காவேரியின் முகப்பில்-2

எங்கள் பயணத்திட்டம் தொடங்கியதே கிருஷ்ணன் இணையத்தில் நாங்கள் பார்க்காத ஒரு சமணத்தலம் அகழ்வாய்வில் கண்டடையப்பட்டிருப்பதைப் பற்றிய செய்தியை வாசித்தபிறகுதான். சில மாதங்களாகவே சொல்லிக்கொண்டிருந்தார். ஊரடங்கு ஓய்ந்ததும் கிளம்பிவிட்டோம். வழியில்தான் மற்ற இடங்கள். செல்லும்போதும் வரும்போதும்.

உச்சிவெயில் எரியத்தொடங்கியபோது அரெதேபூர் சமணக்குன்றுகளைத் தேடிச்சென்றோம். அங்கே அரெதெபூர் என்று கேட்டு தெரியவில்லை என்ற பதிலை பெற்று அலைந்த ஒருவர் இணையத்தில் புலம்பியிருந்தார். அரேட்டிபுரா என்றால்தான் தெரியுமாம். அவர் போட்ட கூகிள் வரைபடம் எங்களுக்கு வழிகாட்டியது.

ஆனால் நாங்களே மண் சாலை வழியாக சுற்றியலைந்து சம்பந்தமில்லாமல் இன்னொரு மலையடிவார அம்மன்கோயிலுக்குச் சென்றோம். அங்கே ஒரு குடும்பம் அந்த உச்சிவெயிலில் சாமிகும்பிட வந்திருந்தது. மலைஅடிவாரத்தில் அலுவலககம். அங்கே இருந்தவர் தோராயமாக வழிகாட்டினார். அதன்பின் தேடித்தேடிச் சென்றோம். இத்தனைக்கும் குன்றின்மேல் நின்றிருந்த தீர்த்தங்காரரின் பெரிய சிலையை நெடுந்தொலைவிலேயே பார்த்துவிட்டிருந்தோம்.

இங்கே குன்றுகள் குறைவு. இருப்பவை பாறைக்குவைகளான மொட்டைப்பாறைகள். ஆனால் வழி என ஒன்று அண்மையில்தான் உருவாகி வந்திருக்கிறது. சமணர் கோயிலுக்குச் சமணரன்றி பிறர் செல்வதில்லை. ஆகவே அவர்களுக்கு கோயில் என்றால் சொல்லத் தெரிவதில்லை.

இங்கே உள்ள உயரமான பாறைக்கு கனககிரி என்று பெயர். அதன்மேல் ஒரு பாகுபலி சிலை உள்ளது. மைசூர் அருகே இன்னொரு கனககிரியும் உண்டு. அங்கே பார்ஸ்வநாத தீர்த்தங்காரர் நின்றிருக்கிறார். பொதுவாக சமணக்குன்றுகளுக்கு கனககிரி,நந்திகிரி போன்ற பெயர்கள் இருக்கும். 2012 சமணப்பயணத்தில் [அருகர்களின் பாதை] நாங்கள் மைசூர் வழியாக சிரவணபெளகொளா சென்றோம். அப்போது அந்த கனககிரி  வழியாகவே சென்றோம். அப்போது இங்கே அகழ்வாய்வு தொடங்கவில்லை.

2015ல்தான் அகழ்வுப்பணிகள் முடிந்து இங்கிருக்கும் சவனப்பன பெட்டா என்னும் இன்னொரு சிறிய மலையின்மேல் 24 அருகர் ஆலயங்களின் அடித்தளங்களும் பல்வேறு இடங்களில் புதைந்துகிடந்த அருகர்சிலைகளும் கண்டடையப்பட்டன. [சவனப்பன பெட்டா என்றால் ஈச்சமரக்குன்று] மைசூர் பகுதி முழுக்க பரவியிருந்த சமணமதத்தின் முக்கியமான கல்வித்தலமான அரேதேபூர் இருந்தது என இன்று நிறுவப்பட்டுள்ளது.

அர்ஹந்தபுரம் என்ற சொல்லின் மரூஉ தான் அரேதேபூர்.எல்லா சமண மலைகளையும்போல ஒற்றைப்பாறையாலானது என தோன்றும் மொட்டைக்குன்று. மரங்கள் முளைக்கமுடியாது. ஆகவே காட்டின் நடுவே ஒரு வெட்டவெளி. சமணர்கள் படைக்கலம் பயன்படுத்துவதில்லை. உலோகங்களை தொடுவதும் பழிசேர்க்கும். ஆகவே அவர்கள் அடர்காடுகளை தவிர்த்து விலங்குகள் அணுகமுடியாத, பாம்புகள் வாழாத மொட்டைக்குன்றுகளை தெரிவுசெய்திருக்கிறார்கள்.

கங்கர்களின் காலத்தில், கிபி ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடம் முதன்மையான சமணக் கல்விநிலையாக இருந்திருக்கிறது. அதன்பின் ஹொய்ச்சலர்களும் இந்த கல்விநிலையை பேணியிருக்கிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பின் இந்த கல்விநிலை வரலாற்றில் புதைந்து மறைந்துவிட்டது. அதைப்பற்றிய செய்திகளும் இல்லை. 2015ல் நடைபெற்ற அகழ்வுப்பணிகள் வழியாக சமணநிலைகளின் அடித்தளங்கள் கண்டெடுக்கப்பட்ட பின்னரே இந்த இடம் மீண்டும் கவனத்துக்கு வந்தது.

எதனால் இது கைவிடப்பட்டது என்று கணிக்கமுடியவில்லை. அருகே இருக்கும் கனககிரி தொடர்ந்து வழிபாட்டிடமாகவே நீடித்தது.இங்குள்ள சுனையில் சமணர்கள் வந்து நீராடுவதுமுண்டு. மைசூர் பகுதியில் சமணம் பதினெட்டாம் நூற்றாண்டுவரைக்கும் கூட செல்வாக்குடன் இருந்தது. இன்றும் அது வலுவாகவே நீடிக்கிறது. போரில் சமணக் கல்விநிலைகள் தாக்கப்படும் வழக்கமில்லை. நிலநடுக்கம் போல ஏதேனும் ஒன்று நிகழ்ந்திருக்கலாம். அல்லது வேறேதேனும் நம்பிக்கை சார்ந்த காரணங்கள் இருக்கலாம்

மொத்தம் 24 சமணக் கல்விநிலைகளின் அடித்தளங்கள் இங்குள்ளன. சில அடித்தளங்கள் தங்குமிடங்களுக்கானவையாக இருக்கலாம். சில அடித்தளங்களின் அமைப்பே அவை ஆலயங்கள் என்பதை காட்டுகின்றன. எல்லையில் கருவறையும் அதன் நடுவே சிலைகளை நிறுவுதற்குரிய கல்லாலான அடிப்பீடங்களும் காணக்கிடைக்கின்றன. அந்தராளம் என்னும் அடித்தள அமைப்பும் பல இடங்களில் உள்ளது.

எல்லா அடித்தளங்களும் சுட்டசெங்கற்களாலானவை. செங்கல் அடித்தளம் என்பது மேலே இருந்த கட்டுமானம் மரம் அல்லத்து செங்கல்லால் ஆனது என்பதைக் காட்டுவது. கட்டிடங்கள் மரத்தால் ஆனவையாக இருந்திருக்கலாம். பல இடங்களில் மரத்தாலான தூண்களை நாட்டுவதற்கான குழிகளும் உள்ளன.

இச்செங்கல் கடினமானது, ஆயிரத்தி இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக மழையிலும் கரையாமல் உறுதியாக நிற்கின்றது. இவற்றில் முக்கால்பங்கு மணல். கல்லில் அழுத்தி உரசினால் மணலாகவே போழியும். நல்ல களிமண்ணை அரைத்து மணலுடன் நன்றாகக் குழைத்து சற்றே சுண்ணாம்புடன் சேர்த்து சிலநாட்கள் ஊறவைத்து செங்கல்லாக்கி மிதமான வெம்மையில் பலநாட்கள் சுட்டு உருவாக்கப்படுபவை இக்கற்கள். ஆகவே உறுதியானவை.இவற்றின் அமைப்பு சப்பையானது, ஆகவே எடைதாங்குவது.

இங்கே ஒரு சிறு நீராழி உள்ளது. மலையூற்றின் பள்ளத்துக்கு குறுக்கே கல்லை அடுக்கி சுவர் கட்டி உருவாக்கப்பட்டது இது. அதன் விளிம்பில் அருகர்களின் சிலைகள் புடைப்புருக்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. நீருக்குள் ஒரு தூணின் அடித்தாமரை விழுந்து கிடந்தது. புதைவு என்பதன் அழகிய படிமமாக.

மலையுச்சி நீராழி எனக்குள் பல கனவுகளை உருவாக்குவது. வெண்முரசில் அப்படி பல நீராழிகளின் சித்திரங்கள் உள்ளன. யானையின் கண் போல என்று தோன்றும். மலைப்பாறை விழிதிறந்து வானைநோக்கி பிரமித்துக் கிடப்பதுபோல.

சமணர்கள் எப்போதும் இத்தகைய மலைச்சுனைகளை கண்டடைகிறார்கள். திருப்பரங்குன்றத்தின் உச்சியிலேயே குளிர்ச்சுனை உண்டு. சிதறாலிலும் பல சுனைகள். சமணர்கள் அங்கேதான் பள்ளிகளை அமைக்கிறார்கள். சுனைகளை காத்து, சுனையருகே வாழ்கிறார்கள்.

இச்சுனைகளுக்கு நடைமுறைப்பயன்கள் உண்டு. சமணர்களின் பள்ளிகள் மலைமேல் குடிநீர் பிரச்சினை இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு குளிக்காமலிருப்பது ஒரு நோன்பு. எனவே கோடையில்கூட இந்த ஊற்றுநீர் அவர்களுக்கு போதுமானது. ஆனால் அது மட்டுமல்ல என்றும் தோன்றுகிறது. அவர்கள் கல்லைக் கனியவைக்கும் கடுந்தவம் கொண்டவர்கள். இந்த ஊற்றுக்கள் ஊழெனும் கரும்பாறையின் கருணைசுரந்தவை.

பாறைச்சரிவின்மேல் சிதைந்த ஆலயத்தின் எச்சமென இரு தூண்கள் நின்றிருக்க நடுவே அமர்ந்திருக்கும் அருகரின் சிலைக்குப்பின்னால் வானும் பசுமை பரவிய நிலவிரிவும் எழுந்திருந்தன.வெயில் சூழ்ந்திருந்தாலும் அங்கே அண்மையில்பெய்த மழையின் குளிர் எஞ்சியிருந்தது. இடிபாடுகளில் ஆங்காங்கே அகழ்ந்தெடுக்கப்பட்ட சிலைகள் கிடக்கின்றன.

இங்கிருக்கும் ஒற்றைக்கல் கல்வெட்டு இந்த இடம் பற்றிய முதன்மையான ஆவணம். இது 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பழைய கன்னடமொழியில் எழுதப்பட்ட விரிவான ஆவணம் இது. இங்கே சமண ஆலயங்கள் இருந்ததையும், இது ஒரு கல்விநிலை என்பதையும் இதற்கு ஹொய்ச்சால மன்னர் வீரவல்லாளத்தேவர் இதை பழுதுநோக்கி மறுஅமைப்பு செய்து நிவந்தங்கள் அளித்ததையும் இது கூறுகிறது.

இங்கே எடுக்கப்பட்ட ஹொய்ச்சாலர் காலத்தைய உடைந்த சிலைகள் மைசூர் அருங்காட்சியகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன. உள்ளே ஆதிநாதர் அமர்ந்திருந்த ஆலயத்தின் வாயிற்காவலனாக குபேரன் நிறுவப்பட்டிருந்தார். இங்கே மேலும் பல குபேரன் சிலைகள் கிடைத்திருக்கின்றன.

அருகிருக்கும் கனககிரிமேல் ஏறலாமா வேண்டாமா என்று குழம்பிக்கொண்டிருந்தோம். மணி மூன்று ஆகிவிட்டிருந்தது. ஆறுமணிக்குள் நாங்கள் பி.ஆர்.ஹில்ஸ் எனப்படும் பிலிகிரி ரங்கநாதர் ஆலயக் காட்டுக்குள் செல்லவேண்டும். [பிலிகிரிரங்கப் பெட்டா] ஆறுமணிக்கு காட்டின் எல்லைகள் மூடப்பட்டுவிடும். அதை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் அத்தனைதூரம் வந்தபின் தவறவிடவும் மனமில்லை. ஏறிவிடுவோம் என முடிவுசெய்தோம். அருண்மொழிதான் படிகளில் ஏற கொஞ்சம் சிரமப்படுவாள். ஆனால் கடந்த சிலநாட்களாக அவள் நாளுக்கொரு மலைவீதம் ஏறிக்கொண்டிருந்தாள். போதிய அளவுக்கு ஊக்கப்படுத்தினால் அவள் பாரசூட்டில்கூட பறப்பாள் என்பது அமெரிக்காவில் நிரூபணமாகியிருக்கிறது.

யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்த காட்டுக்கு நடுவே இருந்தது கனககிரி. மழைக்காலமாகையால் பசும்புல் சூழ்ந்திருந்தது. பல படங்களில் காய்ந்த புல் மூடியதாகவே காணக்கிடைக்கிறது.  அருகே குவாரி அமைத்து கல் உடைக்கிறார்கள். லாரிகள் செல்லும் சாலை குன்றின் அடிவாரம் வரை உண்டு. அங்கே வண்டியை நிறுத்திவிட்டு மேலே சென்றோம்.

சமீபகாலமாக அமைக்கப்பட்ட படிகள். மேலே செல்லச்செல்ல படிகள் கொஞ்சம் செங்குத்தாகவே இருந்தன. உச்சிக்கு கொஞ்சம் முன்னால் ஒர் இடுங்கிய பாறைவழி. தவழ்ந்துதான் மேலே செல்லவேண்டும். அண்மையில் அதை சற்று வெட்டி அகலப்படுத்தியிருக்கிறார்கள். பண்டைக்காலத்தில் ஒல்லியானவர்கள் மட்டுமே உள்ளே சென்றிருப்பார்கள்.

மேலே மலைக்கு மகுடம் போல் ஓர் ஒற்றைப்பாறை. அண்மையில் அதன்மேல் ஏற படிகள் வெட்டி கைப்பிடியும் போட்டிருந்தனர். முன்பெல்லாம் உயிரை பொருட்படுத்தாத சமணத்துறவிகள் மட்டும் மேலே சென்றிருப்பார்கள் என நினைக்கிறேன்

மலைமேல் பன்னிரண்டு அடி உயரமான பாகுபலி சிலை நின்றிருந்தது. கன்னங்கரிய ஒற்றைக்கல் சிலை. அதைச்சூழ்ந்து காற்று சுழன்று பறந்துகொண்டிருந்தது. சிலையின் காலடியில் சற்றுநேரம் அமர்ந்திருந்தோம்.

அங்கே நின்று தன் கண்முன் விரிந்த பசிய நிலத்தை, தொடுவான் வளைவை, அதற்கப்பால் ஏதோ ஒன்றை நோக்கிக்கொண்டிருந்தார் ஆதிநாதரின் இளைய மைந்தர். அவர் கண்ணெதிரே ஆயிரமாண்டுகள் ஓடிக்கடந்துவிட்டன. ஏதேதோ நிகழ்ந்துவிட்டது, அல்லது ஒன்றுமே நிகழவில்லை

நாற்பத்தைந்தாண்டுகளாக அருகர் சிலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆறாம் வகுப்பில் படிக்கும்போது வகுப்பிலிருந்து ஓடிப்போய் சிதறால் மலை ஏறிச் சென்று பார்த்த பார்ஸ்வநாதரின் சிலை அளித்த திகைப்பும் மோனமும் இன்றும் நினைவிருக்கிறது. சற்றும் குறையாமல் அந்த அனுபவம் ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது. இங்கிருக்கையில் வேறொருவராக வேறெங்கோ சென்று மீள்கிறேன்

பிரமிப்பூட்டும் காலக்கணக்கே சமணத்தின் பெருங்கொடை என நான் இன்று நினைக்கிறேன். அவர்களின் ஊழிகள் லட்சக்கணக்கான ஆண்டுகளால் ஆனவை. அவர்களின் தீர்த்தங்காரர்கள் பல்லாயிரமாண்டுகள் வாழ்ந்தவர்கள். அந்தக் காலம் புறப்பொருண்மையில் நிகழ்வது அல்ல. அத்தனை அருகர் சிலைகளும் அளிப்பது அந்த அகாலநிலையைத்தான்

கீழிறங்கி வந்து பி.ஆர்.ஹில்ஸ் காட்டுக்கு கிளம்பினோம். வழக்கம்போல வந்த வழியைவிட சுருக்கமான வழி இருக்கக்கூடும் என அசட்டுத்தனமாக நம்பி கிராமச்சாலையை தெரிவுசெய்து வயல்கள், மேலும் வயல்கள், சிற்றூர்கள் வழியாக தட்டழிந்து, ஒரு பெரியவரிடம் வழிகேட்டோம். தலையில் அடித்துக்கொண்டு திரும்பி வந்தவழியே போகும்படிச் சொன்னார்.

ஒருவழியாக மையச்சாலையை கண்டடைந்து அடித்துப்புரண்டு காட்டின் மறிப்பு ஆய்விடத்திற்கு வந்தால் உள்ளே விடமுடியாது என அறுதியாகச் சொல்லிவிட்டார்கள். காட்டுக்குள் ஐந்தேமுக்காலுக்குமேல் செல்லவே முடியாது. ஆறரை கடந்துவிட்டது. ஒருவழியாக கெஞ்சி மன்றாடி ஒப்புதல்பெற்றோம். காரில் பெண்கள் இருந்தமையால்தான் செல்லமுடிந்தது.

செல்லும்வழியின் இருமருங்கும் செறிந்த காடு. மிகமிக அமைதியான இருண்ட மரச்சூழ்கை. எக்கணமும் ஏதேனும் விலங்கு ஊடாக பாயலாம். மிகமிக மெல்லத்தான் செல்லவேண்டும். காட்டுக்குள் எப்பயணத்திலும் நம் புலன்கள் கூர்ந்திருக்கின்றன. நாம் மிகுந்த எடைகொண்டவர்களாக ஆகிவிட்டதைப்போல. விலங்கு ஏதும் தட்டுப்படவில்லை. ஆனால் அது ஒரு உச்சநிலைப் பயணம்

எங்கள் கான்விடுதியை சென்றடைந்தோம். சூடாக தேனீர் கொடுத்தனர். நல்ல குளிர் இருந்தது. இரவுணவுக்கு அனைவரும் சென்றனர். நான் உடனே படுத்து தூங்கிவிட்டேன். நீண்டபயணம், வெயிலில் அலைந்தது எல்லாமாகச் சேர்த்து உடனே இன்மையில் ஆழ்த்திவிட்டன.

[மேலும்]

முந்தைய கட்டுரைசிம்மமும் பெண்களும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு- கமல்ஹாசன் சொல்வது சரியா?