குளிர்ப் பொழிவுகள் -1
இந்தியப் பயணம் 6 – அகோபிலம்
நோய்க்காலமும் மழைக்காலமும்-1
காலை ஐந்து மணிக்கே கிருஷ்ணன் எல்லாரையும் எழுப்ப ஆரம்பித்துவிட்டார். ஆனால் நான்குமணிக்கே கதிர் முருகன் அனைவரையும் எழுப்பிவிட்ட செய்தி அதன்பின்னர் தெரியவந்தது. நான் நன்றாக இழுத்துப்போர்த்திக்கொண்டு ஆழ்ந்து உறங்கியிருந்தேன்.வசதியான அறைதான். ஆனால் ஜன்னல்திரை பொன்னிறமானது. அறைக்குள் காலை ஒளி வந்துவிட்டது என்னும் பிரமையை இரவில் அரைவிழிவிழிப்பில் உருவாக்கிக்கொண்டே இருந்தது.
நல்ல குளிர். இன்னொரு தூக்கம் தேவையாக இருந்தது. இத்தனைக்கும் முந்தையநாள் ஒன்பதுமணிக்கெல்லாம் தூங்கிவிட்டிருந்தேன். ஆனால் ஆறுமணிக்கு கானுலா என்று ஏற்பாடாகியிருந்தது. எங்கள் விடுதியிலேயே எல்லாம் ஒருக்கியிருந்தனர். காலைத்தேநீருக்குப் பின் ஆறுமணிக்கு கிளம்பினோம்.
எங்கள் காரில் அருகிருந்த வனத்துறை அலுவலகத்திற்குச் சென்றோம். செல்லும் வழியிலும் காடுதான். ஒரு கீரி சாலைக்குக் குறுக்காக ஓடியது. இருபக்கமும் குளிரில் விரைத்தவை போல மரங்கள் அசைவற்று நின்றிருந்தன. மெல்லிய வெளிச்சம் வானிலிருந்து பரவி காட்சிகளைத் துலங்கச் செய்துகொண்டிருந்தது. காட்டுக்குள் ஒளிபரவும் பேரழகு எத்தனை பார்த்தாலும் சலிக்காதது. பொன்னொளி செறிந்து பச்சைநிற ஒளியாகும் விந்தை. ஒரு மென்மையான நிதானமான சேர்ந்திசைபோல.
பி.ஆர்.ஹில்ஸ் ஒரு விந்தையான இடம். அதன் பாதி கர்நாடகத்தையும் எஞ்சியபாதி ஈரோடு மாவட்டத்தையும் சார்ந்தது. புலிகள் சரணாலயம். அதன் நடுவேதான் பிலிகிரி ரங்கநாதர் ஆலயம் உள்ளது. அந்த ஒரு காரணத்தால்தான் நடுவே ஊரை அனுமதித்திருக்கிறார்கள்.
காலைவேளையில் அங்கே எங்கும் மக்கள் நடமாட்டம் இல்லை. இளவெயில் எழுந்துகொண்டிருந்தது. கிருஷ்ணன் அங்கே ஒரு சிமிண்ட் பெஞ்சில் ஸ்டைலாக அமர்ந்தார். அந்த பெஞ்சின் குளிர் அவரை நடுங்கவைக்கிறது என்று தெரிந்தது, சமாளித்துக்கொண்டிருந்தார்.
ஜீப் வந்தது, அனைவரும் ஏறிக்கொண்டோம். ஒன்றரை மணிநேரம் காட்டுக்குள் ஓர் உலா சென்றோம். மண்பாதைகளினினூடாக வளைந்து வளைந்து சென்ற உலாவை ஒரு காலைநேர உடற்பயிற்சியாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவரும் தனித்தனியாக துள்ளி அதிர்ந்துகொண்டிருந்தோம். புலரியில் காடு அக்கணம் படைக்கப்பட்டதுபோலிருக்கிறது. அத்தனை மரங்களும் விழிகளும் சித்தமும் கொண்டுவிட்டதுபோல. முற்றாகச் சூழ்ந்துகொள்ளப்பட்டதுபோல் ஒரு பேருணர்வு.
இப்படி காலையில் காட்டுக்குள் சென்ற பல பயணங்கள் நினைவில் ஓடின. உறுதியாக கான்விலங்குகளைப் பார்க்கும் வாய்ப்புள்ளது பரம்பிக்குளம் காட்டில்தான். உண்மையில் அது நான்குபக்கமும் ஊர்களால் சூழப்பட்ட ஒரு காடு, அங்கே விலங்குகள் சிறையுண்டிருக்கின்றன.இது பல எல்லைகளிலாக விரிந்து கிடக்கும் பெரிய காடு. இதன் ஒருபகுதி நாகரஹோலே சரணாலயம் வரைச் செல்கிறது. இங்கே விலங்குகள் நீண்ட பாதைகளில் அலைகின்றன
பி.ஆர்.ஹில்ஸ் பகுதிக்கு ஒரு சிறப்பு உண்டு. இது மேற்குதொடர்ச்சி மலை கிழக்கு தொடர்ச்சிமலை இரண்டயும் இணைக்கும் காடு. இங்கே வனக்காவலர் தங்குமிடங்கள் ஏராளமாக இருந்திருக்கின்றன. பெரும்பாலானவை கைவிடப்பட்டு பாழடைந்திருந்தன. புலிகள் சரணாலயமாக ஆக்கப்பட்டபின் பல அலுவலகங்களை மூடியிருக்கிறார்கள். ஆங்காங்கே தென்பட்டவர்கள்கூட பெரும்பாலும் தற்காலிக ஊழியர்கள்.
ஆகவே பெரிய விலங்குகள் கண்ணுக்குப்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான். ஆனால் சொல்லவும் முடியாது, எந்நிலையிலும் எதுவும் நிகழலாம் என்பதே கானுலாவின் முதன்மையான அழகு. அது உருவாக்கும் பதற்றம்தான் இன்பங்களில் தலையாயது. பறம்பிக்குளத்தில் காலை ஏழுமணிக்கு நடுச்சாலையில் சிறுத்தை படுத்துக்கிடந்திருக்கிறது. மாலை ஆறுமணிக்கு திருநெல்லியில் புலி வாலைநீட்டியபடி நின்று எங்களை ‘போடா புல்லே’ என்பதுபோல பார்த்திருக்கிறது.
விழிகளை அலையவிட்டு, பேச்சில்லாமல் , பார்த்துக்கொண்டே சென்றோம். முதல்விலங்கு சாலையோரம் செருக்கடித்து நின்றிருந்த காட்டெருது. மதர்த்த களிறு. திமிர்பரவிய கண்களால் பார்த்தபடி ஒரு குளத்தின் அருகே நின்றிருந்தது.பெரிதாக எங்களை பொருட்படுத்தவில்லை. செவிகளை மட்டும் கொஞ்சம் முன்கோட்டியது. இந்தக்காட்டில் அதைவெல்ல விலங்கே இல்லை. சிறுத்தை அருகே வராது. புலியும் ரொம்ப யோசிக்கும்
மான்கூட்டங்களை பார்த்தோம். அவை அஞ்சவில்லை, செவிகோட்டி எங்களை நோக்கின. கொம்பு உதிர்ந்த களிற்றுமான் ஒன்று எங்களை மிக எச்சரிக்கையுடன் பார்த்துக்கொண்டிருந்தது. மந்தை அதை நம்பி வாலை மட்டும் விடைத்து அசைத்தபடி நின்றது. மான்கள் நின்றிருக்கையில் வில்லில் பூட்டப்பட்ட அம்புகள் போலிருக்கின்றன. இப்போது வேட்டை அனேகமாக நின்றுவிட்டது என்பதற்கான சான்று மான்களின் இந்த அச்சமின்மை
அரிதாக காணக்கிடைக்கும் ஒரு மானைப்பார்த்தோம். கேழைமான் என்று எங்களூரில் சொல்வார்கள்.[ Muntiacus muntjak] ஆங்கிலேயர் இட்ட பெயர் barking deer. நாய்வண்ணம். பதுங்கிச்செல்லும் குறுகல் நடை. வாலை அடித்து ஓர் ஒலியெழுப்பும், அது குரைப்பு போலிருக்கும். மற்றமான்களைவிட முக்கால்பங்குதான் இருக்கும். மிகமிக அஞ்சுவது. தாவி ஓடாது, புதர்களில் ஒளிந்துவாழும். கேழையாடு என சிலர் சொல்கிறார்கள் என்று கிருஷ்ணன் சொன்னார்.
காட்டில் சுற்றி வந்தபோது கேழைமான்களை அடிக்கடி பார்த்தோம். மலையாளச் சினிமாப்பாட்டில் அபலைப்பெண்ணை கேழைமான் என்று அடிக்கடிச் சொல்வதுண்டு.கேழக்கண்ணி, கேழமான்மிழி என்றெல்லாம் செவியில் விழும்.இன்னொருவகை மான் உண்டு, சருகுமான் என்று அழைக்கிறார்கள். இன்னும் சிறியது. rabbit deer என்று வெள்ளையர் பெயரிட்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் இவை இறைச்சிக்காக கொன்று அழிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது வேட்டை தடுக்கப்பட்டமையால் கொஞ்சம் பெருகிவருகின்ரன
காட்டில் புலி எதையும் பார்க்கவில்லை. மான்களின் உற்சாகமான உலாவலைப் பார்க்கையில் புலிகள் இல்லை என்று தோன்றியது. ஆனால் ஒரு காட்டுக்கு புலி அதன் அளவு, விலங்கு எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டே அமைகிறது. புலி தன் வேட்டைமுடித்து சென்றபின் மான்கள் அஞ்சவேண்டிய எதுவுமில்லை.
திரும்பி வனத்துறை அலுவலகம் வந்தோம். ஒரு காண்டீன் திறந்திருந்தது. உள்ளே கொதிக்கும் நீரின் இனிய மணம். டீயும் காபியும் மலைப்பகுதியில் value added பானங்களாகிவிடுகின்றன. காபிக்கு சொல்லிவிட்டு அது வருவதற்குள் ஒரு புட்டி தேன் வாங்கினேன். அதை ஆளுக்கு இரண்டுமூன்று அவுன்ஸ் குடித்தோம். சட்டென்று பசி அடங்கியது. ராஜமாணிக்கம் தேனில் கருப்புத்தேனீர் கலந்து குடித்தார். காய்ச்சி செறிவாக்கப்படாத மலைத்தேன். அது கடைத்தேன்போல பொட்டிலறையும் இனிப்பு கொண்டிருக்காது. நாக்கில் பிசுக்கென ஒட்டும், ஒரு மெல்லிய ஊன்மணம் கொண்டிருக்கும், தொண்டையை கரிக்கும். ஆனால் அதுவே தேன்.
ஒரு காட்டை ‘உண்டு’ பார்ப்பதும் ஓர் அனுபவம். காட்டில் நான் எதையாவது தின்றுவிடுவேன். பெரும்பாலும் புளி. அரிதாகச் சில காய்கள். சென்றமுறை ஓர் ஆரஞ்சு. நாவாலும் காட்டை அறிவதுதான் அது. காட்டுச்சுனைகளின் நீரே காட்டின் சுவைகொண்டதுதான். ஆனால் தேன் போல காட்டை சுவைக்கச்செய்வது பிறிதொன்றில்லை.
விடுதிக்கு வந்து குளித்து உடைமாற்றி அறையை கையளித்துவிட்டு பிலிகிரி ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்றோம். ஒரு கிலோமீட்டர் அப்பால்தான் ஆலயம். உண்மையில் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட காட்டுக்குள் அந்த இடம் மட்டும் ஊராக திகழ்வதே அந்த ஆலயத்தால்தான்.
பிலிகிரி ரங்கநாதர் கோயிலுக்கு ஆந்திர மாநிலத்திலுள்ள அகோபிலம் நரசிம்மர் ஆலயங்களுடன் அணுக்கமான ஒற்றுமை உண்டு. அகோபில ஆலயங்கள் செஞ்சுக்கள் என்னும் பழங்குடியினருக்கு உரியவை, இன்றும் அவர்களுக்கு அங்கே முதலுரிமை. அவர்கள் அங்கு நரசிம்மருக்கு ஆடுவெட்டி பலி கொடுக்கிறார்கள். செஞ்சு குடியைச் சேர்ந்த பெண்ணை நரசிம்மர் மணம் செய்தார் என்னும் தொன்மம் அங்கே உள்ளது. செஞ்சுலட்சுமி என்று அன்னை அழைக்கப்படுகிறார்.இந்தியப் பயணம் 6 – அகோபிலம்
பிலிகிரி ரங்கநாதர் சோளகர் [சோலிகர்] பழங்குடிகளுக்கு உரிய பெருமாள். அவர்களுக்கே முதலுரிமை. இங்கு வந்து வழிபடுபவர்களிலும் அவர்களே மிகுதி. சோளகர் குடியைச் சேர்ந்த குசுமபாலே என்னும் இளவரசியை ரங்கநாதர் மணம் புரிந்துகொண்டார் என்றும் ஆகவே அவர் சோளகர்களுக்கு மாப்பிள்ளை முறை என்றும் பழங்குடித் தொன்மம் உள்ளது. இங்கே அவர்களின் வழிபாட்டிலும் ஒரு சிறப்பியல்பு உண்டு. புதுமாப்பிள்ளைக்கு அளிக்கும் சத்துமாவு உருண்டையை ரங்கநாதனுக்குப் படைக்கிறார்கள்.
பிலிகிரி என்ற பெயரே கலவைத்தன்மையை காட்டுவது. இந்த மலையின் பழங்குடிப்பெயர் பில்லுகல்லு. வெள்ளைக்கல் என்று பொருள். பில்லுகல்லுபெட்டா என்றால் வெள்ளைக்கல்மலை. அது சம்ஸ்கிருதத்தில் ஸ்வேதாத்ரி ஆகியது. கன்னடத்தில் பிலுகிரிபெட்டா ஆகியது.
சோளகர்கள் தொல்பழங்காலத்தில் அவர்கள் இங்கே வழிபட்டது இரண்டு பெரும்பாதங்களை. அந்த பாதங்கள் இன்று ரங்கநாதர் பாதங்களாக வழிபடப்படுகின்றன. ஆனால் ஆயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்பு, கிபி ஆறாம் நூற்றாண்டில் கங்கர்களின் காலத்திலேயே பிலிகிரிப் பெருமாள் கோயில் வைணவப்பெருமரபுக்குள் வந்துவிட்டது. அன்றுமுதல் பெருமதவழிபாடும் நாட்டார்வழிபாடும் அருகருகே முரண்பாடில்லாமல் தொடர்கின்றன.
பிரம்மாண்டபுராணத்தின் தீர்த்தங்களைப் பற்றிய விவரிப்பில் இந்த ஆலயம் செண்பகாரண்யம் என்றும் கஜாரண்யம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ஹொய்ச்சல மன்னன் விஷ்ணுவர்த்தனர் கட்டியது இந்தக் கல்லாலயம். திராவிட கட்டிடப் பாணி கொண்டது.
ஸ்வேதாச்சல மகாத்மியம் என்னும் நூல் இந்த மலையின் புராணத்தை விவரிக்கிறது. இங்கே ரங்கநாதரை வசிட்டர் நிறுவியதாக அந்நூல் கூறுகிறது. சோளகர்களுக்கே உரிய பலவகையான மலைவழிபாட்டுச் சடங்குகளை இங்கே காணலாம். ஆஞ்சநேயர் போன்ற துணை ஆலயங்களிலும் செல்லும் பாதையிலுள்ள சிற்றாலயங்களிலும் சோளகர்களின் பூசகர்களே பூசைசெய்கிறார்கள்.
படியேறிச் செல்லும்போது ஓர் ஆஞ்சநேயர் ஆலயத்தில் பழங்குடிப் பூசகர் அவர்களின் பாடலை பாடி பூசைசெய்விப்பதை கண்டேன். குறிசொல்வதும் இங்கு நடக்கிறது. நரித்தோலை தலையில் சூடி கல்மணிமாலை அணிந்த பழங்குடிப் பூசகர்களும், குந்திரிக்கப்புகை போடும் பூசகப்பெண்மணிகளும் படிகளில் நிறைய தென்படுகிறார்கள்.
தொன்மையான ஆலயம். ஒரு குன்றின்மேல் உள்ளது. கீழிருந்து நூறு படிகள் ஏறிச் செல்லவேண்டும். மையச்சாலையில் கடைகள். இருபக்கமும் கல்மண்டபங்கள் வரிசையாக இருந்தன. பழங்காலச் சத்திரங்கள் அவை, இப்போது கைவிடப்பட்டு பாழடைந்து கிடக்கின்றன.
நான் இப்படிப்பட்ட கல்மண்டபங்களை பல தொன்மையான ஊர்களில் பார்த்திருக்கிறேன். குற்றாலத்திலும் உள்ளன. இவற்றின் அழகை, இவை அளிக்கும் வரலாற்றுணர்வை ஒரு சுற்றுலாக்கவற்சியாகக்கூட எவரும் எண்ணமாட்டேன் என்கிறார்கள். குழந்தைகளுக்கு இவை அளிக்கும் பரவசம் மிக அரிதானது. மிக அழகிய நினைவாக நீடிக்கக்கூடியது. இவற்றை முறையாகப் பேணினால் ஓர் ஊரின் தொன்மையை, வரலாற்றுநினைவை பேணமுடியும். அந்த ஊருக்கு ஒரு தனித்தன்மையை அளிப்பது வெறும் வ்ணிகநோக்கிலேயே லாபகரமானது.
இந்தியாவின் உண்மையான பிரச்சினை வரலாற்றுணர்வில்லாமை அல்ல, தொன்மைமேல் மதிப்பில்லாமையும் அல்ல, அழகுணர்வு இல்லாமைதான். சற்றேனும் அழகுணர்வு உள்ளவர்கள் இக்கல்மண்டபங்களுக்கு பதிலாக அசட்டு மஞ்சள்நிறம் பூசிய சதுரவடிவ கட்டிடங்களைக் கட்டி நிரப்ப மாட்டார்கள்
இக்கல்மண்டபங்களை சற்று பழுதுபார்க்கலாம். அவற்றின் உறுதித்தன்மையை சோதித்து தேவையென்றால் மேலதிக தாங்குகள் அளிக்கலாம். அவற்றை பொதுப்பயன்பாட்டுக்கு அளிக்கலாம். அங்கே கல்மண்டபங்கள் அன்றி வேறு கட்டிடங்களே இல்லாமல் செய்தால் அந்த இடம் அளிக்கும் வரலாற்றுணர்வும் அழகனுபவமும் மிகமிக அபூர்வமானவை.
ஐரோப்பாவும் ஜப்பானும் தன் பழமையை அப்படியே பேணிக்கொள்வதன் வழியாக சுற்றுலாவில் கோடிகளை ஈட்டுகின்றன. நாம் நம் பழமையை சூறையாடிக்கொண்டிருக்கிறோம். திரும்ப அடையவே முடியாதபடி அழிக்கிறோம்.அழகுபடுத்துவது, வசதிகளை அளிப்பது என்ற பேரில் நம் தொன்மையான ஆலயங்களின் தனித்தன்மைகளை சீரழிக்கிறோம். இந்தியாவின் தொன்மையை கண்கூடாக காட்டும் எந்த நகரப்பகுதியும் இன்று இந்தியாவில் இல்லை என்பதே உண்மை.
அடர்காட்டுக்குள் ஒரு மலையுச்சிமேல் அமைந்திருக்கிறது பிலிகிரி ரங்கநாதர் ஆலயம். நாம் காரில் அதன் மறுஎல்லை வழியாக,அதாவது தக்காண பீடபூமி வழியாக நுழைகிறோம். மறுபக்கம் கோயிலின் எல்லை விளிம்பில் நின்றால்தான் நாம் கிட்டத்தட்ட வானில் நிற்பது தெரியும். மிக ஆழத்தில் செறிந்த பசுங்காட்டின் அலைகளைக் காணலாம். அதன்மேல் முகில்பிசிறுகள் ஓடிக்கொண்டிருந்தன
இந்த ஆலயச்சூழலின் கிராமியத்தன்மை அழகானது. பலவண்ண கயிறுகளை குவித்துப்போட்டு விற்றுக்கொண்டிருந்தனர். என்னென்ன வண்ணங்கள் என்று பார்த்தேன். வண்ணக்கயிறுகளை வாங்கி பூசாரியிடம் கொடுத்து பலவகையான முடிச்சுகளை போட்டு அணிந்துகொள்கிறார்கள். அதிரசம் விற்பனைக்கு இருந்தது. கூடவே சோற்று உருளைகள். ரங்கநாதனுக்கான சத்துணவுப்படையல். அன்னப்பிரசாதம் என்றனர். எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை.
பிலிகிரி ரங்கநாதர் ஆலயத்தின் தொன்மையான கல்லமைப்பை உள்ளே வைத்து கான்கிரீட்டில் எந்த அழகும் இல்லாத ஆபாசமான ஒரு கோயிலை கட்டிக்கொண்டிருந்தனர். கட்டுமான வேலை நடப்பதனால் உள்ளே செல்ல முடியவில்லை. ஒருமுறை சுற்றிவந்து பின்பக்கம் சென்று மலையுச்சியில் நின்று கீழே நோக்கிவிட்டு திரும்பிவிட்டோம்.
ஆனால் அங்கே ஒரு பக்திச் சூழ்நிலை நிலவியது. வெளியே அமர்ந்திருந்த பாடகர்கள் மிக இனிமையாக பஜனை பாடினர். உள்ளே நிறைய சடங்குகள் நடந்துகொண்டிருந்தன. பெரும்பாலானவர்கள் பழங்குடி மக்கள் என தோன்றியது.குரவையோசைகள்எழுந்துகொண்டேஇருந்தன.ஏராளமான உற்சாகமான குழந்தைகள்.
எங்கள் பயணத்தின் இலக்குகள் முடிந்துவிட்டன. திரும்பிச் செல்லும்வழியில் சிவசமுத்திரம் சென்று இரண்டு அருவிகளைப் பார்த்துவிட்டு செல்லலாம் என்று திட்டமிட்டோம். சிவசமுத்திரம் அருவிகள் என அறியப்படும் இவை பாராச்சுக்கி, ககனச்சுக்கி என அழைக்கப்படுகின்றன.உள்ளூரில் அக்கா தங்கை என்று சொல்கிறார்கள்.
காவேரிதான் இங்கே இரண்டு அருவிகளாக பொழிகிறது. காவேரியின் கிழக்கு கிளை பாராச்சுக்கி என்றும் மேற்குக்கிளை ககனச்சுக்கி . இந்த இரு கிளைகளால் சிவசமுத்திரம் பகுதி ஒரு ஆற்றிடைக்குறையாக மாறியிருக்கிறது. காவேரிப்பெருக்கானதனால் நீர் பொங்கிச்சரியும் பேரருவிக்கூட்டங்கள் இவை.
மதியப்பொழுதிலும் அருவியைக் காண கூட்டமிருந்தது. கண்களை நிறைக்கும் விரிவுக்காட்சி பாராச்சுக்கியை பார்ப்பது. எத்தனை அருவி என எண்ண முடியாது, ஐம்பது நூறு அருவிகள் இருக்கலாம். வெண்ணிறக் குளிர்க்கொந்தளிப்பு. வெறுமே எண்ணங்களை அவிழ்ந்து பரவவிட்டு நோக்கி நின்றிருப்பதே செய்யக்கூடுவது
அருகே ஹஸ்ரத் மர்தான் கைப் அவர்களின் தர்கா உள்ளது. அதன்பின்பக்கம் வழியாகவும் அருவியை பார்க்க ஒரு கோணம் உள்ளது. கைப் அவர்களின் கபரிடம் உண்மையில் ஆற்றுக்குள் நீர்ப்பெருக்கின் விளிம்பில் கட்டப்பட்டுள்ளது. அங்கே இறங்கிச்செல்ல பாதை மூடப்பட்டுள்ளது. அனுமதி பெற்றே செல்லவேண்டும். ஆனால் பலர் இறங்கிச் சென்றிருப்பதை கண்டோம்
மேலே இன்னொரு பெரிய தர்கா உள்ளது. அங்கிருந்து பார்க்கலாம். அங்கே முக்கியமான விஷயமே காவேரியில் பிடித்த மீனை பொரித்து உண்பதுதான். மிக அழுக்காக இருந்த அந்த இடத்தில் மீன்வியாபாரம் செய்பவர்கள், கடைவைத்திருப்பவர்கள் அங்கே வந்து குடியேறியவர்களாக இருக்கலாம்.
ககனச்சுக்கி இரண்டு பெரிய அருவிகளாலானது. செங்குத்தாக மலையிலிருந்து வழிந்திறங்கும் நீர் வெண்புகையாக மேலெழுகிறது. அங்கு நின்று அருவியை முகிலாகப் பார்க்கமுடியும். அங்கே நின்றால்தான் கீழே இருக்கும் கைஃப் அவர்களின் வாழ்விடம் எத்தனை அற்புதமான இடத்தில் இருக்கிறது என்று தெரியும்.
இந்த சூஃபிகளின் தர்காக்கள் இருக்குமிடத்தைப் பார்க்கையில் எல்லாம் வியப்பு ஏற்படுகிறது. எப்படி ஒரு மனிதனை இறையருளாளன் என்று சொல்லமுடியும் என்று அடிக்கடிக் கேட்கப்படுவதுண்டு. இந்த அருளாளர்கள் வாழ்ந்து மறைந்த இடங்கள் மிகமிகத் தனியானவை, மிக அற்புதமான இயற்கையழகு கொண்டவை. பலசமயம் புத்திபேதலிக்கவைக்கும் பிரம்மாண்டத்தை கண்முன் காட்டுபவை. நாம் அவற்றை நெடுநேரம் பார்க்கமுடியாது. மிகவிரைவிலேயே நம் உள்ளம் கலங்கி, அமைதிகொண்டு, நிறைந்து பின் எடைகொள்ளத் தொடங்கிவிடுகிறது. அருவியைப் பார்ப்பவர்கள் ஒரு கட்டத்தில் ‘கிளம்புவோம்’ என முணுமுணுக்கிறார்கள். அங்கே வாழ்பவர்கள் அருவியை ஏறிட்டே பார்ப்பதில்லை.
உண்மையில் அல்லாவின் பேரருளை நேரிலெனக் கண்டு அங்கிருக்கும் ஒருவரால்தான் அவ்விடத்தில் தனித்துவாழமுடியும். அங்கே அவர்கள் வாழ்ந்ததே அவர்கள் மாமனிதர், இறையருள்கொண்டவர் என்பதற்கான சான்று. கைப் அவர்களின் வாழ்விடம் அப்படிப்பட்ட ஒரு பயங்கர அழகு கொண்டது. அவர் கண்முன் தண்ணீர் வாழ்வாகவும் சாவாகவும் அழ்காகவும் பயங்கரமாகவும் கொந்தளித்துக் கூத்தாடிக்கொண்டிருந்தது
இரவுக்குள் மீண்டும் ஈரட்டிக்கே திரும்பிவிடவேண்டும் என்று திட்டம்.மாலையில் அ.கா.பெருமாள் அவர்களின் இணையவழிச் சந்திப்பு இருந்தது. வழியிலேயே செல்பேசி அலைத்தொடர்பு கிடைக்கும் இடத்தில் அமர்ந்து பேசி முடித்துவிடலாம் என்று முடிவுசெய்தோம். முந்தைய குடகுப் பயணத்தில் அமர்ந்து உணவுண்ட அதே குளத்தின்கரையை வந்தடைந்தோம் நோய்க்காலமும் மழைக்காலமும்-1
அந்தி சரிந்துகொண்டிருந்தது. ஆறுமணிக்கு நல்ல செவ்வெளிச்சம் இருந்தது. அ.கா.பெருமாள் அவர்களிடம் நான் பேசினேன். அவருடைய உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். இருட்டியபின் காரிலேறி அந்த உரையாடலை கேட்டுக்கொண்டே சென்றேன். ஈரட்டியை இரவு எட்டுமணிக்கெல்லாம் சென்றடைந்தோம்
அப்பயணத்தில் பார்த்தவற்றை எண்ணிக்கொண்டேன். இருபேரரசுகளின் மையப்புள்ளியாக இருந்த இந்து ஆலயம்,சமண கல்விநிலையம், காடு, பழங்குடிகளுக்கும் பெருமரபுக்கும் இடையே நின்றிருக்கும் பேராலயம், சூஃபி ஒருவரின் விந்தையான தவநிலை. அ.கா.பெருமாள் அவர்களின் பேச்சு அவற்றையெல்லாம் தொட்டுச் செல்வதுபோலிருந்தது
அன்றிரவு ஈரட்டியில் படுக்கையில் அருவிதான் கண்களுக்குள் வெண்கொந்தளிப்பாக பெய்துகொண்டிருந்தது.
[நிறைவு]