வெண்முரசு,மகாபாரதம்,கமல்- விவாதங்கள்

வெண்முரசு,கமல் ஹாசன்-1

வெண்முரசு,கமல் ஹாசன்-2

அன்புள்ள ஜெ

கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெண்முரசைப் பற்றிச் சொன்னது அரசியல் விவாதமாகியிருக்கிறது.தமிழக அமைச்சர் ஒருவர் அது கமல் இந்துக்களை கவர்வதற்காகச் சொன்ன அரசியல் ஸ்டண்ட் என்று சொல்ல அதை ஆங்கில ஊடகங்கள் அப்படியே சொல்லிச் சொல்லி டிரெண்ட் செய்தார்கள். ஆங்கில செய்தியூடகங்கள் வழியாகத்தான் நான் இதை அறிந்தேன்.

தமிழிலுள்ள செய்தி ஊடகங்கள் இன்றுவரை வெண்முரசு என்ற நாவல்தொடர் எழுதப்படுவதை அறியாமலிருந்தார்கள். இது விவாதமாகிவிட்டதனால் இனி செய்திபோட்டாகவேண்டி வரலாம். தவிர்க்கமுடியாமல் போட்டால் மகாபாரதம் என்றே நிறுத்திக்கொள்வார்கள் என நினைக்கிறேன். அல்லது ஒருநாவல் என்று சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கும் சங்கடம்தான்.

ஆங்கில ஊடகங்களில் செய்திவெளியிடும்போதுகூட ‘கமல்ஹாசனின் ஒரு நண்பர் எழுதிய ஒரு நாவல்’ என்றுதான் செய்தி வெளியிட்டார்கள். ஆசிரியராக உங்கள் பெயர் ஒலித்தது. நாவலின் பெயரோ அதன் சிறப்போ எங்கும் சொல்லப்படவில்லை. ஆச்சரியமாகவே இருந்தது. வருத்தமாகவும் இருந்தது

அர்விந்த் ராஜ்குமார்

Row erupts over Kamal Haasan’s Mahabharat remark in reality show

அன்புள்ள அர்விந்த்,

இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. தமிழ்ச்சூழலில் இதழியலில் இருப்பவர்கள் பெரும்பாலும் இலக்கியம்- அறிவுலகம் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாதவர்கள்.அவர்களுக்கு இலக்கியவாதிகளை தெரிந்திருக்காது. கி.ராஜநாராயணனை கேள்விப்பட்டிராத தமிழக இதழியலாளரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கு வாழ்நாளெல்லாம் ஆய்வுசெய்யும் ஓர் ஆய்வாளனின் பெயர்கூட அறிமுகமிருக்காது.

உண்மையாகவே அவர்கள் வெண்முரசு பற்றியோ என்னைப்பற்றியோ கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு இலக்கியம்- சிந்தனைத்துறை சார்ந்த பயிற்சியும் இருக்காது. ஆகவே எவராவது சொன்னாலோ அல்லது கூகிளில் தேடிக் கண்டடைந்தாலோ கூட இத்தகைய செயல்பாடுகளின் முக்கியத்துவம் தெரிந்திருக்காது. இதற்கு நம் கல்விமுறை, நம் பண்பாட்டுச்சூழல் ஆகியவை முக்கியமான காரணங்கள்

இந்திய ஆங்கில ஊடகங்களில் ஒரு நூலை, ஓர் ஆசிரியரை கொண்டுசென்று சேர்க்க விரிவான தொடர்புகள் தேவை. அதில் பதிப்பாளர்களின் வலை, சாதிவலை என பல வழிமுறைகள் உண்டு. இயல்பாக அவர்கள் இதுவரை எந்த ஆசிரியரையும் நூலையும் கவனித்ததில்லை. இயல்பான மதிப்பீடுகள் நிகழ்ந்ததும் இல்லை.

நீங்கள் சொல்வதுபோலத்தான் தமிழ்ச் சூழல், இந்தியச் சூழல் இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் கமல் ஹாசன் வெண்முரசு பற்றிச் சொல்லியிருப்பது எத்தனை முக்கியத்துவம் கொண்டது என எண்ணிப்பாருங்கள். எதிர்காலத்தில் வெண்முரசு பற்றி பேசப்படும். அன்று அவர் மட்டுமே அதை கவனித்தார், அவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார் என்றே பதிவாகும்

ஜெ

அன்புள்ள ஜெ

கமல் ஹாசன் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெண்முரசு பற்றிப் பேசியதை ஒட்டி நிகழ்ந்த விவாதங்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். கமல் அரசியலுக்காக மகாபாரதத்தைப் புகழ்கிறார், அதன்பொருட்டு வெண்முரசு என்ற ஏதோ ஒரு மகாபாரத நாவலை பாராட்டுகிறார் என்ற வகையில்தான் பொதுவாகச் செய்தியாளர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

என் ஆச்சரியமெல்லாம் மகாபாரதம் பற்றிப் பேசுவதே இந்துத்துவ அரசியல் என்று எப்படி திரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். அதைப்பற்றி பேசுபவர்களை இந்துத்துவர்கள் என்றெல்லாம் சொல்வதன் வழியாக மூவாயிரம் நாலாயிரம் வருடத் தொன்மைகொண்டதும் மக்களின் சிந்தனையில் கலந்துவிட்டதுமான காவியங்களை இந்துத்துவர்களின் சொத்தாக அளிக்கிறோம் என்று ஏன் இவர்களுக்குத் தோன்றவில்லை? இந்துக்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவருக்கும் உரிய பாரம்பரியம் அல்லவா மகாபாரதம்?

எஸ்.கிஷோர்

அன்புள்ள கிஷோர்,

இந்த அபத்தம் ஐம்பதாண்டுகளாக இங்கே நிகழ்கிறது, அதன் விளைவாகவே இன்று இந்துத்துவம் எதிர்ப்பில்லாத ஆதிக்கத்தை அடைந்திருக்கிறது.

இந்த மனநிலை இங்கே வந்த அந்நியர்களால் உருவாக்கப்பட்டது, அறிவுஜீவி என்றால் இந்துப் பாரம்பரியம் பற்றிய எதிர்நிலையையே எடுக்கவேண்டும் என்பது. அது பின்னர் மாற்று மதச்சார்பாளர்கள், மதப்பரப்புநர்களால் வலியுறுத்தப்பட்டது. அந்த எதிர்மனநிலையை மெல்ல மெல்ல கல்விகற்றுவந்த இந்திய நடுத்தரவர்க்கம் கசப்புடன் பார்க்க ஆரம்பித்தது. அதை இந்துத்துவ அரசியல் பயன்படுத்திக்கொண்டது.

ஆனால் இன்னமும்கூட இங்குள்ள மேலோட்டமான பொது அறிவுஜீவிகளுக்கு இந்த விளைவு புரியவில்லை. அவர்கள் படித்தபாடங்களை மாற்றிக்கொள்ளவோ, பழகிய சொற்களை விட்டு விலகவோ முடியவில்லை.

விதிவிலக்கு சஷி தரூர் போன்ற சிலரே. இந்துவாக இருப்பது, இந்தியப் பாரம்பரியம் மீது பற்று கொண்டிருப்பது ஆகியவை இந்த்துவ அரசியலின் பகுதிகள் அல்ல, அவை ஒவ்வொரு இந்துவுக்கும் இந்தியனுக்கும் உரிய உரிமைகள் என அவரே அறிந்திருக்கிறார். இந்துத்துவர்களை விடவும் காங்கிரஸ் இந்தியாவின் மாபெரும் பாரம்பரியத்தின் உரிமையாளர் என உரக்கச் சொல்கிறார் [பார்க்க இருநூல்கள்  Why I Am a Hindu மற்றும் இருந்தியாவின் இருண்ட காலம்

கமல் ஹாசன் தன்னை நாத்திகர் என்று முன்வைப்பவர். வெண்முரசு வெளியீட்டுவிழாவில் அவர் பேசினார். வெண்முரசு நிறைவுக்கு வாழ்த்துரைத்தார். அதைப்பற்றி பொதுமேடையில் சொல்கிறார். இந்த எல்லா உரைகளிலும் திரும்பத்திரும்ப அவர் ஒன்றைச் சொல்கிறார். மகாபாரதத்தை அவர் ஒரு மதநூலாக, ஆசார நூலாக, நெறிநூலாக பார்க்கவில்லை. அவர் அதை ஒரு நம்பிக்கையாளனின் பார்வையில் அணுகவில்லை. அவர் அதை இந்தியாவின் பொதுப்பாரம்பரியத்தின் அடித்தளமாகவே பார்க்கிறார்.

மகாபாரதத்தை கமல் இந்தியாவின் தொன்மங்களின் பெருந்தொகையாக மதிப்பிடுகிறார். அதில் இந்தியாவிலுள்ள அத்தனை மக்களுக்கும், அத்தனை இனக்குழுக்களுக்கும், அத்தனை வட்டாரங்களுக்கும் பங்குண்டு என்று சொல்கிறார். அதில் நாத்திகர்களுக்கும் பண்பாட்டுமூலங்கள் உள்ளன என்கிறார். அவர்கள் அறியவும் ஆராயவும் அதில் செய்திகள் உள்ளன என்கிறார். எல்லா உரையிலும் நாத்திகம் என்னும் சொல்லை அவர் பயன்படுத்துகிறார்.

மகாபாரதத்தை பக்தி நோக்கிலும் வைதிகநோக்கிலும் மட்டுமல்லாமல் பகுத்தறிவுநோக்கிலும் தத்துவநோக்கிலும் வரலாற்றுநோக்கிலும் ஆராயலாம் என்கிறார் கமல். அப்படிப்பட்ட நோக்குகளுக்கு இடமிருப்பதனாலேயே வெண்முரசு தனக்கு முக்கியமானது என்று சொல்லி ஒரு சந்தர்ப்பத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.

மகாபாரதம் இந்தியாவில் இந்து பக்தர்களால் மட்டும் பயிலப்பட்ட நூல் அல்ல. நாத்திகர்களும் இடதுசாரிகளும் விரிவாக அதை ஆராய்ந்திருக்கிறார்கள். அம்பேத்கர், எம்.என்.ராய், டி.டி.கோசாம்பி முதல் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு வரை. அதைப் பற்றிய நாவல்களை எழுதியவர்களில் எம்.டி.வாசுதேவன் நாயர், பி.கே.பாலகிருஷ்ணன் போன்ற இடதுசாரிகளும் நாத்திகர்களுமே மிகுதி.

மகாபாரதம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் பாரம்பரியமாக இங்கே நம் முன்னோர்களால் ஏற்கப்பட்டிருக்கிறது. அதன் சிறப்புகளும் இழிவுகளும் நம்முடையவையே. அதை நிராகரிப்பதல்ல, ஆய்வுபூர்வமாக அணுகுவதே முக்கியமானது. கமல் தனக்கு உவப்பானது அம்பேத்கரின் அணுகுமுறையே என்று சொல்லுவதுண்டு. அவருடையது இந்திய அறிவுச்சூழலில் உள்ள ஒரு மிக வலுவான தரப்பு. எல்லாம் தெரிந்ததுபோல இங்கே பேசிக்கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் இந்த அடிப்படைகளே தெரியாது.

கமல் தெளிவாகவே அவருடைய பார்வை என்ன, அவருடைய தரப்பு என்ன என்பதை சொல்லியிருக்கிறார். எல்லா உரையிலும். அதை புரிந்துகொள்ளும் ஆற்றல் நம் ஊடகச் சூழலுக்கும் அரசியல்சூழலுக்கும் இல்லை. அவர்களுக்கு மேலே சொன்ன அறிஞர்களின் பெயர்கூட தெரிந்திருக்காது. நம் அறிவுமரபில் மேலோட்டமான அறிமுகம்கூட இருக்காது. அவர்கள் அறிந்ததெல்லாம் அன்றாட அரசியலின் எளிமையான கோஷங்கள் மட்டுமே. கமல் அவர்களுக்குப் புரியவைக்க முயன்றுகொண்டே இருக்கிறார்

ஜெ

வெண்முரசு- கமல்ஹாசன் சொல்வது சரியா?

முந்தைய கட்டுரைகாவேரியின் முகப்பில்-3
அடுத்த கட்டுரைகாந்தியம் பேசுவோம்- இணையச் சந்திப்புகள்