ஒருமலர் வசந்தம்

ஒரு காலத்தில் சினிமாக்களில் ‘காம்பஸ் பாடல்கள்’ நிறைந்து கிடந்தன. அதிலும் இந்தியமொழிகளிலேயே அதிகமாக காம்பஸ் பாடல்கள் மலையாளத்தில்தான் என நினைக்கிறேன்.தமிழில் இப்போது கல்லூரிப்படங்கள் வருவதில்லை. மலையாளத்தில் இப்போதும் ஆண்டுக்கு இரண்டு கல்லூரிப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுக்கொண்டிருக்கின்றன

கல்லூரிகள் அறுபதுகளிலிருந்தே ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுவெளியாக திரண்டுவந்தன. வெளியே இருக்கும் வணிகப்போட்டி, பொருளியல் அடுக்குகள், சமூகக்கட்டுப்பாடுகள், குடும்ப ஆசாரங்கள் ஏதுமில்லாத விடுதலைக்களங்கள் அவை. இளைஞர்களுக்கு மட்டுமே உரியவை. ஆகவே கட்டற்ற கொண்டாட்டமும் கொந்தளிப்பும் உடையவை.

மரபார்ந்த இல்லங்களின் சிறிய கூடுகளிலிருந்து வந்த இளைஞர்களும் இளம்பெண்களும் ஓரிரு ஆண்டுகளில் அங்கே திளைக்கிறார்கள். பின்னர் க்ண்ணீருடன் பெருமூச்சுடன் பிரிந்துசெல்கிறார்கள். வாழ்நாளெல்லாம் அந்நினைவுகளை இனிய வலியாக, துயரமான இனிமையாக சுமந்தலைகிறார்கள்.

கல்லூரிக்காதல் அதற்குள் இன்னொரு மெல்லிய இனிமை. ஓஎன்வி ஒரு பாடலில் எழுதியதுபோல காமநகக்கீறலின் எரியும் சுகம் கொண்டது. அவை பெரும்பாலும் நிறைவேறுவதில்லை.அங்கே அறுதி முடிவெடுக்கும் நிலையில் ஆணோ பெண்ணோ இருப்பதில்லை. இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் அறியாக் காற்றலை ஒன்றில் ஒன்றையொன்று சிறகுரசிப் பறந்து விலகுவது மட்டும்தான் அது

தமிழில் கல்லூரியை ஒரு வன்முறைக் களமாக காட்டிய படம் நந்தா. அதோடு கல்லூரி என்னும் இனியகனவு சினிமாவில் தகர்க்கப்பட்டது, அதை மீண்டும் எழுப்பவே இயலவில்லை. பிந்தைய எல்லா முயற்சிகளுமே தோல்விகள்தான். இன்று தமிழகக் கல்லூரிகளில் மெல்லுணர்வுகள் இல்லை. அவை மிகக்கறாரான பயிற்சிக்களங்கள். அங்கே கொண்டாட்டங்களுக்கெல்லாம் இடமில்லை.

கல்லூரி என்னும் கனவு உச்சத்திலிருந்த காலகட்டத்தில் நான் கல்லூரி மாணவன். ஆனால் என் கனவுகள் மேலும் விரிவானவை, நான் மேலும் பெரிய விடுதலைவெளியில் அதற்கு முன்னரே வாழ்ந்தவன். ஆகவே நான் அக்கனவில் திளைக்கவில்லை. ஆயினும் பின்னாளில் கல்லூரிப்பாடல்களைக் கேட்கையில் அந்த கொண்டாட்டங்களை நினைவுகூர்வேன். என் கல்லூரிக் காலகட்டத்தின் தமிழ்ப்படம் என்றால் ஒருதலைராகம். மலையாளத்தில் ஷாலினி என்றே கூட்டுகாரி

கல்லூரிப்பாடல்களில் ஓர் ஆச்சரியமுண்டு, எப்போதுமே புதுவகை இசைக்கான முயற்சிகள் அவற்றில் நிகழும். ஏனென்றால் அவை இளைஞர்களுக்கானவை என்னும் எண்ணம் இசையமைப்பாளர்களுக்கு உண்டு. ஆகவே ஒரு விந்தைவிளைவு உருவாகும். அரிய ஒலிகளும் மாறுபட்ட இசையமைப்பும் கொண்ட பாடல்கள் கடந்தகால ஏக்கப் பாடல்களின் தொகுப்பில் சென்றுசேர்ந்திருக்கும். சாதாரணமாக அப்படி நிகழவதில்லை. கடந்தகால ஏக்கத் தொகுப்பில் எப்போதுமே மரபான ராகங்களில் அமைந்த மெல்லிசைப் பாடல்களே சென்று சேர்வது வழக்கம்.

நான் காசர்கோட்டில் வசித்த நாட்களில் வந்த கல்லூரிப் படம் யுவஜனோத்சவம். இளைமைத்திருவிழா. [கேரளத்தில் கல்வித்துறை பள்ளிதோறும் நடத்தி, மாநில அளவுக்கு ஒருங்கிணைக்கும் ஒரு மாபெரும் கலைத்திருவிழாவின் பெயர் இது] . இப்படத்தை அன்றைய நண்பர்கள் சேர்ந்துபோய் பார்த்தோம். எல்லாருமே கல்லூரிவிட்டு வந்து நாலைந்து ஆண்டுகளாகிவிட்டிருந்தமையால் கடந்தகால ஏக்கம் நெஞ்சை அடைத்தது. இந்தப்பாடல் நெடுநாட்கள் நாவில் நீடித்தது. இதன் வரிகளுக்காக. ‘ஒரு மலரால் நாம் ஒரு வசந்தத்தை அமைப்போம்

கல்லூரி நாட்கள் ஓவியம்

பாடாம் நமுக்கு பாடாம்
வீண்டுமொரு பிரேம கானம்
பாடிப்பதிஞ்ஞ கானம்
பிராணன் உருகும் கானம்

Let us sing the song of love
Let us play the tune of love
Let us share the pangs of love
Let us wear the thorns of love

ஒரு மலர் கொண்டு நம்மள் ஒரு வசந்தம் தீர்க்கும்
ஒரு திரி கொண்டு நம்மள் ஒரு கார்த்திக தீர்க்கும்
பாலவனம் ஒரு பாற்கடலாய்
அலசார்த்திடும் அனுராகமாம் பூமானத்தின் தாழே
மதுரமாம் நொம்பரத்தின் கதயறியான் போகாம்
மரணத்தில் போலும் மின்னும்
ஸ்மரண தேடிப் போகாம்
ஆர்த்திரம்பும் ஆ நீலிமையில்
அலிஞ்ஞாலெந்தா முகில்பாஷ்பமாய் மறஞ்ஞாலெந்தா தோழா

ஸ்ரீகுமாரன் தம்பி
ரவீந்திரன்

பாடல்- ஸ்ரீகுமாரன் தம்பி

இசை- ரவீந்திரன்

படம் -யுவஜனோத்ஸ்வம் 1986

பாடியவர்கள்– ஏசுதாஸ், எஸ்.பி.சைலஜா

பாடுவோம் நாம் பாடுவோம்
மீண்டுமொரு காதல் பாடல்
பாடிப்பழகிய பாடல் உயிர் உருகும் பாடல்
ஒரு மலரால் நாம் ஒரு வசந்தம் அமைப்போம்
ஒரு திரியால் ஒரு கார்த்திகை சமைப்போம்
பாலைவனம் ஒரு பாற்கடலாகும்
அலைகொள்ளும் காதலென்னும் பூவானத்திற்கு கீழே
இனிய வலியின் கதையறியச் செல்வோம்
சாவின் பொழுதிலும் மின்னும்
நினைவை தேடிச்செல்வோம்
ஆர்ப்பரிக்கும் அந்த நீலப்பெருக்கில்
கரைந்தாலென்ன
முகில்கண்ணீராய் மறைந்தாலென்ன
தோழா?

முந்தைய கட்டுரைசுந்தர ராமசாமி, பிள்ளைகெடுத்தாள்விளை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமனு இறுதியாக…