கல்வி, பொன்னீலன், ஒரு நினைவு- சோ.தர்மன்

பொன்னீலன்

[சோ.தர்மனின் இணையப்பக்கத்தில் இருந்து]

இன்றைய பொழுது எனக்கு சந்தோஷமாக விடிய வில்லை. மனசு சரியில்லை. என்றைக்கும் போல்தான் டீ கடைக்குப் போனேன். தெரிந்த நண்பர்கள் இரண்டு பேர் இன்றைக்கு புதிதாக அங்கே இருந்தார்கள். ஒருவர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இன்னொருவர் தீயணைப்பு துறையில் வேலை பார்ப்பவர்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதின் சாரம் இது.வாத்தியார் சொல்கிறார். “என் மனைவியும் ஆசிரியர்தான். அவருக்கு, 12லட்சம் அரியர்ஸ் பணம் வந்திச்சு .டி.இ.ஓ.ஆபிஸ்ல ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்தால்தான் கையெழுத்து போடுவேன்னு சொல்லிட்டா”

தீயணைப்பு யாரென்று கேட்கிறார்.

ஆசிரியர் அந்த பெண்அதிகாரியின் பெயர்.அவள் கணவனின் பெயர் அவர்களுடைய ஜாதி.அவர்கள் வீடு இருக்கும் இடம் எல்லாம் சொல்கிறார்.  “இப்ப ஆம்பளைகளைவிட பொம்பளைகதான் துணிச்சலா லஞ்சம் வாங்குறா. பயம்ங்கிறதே கிடையாது.கடேசில 80000கொடுத்து முடிச்சேன்.அதுக்குப்பிறகுதான் கையெழுத்து போட்டா”

வரிசையாக சொல்கிறார்.புருஷனும் பொண்டாட்டியும் செஞ்சியிலிருந்து இங்கே மாத்திவர ஏழு லட்சம் கொடுத்த கதை.

அப்படியே பேச்சு நல்லாசிரியர் விருதுபற்றி திரும்புகிறது.

சென்னையில் எக்மோர் அருகில் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு சொந்தமான லாட்ஜ் இருக்கிறதாம் தூத்துக்குடி கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்வி அலுவலர்கள் எத்தனை நாள் தங்கினாலும் பணம் கிடையாதாம்.பில்லும் குடுத்திருவாங்களாம்.அதனால் அந்த ஜாதிக்காரர்களுக்குத்தான் நல்லாசிரியர் விருதாம்.வரிசையாக பெயர்களைச் சொல்லி அவர்களின் ஜாதியைச் சொல்கிறார்.

அப்புறம் இரண்டு வாத்தியார்களின் பெயரைச் சொல்லி தமிழ்ச்செம்மல் விருது வாங்க மந்திரியிடம் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று சொல்லிவிட்டு மாவட்ட கல்வி அலுவலரின் அலுவலகத்தில் நடக்கும் லஞ்ச விவகாரங்களை புட்டுப்புட்டு வைக்கிறார்.

கடைசியாக தீயணைப்பு வீரர் கேட்டார். “உங்களுக்கு யூனியன் இருக்கிறதே அங்க புகார் சொல்லவேண்டியதானே?”.

“இவ்வளவு வேலையும் யூனியன்காரங்களுக்கு தெரிஞ்சுதான் நடக்கு?” என்று சொல்லிவிட்டு அந்தக்கட்சியை திட்டுகிறார்.

எனக்கு தலை சுற்றியது.நான் 1995 க்கு போனேன்.என் நினைவலைகள் ஓடத்தொடங்கின.

கோவில்பட்டி கல்விமாவட்டத்திற்கு எழுத்தாளர் பொன்னீலன் மாவட்ட கல்வி அதிகாரியாக வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.உடனே தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்லிவிட்டு எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

“லட்சுமி மில்ஸ் பங்களா” என்று சொன்னார்.

நான் சொன்னேன். “அது சேட்டுகளும் பெரும்புள்ளிகளும் தங்குகிற இடம் என் வீட்டுக்கு வாருங்கள் .இல்லையென்றால் நம் தோழர்கள் வீட்டில் தங்குங்கள். இல்லை, நம் பார்ட்டி ஆபிசில் தங்குங்கள். அங்கே தங்கியிருப்பது உகந்ததல்ல”

உடனே மறுநிமிஷமே காலி பண்ணி விட்டு தர்மராஜ் என்கிற எல்.ஐ.சி.தோழர்வீட்டில் தங்கினார்.ரெண்டே நாளில் வாடகை வீடு பார்த்து குடியேறினார்.

நேரம் கிடைக்கும் போது அவருடைய ஆபிசில் போய் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பேன்.நிறைய ஆசிரியர்கள் வருவார்கள் போவார்கள்.

ஒருநாள் என் வீட்டுக்கு இரண்டு நபர்கள் வந்தார்கள்.ஒருவர் புகழ்பெற்ற வக்கீல்.இன்னொருவர் இந்த ஊரின் நகராட்சி சேர்மனின் மகன்.என்ன என்று கேட்டேன்.

அந்த சேர்மனின் மகனின் மகன் ,அதாவது பேரன், ஒன்பதாம் வகுப்பில் பெயிலாகிவிட்டானாம். அவனை எப்படியாவது பாஸ் பண்ண வைக்கணுமாம்.அது ஒரு ஜாதிப் பெயரில் இயங்கும் தனியார் பள்ளி.அதே ஜாதிதான் நகராட்சி சேர்மனும்.

நான் சொன்னேன் “உங்கள் சாதியின் பள்ளிக்கூடம்தானே. மேனேஜ்மெண்டைப்பார்த்து பேசவேண்டியதுதானே?”

“ஐயா எல்லாம் பார்த்தாச்சு பரீட்சை பேப்பர் டி.இ.ஓ.ஆபிசுக்கு போயிருச்சாம்.டி.இ.ஓ.ரொம்ப கறாரான ஆளாம்.கம்னியூஸ்ட் கட்சிக்காரராம்.யாரும் கிட்டப் போகமுடியாதாம் ”என்று சொல்லி இரண்டு பத்தாயிரம் ரூபாய் கட்டுக்களை என் மேஜை மேல் வைத்துவிட்டு “நீங்கதான் எப்பிடியாவது முடிக்கணும் .எங்களுக்கு கௌரவப் பிரச்சினை” என்று சொன்னார்கள்.

“டி.இ.ஓ.பொன்னீலன் என் நண்பர்தான்.ஆனா அவர் பணம் வாங்குகிற ஆள்னு தெரிஞ்சா நான் அவர் மூஞ்சியில் முழிக்க மாட்டேன்.நான் பணம் வாங்கிக் கொடுக்கிற புரோக்கர்னு தெரிஞ்சா அவர் என் மூஞ்சியில் முழிக்க மாட்டார்.அதனால் பணத்தை எடுத்திட்டு அரவமில்லாம இடத்தை காலிபண்ணுங்கள்” என்று சொல்லி விரட்டி விட்டேன்.பொன்னீலனிடமும் சொல்லிவிட்டேன்.என் பேரைச் சொல்லி யாரும் வந்தால் எனக்காக எதுவும் செய்யக்கூடாது என்று.

கொஞ்சநாள் கழித்து இன்னொரு வாத்தியார் வந்தார்.தான் செங்கல்பட்டிலிருந்து இங்கே மாற்றலாகி வந்திருப்பதாகவும் மந்திரியின் சிபாரிசில் பணம் கொடுத்து மாற்றல் வாங்கியதாகவும் இந்த கல்வி மாவட்டத்திற்குள் என்னை டி.இ.ஓ.அனுமதிக்க முடியாது என்று சொல்வதாகவும் பணம் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொன்னார்.

என்னைப் பார்க்கச் சொல்லி யார் சொன்னது என்று கேட்டேன்.அவர் சொன்ன முத்தையா என்கிற அலுவலக ஊழியரை கடுமையாகத்திட்டிவிட்டேன்.வாத்தியாரை அனுப்பிவிட்டேன்.

கொஞ்ச நாளிலேயே கோவில்பட்டியில் ஜாதிக்கலவரம் ஆரம்பித்துவிட்டது.ஒருவாரமாக ஊர் சுடுகாடாக கிடக்கிறது.திடீரென்று ஒருநாள் பொன்னீலன் தன் அலுவலக காரில் என் வீட்டுக்கு வந்தார். “தர்மன் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்யணும்.பக்கத்தில் பரிவல்லிக்கோட்டை என்று ஒரு ஊர் இருக்கிறது.அங்கே தலைமையாசிரியராக இருப்பவரை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.வாருங்கள் நாம் இருவரும் இப்போதே போவோம்” என்றார்.

“உங்கள் ஜாதி ஆட்கள் அவரை கொல்லப்போகிறார்களாம்.அவர் கொஞ்சம் ஜாதிவெறி பிடித்த நபர்தான்.லீவும் தரமுடியாது, மாற்றவும் முடியாது. இக்கட்டான நிலையில் நான் இருக்கிறேன்.எப்படியும் அவரை காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு” என்றார்.

எனக்கு அந்த ஊரில் யாரையும் தெரியாது எங்கள் ஜாதியில் பிரபலமான இருவரை கூட்டிக்கொண்டு நாளை போவோம் என்று சொன்னேன்.மறுநாள் காலையிலேயே ஜீப்பில் வந்துவிட்டார்.எங்களுடன் வர சம்மதித்திருந்த வக்கீல் ஒருவருக்கு கோர்ட்டில் முக்கிய வேலையாகையால் சாயங்காலம் போவோம் என்று சொன்னேன்.

சாயங்காலம் வந்தார்.பழைய பொன்னீலனாக இல்லை.முகம் வாடிப்போயிருந்தது.என்னைப் பார்த்தவுடன் சொன்னார்.

“உம்மால் ஒரு உசுரு போச்சு.வாத்தியாரோட தலையை துண்டாக எடுத்திட்டாங்க.காலையில் நம்ம போயிருந்தால் வாத்தியாரை காப்பாத்தியிருக்கலாம்.உம்மால்தான் இந்த உசுரு போச்சு” என்று கண்கலங்கினார்.

ஒரு சக ஊழியரை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சி அவருக்கு.எனக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை.அறிவுபூர்வ சிந்தனையில்லாமல் உணர்ச்சிப் பூர்வமாக சிந்திக்கும் சமூகத்தில் என்னால் என்ன செய்யமுடியும்.ஆனாலும் இப்போதும் உம்மால் தான் அந்த உசுரு போச்சு என்று பொன்னீலனின் கூற்று இன்றும் என்னை பாடாய் படுத்துகிறது.

அப்படியான அதிகாரிகள் இருந்த கல்வி அலுவலகங்கள் இன்று நாற்றமெடுக்கின்றன.யூனியன்கள் வேடிக்கை பார்க்கின்றன.

[சோ.தர்மனின் இணையப்பக்கத்தில் இருந்து]

முந்தைய கட்டுரைகாந்தியம் பேசுவோம்- இணையச் சந்திப்புகள்
அடுத்த கட்டுரைஓர் அமெரிக்கக் குழந்தை