பிள்ளைகெடுத்தாள் விளை -சுந்தர ராமசாமியின் பிற்போக்குப் பார்வையா?

கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு

அவதூறுகள்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

சுந்தர ராமசாமி 

அன்புள்ள ஜெ

பிள்ளைகெடுத்தாள்விளை கதையையும் அதைப்பற்றிய விவாதங்களையும் வாசித்தேன். சுந்தர ராமசாமியின் சாதியநோக்கு அதில் வெளிப்பட்டிருப்பதாகவே என் வாசிப்புக்குத் தோன்றியது. அது அடித்தள மக்களின் எழுச்சியை கொச்சைப்படுத்தும் கதை என்று நினைக்கிறேன்

எம்.பாஸ்கர்

அன்புள்ள பாஸ்கர்,

ஒரு கடிதத்தை இரண்டாகப் பிரித்திருக்கிறேன். என் பதில்சொல்லும் வசதிக்காக. இது இரண்டாம் பகுதி. [முதற்பகுதி –சுந்தர ராமசாமி பிராமண மேட்டிமைநோக்கு கொண்டவரா?]

பிள்ளைகெடுத்தாள் விளை கதை சார்ந்து அன்று நிகழ்ந்த விவாதங்கள் நூலாக வந்துள்ளன. ஒரு தரப்பு இந்த இணைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது- கதையும் உள்ளது. [பிள்ளைகெடுத்தாள்விளை கதையும் விவாதங்களும்] இது நிகழ்ந்தபோது சுருக்கமாக என் தரப்பை எழுதியிருந்தேன். இந்த விவாதத்துக்கே அத்தனை மதிப்புதான் என்பதே என் எண்ணமாக இருந்தது. இன்று இதைப்பேசுவது நம் வாசிப்பின் கோணல்களைச் சொல்வதற்காக மட்டுமே.

பிள்ளைகெடுத்தாள்விளை சுந்தர ராமசாமியின் நல்ல கதைகளில் ஒன்று அல்ல. அவர் உளம்தோயாமல் எழுதிய கதை. வடிவப்பிழையும், செய்திப்பிழைகளும் கொண்டது.அதோடு வழக்கத்துக்கு மாறாக மிகப்பழைய ஒரு மொழிநடையில், மிகமிக குறைவான நுண்தகவல்களுடன் எழுதியிருக்கிறார். இவ்விவாதமே அதன்மேலான குற்றச்சாட்டுக்களைப் பற்றி மட்டும்தான். அக்கதையின் பேசுபொருள் சுந்தர ராமசாமியின் ஒட்டுமொத்தப் பார்வையால் ஆழமாக உள்ளது, அதற்கேற்ற கலைவடிவை அது அடையவில்லை.

எந்த இலக்கியவாசகருக்கும் தெரியும் ஒன்று உண்டு, அந்தக்கதை சுந்தர ராமசாமி ஏற்கனவே எழுதிய ‘திரைகள் ஆயிரம்’ என்னும் கதையின் இன்னொரு வடிவம்தான்.மிக முக்கியமான கதை அது. இந்த இரு கதைகளின் கரு அவருக்குள் ஆழமாக பதிந்துபோன ஒரு பார்வை. அதை ‘அறியமுடியாமையின் வசீகரம்’ என்று சொல்லலாம்.

அவர் அடிக்கடிச் சொல்லும் ஒன்று உண்டு, முச்சந்தியில் ஒரு தகராறு நிகழ்கிறது, அரைமணிநேரம் கழித்து அங்கே சென்று அந்த தகராறை பார்த்தவர்கள், பங்கெடுத்தவர்களிடம் கேட்டு ஒருவரால் என்ன நடந்தது என்று கண்டறியவே முடியாது.நூறுபேரிடம் கேட்டால் இருநூறு கருத்துக்கள் வரும். ஆளுக்கொரு பார்வை, கூடவே கூட்டாக இருக்கையில் ஒவ்வொருவரும் இன்னொரு பார்வையையும் முன்வைப்பார்கள்.

புறவயத்தன்மை என்பது சமூக உளவியலில் அறவே இல்லை என்பதே சுந்தர ராமசாமியின் எண்ணம். நிகழ்வுகள்தான் புறவயமானவையே ஒழிய அவற்றுக்குரிய காரணங்கள், அவற்றைப் பற்றிய பதிவுகள் எல்லாமே அகவயமானவை மட்டுமே. அவற்றில் இருந்து அனைவருக்கும் பொதுவான ஒரு புறவயமான உண்மையை எடுக்கவே முடியாது. மிக எளிய தகவலுண்மையைக்கூட எடுத்துவிடமுடியாது.

ஆகவே சுந்தர ராமசாமி சமூகவியல், நாட்டாரியல் ஆகியவற்றை முழுமையாகவே நிராகரித்தார். அவருடைய மிக அணுக்கமான நண்பர் நாட்டாரியலாளரான அ.கா.பெருமாள். அவருடைய எந்த ஆய்வையும் சுந்தர ராமசாமி ஏற்றுக்கொண்டதில்லை.அன்றைய மார்க்சியர்கள் பலரின் எண்ணம்தான் அது. அவர்கள் மார்க்சியரான நா.வானமாமலையின் நாட்டாரியலாய்வை ஒரு பொருளற்ற செயலாகவே பார்த்தனர்.

மக்கள் சொல்லும் வாய்மொழித்தரவு என்பது தரவே அல்ல, கணந்தோறும் மாறுவதும் சொல்பவரின் மனச்சிக்கலை ஏற்றிக்கொண்டதுமான ஒரு வெளிப்பாடு மட்டுமே, அதன் உண்மையை அறியவே முடியாது என்பதே சுந்தர ராமசாமியின் எண்ணம்.அது ஒரு செவ்வியல் மார்க்ஸியப் பார்வையும்கூட.

இதைப்பற்றி விரிவாகவே நான் அவருடன் பேசியிருக்கிறேன். என் எண்ணம் அவ்வாறல்ல, நான் நாட்டாரியல்பார்வையில் நம்பிக்கை கொண்டவன். செவ்வியலில் ஏடுகள் மாற்றி எழுதப்படும், நாட்டாரியல் பதிவுகள் வளருமே ஒழிய மாறுபடுவதில்லை என நினைப்பவன். நாட்டாரியல் அழகியலை என்னுடைய படுகை, மண், மாடன்மோட்சம் போன்ற தொடக்ககாலக் கதைகள் தமிழ் இலக்கியச் சூழலுக்குள் கொண்டுவந்தன. அவற்றை அன்றைய பல மூத்த எழுத்தாளர்கள் பாராட்டினர். சுந்தர ராமசாமி அவற்றை உறுதியாக நிராகரித்தார்.

நாட்டார் அழகியல் என்பது நவீன இலக்கியத்தின் புறவயத்தன்மை, நவீனத்தன்மைக்கு எதிரானது என்று சுந்தர ராமசாமி சொன்னார். நாட்டாரியல் அணுகுமுறை என்பது தத்துவநோக்குக்கு மாறாக வெறும் தொல்படிமங்களை முன்வைப்பது என்றும், அறிவுநோக்குக்கு எதிராக நம்பிக்கையையும் பழங்காலத்து ஆசாரங்களையும் முன்வைப்பது என்றும் வாதிட்டார்.ஏறத்தாழ இதே பார்வையை பிரமிளும் கொண்டிருந்தார்.இது அறிவுத்தளத்தில் ஒரு பொதுப்புரிதல். தொண்ணூறுகளுக்குப் பின்னரே அதில் உடைவு உருவானது. அ.கா.பெருமாள் போன்றவர்கள் அதன்பின்னரே கவனிக்கப்பட்டனர்.

சுந்தர ராமசாமி Decomposition of the present என்ற ஒரு கருத்தைச் சொன்னதை நினைவுறுகிறேன். அதை இப்படி விளக்கலாம்.சமகாலம் என்பது உடனே இறந்தகாலம் ஆகிவிடுகிறது. அக்கணமே மட்க ஆரம்பிக்கிறது. மட்கும் பொருளுக்கு என்ன நிகழ்கிறது? பறவைகள், சிற்றுயிர்கள்,சிதல்கள், பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் ஆகியவை அதன் மேல் பரவி தங்களுக்குரியதை எடுத்துக்கொள்கின்றன. மண்ணில் அது உப்பாக பரவி மறைந்துவிடுகிறது.

மட்கி மறைந்த ஒன்றை மண்ணிலிருந்து மீட்கமுடியாது. அது மண்ணில்தான் உள்ளது, ஆனால் வேறுவேறு வடிவில் உள்ளது. மண்ணின் விசைகள் அதை வெவ்வேறு ரசாயனங்களாக உடைத்துவிட்டன. சமகாலமும் அதேபோல மட்கி பலவேறு தரப்புகளாக, கருத்துக்களாக, உளப்பதிவுகளாக, தொன்மங்களாக, கதைகளாக மாறி சமூகத்தில் கரைந்திருக்கும். அதை மீண்டும் திரட்டி எடுக்கவே முடியாது.

சுந்தர ராமசாமி வரலாற்று எழுத்தேகூட புறவயமானதாக இருக்கமுடியாது என்று நம்பினார். வரலாற்றாசிரியர்கள் தங்கள் கருத்துநிலைபாடுகள் மற்றும் பார்வைக்கோணங்களுக்கு உட்பட வரலாற்றுச்செய்திகளை தேடி அடைந்து தொகுத்து அளிப்பதே வரலாறு. அது மட்கிமறைந்த காலத்தின் சில கூறுகளைக் கொண்டு கற்பனையால் உருவாக்கப்பட்டது. புறவயமான, திட்டவட்டமான வரலாறு என்பது இருக்கவே முடியாது என்றார்.

சுந்தர ராமசாமி வரலாறு குறித்து எதுவுமே எழுதியதில்லை.வரலாறு குறித்து ஆர்வமே காட்டியதில்லை. அவருடைய புனைவில்கூட வரலாற்றின் தடம் இருப்பதில்லை. இந்த  ‘வரலாறின்மை’ அவருடைய ஒரு தத்துவநிலைபாடு. அவரை நவீனத்துவராக ஆக்கிய அம்சங்களில் ஒன்று. அது ஏற்புக்குரியதா இல்லையா என்பது இன்னொரு பேசுபொருள், ஆனால் அது அவருடைய தலைமுறையின் மிகச்சிறந்த உள்ளங்கள் பலவற்றின் நிலைபாடு.

புளியமரத்தின் கதையை எடுத்துப் பாருங்கள். அவர் அதில் சென்றகால வரலாறு என்று சொல்வது தாமோதர ஆசான் சொல்லும் ‘கதை’யைத்தான். மற்றதெல்லாம் கதைசொல்லி நேரில்கண்டவை. தாமோதர ஆசான் பெரும்பாலும் பொய்சொல்பவர் என்று ஆசிரியரே சொல்கிறார். அவர் இறுதியில் ஒரு மோசடிக்காரராக பிடிபட்டு மறைந்த செய்தியும் சொல்லப்படுகிறது.

நான் வரலாற்றில் ஆர்வம்கொண்டவன், வரலாற்றை பயில்பவன், வாழ்க்கை முழுக்க வரலாற்றுத் தடங்களை தேடி பயணம் செய்துகொண்டே இருப்பவன். வரலாற்றை எழுதவும் மறுஆக்கம் செய்யவும் முயல்பவன். ஆகவே சுந்தர ராமசாமியின் பார்வையை மறுப்பவன், ஆனால் அவருடைய அந்தப் பார்வை மிக முக்கியமான தத்துவ நிலைபாடு, அது என்றுமிருக்கும் என்றே நினைக்கிறேன்.

திரைகள் ஆயிரம் கதைபோலவே பிள்ளைகெடுத்தாள் விளை கதையிலும் ஒரு வாழ்க்கைநிகழ்வு வேறொருவரால் சொல்லப்பட்டு ,மீண்டும் சொல்லப்படுகிறது. ஒரு நிகழ்வு சொல்பவருடைய பார்வைக்கேற்ப மாறி வரலாறாகிறது.வரலாறு என்பதே அத்தகைய நம்பகமின்மை கொண்டதுதான். தாயம்மாளின் வரலாறு இக்கதையில் இல்லை. அவளைப்பற்றி ஊரில் கேட்டறிந்ததை தங்கக்கண் சொல்வது ஆசிரியரால் மீண்டும் சொல்லப்படுகிறது.

தாயம்மாளைப் பற்றிய ஊரின் உளப்பதிவு என்ன, அது ஏன் அவ்வண்ணம் அமைந்தது என்பது ஒரு கேள்வி. தங்கக்கண்ணில் அந்தக்கதை ஏன் அவ்வண்ணம் வெளிப்படுகிறது என்பது அடுத்த கேள்வி. ஒரு சென்றகால நிகழ்வை எப்படியெல்லாம் சமூகமனம் கட்டமைத்துக்கொள்கிறது, எப்படி கைமாற்றம் செய்கிறது என்பது அடுத்த கேள்வி. சுந்தர ராமசாமியை பொறுத்தவரை ஊடுருவிச் சென்று உண்மையில் தாயம்மாவுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறியவே முடியாது.

ஆனால் திரைகள் ஆயிரம் கதையில் சமூகப்பதிவுகளில் உள்ல அந்த ’அறியமுடியாமை’யை மட்டுமே சொன்ன சுந்தர ராமசாமி இக்கதையில் அறியத்தக்க ஒரு கூறை தெளிவாகவே விட்டுவைக்கிறார்.அது தாயம்மாள் மீதான ஒடுக்குமுறை. கதை தாயம்மாளை ஓர் இலட்சியவாதத்தின் ஒளியில் காட்டுகிறது. எழுந்து வரும் அடித்தளத்துப் பெண். கல்வி கற்றவள், கற்பிப்பவள். தன் சமூகத்தையும் முன்னெடுப்பவள். அச்சமூகம் அவளை கொண்டாடுகிறது, முன்னிறுத்துகிறது.

ஆனால் என்ன ஆகிறது? திடீரென்று அவளை அந்த மக்கள் கீழேபோட்டு மிதிக்கிறார்கள். அடித்து துரத்துகிறார்கள். அவள் மறைந்துபோய் மீண்டுவந்து பொருளில்லா வாழ்வு வாழ்ந்து மறைகிறாள். அவளை அடித்து துரத்தியதற்கு அம்மக்கள் ஒரு காரணம் சொல்கிறார்கள், அதை தங்கக்கண் சொல்கிறான். அவள் தன்னிடம் பயின்ற நான்காம் வகுப்பு மாணவனுடன் பாலியல் அத்துமீறல் கொண்டாள் என்றும் அதனால்தான் அவளை தாக்கி துரத்தியதாகவும் சொல்கிறார்கள்.

அது உண்மை என்று அக்கதை சொல்லவில்லை.அவ்வண்ணம் நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளைக்கூட கதை அளிக்கவில்லை.அரைநூற்றாண்டுக்குப்பின் அம்மக்கள் அவளை துரத்தியமைக்கு அந்தக் காரணத்தைச் சொல்கிறார்கள், கதை சொல்லும் தங்கக்கண் அதைச் சொல்கிறான். அவனும் அதை ஆணித்தரமாக முன்வைக்கவில்லை.அப்படிச் சொல்கிறார்கள் என்று மட்டுமே சொல்கிறான். பிள்ளைகெடுத்தாள் விளை கதை சொல்வது அவ்வளவுதான்.

அந்தக்கதையில் ஊரார் சொன்னதாக  தங்கக்கண் சொல்வதை கதையாசிரியர் சுந்தர ராமசாமி சொல்வதாக எடுத்துக்கொண்டு, அடித்தளத்துப் பெண் கல்வி கற்று ஆசிரியை ஆனால் ஒழுக்கம்பிறழ்வாள் என்று இக்கதை சொல்கிறது என்று பொருள்கொண்டு ,ஒரு கும்பல் கூச்சலிட்டது. அதுவே ஓர் அரசியல்கூச்சலாக மாற்றப்பட்டு சுந்தர ராமசாமி இழிவுசெய்யப்பட்டார்.

முதலில், அப்படி ஒரு அசட்டுக் கருத்தை நேரடியாக முன்வைக்கும் கதையை சுந்தர ராமசாமியைப் போன்ற ஒரு நவீன ஆசிரியன் எழுதுவானா என்றுகூட அவர்களால் எண்ணமுடிவதில்லை. சுந்தர ராமசாமி சாதிவெறியராகவே இருந்தாலும்கூட அப்படி அப்பட்டமாக தன்னை வெளிப்படுத்தும் அளவுக்கு அவர் அசடாக இருப்பாரா என்றுகூட யோசிக்கவில்லை. அவர்கள் தங்கள் அறிவுத்தரத்திலேயே அத்தனைபேரும் இருப்பார்கள் என நினைக்கிறார்கள். அவர்கள் வாசித்ததெல்லாமே தினமலர் வாரமலரில் வரும் கதைகளைத்தான் என்றால் எவர் என்ன செய்யமுடியும்?

இந்தவகையான  ‘வாசிப்பு வன்முறை’ புதுமைப்பித்தனுக்கு நிகழ்ந்தது, சுந்தர ராமசாமிக்கு நிகழ்ந்தது, என்மேல் நிகழ்ந்தது,இன்று மலேசியாவின் நவீன் மேல் நிகழ்கிறது- இந்த கசப்புக்கு ஆளாகாமல் தப்பிய விதிவிலக்கான நல்ல படைப்பாளி எவருமே இல்லை. தமிழில் நவீன இலக்கியம் எழுதுபவன்மேல் விடப்பட்ட சாபம் இது. இன்னும் தலைமுறைகளை இது துரத்திச் செல்லும்.

இங்கே இலக்கியவாசிப்புக்கு எதிரான பெரும்தடை இந்த மொண்ணை வாசிப்பு. இலக்கிய அறிமுகம் கொள்ளும் ஒரு வாசகன் முதலில் செவிகொள்வது இந்த மொண்ணைவாசிப்பை. அவனுக்கு சரியான வழிகாட்டல் அமைந்து, அல்லது தன் இயல்பான நுண்ணுணர்வால் அவன் இந்த மொண்ணை வாசிப்பை கடந்தாலொழிய அவனுக்கு இலக்கிய உலகில் நுழைவு இயல்வது அல்ல. அவன் இந்த மொண்ணைகள் உருவாக்கும் களிம்பை தன் வாசிப்பிலிருந்து விலக்க மேலும் பல ஆண்டுகளாகும்.

இன்னொரு பக்கம் எழுத்தாளர் இந்த மொண்ணைவாசிப்புக்கு எதிர்வினையாற்றாமல் இருக்கமுடியாது. சுந்தர ராமசாமி விளக்கமளிக்காமல் அமைதிகாத்தார்- விளக்கமளிக்கலாகாது என்னும் கொள்கை அவருடையது. விளைவாக அவர் மீதான மொண்ணைவாசிப்பு நீடிக்கிறது. நான் விளக்கமளிப்பேன், ஒரு சிலரையாவது இன்னொரு பக்கத்தை பார்க்கச்செய்வேன்.பொதுவெளியில் மொண்ணைகளிடம் மொண்ணை வாசிப்பே நீடித்தாலும் நுண்ணுணர்வுகொண்டவர்கள் என்னை தேடிவருவார்கள்.

ஆனால் இதன் விளைவு என்னவென்றால் நம மொண்ணைகளிடம் விவாதிக்கநேர்கிறது. மொண்ணைகளிடம் விவாதிக்கும்தோறும் நாம் நம் கூர்மையை இழக்கிறோம். சூழலின் பொதுவிவாதமே மொண்ணையாக ஆகிவிடுகிறது. ஒரு புனைவு உருவாக்கும் ஆழமான சமூக உசாவல்கள், உளநுண்மைகள், தத்துவத்தளங்களுக்கு பதிலாக அன்றாட அரசியலின் எளிய கட்சிநிலைகளே மீண்டும் மீண்டும் பேசப்பட வழியமைகிறது. அரசியல் சரிநிலைகளே சலிக்கச்சலிக்க விவாதிக்கப்படுகின்றன.

இது களைபோல, எந்த விளைபயிரும் எழாமல் சூழலை மூடிவிடுகிறது. தமிழ்ச்சூழலின் மிகப்பெரிய தீங்கு இந்த மொண்ணைகளின் அரசியல் கூச்சல்.இலக்கியத்தில் இதுவும் ஒரு தரப்புதான்,இருந்துவிட்டுப் போகட்டும் என்று ஜனநாயகபூர்வமாக நினைப்பவர்கள் மிகப்பெரிய தீங்கையே செய்கிறார்கள். இந்த தரப்பினரின் உச்சகட்ட காழ்ப்பும் வன்முறையும் இவர்களின் விசையை கூட்டுகிறது.இவர்களுக்கு இருக்கும் அமைப்புபலம் இவர்களை பார்த்தீனியம்போல சூழலில் பரவச்செய்கிறது. குறைந்தது இந்த கிருமிகளைப் பற்றிய விழிப்புணர்வாவது வாசகனுக்குத் தேவை

பிள்ளைகெடுத்தாள் விளை குறித்த அணுக்கவாசிப்பு அதை ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்கு எதிராக அவர்களிடமே இருக்கும் நுண்ணிய விசை ஒன்றை சுட்டிக்காட்டுவதாகவே காட்டும். மக்கள் தனியாக இருக்கையில் இருக்கும் அறம் அவர்கள் திரளாக ஆகும்போது இல்லாமலாகிறதா? திரளாக ஆகும்போதுமனிதர்கள் இயல்பாக எதிர்மறைமனநிலை கொண்டவர்களாகவும் வன்முறையில் திளைப்பவர்களாகவும் மாற்கிறார்களா? மனிதத்திரள் மரபான நம்பிக்கைகளையும் அடிப்படையான விலங்கு மனநிலைகளையும்தான் வெளிப்படுத்துமா?

திரளாக மனிதர்கள் செய்யும் அநீதிகளை தனிமனிதர்கள் மனசாட்சிப்பிரச்சினை இல்லாமல் கடந்துசெல்ல முடிகிறதா? நூறுபேர் சேர்ந்து ஒரு அப்பாவியை அடித்துக்கொன்றால் எவருக்கும் எந்த குற்றவுணர்வும் இருக்காது. அனைவரும் சேர்ந்து ஒரு காரணத்தை உருவாக்கிக்கொள்ளலாம், அனைவரும் சேர்ந்து பேசிப்பேசி அதை தங்களுக்கே நிறுவுக்கொள்ளலாம்.

அதை ஒரு தொன்மமாக ஆக்கினால் எளிதாக கடந்துசெல்லலாம். அது வரலாற்றில் ஒரு பெயராக, ஒரு தொன்மமாக அங்கே கிடக்கும். பிற்காலத்தில் அதற்கு வேறொரு விளக்கத்தை அளிக்கலாம். நம் சிறுதெய்வங்களில் பெரும்பகுதி இப்படிப்பட்டவை அல்லவா?

பிள்ளைகெடுத்தாள்விளை பேசுவது அதைத்தான். ஏதோ ஒரு புரளியை நம்பி தங்களில் இருந்து எழுந்த தங்களுக்கு விடுதலையும் வழிகாட்டியுமான ஒருத்தியை தாக்குகிறார்கள். அதை நியாயப்படுத்த ஒரு பழியை உருவாக்கி அதை தொன்மக்கதையாக ஆக்கி இயல்பாக வரலாற்றில் பதிவுசெய்துவிட்டு கடந்துசெல்கிறார்கள். அதை சுரணையில்லா வரலாறாய்வாளன் அப்படியே அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறான்.

Wilhelm Reich

மார்க்சிய நோக்கு கொண்ட உளவியலாளரான வில்ஹெல்ம் ரீய்ஹ் எழுதிய ஃபாசிசத்தின் பெருந்திரள் உளவியல்[Wilhelm Reich  The Mass Psychology of Fascism] எண்பதுகளில் கேரளத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்ட நூல். குறிப்பாக மார்க்சிய அறிஞரும் பேச்சாளருமான எம்.என்.விஜயன் அதைப்பற்றி விரிவாகவே பேசியிருக்கிறார். சுந்தர ராமசாமியை பெரிதும் பாதித்த நூல் அது. என்னிடமும் அதன் செல்வாக்கு உண்டு.

பெருந்திரளாக மனிதர்கள் கொள்ளும் மூர்க்கத்தை புரிந்துகொள்ள அந்நூல் மிகவும் உதவுவது. குறிப்பாக மதம், சாதி சார்ந்து உருவாகும் கலவரங்களில் மனிதர்களின் நடத்தையை வரையறைசெய்ய முயலும் உளவியலாய்வு அது. தனிமனிதர்களாக தாங்கள் ஆழமாக நம்பாத விஷயங்களைக்கூட பெருந்திரளாக ஆகும்போது நம்பி உச்சகட்ட வன்முறையை சென்றடைய மனிதர்களால் முடியும் என அந்நூல் கூறுகிறது.

எண்பதுகளில் குமரிமாவட்டம் மதக்கலவரங்களின் களம். சரிஅத் சட்டத்துக்கு எதிரான இஸ்லாமியரின் கலவரம், ராமஜன்மபூமி- பாபர் மசூதி பூசல், ஈழக்கலவரம் என சிந்திப்பவர் அனைவரும் பெருந்திரளின் உணர்வுகளை ஆழமாக கவனித்த காலகட்டம் அது. இந்நூல் உருவாக்கும் புரிதலை கலைசார்ந்து ஆழமாகச் சித்தரித்த ஒரு கதையை சுந்தர ராமசாமி எழுதியிருக்கிறார்.  ‘கொந்தளிப்பு’ என்னும் கதை. அது பெருந்திரள் கொள்ளும் புரிந்துகொள்ளமுடியாத தற்கொலை மனநிலையின் சித்தரிப்பு.

நான் சுந்தர ராமசாமியை அவருடைய கதைகளை ஒட்டுமொத்தமாக கருத்தில்கொண்டே வாசிப்பேன். நுண்ணிய தளங்களை முழுமையாக கருத்தில்கொள்வேன். இது என் வாசிப்பு, ஒரு நவீனத்துவ ஆக்கங்கள் என்பதனால் மேலும் மேலும் வாசிப்புக்கான இடம் அவருடைய ஆக்கங்களில் உண்டு.அதற்கான நெகிழ்வுடனேயே அவர் எழுதியிருக்கிறார்.

ஆனால் ஒரு கதையை எப்படி வேண்டுமென்றாலும் வாசிக்கலாமா? எத்தனை பூடகமாக, வெறும் நிகழ்வுகளாகச் சொல்லப்பட்டிருந்தாலும் ஆசிரியர் கொடுக்கும் குறிப்புகள் முக்கியமானவை, அவற்றைக் கடந்து ஒரு படைப்பை தன்போக்கில் வாசிக்க வாசகனுக்கு உரிமை இல்லை. வாசிக்கலாம், ஆனால் அவன் பெறுவது அந்தக்கதையை அல்ல.

கதாபாத்திரங்களின் இயல்புகள், சூழலின் செய்திகள், நிகழ்ச்சிகளின் அடுக்குகள், மொழியாட்சி என வாசகன் கவனிக்கவேண்டியவை பல உண்டு.ஆசிரியர் அறிந்து அளித்திருக்கும் குறிப்புகளுக்குச் சமானமாகவே ஆசிரியர் அறியாமலேயே அளித்திருக்கும் நுண்ணிய உட்குறிப்புகளும் முக்கியமானவை..

இவற்றை வாசகன் தன் நேர்மையான நுண்ணுணர்வால், கற்பனையால் கண்டறியவேண்டுமே ஒழிய ஆசிரியனைப் பற்றிய முன்கணிப்புடன், ஆசிரியனை குற்றவாளியாக்கி புலன்விசாரணை செய்யலாகாது. அப்படிச் செய்தால் வாசகன் விரும்புவதையே எந்த இலக்கிய ஆக்கமும் அளிக்கும். இலக்கிய ஆக்கத்தின் இயல்பு அத்தகையது.

இவ்வாறு புனைவு அளிக்கும் அத்தனை குறிப்புகளையும் கருத்தில்கொண்டு வாசிப்பதையே அமெரிக்க இலக்கியவிமர்சன மரபு அல்லது புதுத்திறனாய்வு மரபு  [New Criticism]என்கிறோம்.இதிலுள்ள ஒரே சிக்கல் தடுக்கில் பாயும் வேகத்தில் கோலத்திலும் பாய்ந்துவிடக்கூடாது என்பதுதான்

ஒரு புளியமரத்தின் கதை நாவலில் வரலாற்றைச் சொல்பவர் தாமோதர ஆசான். அவர் நேர்மையற்றவர், சாதிநோக்கு கொண்டவர் என்ற குறிப்பை ஆசிரியர் அளிக்கிறார். ஆகவே அவருடைய சித்தரிப்பு ‘நேர்மையற்ற’ வரலாறு என அந்நாவல் சொல்கிறது என்பதை அதை வாசிப்பவர்கள் கருத்தில்கொள்ளாமலிருக்கவே முடியாது.

அதைப்போல பிள்ளைகெடுத்தாள்விளையில் கதைசொல்லும் தங்கக்கண் ‘நேர்மையற்ற கதைசொல்லி’ என்று சுந்தர ராமசாமி கதையிலேயே உணர்த்திவிடுகிறார். ஓர் எள்ளலுடன் மட்டுமே தங்கக்கண்ணின் சவடால் கதைசொல்லியால் முன்வைக்கப்படுகிறது. சு.ராவின் பார்வையில் எல்லா வரலாற்றாசிரியர்களுமே நேர்மையற்ற கதைசொல்லிகள்தான்.

இந்தக்கதையின் கட்டமைப்பை வாசகன் கூர்ந்து பார்க்கலாம். தாயம்மாவின் பாலியல்நடத்தை பற்றி கதை சொல்லவே இல்லை. அந்தக்குற்றச்சாட்டு அவ்வூர்க்காரர்கள் முன்வைத்ததாக தங்கக்கண் சொல்வது மட்டுமே. அந்த குற்றச்சாட்டைக் கேட்டதுமே அவர்கள் திரண்டுவந்து தாயம்மாவை தாக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவள் சொல்வதென்ன என்றுகூட கேட்கவில்லை; அவளுக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை

அந்த தாக்குதலைப்ப்பற்றிய கதைகேட்கும் சமகாலத்தவரின் உளப்பதிவு என்ன? அவள் ஜாக்கெட்டை கிழிக்ப்பதைச் சொல்லும்போது-

பெஞ்சில் அமர்ந்திருந்த பெரியவர்கள் எழுந்து நின்றது தெரியாமல்
கத்துகிறார்கள்:

“பாவிகெ கைகளெ முறிக்க ஆளில்லையா?”

“படைச்சவனே, நீ பாத்துக்கிட்டிருந்தையா?

–என்று கதை அப்பட்டமாகவே தாயம்மாவின்மேல் நிகழ்ந்தது அநீதி என்று சொல்கிறது. மேலும் ஆசிரியர்கூற்றாகவே அந்த மக்கள் தாயம்மாவின் மேல் செலுத்திய வன்முறையைப் பற்றி “அவளுடைய தழும்புகளை அவர்கள் புண்ணாக மாற்றிச் சொல்லில் விரித்து மறுவுருவாக்கம் செய்தார்கள். காலமே, உன் கூத்து.” என்கிறது

இன்றைய நுண்ணுணர்வுகொண்ட வாசகன் இத்தனை அப்பட்டமாகவே கதையின் மையம் சொல்லப்பட்ட பின்னரும் எப்படி அந்த அபத்தமான வாசிப்புகள் உருவாயின என்று ஆச்சரியப்படக்கூடும். அன்று அந்த அபத்தமான வாசிப்பை நிகழ்த்திய மொண்ணைகள் இன்றும் அப்படியேதான் இருக்கிறார்கள். வாசகன் முன்னகர்ந்துவிட்டான்

அந்தக் காலகட்டத்தில்தான் சிற்றிதழின் எல்லைக்குள் இருந்து இலக்கியப்படைப்புக்கள் வெளியே வரத் தொடங்கின. இடைநிலை இதழ்களும் இணையமும் வந்துவிட்டிருந்தன. பொதுவாசகன் இலக்கியக்கதைகளை வாசிக்க ஆரம்பித்தான். அவன் அதுவரை கதை என்றால் ஒரு கருத்தை கடைசியில் தெளிவாக முன்வைப்பது என்று புரிந்துகொண்டிருந்தவன், அந்தக்கருத்து முற்போக்கு கருத்து என்றால் அது நல்ல கதை என்று வகுத்துகொண்டவன்.

அவனுக்கு வெறும் நிகழ்வுகளையும் மாறுபட்ட கோணங்களினால பார்வைகளையும் உணர்ச்சிகளையும் மட்டும் முன்வைத்து, வாசகனை கற்பனை செய்யவைக்கும் நவீனத்துவ இலக்கியப்படைப்புகளில் அறிமுகம் இல்லை. அவற்றை வாசிக்கும் பயிற்சியும் இல்லை. ஆகவே அவன் முன் கதையின் ஏதேனும் ஒரு வரியை அல்லது நிகழ்வை எடுத்துக்காட்டி ‘இதைத்தான் இந்த ஆசிரியர் சொல்கிறார்’ என்று சொன்னால் அப்படியே எடுத்துக்கொண்டான்.

மொண்ணைகள் அந்த மொண்னைவாசிப்பில் திளைத்தனர். அதைப்பயன்படுத்திக்கொண்டு இலக்கிய அரசியலையும், அரசியல் வம்புகளையும் விளையாடும் புத்திசாலிகளும் இருந்தனர்.பிள்ளைகெடுத்தாள்விளைக்கு நிகழ்ந்தது அதுதான். இன்று கொஞ்சம் இலக்கியவாசகர்கள் பொதுவெளியிலும் உருவாகியிருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.

இந்தக்கதைக்கு ஆதாரமான ஓர் உரையாடல் எனக்கும் சுந்தர ராமசாமிக்கும் நிகழ்ந்ததை நினைவுறுகிறேன். என் அலுவலகத்தில் பொதுவாக புழங்கிய ஒழுங்கின்மையை அடக்க முற்பட்ட ஒரு பெண் அதிகாரிக்கு எதிராக பாலியல் கிசுகிசுக்கள் கிளப்பப்பட்டன. அதை கடைநிலை ஊழியர்கள் ஒருவகையான கிளர்ச்சியுடன் சொல்லிச் சொல்லி கொண்டாடிக்கொண்டிருந்தனர். எப்போதுமே இந்த பாலியல் கிசுகிசு என்பது ஒவ்வா உறவு சார்ந்ததாகவே இருக்கும். அது பொய் என அனைவருக்குமே தெரியும். அதை நான் சுந்தர ராமசாமியிடம் சொன்னேன்.

“ஆண் என்றால் சாதி, பெண் என்றால் ஒழுக்கமீறல்- அதுதான் அவதூறாக சுமத்தப்படும். பெண்மீது சாதிப்பழியே வராது. ஆண்மீது பாலியல் கிசுகிசு வராது” என்று சுந்தர ராமசாமி சற்று கசப்புடன் சொன்னார். “ஏனென்றால் பெண் சாதியற்றவள், சாதி என்பது ஆணுக்குரிய அடையாளம். ஆண் கொஞ்சம் பாலியல்பிறழ்வு கொண்டிருந்தால் அது பெரிய பிழை அல்ல என்றே சமூகம் நினைக்கும்”

“நம் தலைவர்களின் பாலியல்பிறழ்வை நாம் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டாடுகிறோம். ஒரு பெண் என்றால் அந்த பாலியல் ஒழுக்கமின்மை நம்மை கிளர்ச்சியும் கோபமும் அடையவைக்கிறது.அதையே பேசிக்கொண்டிருப்போம்” என்றார் சு.ரா

அன்று தமிழகத்தில் ஜெயலலிதாவை பாலியல் வசைமூலம் ஒழிக்க எதிர்க்கட்சிகள் முழுமூச்சாக முயன்றுகொண்டிருந்தன. அதேசமயம் அவர்களே தங்கள் தலைவர்கலின் பாலியல் சாகசங்களை புளகாங்கிதத்துடன் சொல்லவும் செய்தார்கள். அன்று பார்னி பேட்ஸ் என்ற ஆய்வாளர் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் போன்றவர்களின் உரைகளில் முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தார். அவர் ஒருமுறை வந்தபோது இந்த உளவியலைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வருகிறது.

கம்யூனிஸ்டுக் கட்சியுடன் இணைந்திருந்த காலகட்டத்தில் ரப்பர்தோட்டத் தொழிற்சங்கம் போன்றவற்றில் செயலாற்றிய பெண்தோழர்களுக்கு எதிராக பாலியல் கிசுகிசுக்கள் மிக வெற்றிகரமாக எப்படி பயன்படுத்தப்பட்டன என்று கவனித்ததாக சுந்தர ராமசாமி சொன்னார். ஒருபெண் எத்தனை ஆண்டுகள் சேவைசெய்தாலும் சரி, அவள்மேல் ஒரு பாலியல் கிசுகிசு கிளம்பினால் அத்தனைபேரும் ஆர்வத்துடன் செவிகொடுத்து கேட்பார்கள். ஆண்களைவிட பெண்கள்தான் மேலும் ஆர்வத்துடன் கேட்டு பரப்புவார்கள் என்றார் சுந்தர ராமசாமி

அதோடு எது சட்டென்று தார்மீக ஆவேசத்தை கிளறுமோ அதுதான் உருவாக்கிச் சொல்லப்படும். பெரும்பாலும் சிறார்கள் மீதான பாலியல்மீறலாகவே அது இருக்கும். எனக்குத்தெரிந்த இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் எல்லாவற்றிலுமே குழந்தைகள் மீதான பாலியல்வன்முறை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுந்தர ராமசாமி சொன்ன ஒரு நிகழ்வு அம்பாடி எஸ்டேட்டில் பணியாற்றிய ஒரு பெண்தோழர் பற்றியது. அவர் ஒரு மருத்துவச் செவிலியும்கூட. அதாவது அந்தக்காலத்தில் மலைப்பகுதிகளில் தானாகவே பயிற்சிபெற்று அலோபதி மருத்துவம் செய்வார்கள், அவர்களில் ஒருவர்.பலநூறு பிரசவங்கள் பார்த்தவர். பல உயிர்களை காப்பாற்றியவர்.

அவர்மேல் ஒரு பன்னிரு வயதுச் சிறுவனுடன் உறவுகொண்டார் என்ற பழி சுமத்தப்பட்டது. அவரை அதுவரை தெய்வம் என்றும், புரட்சியாளர் என்றும் போற்றிய தொழிலாளர்களே அவரை அடித்து உதைத்து ஒரு கம்பத்தில் கட்டி வைத்திருந்தனர். அவருடன் பணியாற்றிய பிறர் கூட அவருக்கு உதவவில்லை, அந்தப்பழியில் பங்கு வந்துவிடும் என அஞ்சினர்.

ஐயமே இல்லாமல் அது முதலாளிகளின் சதி. ஆனால் தொழிலாளர்கள் உடனே அதை நம்பிவிட்டனர்.அதைவிட பல தொழிலாளர்கள் அதை கொண்டாடினர். அவரை அடித்தபோது சில தொழிலாளர்கள் நடனமாடினர் என்று சொல்லப்பட்டதாக சுந்தர ராமசாமி சொன்னார். “ஆடுறவன் மனசிலே என்ன நடக்குது? அவன் வெறும் ஆணா மாறிடறானா? பெண்மேலே ஒரு வெற்றியைக் கொண்டாடுறானா?”

எனக்கு அந்தச் செய்தி அன்று படபடப்பை உருவாக்கியது. அதெப்படி தொழிலாளர்கள் அப்படி ஒரு பழி சுமத்தப்பட்டதும் உடனே நம்பினர்? “நம்புவாங்க. அது எப்டீன்னு நம்மாலே சொல்லிடவே முடியாது. ஆனா நம்பிடுவாங்க. அது நூறுவாட்டியாவது நிரூபணமாயிருக்கு” என்றார் சுந்தர ராமசாமி.

எதிர்மறை விஷயங்களின் மேல் அந்த உடனடி நம்பிக்கை எப்படி உருவாகிறது? சுந்தர ராமசாமியின் பார்வையில் மக்கள் பிற மனிதர்களின் வீழ்ச்சிகளை, பலவீனங்களை, தீமைகளை ஆதாரங்கள் இல்லாமலேயே நம்புவார்கள். எவரைப்பற்றி வேண்டுமென்றாலும் பாலியல்கிசுகிசு கிளப்பலாம், ஊழல்குற்றச்சாட்டு சொல்லலாம். அதை உடனே நம்ப ஆளிருக்கும். ஏனென்றால் அடிப்படையில் தியாகம்,சேவை, அன்பு, அறம் போன்றவற்றின்மேல் மனிதன் அவநம்பிக்கையுடன் இருக்கிறான்.

“பாலியல் குற்றச்சாட்டு எழாமல் இந்தியாவில் பொதுச்சேவை ஆற்றவே முடியாது” என்று சுந்தர ராமசாமி அவருக்குரிய கசப்பு கலந்த சிரிப்புடன் சொன்னார். இ.எம்.எஸ், ஏ.கே.கோபாலன் போன்றவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் பெண் என்றால் அதை தவிர்க்கவே முடியாது. கே.ஆர்.கௌரியம்மா தன் வாழ்நாள் முழுக்க அதைத்தான் எதிர்கொண்டார்.

நான் அந்த செவிலியரான  பெண்தோழரின் கதையை பின்தொடரும் நிழலின் குரலில் சேர்த்தேன்.ஒரே கணத்தில் தொழிலாளர்கள் ஒரு தெய்வத்தை பிசாசாக மாற்றிப் புனைந்துகொண்ட விந்தையை எழுதினேன்.  குறிப்பாக அந்தப் பெண்மணியை தாக்கியபோது தொழிலாளர்கள் ஆடியதாகச் சொல்லப்பட்ட அந்த நடனத்தை. அந்தப்பகுதிக்கு டால்ஸ்டாயின் சிறுகதையின் தலைப்பை வைத்தேன் ‘நடனத்துக்குப் பின்’

அந்தப்பெண்மணி பின்னாளில் ஒரு கிறிஸ்தவப் பிரச்சாரகராக ஆனார். அவருக்கு எளிமையான விடை ஒன்று கிடைத்திருக்கும், அது சாத்தானின் விளையாட்டு. பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் சமையற்காரத் தோழர் ஒருவர் அக்கதையைச் சொல்கிறார். ஆனால் அக்கதை என் நாவலின் ஒட்டுமொத்தத்தில் சரியாக அமையவில்லை என்பதனால் நீக்கவேண்டியிருந்தது. பிள்ளைகெடுத்தாள்விளை கதை அந்தக்கதையின் இன்னொரு வடிவம் என்று இப்போது தோன்றுகிறது

பிள்ளைகெடுத்தாள் விளை பெண் தன் விடுதலையை நோக்கி வேர்நிலத்தில் இருந்து முளைத்தெழும்போதே அவள்மேல் பாலியல்குற்றச்சாட்டு அமிலமென ஊற்றப்பட்டு அழிக்கப்படுவதன் கொடிய சித்திரத்தைக் காட்டும் கதை.சுந்தர ராமசாமியைப் போன்ற ஒருவர் என்ன எழுதுவாரோ அதையே அக்கதை வெளிப்படுத்துகிறது

ஆனால் அதன் சிக்கலென்ன? அது தெளிவான ஒரு சமூக ஒடுக்குமுறையின் சித்திரம். அதை முடிந்தவரை உண்மையான செய்திகளுடன், யதார்த்தத்திற்கு அண்மையாக ஆக்கும்போதே அதற்கு ஆற்றல்வருகிறது. சுந்தர ராமசாமி அவருடைய நவீனத்துவக் கதைகளின் வடிவில் வெறும்நிகழ்வுகளின் தொகுதியாக அதை எழுதியிருக்கிறார். வாய்மொழிச்செய்திகளின் மீதான வழக்கமான அவநம்பிக்கையின் அடிப்படையில் ‘சொல்லப்பட்டதன்மேல் சொல்லப்பட்டது’  என்ற வடிவை அளித்திருக்கிறார். கதைசொல்லியின் குரலில் ஓர் எள்ளலை ஓடவிட்டிருக்கிறார். வரலாற்றின்மீதான எள்ளல் அது.

விளைவாக கதையின் மையமான அந்த  ஒடுக்குமுறையின் தீவிரம் மழுங்கிப்போய் அடுக்கடுக்கான நினைவுகளின், வாய்மொழிக் கூற்றுக்களின் அடியில் ஒரு வகையான வாசிப்புச் சாத்தியமாக அந்த கொடிய ஒடுக்குமுறை நிலைகொள்கிறது. ஆகவே கதை பலவீனமாக உள்ளது. கலையில் பொதுவாக கற்பனைவிரிவை அளிக்கும் பொருள்மயக்கம் இந்தக்கதையில் கலையனுபவத்தை அளிப்பதற்குப் பதிலாக பேசவந்த விழுமியத்தை மங்கலடையச் செய்துவிட்டது.

சுந்தர ராமசாமி எதை அஞ்சியிருக்கலாம்? கதையை நேரடியாக, உண்மைக்கு அணுக்கமாக எழுதியிருந்தால் அது தட்டையானதாக ஆகிவிடும் என்று எண்ணியிருக்கலாம். நவீனத்துவர்களுக்கு பொதுவாக அந்த ஐயமும் குழப்பமும் உண்டு. அவர்கள் கொஞ்சமாகச் சொல்லவேண்டும், மங்கலாகச் சொல்லவேண்டும் என்று எப்போதும் முயல்வார்கள்

சுந்தர ராமசாமி குறைவாகச் சொல்லி வாசகர்களின் ஊகத்துக்கு வாய்ப்பு வழங்குவதன் வழியாக கதையின் ஆழத்தை உருவாக்க முனைந்திருக்கலாம். ஆனால் அந்த நிகழ்வை அப்பட்டமாகச் சொன்னாலே அதில் ஆழம் உருவாகி வரும். ஏனென்றால் அதில் அடிப்படையான அறப்பிரச்சினை உள்ளது. அதை நோக்கி சுந்தர ராமசாமியின் கதை கூர்கொண்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

இக்கதை முன்வைக்கும் அந்த சமூகப்ப்பிரச்சினையிலேயே ஆழ்ந்த வாசிப்புக்கான வாய்ப்புக்கள் உள்ளன, மாறுபட்ட கோணங்கள் திறக்கமுடியும். அதை கதை தன் வடிவத்தின் மூலம்  உருவாக்கவேண்டியதில்லை.ஆனால் நானே அறம் வரிசை கதைகளை எழுதியபின்னரே அந்த வடிவ உணர்வை அடைந்தேன். அறம் கதைகளின் அறிவுறுத்தும்தன்மை [didactic] ஒரு பின் நவீனத்துவக் கூறு.நவீனத்துவக் கதைகளில் அவ்வியல்பு இருக்கமுடியாது.

பிள்ளைகெடுத்தாள் விளை கதையில் நிகழும் அந்த மனநிலை மாற்றத்தின் மர்மம் என்ன? எங்கே எந்தப் புள்ளியில் அந்தக் கூட்டுமனத்திரிபு நிகழ்கிறது? தாயம்மாள் மேல் செலுத்தப்பட்ட அந்த உச்சகட்ட வன்முறையின் வேர்கள் எங்கே உள்ளன? சாமானிய உள்ளம் அறம், நன்மை, தியாகம் போன்ற பெரியவிஷயங்களுக்கு எதிராக எந்தக்கணத்தில் திரும்புகிறது? பாலியல்குற்றச்சாட்டு என்பது ஒரு சாக்குதான். கரைமுட்டிக் கிடக்கும் ஒரு பெரிய ஏரியில் விழும் சிறு துளை அது.

[ஆச்சரியமாக பஷீர் அதை கால்பாடு போன்ற பல கதைகளில் நுணுக்கமாக எழுதியிருக்கிறார். தகழி, ஓ.வி.விஜயன் ஆகியோரின் சிலகதைகளில் இச்சிக்கல் தொடப்பட்டுள்ளது]

மானுட உள்ளத்தின் அடியில் மாபெரும் நச்சு ஊற்று ஒன்று உண்டா என்ன? மானுடத்திற்குச் சேவைசெய்ய களமிறங்கும் அனைவரும் அந்த நஞ்சில் ஒரு கோப்பையை அருந்தியிருப்பார்கள். ‘திருடனை விடு, அந்த தச்சன்மகனைச் சிலுவையில் அறை’ என்று கூச்சலிட்ட ஜுடாயாவின் மக்களின் மனநிலையை நாம் புரிந்துகொண்டிருக்கிறோமா? அத்தனை புனிதர்கள்மீதும் கல்லெறிந்தவர்கள் எளிய மக்கள்தானே? ‘தனிமனிதர்கள் ஆக்குகிறார்கள், திரள் அழிக்கிறது’ என்ற எம்.என்.விஜயனின் வரியை நினைவுறுகிறேன். அது உண்மையா என்ன?

பிள்ளைகெடுத்தாள் விளை கதை அந்த வினாக்களை நோக்கிச் செலுத்தும்கதை.மொண்ணைகளின் ஒற்றைவரிகளைக் கடந்து இலக்கியவாசகர்கள் அந்த பேசுபொருளை சென்றடைந்தாகவேண்டும். அதிலிருந்து இன்னமும்கூட கதைகள் உருவாகலாம்.

ஜெ

சுந்தர ராமசாமி பிராமண மேட்டிமைநோக்கு கொண்டவரா?

சுந்தர ராமசாமி மார்க்ஸியரா?

விவாதிப்பவர்களைப்பற்றி

முந்தைய கட்டுரைஅ.கா.பெருமாள் சந்திப்பு- கடிதம்
அடுத்த கட்டுரைகமல், மகாபாரதம்,மரபு