தீவிரவாதமும் இலட்சியவாதமும்

ம.க.இ.க-வின் பிளவிற்கும், சரிவிற்கும் காரணம் அரசியல் ரீதியிலான தோல்வியே!

நண்பர் ஒருவர் இந்தக் கட்டுரைச் சுட்டியை அளித்திருந்தார். எனக்கு இந்தக் கட்டுரை ஒருவகையில் அணுக்கமானது. ஓர் ஆவணப்படத்திற்காக இதை எழுதியவர்களில் ஒருவரான சரவணராஜா சில ஆண்டுகளுக்கு முன் என்னைப் பார்க்க வந்திருந்தார். நண்பர் சாம்ராஜுடன் வந்தார் என நினைவு. விடுதியறையில் பேட்டி நடந்துகொண்டிருந்தது.

அவர் என்னிடம் ஒரு விலகலுடனேயே பேட்டி எடுத்தார். கொள்கைமுரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் மெல்ல மெல்ல பேச்சு அவர் மார்க்சிய-லெனினிய அமைப்புகளில் ஈடுபட்டிருந்த காலம் நோக்கிச் சென்றது. தன் அனுபவங்களைச் சொன்னார். நம்பி ஏமாந்ததை, வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில் நின்றதை. நீண்ட உளச்சோர்வு காலங்களை, தற்கொலை எண்ணத்தை. முதலில் மெல்லிய கேலியுடன், பின்னர் ஆழ்ந்த கசப்புடன் பேசிக்கொண்டே சென்றவர் ஒரு கட்டத்தில் சட்டென்று உடைந்து அழத்தொடங்கிவிட்டார்

அவர் அழுவதை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தக்கணத்தில் நான் என்னை எழுத்தாளனாக, அரசியல்நோக்கனாக எண்ணவில்லை. தந்தையாகவே எண்ணினேன். என் மகன் இப்படி வந்தமர்ந்து அழுதால் என்ன செய்வேன்? என் அடிவயிற்றிலிருந்து எழுந்த ஆவேசத்தை வெல்ல மிகவும் முயலவேண்டியிருந்தது.

தன் உணர்ச்சிகள் கைதவறிவிட்டதை உணர்ந்து மீண்டு புன்னகைத்து விடைபெற்று அவர் சென்றபின்னரும் நான் மீளவில்லை. தீவிர இடதுசாரி இயக்கங்களை ஒருவகையான ஆக்கபூர்வமான குழுக்கள் என எண்ணுபவர்கள் உண்டு. அவர்களை உயர்இலட்சியவாதிகள் என்று எண்ணியே அவர்களை எதிர்ப்பவர்கள்கூட கருத்துரைக்கிறார்கள்.

ஆனால் இது சற்று சிக்கலான விஷயம். ஒருவர் ஒன்றை முழுமையாக நம்பி ஏற்று செயல்படுகிறார் என்பதனால் அவர் இலட்சியவாதியா? அவர் நம்பிக்கையாளர்தான். அந்த இலட்சியம் உயர்ந்ததாக இருந்ததென்றால் மட்டுமே அவர் இலட்சியவாதி. பெரும்பாலான மதக்குறுங்குழுக்களில் அதன் உறுப்பினர்கள் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டவர்கள். அதன்பொருட்டு சாகவும் துணிந்தவர்கள். அவர்கள் நம்பிக்கைகொண்டிருப்பதனலேயே இலட்சியவாதிகள் அல்ல.

நாம் நமது அன்றாடத்தில் பலவகையான சமரசங்களுடன் வாழ்கிறோம். உலகியல் கவலைகள் கொண்டிருக்கிறோம். அதன்பொருட்டு குற்றவுணர்ச்சி அடைந்துகொண்டுமிருக்கிறோம். அந்நிலையில் ஒரு நம்பிக்கையின்பொருட்டு வாழ்க்கையை அர்ப்பணித்த ஒருவர் நமக்கு ஆழமான குற்றவுணர்ச்சியை அளிக்கிறார். நமக்கு ஒருவகை கிளர்ச்சியையும் அளிக்கிறார். நாம் அவரை நம்மையறியாமலேயே நம்மைவிட உயர்ந்த இடத்தில் வைக்கிறோம். அவரை கர்மவீரர் என நம்பத் தலைப்படுகிறோம். வழிபாட்டுணர்வு கொள்கிறோம்

மதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள், தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், வன்முறையாளர்கள் சாமானியரிடம் செலுத்தும் செல்வாக்கு இப்படி உருவாவதுதான். முன்னாள் ஈழநண்பர் ஒருவர் ‘போராளி’ என்ற சொல், அவன் தன் உயிரை கொடுக்க தயாரானவன் என்னும் பிம்பம், எப்படி எல்லா அரசியல்சொல்லாடல்களையும் மழுங்கடித்தது என்று ஒருமுறை சொன்னார். வெறும் வீரவழிபாடே அரசியல் நிலைபாட்டுக்கு ஆதாரமாக ஆகியது. தர்க்கபூர்வ அணுகுமுறையையே இல்லாமலாக்கியது. அதற்கு மாபெரும் விலையை கொடுக்க நேர்ந்தது

தீவிரப்போக்கு கொண்ட இயக்கங்களில் உள்ள அர்ப்பணிப்பும் தீவிரமும் இளம் உள்ளங்களை எளிதில் கவர்கின்றன. வாழ்க்கையை ‘அர்த்தபூர்வமாக’ வாழவேண்டும் என்று இளையவர்கள் எண்ணுகிறார்கள். தாங்கள் ‘மற்றவர்களை’ போல அல்ல என்றும் ஒருபடி மேலானவர் என்றும் அவர்கள் அனைவருமே நம்புகிறார்கள்.அத்துடன் இளைமையில் சாகசம் தேவையாகிறது, அன்றாட வாழ்க்கையின் சுழற்சி அலுப்பூட்டுகிறது.சமரசங்கள் கோழைத்தனமாக தோன்றுகின்றன.

ஆகவே இயல்பாக இளைஞர்கள் தீவிரப்போக்கு கொண்ட இயக்கங்களில் சேர்கிறார்கள். தன்னை எதிர்கால வாழ்க்கைக்குத் தயார்படுத்திக் கொள்ளவேண்டிய அகவையில் அவர்கள் அங்கே செல்வது ஒரு மாபெரும் வீணடிப்பு.அப்போது அதெல்லாம் ஒரு பொருட்டாகத் தோன்றுவதில்லை. கண்ணீரோ மன்றாட்டோ குடும்பப்பாசமோ அவர்களை திசைதிருப்புவதில்லை, மாறாக அவர்கள் தங்களை இலட்சியவாதிகள், தியாகிகள் என்று கற்பனை செய்துகொள்ளவே அவை வழிவகுக்கின்றன.

சமீப காலமாக வெவ்வேறு தீவிர இயக்கங்களில் இளம்பெண்கள் ஈடுபடுவது கூடி வருகிறது. ஏனென்றால் இங்கே இளம்பெண்களின் வாழ்க்கை ஆண்களின் வாழ்க்கையை விட சிறியது, ஆகவே சலிப்பூட்டுவது. அவர்களுக்கு இந்த அமைப்புக்களின் வலுவான குழுத்தன்மை ஒரு பாதுகாப்பை, தன்னம்பிக்கையை அளிக்கிறது. குடும்பம் அளிக்கும் கட்டுப்பாடுகளை அவர்களால் உதறமுடிகிறது. அது அவர்களை சுதந்திரமாக உணரச்செய்கிறது. அதே சமயம் சாகசத்தன்மையும் மீறலும் சாத்தியமாகிறது. கொள்கையெல்லாம் பொருட்டே அல்ல; பெண் என்பவள் செய்ய அனுமதிக்கப்படாதவற்றை, பிற பெண்கள் செய்ய முடியாதவற்றை செய்கிறோம் என்னும் மிதப்பே போதுமானதாக இருக்கிறது.

அண்மையில் தீவிர அமைப்புக்களிலிருந்து மீண்டுவந்த பெண்கள் எல்லாருமே ‘சாகசம்’ ‘விடுதலை’ ஆகியவையே தங்களை கவர்ந்தன என்று சொன்னார்கள். அங்கே சென்றபின்னரே அவை வெறும் மாயை என்று தெரிந்தது. சாகசம் என்பது வன்முறை என்றும், விடுதலை என்பது குடும்பத்தின் வளையத்திலிருந்து அமைப்பின் வளையத்திற்குள் செல்வது மட்டுமே என்றும் அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால் அதற்குள் வெளிவரமுடியாதபடி சிக்கிக்கொண்டார்கள். இழக்க அரிதானவற்றை இழந்தனர். வாழ்நாள் முழுக்க நீடிக்கும் வடுக்களைப் பெற்றுக்கொண்டனர்.

இளைஞர்களை ஈர்க்கும்வகையில் பேசுவதற்கு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆழ்ந்த பழக்கம் உண்டு. இளைஞர்களுக்கு அவர்கள் முதலில் அளிப்பது ஒருவகை பொய்யான தன்னம்பிக்கையை. “நீங்கள் ஒருபடி மேலானவர், உங்களுக்கு வரலாற்றில் ஓர் இடம் உண்டு” என்றே அவர்கள் அனைவரிடமும் சொல்கிறார்கள். அந்தச் சொற்றொடர் தூண்டிலின் அழகான இரை. ஒவ்வொரு தீவிர இளைஞனும் ‘வரலாற்றில் நான் நிற்பேன்’ என்றுதான் கற்பனைசெய்துகொள்கிறான். தற்கொலைப்படையினரை இயக்கும் விசையே அதுதான்.

அதன்பின் “செயல்பாடு” “எதிர்ப்பு” என்னும் இரு சொற்கள். அவை இரண்டுமே மிக நுணுக்கமான பொறிகள். செயல்பாடு என்பது இளைஞர்களால் சாகசம் என்று புரிந்துகொள்ளப்படுகிறது. எதிர்ப்பு என்பது அதுவரை தங்களை கட்டுப்படுத்திய அனைத்திலிருந்தும் விடுதலை என்று அவர்களால் கொள்ளப்படுகிறது

இவை எல்லாமே நடைமுறையில் வேறுபொருள் கொண்டவை என உணர அமைப்பில் சிலகாலம் செயல்படவேண்டியிருக்கிறது.செயல்பாடு என்பது ஆணையிட்டதை கேள்வியின்றி செய்யும் அடிமைத்தனம் என்று புரிகிறது. எதிர்ப்பு என்று நினைத்துக்கொண்டது குறிப்பிட்ட சில இலக்குகள்மேல் ஏவிவிடப்படும் உணர்ச்சி மட்டுமே, தன்னியல்பானது அல்ல என்று தெரிகிறது.

இந்தப் பொய்மைகள் உள்ளே சென்ற உடனே தெரியத் தொடங்கும். ஆனால் அதற்கு எதிராகவும் முன்னரே தடுப்புமருந்து அளிக்கப்பட்டிருக்கும். ஆகவே அதெல்லாமே ‘எதிரிகளின் திரிபுப் பிரச்சாரம்’ என்றும் ‘துரோகிகளின் வஞ்சகப்பேச்சு’ என்றும் முதலில் தோன்றும்.  “எந்த புரட்சியாளனையும் பேசிப்பேசியே மனசைக் கரைப்பாங்க தோழர். அதிலே விழாம எதிர்த்து நிக்கத்தான் நாம பழகணும்”

தலைமைமேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அமைப்பின் மேல் விசுவாசமும் ஒரு பெரிய தகுதி என்று கற்பிக்கப்படும். அந்த உறுதிப்பாட்டுக்குச் சோதனைகள் வரும், அதை எந்த அளவுக்கு எதிர்த்து தாக்குப்பிடிக்கிறோமோ அந்த அளவுக்கே செயல்வெற்றி கைகூடும் என்று சொல்லப்படும். ஆகவே கண்முன் தெரிவனவற்றையே மறுக்கவும் மறுவிளக்கம் அளிக்கவும் செய்வார்கள். ‘அப்பாலே போ சாத்தானே’ என்று சொல்லி தன் விசுவாசத்தை காத்துக்கொள்வார்கள்

கடைசியில் பாறையில் மண்டை முட்டிக்கொள்ளும் இறுதி எல்லை வந்துசேரும். கூடுமானவரை விரைவில் அந்த எல்லை வந்தால் அவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். பத்தாண்டுகள் இருபதாண்டுகள் அதில் உழன்றபின் வெளியேறி கைவிடப்பட்டவர்களாக நிற்பவர்கள் உண்டு. அவர்கள் இந்த மாயையின் பலிகள்.

எம்.கோவிந்தன் முன்னர் சொன்னார்.  ‘கல்ட்’ எனப்படும் குறுங்குழுக்கள் அனைத்துக்குமே ஒரே உணர்வுசார்ந்த வரைபடம்தான்.

அ. தான் ஒருபடி மேல் என்னும் மேட்டிமைவாதம் [நான் ஞானி, நான் விடுவிக்கப்பட்டவன், நான் புரட்சியாளன், நான் மதப்போராளி, நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்]. அதிலிருந்து எழும் ஆவேசமான உணர்ச்சிநிலைகள்.

ஆ. அவ்வுணர்ச்சிகளால் கட்டப்பட்ட அமைப்பில் இருக்கும் ஆழ்ந்த நட்புணர்வும் சமத்துவமும் சகோதரத்துவமும். அதைக் கண்டு நெகிழ்தல். அதை ஆழமாகப் பற்றிக்கொள்ளுதல்

இ. மெல்லமெல்ல அதெல்லாமே வெறும் கூட்டுநடிப்பே என்னும் புரிதல் , அதிலிருந்து ஐயமும் ஊசலாட்டமும்

ஈ.அந்த அவநம்பிக்கைக்கு எதிரான நீண்ட போராட்டம். விசுவாசத்தை காத்துக்கொள்வதற்காக மேலும் மேலும் விசுவாசியாக ஆவது. எதிர்த்தரப்புகளை மேலும் மூர்க்கமாக வசைபாடுவது. விலகிச்செல்பவர்களை துரோகிகளாக எண்ணி வெறுப்பது

உ.அத்தனை பாவனைகளுக்கும் அடியிலிருக்கும் ஆணவத்தை கண்ணெதிரே காணும்நிலை வந்து சேர்கிறது. உள்ளிருக்கும் பூசல்களும் மோதல்களும் வெறும் ஆணவத்தால்தான் என உணர்தல். தானும் ஆணவத்தால்தான் உள்ளே வந்தோம் என அறிந்துகொள்வது

ஊ. அந்த அறிதல் உருவாக்கும் சோர்வு, சலிப்பு. மெல்லமெல்ல பொறுமையிழந்து கேள்வி கேட்கவும் முரண்படவும் தொடங்குவது. விளைவாக ஐயத்திற்குரியவராவது. ஒருவரை ஐயத்திற்குரியவராக கருதினாலே குறுங்குழுக்கள் அவரை வெளியே தள்ள ஆரம்பிக்கின்றன

எ .வெளியேற்றம். தோழர்களாலேயே துரோகி என முத்திரை குத்தப்படுதல். தனிமை, அவமானம், ஆழ்ந்த உளச்சோர்வு.

இருட்டறைக்குள் ஒட்டடை நிறைவதுபோல ஜனநாயகம் இல்லாத இடங்களில் தலைமைவழிபாடும் ஆணவப்போக்கும்தான் உருவாகும். தவிர்க்கவே முடியாது. எத்தனை உயர்கொள்கைகளைப் பேசினாலும் எத்தனை தீவிரம் கொண்டிருந்தாலும் ஜனநாயகம் இல்லாத அமைப்பில் வன்முறை திகழும். கருத்துவன்முறையும் பின்னர் நேரடிவன்முறையும்.

இளைஞர்களிடம் அதை மீளமீளச் சொல்லவேண்டியிருக்கிறது. இலட்சியவாதம் வாழ்க்கைக்கு ஒளியூட்டுவது. ஆனால் அது ஐந்து அடிப்படை இயல்புகள் கொண்டிருக்கவேண்டும்

அ.அது ஒருபக்கம் உயர்நிலை கனவாக இருந்தாலும் இன்னொருபக்கம் அன்றாடத்துடன் சம்பந்தப்பட்டிருக்கவேண்டும். அன்றாடம் என்பது சலிப்பூட்டுவது. திரும்பத்திரும்ப நிகழ்வது. ஆனால் அன்றாடத்தில் செல்லுபடியாகும் இலட்சியவாதமே உண்மையானது, பயனளிப்பது. மற்றவை வெறும் கனவுப்பாய்ச்சல்கள்.அறிவார்ந்த தன்புணர்ச்சிகள் அவை. அவை நெடுநாள் நீளமுடியாது

ஆ.மெய்யான இலட்சியவாதம் எதிர்நிலைகொண்டதாக இருக்காது. அதன் அடிப்படை காழ்ப்பும் கசப்புமாக இருக்காது. அதன் செயல்பாட்டில் வெறுப்பும் ஏளனமும் வசைபாடலும் இருக்காது. அதன் சாராம்சம் நம்பிக்கையாகவும், அறத்தின்மேல் கொண்ட உறுதிப்பாடாகவுமே இருக்கும். அது எதிர்ப்பாக ஆகும் சூழல் உண்டு. இலட்சியவாதம் தீமையை எதிர்ப்பதே. அப்போதுகூட அது அறச்சார்பையும் நன்னம்பிக்கையையும் கொண்டதாகவே இருக்கும். காழ்ப்பின், கசப்பின் மொழியில்பேசும் எவரும் இலட்சியவாதிகள் அல்ல, காழ்ப்பாளர் மட்டுமே. அவர் தன் ஆளுமையின் ஏதோ குறைபாட்டை அப்படி நிகர்செய்துகொள்ள முயல்கிறார்

இ.ஓர் இலட்சியவாதச் செயல்பாடு அடிப்படையில் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். அந்த மகிழ்ச்சி இருவகையானது. நாம் ஒன்றை அளிக்கிறோம் என்னும் மகிழ்ச்சி. நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்னும் மகிழ்ச்சி.அந்த மகிழ்ச்சியே வாழ்நாள் முழுக்க செயல்படச் செய்யும். எவ்வகையிலும் அவநம்பிக்கையும் சோர்வும் அடையாமலிருக்கச் செய்யும். எஞ்சுவது நம் ஆளுமைநிறைவே ஒழிய நாம் இதை செய்தோம், இதை மாற்றியமைத்தோம்,இதை சாதித்தோம் என்னும் ஆணவமல்ல என்னும் உணர்வை அளிக்கும்

ஒற்றைவரியில் சொன்னால் மேலும் மேலும் பெருகும் ஆழ்ந்த மகிழ்ச்சியை அளிக்காத எதுவும் சேவையோ கல்வியோ இலட்சியவாதச் செயல்பாடோ அல்ல.

மருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல்

அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு

முந்தைய கட்டுரைமுற்போக்கு மிரட்டல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎடையின்மையின் பெரும்பசி