தேர்வு செய்யப்பட்ட சிலர்

பல வருடங்களுக்கு முன் நித்யாவிடம் ஓர் இளம்பெண் வந்து அவளுக்கு கண் தெரியாததைச் சொல்லி வருந்தினாள். நித்யா ஆறுதல் ஒன்றும் சொல்லவில்லை. ‘நாட்டிலே பல லட்சம்பேர் மூளையே இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள். கண் தெரியாததைப்போய் பெரிய பிரச்சினையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே’ என்றார்.

அந்த பெண்ணின் வாழ்க்கையை அந்த வரி மாற்றியது. அந்தப்பெண் இன்று ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். கணிதத்தில் ஆராய்ச்சி செய்கிறார்.

அந்தவரியை நெடுநாள் யோசித்துக்கொண்டிருந்தேன்.  இன்று வேறு விவாதத்துக்காக இங்கே வந்திருந்த ஆனந்த் உன்னத் மற்றும் தனாவுடன் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தேன்.

மானுட இனத்தில் ஏதேனும் ஒரு வகையில் அதன் பண்பாட்டுக்காக, அதன் மேன்மைக்காக ஒரு துளியேனும் பங்களிப்பு கொடுக்கக்கூடிய குறைந்த பட்ச அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள் அரை சதவீதத்துக்கும் கீழேதான். அவர்கள்தான் நாம் காணும் இந்த ஒட்டுமொத்த மானுட பண்பாட்டையே உருவாக்கியவர்கள். மீதிப்பேர் பிறந்து உழைத்து உண்டு குழந்தை பெற்று வளர்த்து மறைபவர்கள். மானுட இனத்தின் தொடர்ச்சியை நீட்டிப்பதைத் தவிர அவர்களுக்கு இயற்கை எந்தப் பொறுப்பையும் அளிக்கவில்லை.

இருபத்தைந்து வருடம் முன்பு நான் ஒருநாள் ஒரு நூலகத்தில் இருந்து வெளியே வந்து  தெருவில் செல்லும் பெரும் கூட்டத்தைப் பார்த்து சட்டென்று மன அதிர்ச்சி அடைந்தேன். அவரில் எவருக்குமே மானுடம் இத்தனை காலம் சேர்த்து வைத்துள்ள ஞானத்தின் துளிகூட தெரியாது.  அவர்கள் எவரும் எதையும் சிந்திப்பவர்கள் அல்ல. இளமையில் அவர்களுக்கு பிறப்பில் தற்செயலாக எது கிடைக்கிறதோ எதை சூழல் அவர்கள் மேல் ஏற்றுகிறதோ அவைதான் அவர்கள். அவர்கள் அடைவதென்று ஏதுமில்லை. பிரம்மாண்டமான ஒரு பரிதாபம் என் தொண்டையை அடைத்தது. உண்மையில் அன்று நான் கண்ணீர் மல்கினேன்.

அந்த வினாவுக்கு பின்னர் நித்யா பதில் சொல்லியிருக்கிறார். ஆமாம் அப்படித்தான். மனிதர்கள் எல்லோரும் சமம் அல்ல. இயற்கையில் சமம் என்ற கருத்துக்கே இடமில்லை. சிலர் பிறவியிலேயே அறிவும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள். அவர்களுக்கு தகுதியும் பொறுப்பும் உண்டு. ஆகவே அவர்கள் தியாகங்கள் செய்தாகவேண்டும். அறிஞர்களும் இலட்சியவாதிகளும் ரத்தமும் கண்ணீரும் சிந்தி உருவாக்கும் பண்பாட்டை சுவைத்து களித்து அதை அறியாமல் அதன் மேல் வாழ்வார்கள் பாமரர்கள். தேனீக்கூட்டை பாதுகாப்பதற்காக, தேன் சேகரிப்பதற்காக உயிர்விடுவதற்கென்றே ஒரு தேனீ பிரிவை இயற்கை உருவாக்கியிருக்கிறது. அவர்களைப்போன்றவர்களே இந்தச் சிறுபான்மையினரும். அவர்கள் ‘விதி சமைப்பவர்கள் ‘ (டெஸ்டினி மேக்கர்ஸ் ) என்றார் நித்யா.

புதிய விஷயம் அல்ல. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்றுதான் நம் மரபும் சொல்லியிருக்கிறது.

அந்த அப்பட்டத்தால் நான் எத்தனை சீண்டப்பட்டேன் என்று இன்று சொல்வது கடினம். நமக்கு பள்ளியில் சொல்லித்தரும் பாடம் அல்ல அது. எல்லோரிடமும் திறமை இருக்கிறது, எல்லோரும் ஏதோ வகையில் முக்கியம்தான். அனைவருமே இறைவனின் பிள்ளைகள்தான்… ஆம், அதெல்லாம் பள்ளிப்பாடங்கள் மட்டுமே. முதிர்ந்த மனங்களுக்கு உரிய  உண்மைகள் அல்ல.

ஆகவேதான் ‘எனக்கு புத்தகம் வாசிக்கவேண்டும் என்றே தோன்றவில்லை, ஏன் நான் வாசிக்கவேண்டும்?’ என்று ஒருவர் கேட்டபோது ‘என்ன வேலைசெய்கிறீர்கள்?’ என்றார் நித்யா. ‘மர ஏற்றுமதி’  என்றார் அவர். ‘அதைச்செய்யுங்கள். உங்கள் அம்மா அதற்காகத்தான் உங்களைப்பெற்றார்’ என்றார். குரூரமான பதில் என்று எனக்கு இப்போதும் தோன்றுகிறது. ஆனால் அது உண்மை.

ஆம், ஒரு நூலை வாசிக்கத்தோன்றும் ஒருவர் இயற்கையால் கோடானுகோடிகளில் இருந்து தேர்வுசெய்யபப்ட்ட அபூர்வமான பிறவி. அவருக்கு ஒரு வரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். தன் சூழலை மாற்றமுடியும். தெரிந்தோ தெரியாமலோ எதிர்காலத்தை மாற்றமுடியும்.

அந்த வரம் பெற்ற ஒருவர் எனக்கு கை ஓடவில்லை, கால் விளங்கவில்லை, காது கேட்கவில்லை என்று சொல்வதில் உள்ளது மிகப்பெரிய அறியாமை. அது அந்த ஆற்றலை அவருக்களித்த பெரும் இயற்கைச்சாரத்துக்குச் செய்யப்படும் ஓர் நுண் அவமதிப்பு . கையில் லட்டு வைத்துக்கொண்டு கீழே கிடக்கும் பூந்தியை பொறுக்க முயலும் சின்னக்குழந்தைகளின் மனநிலை அது.

’அத்வைதம் கோடி ஜென்மஷு’ என்று வேதாந்த வரி. ஒரு நுண் தத்துவத்தை, ஒரு கலைஅழகை உணரும்  உணர்கொம்பு என்பது எந்த உடலுறுப்பை விடவும் மகத்தானது. மிகமிக அபூர்வமானது. பிற கோடானுகோடிகளை விட மேலான இடத்தில் ஒருவனை நிறுத்துவது. அவன் தன்னை ஆக்கிய வல்லமைக்கு என்றென்றும் நன்றிகூறவேண்டியது.

அது ஒரு வாய்ப்பு. தவற விடும் உரிமை நமக்கில்லை. அதற்கு நாம் என்றோ எவரிடமோ கணக்கு சொல்லியாகவேண்டும்.
 

[மறுபிரசுரம் முதல்பிரசுரம் 2011 ]

முந்தைய கட்டுரைஎழுத்தாளர் சந்திப்பு – திருவண்ணாமலையில்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 1