https://www.facebook.com/maiamtamil.mp/videos/187262529576240
அன்புள்ள ஜெ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அவர்கள் உங்கள் வெண்முரசு நாவல் பற்றிச் சொன்னார். அதை பார்த்துத்தான் நான் உங்கள் நாவல் முயற்சியைப் பற்றி அறிந்துகொண்டேன். நான் தமிழில் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு இன்னும் தமிழில் எழுத வராது. ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும்.
நான் ஓர் இந்து, பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தவன். ஆனால் எனக்கு மதச்சடங்குகள் கடவுள் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை. நான் நவீன அறிவியலை நம்புகிறேன். அறிவியல்பூர்வமான வரலாற்றையும் நம்புகிறேன். எனக்கு தமிழில் சுஜாதா கமல்ஹாசன் ஆகியோர் மீது ஈடுபாடு இருப்பது அதனால்தான்.
அந்த நிகழ்ச்சியில் கமல் மகாபாரதம் நம் முன்னோர்களின் கதை என்று சொன்னார். மகாபாரதம் நம் முன்னோர்களின் கதை என்று எப்படிச் சொல்லமுடியும் என்று இணையத்தில் பலர் எழுதியிருந்தார்கள். அவர்களில் அறிவியல் நோக்கு இல்லாத சாதாரணமானவர்களின் கூச்சல்களே மிகுதி. அவர்கள் பெரும்பாலும் கட்சிக்காரர்கள். அவர்கள் இன்னொருவகையான மதநம்பிக்கையாளர்கள். அவர்களை நான் பொருட்படுத்தவில்லை.
ஆனால் எனக்கு உண்மையிலேயே மகாபாரதம் எப்படி நமது முன்னோர்களின் கதையாக ஆகும் என்ற சந்தேகம் உண்டு. அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள், அதாவது பெண்ணை வைத்துச் சூதாடுவது போன்றவை நம்முடைய பாரம்பரியம் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மகாபாரதத்திற்கும் தமிழகத்திற்கும் சம்பந்தமுண்டா?
அர்விந்த் மகாதேவன்
அன்புள்ள அர்விந்த்,
உங்கள் கடிதம், உங்கள் பின்னணியுடன் யோசிக்கையில் புன்னகையை உருவாக்குகிறது. ஏன் வெண்முரசை எழுதவேண்டும் என்ற கேள்விக்கான விடை உங்கள் ஐயம்தான்.
முதலில் ஒரு விளக்கத்துடன் தொடங்குகிறேன். உங்கள் மரபு என எதை நீங்கள் கருதுகிறீர்கள்? சங்கத்தமிழ் மரபையா? அப்படியென்றால் எரிபரந்தெடுத்தல் உங்களுக்கு ஏற்புடையதா? தமிழ்நாட்டுக்குள்ளேயே ‘எதிரி’ நிலத்திற்குள் புகுந்து வீடுகளை எரித்து, விளைநிலங்களில் யானைகளை விட்டு அழித்து, நீர்நிலைகளை சிதைத்து, பெண்களின் தாலிகளை அறுத்து மலைபோல குவித்துவிட்டு வந்த மன்னர்களைப் பற்றித்தானே சங்க இலக்கியங்கள் பாடுகின்றன?
பரத்தமை பற்றித்தானே சங்க இலக்கியம் பெரிதும் பேசுகிறது? ஆண் பரத்தையுடன் களியாடி வரும்வரை பெண் பொறுத்திருக்கவேண்டும் என்கிறது இல்லையா? இன்றைய பார்வையில் சங்ககாலத் தலைவன் என்பவன் ஒரு பாலியல்பொறுக்கி மட்டும்தானே? கணவனின் ஊதாரித்தனத்தை, பெண்பொறுக்கித்தனத்தை ஒரு வார்த்தையால் கூட கண்டிக்காத கண்ணகி ஒரு இல்லற அடிமை மட்டும்தானே? நான் சொல்லவில்லை, இதையெல்லாம் ஈ.வே.ரா சொல்லியிருக்கிறார். அது உங்கள் பாரம்பரியமா? அதைத்தான் தலைக்கொள்கிறீர்களா?
இல்லை அல்லவா? புறவாழ்விலும் அகவாழ்விலும் நாம் மரபை அப்படியே பின்பற்றவில்லை. விமர்சனரீதியாகவே அணுகுகிறோம். கொள்வன கொண்டு அல்லன விலக்குகிறோம், இல்லையா? அதை ஏன் மகாபாரதத்திற்கும் செய்யக்கூடாது? எந்த மரபையும் அப்படித்தான் அணுகவேண்டும். அது சென்றகால வாழ்க்கை. அதில் உள்ள வரலாற்றுச் செய்திகளும் அவை முன்வைக்கும் விழுமியங்களும் நம் ஆய்வறிவுக்கு உரியவை மட்டுமே.
நம் மரபு உருவான களம், அது திரண்டுவந்த விதம் ஆகியவற்றை நாம் அறிவியல்நோக்கில் விருப்பு வெறுப்பில்லாமல் பார்க்கவேண்டும். வீண் பெருமிதம் என்பது அசட்டுத்தனம். ஒட்டுமொத்த நிராகரிப்பு என்பது கண்ணைமூடி உலகை இருட்டாக எண்ணிக்கொள்ளுதல். நடுநிலையான புறவயமான பார்வையே நமக்குத் தேவை. அதை எல்லா மரபுகளுக்கும் அளியுங்கள்.
அடுத்த வினா, மகாபாரதம் தமிழர்களுடையதா என்பது. மகாபாரதம் இந்தியநிலத்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுநிகழ்வு. பின்னர் அது பாணரும் கவிஞரும் பாடிப்பாடி பெருகி காவியமாக உருவாகி வந்தது. அவ்வாறு அந்த காவியம் உருவாகி வந்ததில் இந்தியாவின் எல்லா நிலப்பகுதிக்கும் இணையான பங்களிப்பு உண்டு. மகாபாரதம் நாம் வரலாறு என எப்போது உணரத் தொடங்குகிறோமோ அப்போதே இந்தியா முழுக்க அனைவருக்கும் உரியதாக இருந்திருக்கிறது.
சங்க இலக்கியத்தின் தொடக்க காலகட்டத்திலேயே மகாபாரதம் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. வடவரின் கதையாக அவை குறிப்பிடப்படவில்லை. மக்களிடையே புழங்கும் கதை ஆனதனால் இயல்பாக உதாரணம் காட்டப்படுகின்றன. இடங்களை மகாபாரதத்துடன் அடையாளப்படுத்துவது, நிகழ்வுகளுக்கு மகாபாரத உதாரணம் சொல்வது, அரசர்களை மகாபாரத போருடன் இணைத்துப் பெருமைசொல்வது போன்றவை புறநாநூற்றுக் காலத்துக்கு முன்னரே தொடங்கிவிட்டவை
தமிழ்மரபில் நாம் அறியும் மிகமிகத் தொன்மையான அரசனே மகாபாரதத்துடன் தொடர்புபடுத்தித்தான் கூறப்படுகிறான். சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடிய பாடல் இது.
அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்.
சங்க இலக்கியம் முழுக்க ராமாயணம் மகாபாரதம் சார்ந்த குறிப்புகளை காணலாம். ஏறத்தாழ மேலே சொன்ன வரிகளையே பெரும்பாணாற்றுப்படையில்
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல
என்று காண்கிறோம். காண்டவ வனம் எரித்தது, பாண்டவர் காட்டில் அலைந்தது, சூரியனின் மகனாகிய கர்ணன் பற்றிய குறிப்புகளெல்லாம் சங்கப்பாடல்களில் உள்ளன.
மகாபாரதம் மிகத்தொல்காலத்திலேயே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. சின்னமனூர் செப்பேடு பாண்டியனை பற்றிச் சொல்லும்போது ‘மகாபாரதம் தமிழ்ப் படுத்தும், மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என புகழ்பாடுகிறது. சங்கப்பாடல்களுக்கு பாயிரம் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்படுகிறார். இந்நூல்கள் கிடைக்கவில்லை. பெருந்தேவனாரின் நூலில் சில மேற்கோள் செய்யுட்களே எஞ்சியிருக்கின்றன. பதிமூன்றாம் நூற்றாண்டில் அருள்நிலை விசாகன் என்பவர் பாரதத்தைத் தமிழ்ப்படுத்தினார் என திருவாலங்காட்டுச் செப்பேடு குறிப்பிடுகிறது. அதன் பின்னர், பதினைந்தாம் நூற்றாண்டில் வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதம் முழுமையான நூலாக உள்ளது. மகாபாரத சம்ஸ்கிருத வடிவுக்கே பல பாடவடிவங்கள் உள்ளன. தென்னகத்துப் பாடம் என்று ஒன்று உள்ளது
இந்தியாவிலுள்ள எல்லா பகுதிகளிலும் செவ்வியல் கலைகளிலும் நாட்டார்கலைகளிலும் மகாபாரதமே மையமான பேசுபொருள். தமிழக நாட்டார் கலையான தெருக்கூத்து பெரும்பாலும் மகாபாரதக் கதைகளை நடிப்பது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான சாதிகள் மகாபாரதத்தில் இருந்து ஒரு நீட்சியை உருவாக்கிக் கொள்கின்றன.
மகாபாரதக் கதைகள் பின்னாளில் தனிக்காவியங்களாக உருவாயின. தமிழிலும் நளவெண்பா போன்ற காவியங்கள் உள்ளன. அனைத்துக்கும் மேலாக நம் அன்றாட வாழ்க்கையில் மகாபாரதம் அனைவர் பேச்சிலும் திகழ்வதாகவே இன்றும் உள்ளது. ஒவ்வொன்றுக்கும் நாம் மகாபாரத உதாரணங்களை சாதாரணமாகவே கையாள்கிறோம். மு.கருணாநிதி அவர்களை அர்ஜுனனாகவும் வீரபாண்டி ஆறுமுகத்தை தேரோட்டியான கண்ணனாகவும் சித்தரித்த மாபெரும் ஓவியத்தட்டிகளை பார்த்திருக்கிறேன்.
ஆக நாம் தமிழ்ப்பண்பாடு என எப்போது ஒன்றை தொட்டு எடுக்க ஆரம்பிக்கிறோமோ அப்போதே இப்பண்பாட்டின் பகுதியாக இருக்கும் மகாபாரதம் எப்படி தமிழ்ப்பண்பாட்டின் கூறு அல்லாமல் ஆகும்? எப்படி நம் முன்னோர்களின் கதை அல்லாமலாகும்? நம் முன்னோர் அதை தங்கள் கதை என நினைத்தனர், ஆகவே அது நம் முன்னோர்களின் கதைதான். நம் முன்னோர்களை நாம் இன்று அமர்ந்துகொண்டு மாற்றியமைக்க முடியாது. எது அவர்களின் மரபோ அதுதான் நம் மரபு. நமக்கேற்ப வெட்டி தொகுத்துக்கொள்ளப்பட்ட கடந்தகாலம் அல்ல நம்முடைய மரபு.
மகாபாரதம் நமக்கு மட்டும் மரபல்ல. பர்மா, இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, இந்தொனேசியா என கீழைநாடுகள் பலவற்றுக்கும் அதுவே தொல்மரபு. அங்கெல்லாம் மகாபாரதத்தின் சிற்பச்சித்தரிப்புகள் உள்ளன. மகாபாரதம் அவர்களின் கலைகளை ஊடுருவியிருக்கிறது. இந்தியாவில் இஸ்லாமியப் பண்பாட்டிலும்கூட மகாபாரதச் செல்வாக்கு உண்டு. பீர்முகமது அப்பா போன்ற பல சூஃபிகளின் பாடல்களில் மகாபாரதக் குறிப்புகள் உண்டு. மறைந்த ஓவியர் எம்.எஃப்.ஹூசெய்ன் மகாபாரதம் தனக்கும் பாரம்பரிய சொத்து என்று சொல்கிறார்.
தமிழகத்தில் ராமாயணம் மகாபாரதம் போன்றவற்றில் செய்குத்தம்பி பாவலர், எம்.எம்.இஸ்மாயீல் போன்றவர்கள் பேரறிஞர்களாகத் திகழ்ந்துள்ளனர். கேரளத்தில் வெட்டம் மாணி, ராவ்பகதூர் செறியான் போன்ற கிறித்தவர்கள் எம்.எம்.பஷீர் போன்ற இஸ்லாமியர்கள் மகாபாரத ராமாயண பேரறிஞர்கள். அவர்களுக்கும் அது பாரம்பரியச் செல்வம்தான்.
மகாபாரதம் பற்றிய அறியாமை சென்ற ஐம்பதாண்டுகளில் படித்த ஒருவட்டத்திடம் உருவாக்கப்பட்டுள்ளது. திரிபுகளும் உருவாகியிருக்கின்றன. அந்தப் புலத்தில் இருந்தே இக்கேள்விகள் வருகின்றன. சிலவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள், மகாபாரதம் ‘ஒரு கதை’ அல்ல. பல ஆயிரம் கதைகளின் தொகுதி. அதில் இந்தியப்பெருநிலத்தின் அனைத்து மக்களின் கதைகளும் உள்ளன. ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் கதைகளை அதில் கண்டடையமுடியும்.
மகாபாரதம் பிராமணர்களின் ஷத்ரியர்களின் கதை மட்டும் அல்ல. அது யாதவர்களின், நாகர்களின், மச்சர்களின் இன்னும் பலநூறு தொல்குடிகளின் வம்சகதையும்கூட. எல்லா கதைகளுக்கும் அதுவே மூலம். எல்லா கதைகளையும் ஈராயிரம் ஆண்டுகளாக அதில் சேர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆகவே அது ஒரு மாபெரும் கலைக்களஞ்சியம்.
மகாபாரதத்தில் இருந்து ஒருசாரார் ஒரு கொள்கையை உருவாக்கிக்கொண்டால் இன்னொரு சாரார் இன்னொரு கொள்கையை உருவாக்கிக் கொள்ளலாம். ஒருவர் ஒரு வரலாற்றை கண்டடைந்தால் இன்னொருவர் இன்னொரு வரலாற்றை கண்டடையலாம். ஆகவேதான் காளிதாசன் முதல் கம்யூனிஸ்டு கட்சியினரான அருணன் வரை மகாபாரதத்தை வெவ்வேறு கோணத்தில் எழுதுகிறார்கள். அது மரபின் மீதான மாறுபட்ட கோணங்களிலான அணுகுமுறை.
இந்தியாவில் அவ்வாறு மகாபாரத மறு ஆக்கங்கள் என சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. இன்று எல்லா மொழிகளிலும் நவீன ஆக்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஏன் அவ்வாறு வருகின்றன என்று மட்டும் பாருங்கள், நீங்கள் மறுத்தாலும் அதுதான் உங்கள் பாரம்பரியம் என தெரியவரும்
வெண்முரசு மகாபாரதத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தை முன்வைப்பது அல்ல. ஏதேனும் ஒரு கருத்தை வலியுறுத்துவதுமல்ல. அதன் அடிப்படைநோக்கு வேதாந்தம் சார்ந்தது. அது என் பார்வை. ஆனால் மகாபாரதத்தில் உள்ள எல்லா தரப்பையும் பேசவைத்து, எல்லா வரலாற்றையும் விரித்துரைத்து முன்வைக்கும் ஒரு மாபெரும் ஆக்கம் அது. ஒரு குரல்கூட தவிர்க்கப்படவில்லை. ஆகவேதான் அது மூல மகாபாரதத்தைவிட மூன்று மடங்கு பெரிதாக உள்ளது
வாசித்துப்பாருங்கள், அது ஏன் எழுதப்பட்டுள்ளது என்பது உங்களுக்கே தெரியும்.
ஜெ