்தில் பிரேமுடன் நான் நிகழ்த்திய உரையாடல் ஒன்றை நினைவுகூர்கிறேன். சிவன் என்ற உருவகத்தை பின்னாளில் சிவை என்று பெண்பாலாகவும் உருவாக்கிக்கொள்ளவேண்டிய பண்பாட்டுக் காரணம் என்ன என்று அவர் தன்னுடைய புதியசிந்தனை சார்ந்த ஆய்வுக்கருவிகளைக்கொண்டு அன்று விளக்கினார்.

நான் கௌமாரி,இந்திராணி, பிராமி, மகேஸ்வரி என்று அத்தனை தெய்வங்களுக்கும் பெண்வடிவம் இருப்பதைச் சொன்னேன். ஆனால் பிள்ளையாருக்கும், அனுமாருக்கும் பெண்வடிவம் இல்லை என்பதை சுட்டிக்காட்டினேன்.

ஒரே ஒரு குறியீடுகூட தன்னை உடைத்தும் நெளித்தும் தன்னளவில் ஒரு முழு உரையாடலாக ஆவதை பிரேம் விளக்கினார். ‘கூறுதல் என்பது அர்த்தங்களால் ஆடப்படும் ஒரு நடனம்’ என்று அவர் சொன்னவரியை நான் அன்று டைரியில் குறித்துவைத்தேன்.

அந்த உரையாடலே அவர் முன்வைக்கும் சிந்தனைமுறைகள் முன்பிலாத வாயில்களை திறக்கக்கூடியவை என்பதை எனக்குக் காட்டின. அதன் பின்னரே அந்தச் சிந்தனையை முயன்று, உழைத்து கற்றுக்கொள்ளவேண்டும் என்னும் எண்ணத்தை உருவாக்கின. அவர் எனக்குக் கற்பிக்கவும் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்.

அவர்களின்  இருபெர்னார்கள் போல முக்கியமான கதைகள், மணிமேகலை போன்ற முக்கியமான கட்டுரைகள்  நான் நடத்திய சொல்புதிது இதழில் வெளிவந்தன.

அந்த மதிப்பு எந்நிலையிலும் அவர்கள்மேல் எனக்கு உண்டு.நான் ரமேஷ் பிரேதனுக்கு சில உதவிகள் செய்தபோது அதை ஓர் ஆசிரியனுக்கு நான் அளிக்கும் காணிக்கை என்றே கருதினேன்.

எந்தச் சிந்தனையும் உரையாடல்கள் வழியாகவே தெளிவை நோக்கி நகர்கிறது- சொல்லுமிடத்திலும் கேட்குமிடத்திலும்.

ஜெ

முந்தைய கட்டுரைகாசு, ஆ.இரா.வேங்கடாசலபதி-கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு- பெருஞ்செயலும் தடைகளும்