ஒரு லட்சம் புத்தகங்கள்

வணக்கம்
சுஜாதா எழுதிய ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற கதையை பற்றிய தங்களுடைய கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவல்.
அன்புடன்
மு. நாகூர்ப்பிச்சை.

ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா

சுஜாதாவின் வலுவான கதைகளில் ஒன்று. நேரடியான கதை, ஆகவே அதன் தாக்குதலும் நேரடியானது. ஈழப்பிரச்சினையை வைத்து தமிழகத்தில் எப்போதும் நிகழும் பாவலாக்களை, சமரசங்களை, சதுரங்கங்களைக் காட்டுவது.

அகவுணர்ச்சிகளை, உறவுநுட்பங்களைக் கூறும் கதைகள் பூடகமானவையாக இருக்கையில் வாசகன் அதனூடாகச் சென்று தன் அகவுணர்ச்சிகளையும் தன்னுடைய உறவின் நுட்பங்களையும் கண்டடைகிறான்.அங்கே பொருள்மயக்கமே கலைத்தன்மையாகிறது.

ஆனால் சமூக, அரசியல் உண்மைகளைச் சொல்லும் கதைகள் அவ்வண்ணம் பூடகமாக இருக்க முடியாது. அவை சுட்டவிரும்பியதைச் சுட்டாமல் வாசகனுடன் எளிய விளையாட்டை ஆடுவதாக ஆகிவிடும். அங்கே அப்பட்டத்தன்மையே கூர்மையாக மாறுகிறது. எள்ளலும், கசப்பும், சினமும் அத்தகைய கதைகளின் மைய உணர்வுகள். அவை நேரடியாகவே வெளிப்பட முடியும். அங்கே நேரடித்தன்மையே கலை.. புகழ்பெற்ற கிழக்கு ஐரோப்பியக் கதைகள், லத்தீனமேரிக்கக் கதைகள் அத்தகையவை.

சுஜாதாவின் இக்கதை காலம் தாண்டும்போது ஒரு காலகட்ட ஆவணமாக நிலைகொள்கிறது. இன்னொரு பக்கம் அந்த பேசுபொருளைக் கடந்து, என்றுமுள்ள ஒரு மானுடப்பிரச்சினையைச் சுட்டிக்காட்டுகிறது. அதிகாரம் அனைத்து அநீதிகளுக்கும் மேலே இயல்பாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நேற்றைய கலையையும் புரட்சியையும் அது வலுகுறைந்த வைரஸ்களாக ஆக்கி தனக்கான முறிமருந்துகளாக்கிக்கொண்டு இன்றைய கலையையும் புரட்சியையும் வென்றுசெல்கிறது.

சுஜாதாவின் அபாரமான சித்தரிப்புத்திறன் இக்கதையையும் அழகுறச்செய்கிறது.அச்சூழல், அங்கிருக்கும் வெவ்வேறு கதைமாந்தரின் ஒற்றைவரிச்சித்திரங்கள், டாக்டர் நல்லுச்சாமியின் அகம் அதிகாரம் காமம் குடும்பம் என அலைபாயும் விதம், அதிகாரம் ஒன்றுடனொன்று பின்னி ஒரு படலமாக அமைந்திருக்கும் தன்மை, அனைத்துக்கும் மேல் வெற்று அலங்காரமாக இலக்கியம் புழங்குவது அனைத்தும் சொல்லப்பட்டுவிடுகிறது

ஐயமில்லாமல் தமிழின் நல்ல கதைகளில் ஒன்று இது. ஒரு லட்சம் புத்தகங்களை எரித்த வெளிச்சம் இரவெல்லாம் ஒளிவிட்டது என்னும் இடம் இயல்பாக வந்துசெல்லும்போது ஏற்படும் துணுக்குறல்தான் இதை கலையாக்குகிறது

முந்தைய கட்டுரைகதைகளும் கனவும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎரிநீர்