வெண்முரசு-பண்பாடு,தொன்மம்

ஆசிரியருக்கு வணக்கம்,

வெண்முரசு ஏழு ஆண்டுகள் தொடர்ந்து நீங்கள் எழுதி தினமும் உங்களுடன் தொடர்ந்தோம்.மகாபாரத கதை இதற்கு முன் எப்போதும் நான் கேட்டதோ, படித்ததோ இல்லை. அதனால் ஆரம்பத்தில் ஜெயமோகன் மகாபாரதத்தை மாற்றி சொல்கிறார், கதை மாந்தர்களை திரித்துகூறுகிறார் என சிலர் சொல்லும்போது எனக்கு குழப்பம் ஏதும் இல்லை .

முதல் நாள் முதல்கனலின் முதல் அத்தியாத்தில் தாய் மகனுக்கு கூறும் கதையும் மொழியும் எனக்கு புரியவில்லை.நான் ஏன் மகாபாரதம் படிக்கவேண்டும் எனும் கேள்வி எழுந்தது.ஒரு வாரதிற்குப்பின் மீண்டும் முதல் அத்தியாத்தை படித்தேன் சிலது புரியவில்லைதான் மழைபாடலுக்குள் நுழையும்போது என் மொழியும் அதுவாகிப்போனது . வெண்முரசு எனக்கு தந்தது ஒரு முழு கல்வியை,தமிழ் கற்றேன்,பாரதவர்சத்தின் முழு வரலாறு தெரிந்து கொண்டேன்,தத்துவம் என .

கதைமாந்தர்கள் அனைவரையும் தெரிந்துகொண்டேன்.வெண்முரசு முடிந்துவிட்டது.நான் இப்போதும் வெண்முரசோடு தான்  வாழ்கிறேன்.

கடந்த பத்தாம் தேதி சிங்கப்பூரில் இருந்து பணியில் இணைந்தேன்.இந்த கப்பல் எனது நிறுவனத்திற்கு பராமரிப்புக்கு வழங்கப்பட்டதால் இங்கு பணியிலிருந்த ஜப்பானிய மற்றும் பிலிப்பினோ நாட்டை சார்ந்தவர்கள் அனைவரும் ஒன்றாக இறங்கி செல்ல நாங்கள் இருபத்திமூன்றுபேர்  கப்பலில் இணைந்தோம்.

இந்த பெருநாவாயில்  பாதம்பட்ட முதல் நாழிகையில் பீஷ்ம பிதாமகர் நினைவில் வந்தார்.கப்பலின் இயந்திர அறையில் அனைத்து கருவிகளும் முறையாக அடுக்கப்பட்டு இருந்ததை கண்டபோது .அஸ்தினாபுரியின் அவையில் அம்பையின் தீச்சொல் இருப்பதால் குடிமூத்தோர்  திருதராஷ்டிரன் மற்றும் பாண்டுவுக்கு பெயர்வைக்கும் அவையில் பீஷ்மர் இருப்பதை விரும்பமாட்டார்கள் .சத்யவதி பீஷ்மரை நோக்கி கண்ணசைக்க காட்டுக்குள் செல்லும் பீஷ்மர் பனிரெண்டு ஆண்டுகள் கழித்து வருகையில் அவரது ஆயுத சாலையில் அனைத்துகருவிகளும் தினமும் சுத்தப்படுத்தி அடுக்கி வைத்திருந்ததை நினைவு படுத்தியது .

பத்து நாட்கள் பயணத்திற்குப்பின் பீதர்நாட்டிற்கு வந்து சேர்ந்தோம் இங்குள்ள துறைமுகப்பில் கப்பல்களில் பொருட்களை ஏற்றவும்,இறக்கவும் செய்து கொண்டிருந்தார்கள்  333 நீளமும்,60அகலமும், 40உயரமும் உள்ள  very large crude carrier வகை கப்பலுடன் எனது கப்பலை இணைத்து கட்டியபோது உணர்ந்தேன்.இங்கிருந்ததான் பெரும் நாவாய்கள்,கலங்கள் புறப்பட்டு துவாரகைக்கும்,பாரதவர்சத்தின் வேறு துறைமுக்கப்புகளுக்கும் வந்திருக்கும் என.

நான் இப்போதும் வெண்முரசில் வாழ்கிறேன்.மகாபாரத காலகட்டம் காட்சியாக விரிகிறது.நண்பர்களிடம் சொன்னேன் வெண்முரசு எனும் பெரும்காவியத்தை தந்த ஆசிரியருக்கு நன்றிகடனாக என்ன செய்யஇயலும்.எதுவும் செய்ய முடியாது.பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியவருக்கு உங்களால் இயன்றால் ஏதாவது எழுதி அவருக்கு சமர்பியுங்கள் என .

ஷாகுல் ஹமீது.

***

அன்புள்ள ஷாகுல்ஹமீது

வெண்முரசின் நோக்கம் அதுவே. ஒரு நிலம், அதன் தொல்பண்பாடு என்றும் வாழ்வது, வாழவேண்டியது. மதம் அதன் ஒரு விளைபொருள் மட்டுமே.மதத்திற்கு அப்பால் இருப்பது அதன் பண்பாட்டு முழுமை. மதம்கடந்த அனைவருக்கும் உரியது. பாரதப்பெருநிலம், அதன் மனிதத்திரள், அதன் ஆழ்படிமங்கள் ஆகியவற்றை இன்றைய வாசகனுக்காக காட்டுவதே அதன் இலக்கு. அது நிறைவேறி வருவதில் நிறைவு

ஜெ.

அன்புநிறை ஜெ,

நலமாக இருக்கிறீர்களா?

நீர்க்கோலத்தில் சதகர்ணிகள் குறித்த பகுதியில்
“பரசுராமனால் அனல்குலத்து அந்தணர்கள் என்றாக்கப்பட்டு வத்ஸகுல்மத்தை ஆண்ட வாகடர்கள் முதல் தெற்கே வெண்கல்நாட்டை ஆண்ட பல்லவர்கள் வரை அவர்களுக்கு கப்பம் கட்டினார்கள். “

இதில் வத்ஸமகுல்மம் இன்றைய மகாராஷ்டிரத்தின் வாஷிம் என வாசித்து அறிந்தேன். பின்னர் வெண்கல்நாட்டு அமராவதியை இரண்டாவது தலைநகராக்குகிறார்கள் எனும் குறிப்பும் வருகிறது, எனில் வெண்கல்நாடு என்பது இன்றைய தென் ஆந்திர நிலமா? அது ஏதேனும் காரணப் பெயரா, பண்டைய குறிப்புகளில் அவ்விதம் குறிப்பிடப்படுகிறதா?

மிக்க அன்புடன்,

சுபா

***

அன்புள்ள சுபா

வெண்கல்நாடு என்பது குண்டூர்பகுதி. முதற்கட்டப் பல்லவர்கள் அங்கிருந்தவர்கள். அவர்களின் செப்பேடுகள் அங்குதான் கிடைத்தன. பஹ்லவ என்றால் வெள்ளைக்கல் என்று பொருள். அமராவதி பகுதி வெண்கல்லுக்கு புகழ்பெற்றது. அமராவதி தூபியும் பளிங்காலானது. மகாபாரதத்திலும் பல்லவர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. அன்றைய சதகர்ணிக் கூட்டரசின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

பொதுவாக வெண்முரசில் பண்டைய அரசுகள், நிலங்கள் பற்றிய செய்திகளை தொன்மங்களிலிருந்தே எடுத்திருக்கிறேன். எல்லா தொன்மங்களும் எப்படியோ மகாபாரதத்துடன் அந்தந்த மக்களால் இணைக்கப்பட்டுள்ளன

ஜெ

***

அன்புள்ள ஜெ

நான் ஃப்ரான்ஸிஸ் சேவியர். சமீபத்தில் கமல் அவர்கள் உங்கள் வெண்முரசு நூல் பற்றிச் சொல்லியிருந்ததை பார்த்தேன். நான் இரண்டு ஆண்டுகளாக வெண்முரசு தொடர்நாவலை படித்துக்கொண்டிருக்கிறேன். இப்போதுதான் களிற்றியானைநிரை நாவலை வந்தடைந்திருக்கிறேன். போர் முடிந்தபின் ஒரு ஆறுமாதக்காலம் எதையும் வாசிக்கமுடியவில்லை

இந்நாவல் வழியாகவே நான் மகாபாரதத்தை அணுக்கமாக அறிந்தேன். நான் டிவியில் மகாபாரதம் படித்ததுண்டு. ராஜாஜியின் வியாசர்விருந்து சோவின் மகபாரதம் பேசுகிறது ஆகியவற்றை வாசித்தேன். அவற்றுடன் என்னால் இணைய முடியவில்லை. அவற்றிலிருந்தது ஒரு மதப்பார்வை. அதோடு பழமையை கொண்டாடும் பார்வை. அது எனக்கு ஏற்புடையது அல்ல. அந்தமாதிரியான பார்வைகள் எல்லா மதங்களிலும் உண்டு. அவற்றைத் தாண்டி என்ன என்பதுதான் என்னுடைய கேள்வியாக இருந்தது

முதற்கனல் நாவலை தற்செயலாகவே வாசித்தேன். உடனே இது வேறு என்று தெரிந்துவிட்டது. இரண்டுவகையில் இந்நாவல் முக்கியமானது என்று புரிந்துகொண்டேன். இது இந்தியாவின் நாலாயிரம் ஆண்டு வரலாற்றையும் தொட்டுக்கொண்டு விரிகிறது. இந்தியாவின் நிலப்பகுதியை முழுக்கவே காட்டுகிறது. இந்தியாவின் பண்பாட்டுவரலாறு தொன்மங்களகாவே உள்ளது. ஆகவேதான் இது எல்லா தொன்மங்களையும் தொகுத்துச் சொல்கிறது. இந்தியாவின் நிலப்பகுதியை மிகமிக விரிவாக வர்ணிக்கிறது [ஆனால் வங்கம் மட்டும் வரவேயில்லை]

இந்தத் தொன்மங்கள் எல்லாமே வெவ்வேறு வட்டார மக்கள், வெவ்வேறு குடிகள் உருவாக்கிக்கொண்டவை. அவர்களின் குலக்கதைகள், அறக்கதைகள் போன்றவை. அவற்றை ஒன்றாக தொகுத்துவைக்கும் வெண்முரசு அவற்றை எல்லாமே மறுஆக்கம் செய்கிறது. அவற்றின் உள்ளடக்கத்தை மாற்றவில்லை. அவற்றின் அமைப்பையும் மாற்றவில்லை. அவற்றை கொஞ்சம் கவித்துவமாக விளக்குகிறது. வரலாற்று நிகழ்வுகளுடன் சம்பந்தப்படுத்துகிறது. அதன்வழியாக அவற்றை கற்பனையால் விரித்தெடுக்கும் வாய்ப்பை அளிக்கிறது

உதாரணமாக, தமயந்தியின் கதைக்கும் பாஞ்சாலியின் கதைக்குமான சமானத்தன்மை மாற்றிமாற்றிச் சொல்லப்படுகிறது.பாஞ்சாலி தீயின் மகள் என்று சொல்லப்படும்போது முன்னரே வந்த தபதியின் கதையும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் இங்கே இருந்தாலும் இப்படியெல்லாம் ஒரு பார்வை வந்ததில்லை. பக்திசார்ந்த பௌராணிகப்பார்வையில் இது சாத்தியமும் இல்லை. இதன்வழியாக இந்தத் தொன்மங்கள் எப்படி உருவாகியிருக்கின்றன, எப்படி ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கின்றன என்பது மட்டுமல்லாமல் எப்படி அவற்றை இன்றைய வாழ்க்கைச்சூழலுக்குப் பொருத்திக்கொள்வது என்பதும் வாசகன்முன் வைக்கப்படுகிறது

ஏன் பொருத்திக்கொள்ளவேண்டும் என்றால் இன்றைய வாழ்க்கையிலுள்ள ஆழமான கடந்த உளவியலை transcendental psychologyயையும் உணர்ச்சிகள் உருவாகும் விதத்தையும் புரிந்துகொள்வதற்காகத்தான். எனக்கு வெண்முரசில் மாமலர் பகுதியில் தொடர்ச்சியாக மாலைபோல கட்டப்பட்டிருக்கும் பெண்கதாபாத்திரங்களின் உளவியல் வாசிக்க வாசிக்க தீராததாக உள்ளது

மதநம்பிக்கையை கடந்து இந்தியாவை உணரவைக்கும் நூல்கள் இவை. வாழ்த்துக்கள்

ஃப்ரான்ஸிஸ் சேவியர்

***

அன்புள்ள சேவியர்

நன்றி

பலகாலமாக வெண்முரசை வாசித்த பலரும் இதை விரிவாக எழுதிவிட்டனர். நம் உள்ளம் என்பது சமகாலநிகழ்வுகளால், நம் சொந்த வாழ்க்கையால் ஆனது அல்ல. அது இங்குள்ள கூட்டுள்ளத்தின் ஒரு பகுதி. கூட்டுள்ளம் செயல்படுவது ஆழ்படிமங்கள் வழியாக. அவை மரபில் உறைந்திருக்கின்றன. வெண்முரசு அதைநோக்கிய பயணம்

ஜெ

முந்தைய கட்டுரைஆதவன் தீட்சண்யாவின் வழக்கறிஞர் அறிவிக்கை
அடுத்த கட்டுரைஅசோகமித்திரன் பார்வையில்-கடிதம்