ஆரோக்ய நிகேதனம்- கடிதம்

தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’

மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

முன்று நாட்களாக ஆரோக்கிய நிகேதனம் படித்துவிட்டு நள்ளிரவு முடித்தேன். யதார்த்த மனிதர்கள் என்றுகூறி கடந்து செல்லும் மனிதர்களின் ஆழங்களை கூறி செல்லும்  கதை. எத்தனை நீளமான கதை என்று மலைத்துப் போய்தான் ஆரம்பித்தேன். எடுத்ததை வைக்காமல்   நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை தனக்குள் இழுத்துக்கொண்ட நாவல்.  ஜகத் மஷாயில் ஆரம்பித்து ஜீவன் ,மஞ்சரி ,பூபி,ஆத்தர் பெள ,வனவிஹாரி ,ரங்லால் ,ப்ரத்யோத் மஞ்சு ,சசி மற்றும் பலர் என வளர்ந்துகொண்டே செல்லும் கதாபாத்திரங்கள். கல்கத்தாவின் அருகில் இருக்கும் ஒரு ஊரின் பாரம்பரிய  முறையான ஆயூர்வேதத்தை கொண்டு தன் மக்களை நோயிலிருந்து ஆற்றுபடுத்தும் அல்லது ஆற்றுபடுத்த முயற்சிக்கும் ஜீவன் மஷாயின் பார்வையில் விரியும் நாவல்.

ஜகத் மஷாயிக்கும் அவரது தந்தைக்குமான உறவாகட்டும் குரு சிஷ்ய உறவாகட்டும் அவருக்கும் அவரது பிள்ளைக்கும் வாய்க்காமல் போனதற்கு ஆத்தர் பெள மிக பெரிய  காரணமாகிறாள். அவள் வனவிஹாரியின் வாழ்க்கையின் அனைத்தையும் நியாயபடுத்துகிறாள். அவனின் எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்கிறாள் மரணத்தை தவிர ஆனால் அதற்கும் ஜீவன் மஷாயை பொறுப்பாக்குகிறாள்.

ஜீவனின் வாழ்க்கையில் திருப்பமாக அமைவது பூபியை அவர் மஞ்சரிக்காக தாக்கும் நிகழ்வே. அதன் தீவிரம் அவர் வாழ்க்கையின் இறுதிவரை வரும் நிதானத்தின் அடிதளமாக எனக்கு தோன்றியது. அதன் பிறகு அவர் எச்சூழ்நிலையிலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுடனும் மனிதர்களுடனும் முரட்டு மோதல் புரியவேயில்லை.

ஜகத் மஷாய்க்கும் ஜீவனுக்குமான உறவு தந்தை மகனை விட குரு சிஷ்யதனத்தில் பொலிவு கூட்டுகிறது. அவரின் மனமும் புத்தியும் சேருமிடத்தை ஜீவன் சென்றடைகிறார்.
ஜீவனின் மருத்துவ ஞானம் ரங்லாலினால் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. அலோபதியின் அடிப்படைகளை அறிந்து கொள்ளும் அவரால் பிண அறுப்பு ஏற்ப்படுத்தும் ஒவ்வாமையிலிருந்து வெளிவர முடியவில்லை. ரங்லால் தனது நம்பிக்கை பொய்த்ததென்றாலும் ஜீவன் மக்ஷாய்க்கு அடிப்படை அலோபதியை கற்றுதந்ததில் திருப்தியடைகிறார். பின்னாட்களில் ஜீவனுக்கு நாடி ஞானத்துடன் அதுவும் சேர்ந்தே கைகொடுக்கிறது.
நோயுற்றவர்களை பற்றி அவர் நினைத்துக்கொண்டேயிருக்கும் யாவற்றிலும் அவர்களின் வாழ்வியல் முறைகளும், அபிலாஷைகளும், இருக்குமிடங்களும், சுற்றத்தார்களும், உணவு பழக்க வழக்கங்களும் என அனைத்தையும் கொண்டே நோயின் தன்மையையும் அது தரப்போகும் விளைவுகளையும் கணக்கிடுகிறார். பரம்பரை ஞானமும் தற்கால விஞ்ஞானமும் மனிதர்களுடனான பிணைப்பின்மூலம் அறியப்படும் உண்மைகளும் ஒரு மருத்துவனுக்கு எவ்வளவு தேவையாகிறது?. இன்றைய மருத்துவத்தின் மிகப் பெரிய குறையல்லவா அது?. வெறும் விஞ்ஞானம் மட்டுமேயான மருத்துவர்கள்..உடலின் உயிரை மட்டும் தக்க வைத்துச் செல்லும் மருத்துவம்.

ஜீவன் மக்ஷாய் நாடகத்தில் அபிமன்யு அழுவதை கண்டு சத்தம் போடும் இடம் மட்டுமே போதும் ஜீவனின் மனம் மரண தேவதையை ஆராதிப்பதை உணர்வதற்கு. அவரை மரணதேவதையின் மறுஉருவமாகவே பார்க்கும் ப்ரத்யோத் என்ன மனிதன் இவன் மரணத்தை அறிவித்து செல்லும் மருத்துவன். மருத்துவன் என்பவன் ஆறுதலாயும் நம்பிக்கை தருபவனாயும் அல்லவா இருக்க வேண்டும் என்கிறான். இதில் எங்கேயும் அவர் அவ்வாறு அறிவிப்பதை நேரில் பார்க்கவேயில்லை.கேட்டறிந்து ஓடிவந்து இவனிடம் அடைக்கலம் பெறும்போது மட்டுமே அறிகிறான். ஜீவன் சரியாக தன் மரணத்திற்கு முன் அறிவிப்பது மஞ்சரியின் இறப்பு.

மஞ்சரியிடம் தன்னை நிரூபிக்க வெள்ளை குதிரை, ஆர்தர் பௌ-விற்கு பல்லக்கு எல்லாம் வாங்கிய ஜீவன் காலத்தின் பாதையில் இன்று காணாமல் போகிறார். அதெல்லாம் இருந்தும் அவர் செல்லாமல் இருந்ததற்கு அவர் ஒருவேளை மஞ்சரியின் வாழ்வின் தோல்வியை அறிந்துகொண்டது கூட காரணமாக இருக்கலாம்.

இறுதியில் மஞ்சரியை பார்க்கும்போது பறவையின் நிழலென கடந்து செல்கிறார். அத்தனை நேரம் இரைச்சலாயிருந்த அவளும் மரண அறிவிப்பை அவரிடமிருந்து பெற்று அமைதிக்கு செல்கிறாள்.
ஆர்தர்-பௌ  ஜீவன் மக்ஷாய்க்கும் தனக்குமிருக்கும் இடைவெளியை சண்டையிட்டாவது நிரப்பிக்கொள்ள வாழ்நாள் முழுக்க முயன்று தோற்றுபோகிறாள். அவளின் அன்பின் முன் முழுமையாக தன்னை தரமுடியாமல் ஜீவன் மஷாயும்தான்.
ஜீவன் மனிதர்களை, அவர்களின் வாழ்க்கையை, குறைகளை, நோயை, நோய்தீர்க்கும் வழியை, மரணத்தை ஆகிய அனைத்தையும் நேசிக்கிறார். அவருடன் அவர்போலவே மரணத்தை ஏற்றுகொள்கிறவர்கள் ரானாவும் மடாதிபதியும் மஞ்சரியும்தான்.
விஜயலக்ஷ்மி
சென்னை.

ஆரோக்யநிகேதனம்- சௌந்தர்

ஆரோக்கிய நிகேதனத்தின் கண்ணீர்

ஆரோக்கிய நிகேதனம், வனவாசி -கடிதங்கள்

ஆரோக்கிய நிகேதனம் – கடிதம்

ஆரோக்கியநிகேதனம்

ஆரோக்கியநிகேதனம்-கடிதம்