கதிர்சூடும் புதுநெல்லின் கிசுகிசுப்பு

 

என்னைப்பற்றி எனக்கு ஓர் எண்ணமுண்டு. இரவு பதினொரு மணிவரை நிதானமாக இருப்பேன். அதுவரைக்கும் யதார்த்தவாதத்தின் ரசிகன். கற்பனாவாதம் என்றால் அது யதார்த்தவாதத்தால் ஏந்தப்பட்டு செவ்வியல் உருவம் கொண்டிருக்கவேண்டும். பதினொரு மணிக்குமேல் மனம் இளகிவிடுகிறது. அதன்பின் அதிதூய கற்பனாவாதம்தான்

கற்பனாவாதம் அதன் மிகச்சிறந்த வடிவிலிருப்பது இசைப்பாடல்களில்தான். அழகிய சொற்களால் கோக்கப்பட்ட இசைப்பாடல் மெல்லிசையால் உணர்வூட்டப்படும்போது அது மலரினும் மெல்லிதாகிவிடுகிறது. இறகென புகைச்சுருளென உள்ளத்தின் பெருக்கால் அலைவுறுகிறது. ஒளித்திவலையென கனவுக்கு அப்பால் நின்றிருக்கிறது.

அரிதாகவே செவ்வியல் இசையின் கீர்த்தனைகளில் அக்கனவு உள்ளது- அதை பாடகர்கள் அவர்களின் வித்தையால் வேறொன்றாக ஆக்கிவிடுகிறார்கள். அதிலிருப்பது இசையனுபவம், கவிதையனுபவம் அல்ல. எனக்கு பாடலில் உள்ள மொழியின்இசையே  எப்போதும் முக்கியமானது. ஆகவே சினிமாப்பாடல்கள்.

அதிலும் மலையாளச் சினிமாப்பாடல்கள். கடந்தகால ஏக்கமா என்றால் ஓரளவு ஆம். ஆனால் அறுபதுகள் முதல் இருபதாண்டுகள் மலையாளச் சினிமாப்பாடல்களின் பொற்காலம். நான்கு அசல்கவிஞர்கள் பாடல்களை எழுதினர். வயலார் ராமவர்மா, பி.பாஸ்கரன், ஸ்ரீகுமாரன்தம்பி, ஓ.என்.வி.குறுப்பு. ஓ.என்.வி பின்னர் ஞானபீட விருது பெற்றார்

கற்பனாவாதம் ஓங்கிநின்ற காலம். ஒரு மலரை நடுங்கும் கைகளால் காதலியின் கூந்தலில் சூட்டும் பதின்பருவக் காதலன்போல பாடல்களை இசையில் வைத்தனர். மிகமெல்ல, உள்ளத்தின் விசையே உறுத்துமோ என்பதுபோல. அவர்கள் எவரும் இன்றில்லை

அத்துடன் தாஸேட்டனின் இளங்குரல். கந்தர்வனின் குரல்தான் அது. அக்கால மலையாளப்பாடல்கள் முதன்மையாக கவிதையை, அதன்பின் தாஸின் தெய்வக்குரலை கருத்தில்கொண்டே இசையமைக்கப்பட்டன. தாளமோ, சூழ்ந்திசையோ அவற்றை மறைக்கலாகாதென்று இசையமைப்பாளர்கள் எப்போதுமே கருத்தூன்றினர்

அன்றைய இனிய பாடல்களில் ஒன்று. தாஸின் குரல் புல்நுனிப் பனித்துளியை விரலில் எடுப்பதுபோல கவிதையை தொட்டு எடுத்து முத்தெனக் காட்டுகிறது

கிளி சிலச்சு
கிலுகிலே கைவள சிரிச்சு
களமொழி நின் கையிலொரு
குளிரும்ம வச்சு
கதிர் சூடும் புந்நெல்லின் மர்மரமோ
கரளிலே புளகத்தின் மிருது மந்த்ரமோ
மதுரமொழீ காதோர்த்து நீ நுகர்ந்நு?
இதிலே வா நிலாவே நீ இதிலே வரூ!
இவளே நின் பூக்களால் அலங்கரிக்கூ!
ஒரு சுக நிமிஷத்தின் நறுமணமோ
அதிலூறும் நிர்விருதி தேன் கணமோ
பிரியமொழி நின் ஆத்மாவில் நிறஞ்ஞு நிந்நு?
இதிலே வா தென்னலே இதிலே வரு!
இவளே நின் முத்துகளால் அலங்கரிக்கூ!

ஓ.என்.வி.குறுப்பு

படம் சமஸ்ய 1973

இசை எம்.பி.உதயபானு

பாடல்; ஓ.என்.வி குறுப்பு

கிளி கொஞ்சியது.
கலகலவென கைவளை சிரித்தது
கொஞ்சுமொழியாளே உன் கையில் ஒரு குளிர்முத்தமிட்டது
கதிர்சூடும் புதுநெல்லின் கிசுகிசுப்பையா
இதயச் சிலிர்ப்பின் முணுமுணுப்பையா
இன்மொழியாளே செவிகூர்ந்து நீ ரசித்தாய்?
இவ்வழியே வா நிலவே நீ
இவ்வழியே வருக!
இவளை உன் பூக்களால் அலங்கரிப்பாய்!
ஒரு சுக நிமிடத்தின் நறுமணமா
அதிலூறும் பரவசத்தின் தேன் துளியா
பிரியமொழியாளே உன் ஆத்மாவில் நிறைந்து நின்றது?
இவ்வழியே வா தென்றலே நீ
இவ்வழியே வருக
இவளை உன் முத்துகளால் அலங்கரிப்பாய்!

முந்தைய கட்டுரைமுதற்கனலும் வாழ்வும்
அடுத்த கட்டுரைமுற்போக்கு எழுத்தாளர் சங்கம்- கடிதங்கள்