அவதூறுகள்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
அன்புள்ள ஜெ
பிள்ளைகெடுத்தாள் விளை பற்றி எழுதியிருந்தீர்கள். அதைப்பற்றி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எழுதிய குறிப்புகளைப் பார்த்தேன். அவர்கள் பிள்ளைகெடுத்தாள்விளை கதையில் என்ன நடந்தது என்று புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் அந்தக்கதையில் எப்படி தாயம்மாள் அவமதிக்கப்பட்டாரோ அதேதான் டபிள்யூ ஆர் வரதராஜனுக்கும் நடந்தது. அதைச்செய்தவர்கள் இவர்கள். அவமதிப்பு காரணமாக அவர் தற்கொலைசெய்துகொண்டார்
எஸ்.ரங்கராஜ்
மரியாதைக்குரிய ஜெ.மோ அவர்களுக்கு,
வணக்கம். இதற்கு முன் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். நீங்கள் கண்டுகொள்ளவில்லை. வேறு ஒரு கட்டத்தில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். நடக்கவில்லை.
ஆனாலும் கருத்து முரண்பாடுகளுக்கப்பால் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டைத் தெரிவிக்கவும் என் சொந்த angst பரிதவிப்பைத் தெரிவிக்கவும் இக் கடிதம்.
இப்பிரச்சினையில் ஏறத்தாழ முழுமையாகவே உடன்படுகிறேன். அமைப்பு சார்ந்த மார்க்சிஸ்டுகளுக்கு எப்போதுமே சகிப்புத் தன்மை மிகக் குறைவு. உலகில் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஸ்டாலினீயத்தை ஏற்றுக்கொள்கின்றன என்பதே யதார்த்தம்.
(ட்ராட்ஸ்கியக் கட்சிகளைத் தவிர, அவையும் வேறு ஒரு வடிவில் அராஜகத்தை நியாயப்படுத்துபவையே).
தமிழ்ச்செல்வன் சற்று மென்மையாக உங்களை விமர்சிக்கிறார். ஆதவன் தீட்சண்யாவோ கண்களிலிருந்து பொறி பறக்க, உடல் நடுங்க, குமுறுகிறார்.
இதே தமிழ்ச்செல்வன் தான் உ.ரா.வரதராசன் மரணத்தின்போது இப்படிச் செய்து கட்சிக்குக் கெட்ட பெயரை உருவாகிவிட்டீர்களே எனச் சாடியவர். அவருக்கு உ.ராவின் அகால முடிவு, அவரது மனப்புழுக்கம், அவரை அத்தகைய நெருக்கடிக்குத் தள்ளிய கட்சியின் அணுகுமுறை எதுவும் பிரச்சினை இல்லை. தங்கள் கட்சிக்கு அவப்பெயர் உருவாகும் விதத்தில் அவர் நடந்து கொண்டுவிட்டாரே என்ற அங்கலாய்ப்புத்தான்.
Open-minded Marxist என்பதே ஒரு நகைமுரண் என என் நண்பர்கள் பலர் கலாய்த்தாலும், அப்படியும் இருக்கமுடியும் என வாதிடுபவன் நான். பல ஆண்டுகளாக திறந்த மனது வேண்டும், சுய பரிசோதனை வேண்டும் என வற்புறுத்தி அலுத்துப்போனவன். ஓய்வு பெற்ற பத்திரிகையாளன்.
சில ஆண்டுகள் முன் விமர்சனங்கள் அனைத்தையுமே சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மார்க்சீயர்களின் அணுகுமுறை குறித்து நான் எழுதிய பிளாக் சுட்டி
ஸ்டாலினீயப் பூட்டு அனைத்து மார்க்சீயர்களின் வாயையும் கட்டிப்போட்டிருக்கும் நிலையில், என் போன்ற உதிரிகளின் புலம்பலை யார் செவி மடுக்கப்போகின்றனர்?
ஆனால் உங்கள் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். நன்றி.
உங்களுக்கும் பக்கசார்பு, காழ்ப்புணர்ச்சியெல்லாம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆனாலும் பல நேரங்களில் உடன்படமுடிகிறது.
தொடருங்கள் உங்கள் சீரிய பணியை.
த.நா.கோபாலன்
சென்னை
***
அன்புள்ள ஜெ
முற்போக்கு எழுத்தாளர்சங்கம் உங்களை புளித்தமாவு என்று சொல்லி கொண்டாடுவதைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதைப்படித்துக்கொண்டிருந்தபோது என் நண்பன் ‘ஜெமோ சரியா கேட்டிருக்கார். அவனுகளாலே பதிலே சொல்லமுடியாது’ என்றார். நான் சிரித்துக்கொண்டு “நீங்க அவங்களை புரிஞ்சுக்கவே இல்லை” என்றேன்
அதுவேதான் நடந்தது. முற்போக்கு அணியிலுள்ளவர்கள் நீங்கள் சொன்னதை கேலிசெய்கிறார்கள் என்று நீங்கள் முறையிடுவதாகவே எடுத்துக்கொண்டார்கள். “பாத்தியா கெஞ்சுறான்”என்றுதான் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் இருக்கும் உலகமே வேறு. அங்கே இலக்கியம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
சாந்தகுமார்