சுந்தர ராமசாமி பிராமண மேட்டிமைநோக்கு கொண்டவரா?

ஜெ,

நீங்கள் சுந்தர ராமசாமி பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். சுந்தர ராமசாமி பிராமணச் சார்புடைய எழுத்தாளர் என்பது பலராலும் எழுதப்பட்டுள்ளது. அவருடைய வாசனை போன்ற சிறுகதைகளில் பிராமணச் சார்புநிலை வெளிப்படுகிறது. அது பிரமிள் போன்றவர்களலேயே கடுமையாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எம்.பாஸ்கர்

***

அன்புள்ள பாஸ்கர்,

பிராமணர்கள் இந்திய சமூகத்தின் சடங்குகள் சார்ந்த ஆதிக்கத்தை நெடுநாட்களாக நிலைநிறுத்தி வந்தவர்கள். அதன்விளைவான மேட்டிமைநோக்கு அவர்களில் பலரிடம் அவர்களின் குடும்பப்பின்னணியில் இருந்து வந்து, பின்னாளில் ஒருவகை தன்னடையாளமாகவும் ஆணவமாகவும் நீடிக்கிறது. தன்னைத் தானே ஆழ்ந்து நோக்கி, மதிப்பிட்டு, அந்த அடையாளத்திலிருந்தும் ஆணவத்திலிருந்தும் எழுந்து வருபவர்களாலேயே அதிலிருந்து விடுபட முடியும். அது அனைவராலும் இயல்வது அல்ல.

அத்தனை உயர்சாதியினரிடமும் இந்த அடையாள, ஆணவச் சிக்கல் உண்டு என்றாலும் பிராமணர்கள் இந்தியச் சூழலில் சிறப்பிடம் பெற்று வரலாறெங்கிலும் இருந்து வந்தவர்களாதலால், அவர்கள் தங்களுக்குரிய தனித்தன்மையை தொடர்ச்சியாக பேணிவந்தவர்கள் என்பதனால், அவர்களுக்கு இந்தத் தடை மிக பெரியது. அவர்க்ளைப்பற்றிய பிற சாதியினரின் ஐயமும் மிகுதி.

ஆகவே பிராமணமேட்டிமைவாதம் ஒரு படைப்பில், படைப்பாளியில் உள்ளதா என்று பார்ப்பதொன்றும் பிழையானது அல்ல. அது எழுத்தாளர்களை எதிர்மறையாகப் பார்ப்பதும் அல்ல. இந்தியச் சூழலில் எந்த படைப்பாளியும் தன் சாதி சார்ந்த அடையாளம், ஆணவம் இரண்டிலிருந்தும் வெளிவந்தாலொழிய அவனால் வரலாற்றையும் மானுடப்பிரச்சினைகளையும் மெய்மை கண்டு பேசமுடியாது. அவ்வண்ணம் வெளிவராத படைப்பாளிகளின் படைப்பை அவ்வகையில் குறையுடையது, பிற்பட்டது என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஆனால் தமிழ்ச்சூழலில் பிராமணர்களின் வாழ்க்கைச்சூழல் சித்தரிப்புக்கும் அவர்கள் பார்வையில் இருக்கும் பிராமணிய மேட்டிமைநோக்குக்கும் இடையிலான வேறுபாடு பெரும்பாலான வாசகர்களுக்கு, விமர்சகர்களுக்கும்கூட, புரிவதில்லை. அதன் சிக்கல்கள் எப்போதும் இங்கே உள்ளன.

ஒரு படைப்பாளி பிராமணர் என்றால் அவர் தானறிந்த வாழ்க்கையையே எழுதுவார். அவர் பேசும் வரலாற்றுச் சித்தரிப்புகள், மானுடச்சிக்கல்கள்கூட அவர் அறிந்த வாழ்க்கைப்புலத்திலிருந்தே எழும். அவருடைய மொழிநுட்பங்கள் அழகியல்கூறுகளும் அங்கிருந்தே உருவாகும். அவருடைய அடிப்படையான படிமங்களும் அவ்வாழ்க்கைச்சூழலில் இருந்து உருவானவையாக இருக்கும். அவருக்கு அந்த வாழ்க்கை சார்ந்து ஒரு கரிசனமும், ஆர்வமும் இருக்கும். அதுவே இயல்பானது. அதைவைத்து அவர் மேட்டிமைநோக்கு கொண்டவர் என்று கூறமுடியாது. அவர் அவர் அறிந்த வாழ்க்கையை எழுதலாகாதென்றும் சொல்லமுடியாது.

சுந்தர ராமசாமியின் படைப்புக்களை வைத்துப் பார்க்கையில் அவற்றில் பிராமணப் பண்பாட்டிலிருந்து உருவாகும் பார்வை இயல்பாக அமைந்திருக்கும் கதைகள் பல உண்டு. பிராமண வாழ்க்கையை அவர் சற்று கரிசனத்துடன் பார்த்தார் என்றே தோன்றுகிறது. ஆனால் தமிழ் நவீன இலக்கியத்தில் பல்வேறு சாதியினரை, அவர்களின் தனிப் பேச்சுமொழிகளுடன் எழுதிய படைப்பாளி அவர். பிராமணரல்லாத சாதியினரில் எத்தனை எழுத்தாளர்கள் அவர்களின் சாதிவட்டத்திற்கு அப்பால் சென்று எழுதினர்?

பிராமணமேட்டிமைவாதம் சுந்தர ராமசாமியின் இயல்பில் இல்லை.அவர் பிராமண அடையாளத்தை மேலானதாக முன்வைக்கவில்லை. அந்த மேட்டிமைவாதம்  மீதான விமர்சனங்களை எவ்வகையிலும் தவிர்க்கவுமில்லை.

ஒட்டுமொத்தமாக அவருடைய கதையுலகம் தமிழின் முற்போக்கு இலக்கியமரபில் பாதியும் நவீனத்துவ இலக்கிய மரபில் மீதியுமாக பிரிந்து கிடக்கிறது. அவையிரண்டுமே ஐரோப்பியநோக்கு கொண்டவை, புறவயமான தர்க்கத்தில் நம்பிக்கை கொண்டவை, உலகியல்நோக்கில் அமைந்தவை. அவ்விரு தத்துவ –அழகியல் நோக்குகளுமே மரபுவழிபாடு, மரபடையாளத்தை சூடிக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு நேர் எதிரானவை.

மார்க்சியராகவும் நவீனத்துவராகவும் சுந்தர ராமசாமி எல்லாவகையிலும் மரபுக்கு எதிரான பார்வை கொண்டவர்.அவருடைய கதைகளில் அந்தப்பார்வையே மீளமீள வெளிப்படுவதைக் காணலாம். சொல்லப்போனால், மரபின் ஆழமானவையும் மதிப்பிற்குரியவையுமான கருத்துக்களையும் அடையாளங்களையும்கூட அவர் ஐரோப்பியப் பார்வையின் பொருட்டின்மையுடன், புறவயத் தர்க்க நோக்குடனேயே அணுகுகிறார். அவருடைய கதைகளில் ஆலயங்கள் எப்படி காட்டப்படுகின்றன என்பதை மட்டும் பார்த்தால்போதும்.

சுந்தர ராமசாமியின் கதைகள் நவீன இலக்கிய ஆக்கங்கள். ஆகவே வாசகனின் கற்பனையை கோரி நிற்பவை. கற்பனை என்பது அந்தக் கதைமாந்தராக மாறி அச்சூழலை வாழ்ந்து பார்ப்பதுதான். ஒரு மனிதனால் கற்பனைவழியாக, கருணை [Empathy] வழியாக எந்த மானுடனின் வாழ்க்கையையும் வாழ்ந்து அறிய முடியும். அந்த சாத்தியக்கூறுதான் இலக்கியத்துக்கே அடிப்படையானது. அவ்வண்ணம் முடியாதென்றால் இலக்கியம் இல்லை, அவ்வண்ணம் முடியாதவர்கள் இலக்கியவாசகர்களும் அல்ல

அந்தக்கதைகளை அவ்வண்ணம் கற்பனைசெய்யாமல் வெளியே இருந்துகொண்டு, அக்கதாபாத்திரங்களை அயலவராக கண்டு, முன்னரே வகுத்துக்கொண்டு வாசிப்பதும் அதனடிப்படையில் அதன் ‘சாராம்சமான கருத்தை’ ‘பார்வைக்கோணத்தை’ வகுத்துக் கொள்வதும் எல்லாம் கண்ணாடிப்பொருளை உடைத்து ஆராயும் மொண்ணைத்தனம்தான். ஆனால் அதுவே நம் சூழலில் மிகுதியாக நிகழ்கிறது.

வாசனை கதை ஒரு நவீனத்துவ ஆக்கம். அது ஒரு தனிமனித அகத்திற்குள் ஊடுருவிச் செல்ல முயல்கிறது.தனிமனித அகத்திற்குள் ஊடுருவிச் செல்வதென்பது நீருள் மூழ்கிச் செல்வதுபோல. ஆடைகளை எல்லாம் கழற்றிவிட்டு பாய்வதே வழி. ஒரு தனிமனித அகத்தைச் சொல்லவிழையும் கலைஞன் தன் சொந்த அரசியலை, சொந்த சமூகநோக்கை, தத்துவநிலைபாட்டை முடிந்தவரை கழற்றிவிடவேண்டும். அந்த தனிமனிதனாக கற்பனை வழியாக தன்னை ஆக்கிக்கொண்டு மேலும் மேலும் ஆழ்ந்து செல்லவேண்டும்

அத்தகைய கதைகள் எதையுமே சொல்வதில்லை, விளக்குவதில்லை. கதையில் மிதந்துகிடக்கும் செய்தி அல்லது கருத்து என ஏதுமிருப்பதில்லை.நிகழ்வுகள் மற்றும் உளப்பெருக்கு ஆகியவற்றின் தொகுதியாகவே அவை இருக்கும். அவற்றை வாசிப்பவர் அந்தக் கதாபாத்திரமாக அந்தச் சூழலில் வாழ்ந்தால் அந்நிகழ்வுகள் எண்ணங்கள் வழியாக அவர் அந்த தனிமனிதனின் ஆழத்தை தானும் அடைவார், சிலவற்றை கண்டடைவார்.

அவ்வண்ணம் கதைமாந்தராக மாறி, கற்பனை செய்துகொள்ளாதவருக்கு அவை வெறும் நிகழ்வுகள், எண்ணங்கள் மட்டுமே. அவர் அவற்றை ஏற்கனவே தனக்குத் தெரிந்த சிந்தனைகளைக்கொண்டு அடுக்கிக் கொள்வார், ஏற்கனவே தான் கொண்டிருக்கும் நிலைபாட்டுக்கு இயைப வகுத்துக்கொள்வார். அவருக்கு உண்மையாகவே அது சரி என்றும் தோன்றும். ஆகவே அவரை பேசியோ விவாதித்தோ மாற்ற முடியாது.

தமிழில் இவ்வகையான வரட்டு வாசகர்களே மிகுதி. அவர்களின் வாசிப்புவன்முறையை ஏற்காமல் இங்கே எவருமே இலக்கியம் படைக்க முடியாது. அவர்கள் செய்யும் பிழைகள் பல. முதன்மையானது, ஆசிரியனை ஏதேனும் ஓர் அரசியல் தரப்பில், சமூகத்தரப்பில் நிறுத்தி வகுத்துக்கொள்வது. அதிலும் தமிழ்நாட்டில் சாதியநோக்கு ஆழமானது. எவரையும் அவர் சாதியில் நிறுத்தி மட்டுமே நம்மால் யோசிக்க முடியும்.

அவ்வாறு ஓர் எழுத்தாளரை நிலையாக வகுத்து அடையாளப்படுத்திக்கொண்டு அதன் அடிப்படையில் அவர் நம்மவரா அல்லவரா என்று வரையறைச் செய்கிறார்கள். நம்மவர் என்றால் பாராட்டு, அல்லவர் என்றால் அவர் என்ன எழுதினாலும் எதிர்ப்பு. இந்தப்பார்வை கொண்டவர்களுக்கு வெளிப்படையாகவே ஒரு கருத்தை முன்வைக்கும் கதைகளேகூட நேர் எதிரான அர்த்தம் அளிப்பதைக் கான்கிறோம். சுந்தர ராமசாமி போன்ற நவீனத்துவர் வெறும் நிகழ்வுகளாவும் எண்ணங்களாகவும் முன்வைக்கும் கதைகளை அவர்கள் தங்கள் விருப்பப்படி சமைத்துக்கொள்வதில் வியப்பே இல்லை.

இலக்கிய ஆக்கங்களை வாசிக்கும் பயிற்சியோ, நல்ல இலக்கியங்களில் அறிமுகமோ இல்லாதவர்கள் வெவ்வேறு வழிகளினூடாக இலக்கியம் வாசிக்க வருகிறார்கள். பெரும்பாலும் அரசியல்கட்சிகள் வழியாக, அரசியல்தொண்டர்களாக வருகிறார்கள். அங்கேயே நிலைகொள்கிறார்கள். அவர்களின் வாசிப்பு என்பது எப்போதுமே பயிற்சி அற்றது, ஆகவே மிகமிக அபத்தமானது. கோயிலில் பண்ணிசை பாடுபவர் ‘தா தா ததரீனா தா’ என்று பாடக்கேட்டு சர்க்கரைப் பொங்கலைத்தான் கேட்கிறார் என்று புரிந்துகொண்டு இலையில் பரிமாறி கொண்டுசென்று வைத்த அர்ச்சகர் ஒருவரின் கதையைச் சொல்வார்கள். அந்த அப்பாவித்தனம் இவர்களிடம் உண்டு

அவர்கள் செய்யும் பலபிழைகளை காணலாம். முதன்மையாக படைப்பில் உள்ள கதாபாத்திரத்தின் வரியை ஆசிரியரின் கொள்கைக்கூற்றாக எடுத்துக்கொள்வது. இரண்டாவது, படைப்பில் உள்ள ஏதேனும் ஒருவரியை அப்படைப்பின் சாராம்சமாக முன்வைப்பது. மூன்று, படைப்பின் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தை ஆசிரியராக எண்ணிக்கொள்வது. நான்கு,படைப்பில் தெளிவாகவே காணக்கிடைக்கும் உணர்வுநிலைகளையும் சூழலையும் கருத்தில்கொள்ளாமல் தங்களுக்கு தேவையானவற்றை மட்டுமே வாசிப்பது. ஐந்து, எல்லா கதைகளையும் தாங்கள் பேசிக்கொண்டிருக்கும் சமகால அரசியலின் அன்றாட விவாதங்களுக்குள் கொண்டுவந்து பேசுவது.

அப்படிப்பட்ட வாசிப்புகளால் சிதைவுறும் கதைகள் பெரும்பாலும் நவீனத்துவக் கதைகளே. அவை தனிமனித அகம்நோக்கிச் செல்பவை, ஆகவே வாசகன் அகத்தைக்கொண்டு மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியவை. வாசனை அதற்குச் சிறந்த உதாரணம்.

வாசனையின் கதை என்ன? ஒரு பிராமண இளைஞன், ஊனமுற்றவன். புகழ்பெற்ற வைதிகக் குடும்பத்தில் பிறந்தவன், அறிஞர்களும் பக்தர்களும் பிறந்த குடி அது. அவனுக்கு அதைப்பற்றிய பெருமை உண்டு. தன் இளம் மனைவியுடன் அவன் கன்யாகுமரிக்கு வருகிறான். அங்கே ஒரு தொழுநோயாளி அவன் மனைவியை ‘வாடி பாப்பாத்தி வாடி’ என ஆபாசமாக சைகைசெய்து அழைக்கிறான். அவன் முகத்தில் வேட்கையின் இளிப்பு.

இளைஞன் கொந்தளிக்கிறான், ஆனால் அவனால் ஒன்றும் செய்யமுடியாது. மனைவி அவனை இழுத்துக்கொண்டு செல்கிறாள். அன்றிரவு அவன் அந்த தொழுநோயாளியை தேடிச்சென்று தன் ஊன்றுதடியால் அடிக்கிறான். திரும்பி வந்து அதை தன் மனைவியிடம் சொல்கிறான். அவளுடன் மூர்க்கமாக உறவுகொள்கிறான். இவ்வளவுதான் கதை.

பிராமணர்களை எவராவது இழிவுசெய்தால் அடிக்கவேண்டும் என்று இந்தக்கதை சொல்வதாக ஓர் எளிய உள்ளம் புரிந்துகொள்வது இயல்பு. ஆனால் கதை அத்தகைய எளிய உள்ளங்களுக்காக எழுதப்படவில்லை. சற்று இலக்கியவாசனை உடையவர்கள் இக்கதையின் குறிப்புகளைக் கொண்டு அந்த பிராமண இளைஞனின் உள்ளத்துக்குள் செல்லமுடியும்.

அவனுடைய சிக்கல் தன்னடையாளம் சார்ந்தது. வைதிகம்,மரபான கல்வி சார்ந்த ஒரு பெருமிதத்தை அவன் தன்னடையாளமாக நினைக்கிறான். ஆனால் உண்மையில் அவன் அப்படித்தானா என கதை வினவுகிறது. அவனுடைய அந்த மென்மை என்பது அவன் ஊனமுற்றவன் என்பதனால் வந்ததா? அவனுக்கு மனைவிமேல் ஒரு மிரட்சி இருந்ததா? தான் ஆண்மகனாக வலிமையானவன் அல்ல என்று நினைக்கிறானா? அவள் அப்படி நினைப்பதாக சந்தேகப்படுகிறானா?

அவளை அந்த தொழுநோயாளி அவமதிக்கிறான். அப்போது அவன் குமுறுகிறான். அதை கடந்துசெல்ல அவனுடைய பாரம்பரியமோ கல்வியோ எவ்வகையிலும் உதவவில்லை. இரவில் சென்று தொழுநோயாளியை தாக்கும்போது அவன் வைதிகனோ கல்விமானோ அல்ல, வெறும் விலங்குதான். அந்த விலங்குதான் திரும்பி வந்து மனைவியிடம் வல்லுறவு கொள்கிறது.

வாசனை என கதைக்கு தலைப்பிட்டிருக்கிறார் சுந்தர ராமசாமி. வாசனை என்றால் ஜென்மவாசனை, அதாவது பிறவிஇயல்பு. கல்வி பாரம்பரியம் எல்லாவற்றுக்கும் அடியில் இருப்பது உண்மையில் அந்த விலங்கியல்புதானா? கதை அந்த உச்சக்கேள்விவரைச் சென்று நின்றுவிடுகிறது. ஆம் என்று சொல்லவில்லை, ஆனால் மேலே எதையும் சுட்டவில்லை.

அத்துடன் கதை அவன் மனைவியான லலிதாவின் பார்வையிலேயே பெரிதும் சொல்லப்படுகிறது. அவளுக்கு அந்த தொழுநோயாளியின் அவமதிப்பு பெரிதாகத் தோன்றவில்லை, அதை அவள் எளிதாக ஒதுக்கிச் செல்கிறாள். கணவனிலிருந்து வெளிவரும் விலங்கின்வாசனையைத்தான் அவள் பீதியுடன் உணர்கிறாள். கதை முதிர்வடையும் இடம் அதுவே.

மனிதனை அவனுடைய அடிப்படை இச்சைகளின் தொகையாக மட்டுமே பார்க்கும் பார்வை ஹெர்மன் ஹெஸ் முதல் சாமர்செட் மாம் வரை நவீனத்துவப் படைப்பாளிகள் அனைவரிடமும் காணக்கிடைப்பது. சுந்தர ராமசாமி இக்கதையின் காலகட்டத்தில் எழுதிய அழைப்பு, முட்டைக்காரி போன்ற கதைகள் அனைத்திலுமே இந்த உலகப்பார்வையைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறார்

உண்மையில் பிராமணர்களுக்கு எதிரான, வைதிகமரபு சொல்லும் அனைத்துக்கும் எதிரான கதை இது. இந்தக் கதையின் கதாநாயகனில் வரும் அந்த மாற்றத்தை இன்று நாம் நேரடியாகவே காண்கிறோம். அவனுக்கு இரவு எப்படி ஒரு வசதியான மறைவோ அப்படி இன்று இணையச் சூழல். இன்று தங்கள் மரபு, கல்வி ஆகியவற்றைப் பற்றிய பெருமிதம் கொண்ட பிராமணர்கள்கூட இணையவெளியும் இன்றைய சாதகமான அரசியல்சூழலும் அளிக்கும் சுதந்திரத்தின் துணையுடன் அந்த கதைநாயகனைப்போலவே தங்கள் அடிப்படை இயல்பை, ‘வாசனை’யைத்தான் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அன்று இக்கதை வெளிவந்ததுமே ‘பாப்பாத்தி வாடி’ என அழைப்பவனுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர் ஒரு சாரார். அவனை தொழுநோயாளியாக காட்டியது தங்களை இழிவுசெய்வது என எண்ணிக்கொண்டனர். அவர்களே அக்கதை பிராமணமேட்டிமைவாதம் பேசுகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இன்னொரு பக்கம் ஒருசாரார் பாப்பாத்தி வாடி என அழைப்பவனை தொழுநோயாளி என காட்டியதிலும், அவனை தாக்கியதிலும் மகிழ்ந்து அக்கதையை கொண்டாடினர். உண்மையில் அந்த வாசிப்புக்கு வழிவகுத்தவர் அந்நூலுக்கு முன்னுரை எழுதிய நாரணோ ஜெயராமன். அன்று தமிழ்ச்சூழலில் ஓங்கியிருந்த படித்த, பிராமணமேட்டிமையாளர்களில் அவரும் ஒருவர். அந்த வாசிப்பு அக்கதையை சிறுமைசெய்வது

நான் சுந்தர ராமசாமியிடம் அந்த முன்னுரையின் அபத்தம் பற்றி கேட்டிருக்கிறேன். அந்த வாசிப்பு அபத்தமானது, ஆனால் முன்னுரையை கோரிப்பெற்றபின் அதை வேண்டாமென்று சொல்லக்கூடாது என்பது பண்பாடு என்று எண்ணியதாக சுந்தர ராம்சாமி சொன்னார். அந்த முன்னுரையாலேயே அக்கதை தாக்கப்பட்டபோது அதன்பொருட்டு அந்த முன்னுரையை நீக்கினால் அது இன்னும் சிறுமையாகும். [இப்போது அம்முன்னுரை இல்லை என நினைக்கிறேன்] நாரணோ ஜெயராமன் தன் கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அன்று சுந்தர ராமசாமிக்கு இருந்தது.

அன்றுமின்றும் இங்கே அரசியல் வாசிப்பின் தரம் இதுதான். சமீபத்தில் என்னுடைய பத்துலட்சம் காலடிகள் கதையையே இந்த லட்சணத்தில்தான் வாசித்தனர்.ஒரு வரியை பிடுங்கி அதற்கு விருப்பப்படி விளக்கம் அளித்து கொதித்துக் கொந்தளித்தனர். கோட்பாடுகள் ஆயிரம் வந்தாலும் கற்பனை இல்லாதவர்களால் இலக்கியத்தை அணுகவே முடியாது என்பதற்கான சான்று இது.

உண்மையில் அந்தக் கதாபாத்திரம் தொழுநோயாளியாக ஏன் இருக்கிறது? ஓர் எழுத்தாளனாக அதை எளிதில் என்னால் சொல்லமுடியும். அந்த வசையை சொல்பவன் சமூகப்பார்வையில் கடையனிலும் கடையனாக இருக்கவேண்டும், எந்த புத்தியுள்ள மனிதனும் ஒதுங்கிப் போகக்கூடியவனாகச் சொல்லப்படவேண்டும். அவனைக்கூட கதைநாயகனால் கடந்துசெல்லமுடியவில்லை என்று காட்டினால்தான் அந்தக் கதை நிலைகொள்ளும்.

மாறாக ஒரு சாமானியன் அதைச் சொல்வதுபோல காட்டியிருந்தால் கதைநாயகனின் ரோஷத்திற்கு ஏதோ ஓர் அர்த்தம் உண்டு என்று வாசகனுக்குத் தோன்றிவிடும். அந்த ரோஷம் என்பது அவனுடைய அகச்சிக்கலை காட்டுவதாகவே கதையில் வெளிப்படவேண்டும், சமூகச்சிக்கலை கதை சுட்டக்கூடாது என்று சுந்தர ராமசாமி நினைத்தார். அதை பின்னர் அவரிடம் உரையாடியும் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

பிரமிள் இக்கதையை சுந்தர ராமசாமியின் சாதிய மேட்டிமைநோக்கின் வெளிப்பாடு என்று சொன்னார்- சான்றாக நாரணோ ஜெயராமனின் வாசிப்பைச் சுட்டிக்காட்டினார். தமிழில் ஒரு மரபுண்டு.ஓர் அபத்தமான அல்லது உள்நோக்கம் கொண்ட வாசிப்பு நிகழ்ந்துவிட்டால் அதன்பின் வாத்துக்கூட்டம் அந்தப்பாதையிலேயே ஒழுகிச்செல்லும். அதுவே இக்கதையின் வாசிப்பிலும் நிகழ்ந்தது

பிரமிளைப் பற்றிச் சொல்லி இதை முடிக்கிறேன். பிரமிளுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையேயான பூசல் எந்தவகையிலும் கொள்கை சார்ந்தது அல்ல. முழுக்கமுழுக்க தனிப்பட்ட உளக்கசப்பு அது. அது ஏன் என நான் அறிவேன். பிரமிள் கவிதைகள் மீதான பெருமதிப்புடனேயே பிரமிள் பிறழ்ந்த உள்ளம் கொண்டவர், அடிப்படையில் பொறாமை போன்ற தீயஇயல்புகளும் கசப்பும் நிறைந்தவர் என்று சொல்வேன். அவரை மிக நன்றாக எனக்குத் தெரியும். கவிஞனின் உள்ளம் அப்படி. அதில் நஞ்சும் பெருகமுடியும், அமுது எழும் தருணங்களும் உண்டு.

சுந்தர ராமசாமி பிராமணமேட்டிமை கொண்டவர் அல்ல. ஆனால் பிரமிள் அப்பட்டமான வேளாளமேட்டிமை நோக்கு கொண்டவர். அதை எவ்வகையிலும் மறைக்காதவர், அதில் பெருமிதம் கொண்டிருந்தவர். தன் உணவுப்பழக்கங்களையே அவர் பெருமிதத்துடன் சொல்வதுண்டு.

வைதிகமரபையே கொஞ்சம் உருமாற்றி சைவமரபென ஏற்றுக்கொண்டவர் பிரமிள். அவருக்கு சுந்தர ராமசாமியை அல்ல அப்பட்டமான பிராமண மேட்டிமைவாதியைக்கூட சுட்டிக்காட்டும் தகுதி இல்லை. பிரமிள் வாழ்ந்தபோதே எழுதப்பட்ட ‘விமர்சிக்கப்படாத கடவுள்’ என்ற விமர்சனக் கட்டுரையை நீங்கள் வாசிக்கலாம். பிரமிளுக்கு மிக அணுக்கமாக நீண்டநாட்கள் இருந்த ஒருவர் எழுதியது. ஏறத்தாழ என் அனுபவமும் அதுவே.

பிரமிள் வாசனை கதை உட்பட சுந்தர ராமசாமியைப் பற்றி எழுதியவை எல்லாமே திட்டமிட்டு அவரைச் சிறுமைசெய்யும் நோக்குடன் எழுதியவை. எங்கே எது செல்லுபடியாகும், அதை எப்படிச் சொல்லவேண்டும் என்று மிகநன்றாகத் தெரிந்த அதிகூர்மையாளர் பிரமிள். அவர் எதைச் சொன்னார், எதை தவிர்த்தார் என்று பார்த்தாலே அதைப் புரிந்துகொள்ளமுடியும்.

நவீனத்தமிழின் தலைசிறந்த கவிஞன் பிரமிள். பாரதிக்குப்பின் அவரே அடுத்த கவிப்பேராளுமை. கவிஞன் என்று மட்டும் அவரை நிறுத்திக்கொள்ளலாம். கவிஞனின் ஆழங்களுக்குள் சென்றால் சேறுதான் அள்ளவேண்டியிருக்கும். எந்தக் கவிஞரானாலும்.ஏனென்றால் அவன் பெரும்பாலும் அடிப்படை உணர்வுகளால் ஆனவன். புனைவெழுத்தாளன், அதிலும் சுந்தர ராமசாமி போன்ற ஒருவர், தத்துவநோக்குடன் தன்னை ஓயாமல் மறுபரிசீலனைசெய்துகொண்டிருப்பவர். சுரா தன்னை புதுப்பித்துக்கொண்டே இருந்த நவீன மனிதர்.

ஜெ

முந்தைய கட்டுரைபிரம்மம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு புதுவை கூடுகை