அ.கா.பெருமாள் சந்திப்பு- கடிதம்

ஜெமோ,

அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் அதன் வரப்பு வழியாக நடக்கும் அவசியமிருக்காது என்பதை குறிக்கும் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற சொல்லாடலை எப்படியெல்லாம் நமது வசதிக்கேற்ப புனைந்து வைத்திருக்கிறோம் என்பது ஆச்சரியமளிக்கிறது. அ.கா. பெருமாள் அவர்கள் இதை சுட்டிக்காட்டியது நாட்டார் வழக்காற்றியல் எப்படியெல்லாம் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் ஊடுருவி உருமாறியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த அறிஞரிடமிருந்து எப்படியாவது அவர் கண்டடைந்தவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் கேட்கப்பட்ட கேள்விகள், இக் கேள்விகளால் வியந்து அவற்றையும் தாண்டி தன் ஞானம் முழுவதையும் பகிர்ந்து கொண்ட ஆசிரியரான அ.கா. பெருமாள் என இந்த இரண்டரை மணி நேரம் மிகப் பெரிய பொக்கிஷம். இதை சாத்தியப்படுத்திய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் அதற்கு துணை நின்ற தொழில்நுட்பமும் இந்த நோயடங்கு காலத்தில் கிட்டிய வரப்பிரசாதமே.

நாட்டுப்புற கலைஞர்களிடம் இருந்து தான் பெற்றுக் கொள்ள மட்டுமில்லை, அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் அறிவையும் வழங்கி அவர்களின் வாழ்வை மேம்படுத்தியிருக்கிறார் என்பது ஒரு ஆய்வாளரின் சமூகப் பொறுப்பு என்ன என்பதை உணர்த்தியது. உரையாடல் நெடுகிலும் தன்னுடைய ஆசிரியர்களையும், வழிகாட்டிகளையும் நினைவு கூர்ந்து கொண்டே வந்தது, அவர் ஏன் ஒரு மிகப் பெரிய ஆளுமை என்பதையும் உணர்த்தியது.

அரசர்களின் உயர்குடி வரலாறென்றாலும் சரி. மக்களின் நாட்டாரியல் சார்ந்த வரலாறென்றாலும் சரி. பாடபேதமற்ற வரலாறு என்ற ஒன்று இல்லை என்பதை மிக நேர்மையாக சுட்டிக் காட்டியது, ஒரு ஆய்வாளராக அவருடைய  முதிர்ச்சியையும் வெளிப்படுத்தியது. மரபுகளில் புதைந்து போவதற்கும், அதிலிருந்து மேலெழும்புவதற்கும் இடையே உள்ள வேறுபாடு இது என புரிந்து கொள்ள முடிகிறது.

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேர நிகழ்வின் கடைசிக் கேள்விக்குப் பிறகும், அவரிடமிருந்த ஆற்றலும், பூரிப்பும் மிகப் பெரிய inspiration. மார்க்சிய ஆய்வாளரான ராஜ்கௌதமன் தனக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட நிகழ்வில் ஆற்றிய சிறப்புரையில், “இங்கு மேடையில் அமர்ந்திருப்பவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையில் பெரிய வித்தியாமில்லை” என்றார். அ.கா. பெருமாள் அவர்களும், இந்நிகழ்வில் தன்னுடைய ஆய்வு நூல்களைப் பற்றிக் கேட்கப்பட்ட மிக நுட்பமான கேள்விகளால் வியந்து போனது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏன் இலக்கிய வாசகர்களுக்கு எப்போதும் ஒரு inspiration என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

அன்புடன்

முத்து

***

அன்புள்ள ஜெ

அ.கா.பெருமாள் அவர்களின் உரையாடல் எனக்கு ஒரு பெரிய திறப்பாக இருந்தது. நான் நாட்டாரியல் என்ற துறையைப்பற்றியே கேள்விப்பட்டதில்லை. ஒரு மெல்லிய ஆர்வத்தால்தான் யூடியுப் உரையைப் பார்த்தேன். ஆனால் திகைக்கவைக்கும் அளவுக்குச் செய்திகள் வந்துகொண்டே இருந்தன. வரலாறு என்றால் ஏதோ சோழர்கள் பாண்டியர்கள் காலத்து விசயம் என்ற நம்பிக்கை இருந்தது.

நம்மைச்சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் வரலாறுதான். நமக்கு நம்மைப்பற்றி தெரிவதே வரலாறுதான். நாம் நம்முடைய ஆசாரங்களையும் குலச்சாமிகளையும் அறிந்திருக்கவில்லை. நம்முடைய வாழ்க்கைமுறையைப் பற்றியும் தெரியாது. எங்கோ உலகம் முழுக்க உள்ள சின்னச்சின்ன விசயங்களையெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறோம். நம் வாழ்க்கையைப் பற்றி தெரியாது. அதை தெரிந்துகொண்டால்தான் நாம் உண்மையிலேயே வாழ்க்கையை அறிய ஆரம்பிக்கிறோம். அந்த தெளிவை உருவாக்கிய சந்திப்பு

நன்றிகள்

கே.என்.கணேசமூர்த்தி

முந்தைய கட்டுரைஇதிகாசமா ? புனைவா ?- முதற்கனல்
அடுத்த கட்டுரைபிள்ளைகெடுத்தாள் விளை -சுந்தர ராமசாமியின் பிற்போக்குப் பார்வையா?