கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்கள் வலைத்தளத்தில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள்மீதான் வழக்கின் தீர்ப்பு பற்றி எழுதியிருக்கிறீர்கள். அதில் நான் பொறுப்பு வகிக்கும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பற்றியும் எங்கள் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா மீது கொலைப்பழி சுமத்தும் விதமாகவும் எழுதியிருக்கிறீர்கள். ஆழ்ந்த வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரிய பதிவுகள் இவை.
வசுமித்ர என்பவர் மீது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வன்கொடுமை வழக்குத் தொடர்ந்ததாக எழுதியிருக்கிறீர்கள். இது முற்றிலும் பொய்யான தகவல். 25 ஆண்டுகளுக்கு மேலாக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளனாக இயங்கிவருபவன் என்கிற முறையில் நான் கூற விரும்புகிறேன். சங்கம் துவக்கிய நாள் முதல் இன்றுவரை யார்மீதும் எங்கள் சங்கம் அப்படி வழக்குத் தொடுத்ததே இல்லை. ஆகவே உங்கள் பதிவில் உள்ள எங்கள் சங்கம் பற்றிய தவறான பதிவை உடனடியாக நீக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
எங்கள் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பிள்ளை கெடுத்தாள்விளை என்கிற சுந்தரராமசாமி அவர்களின் கதை பற்றிக் குமுதத்தில் சொன்ன ஒரு கருத்துதான் அது. அதற்குப்பிறகு அவரும் அதுபற்றி வேறு எங்கும் பேசியதுமில்லை எழுதியதுமில்லை. ‘ஆதவன் தீட்சண்யா வகையறாக்களால் வேட்டையாடப்பட்டபோது’ என்கிற கடுமையான கண்டனத்துக்குரிய வார்த்தைகளில் அதை வளர்த்தெடுக்கிறீர்கள். இந்தப்பதிவையும் நீக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
சுந்தரராமசாமி அவர்கள் மீது பெரும் மதிப்பு கொண்ட நானும் அவரோடும் கண்ணனோடும் தொடர்பில் இருப்பவன்தான். ஆதவன் தீட்சண்யாவின் கருத்துக்காகத்தான் பயந்து போய் அவர் அமெரிக்காவில் தங்கியிருந்தார் அவர் சாவுக்கே இவர் கருத்துத்தான் காரணம் என்று கொலைப்பழி சுமத்தும் அளவுக்கு எழுதியிருப்பது மிக மிகக் கடுமையான வார்த்தைகள்.
பொதுவெளியில் இப்படி எங்கள் அமைப்பையும் அதன் பொறுப்பாளரையும் அவதூறு செய்வதை ஏற்க முடியாது. ஆகவே உடனடியாக இந்தப் பதிவுகளையெல்லாம் நீக்க வேண்டும். அதுதான் அறம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
ச.தமிழ்ச்செல்வன்
மதிப்புறு தலைவர்
தமுஎகச
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு,
உங்கள் கடிதம் கண்டேன். பயணத்தில் இருந்தமையால் காலம் பிந்தி பதிலளிக்க நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்.
முதல் விளக்கம். வசுமித்ர அம்பேத்கர் பற்றிச் சொன்ன கருத்தின் பொருட்டு அவர்மேல் வழக்கு தொடுத்திருப்பது தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்னும் அமைப்பு. அதன் பொறுப்பிலிருக்கும் சாமுவேல்ராஜ் என்பவர் அவ்வழக்கை தொடுத்திருக்கிறார். அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவுள்ள அமைப்பு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுள்ள இன்னொரு அமைப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.
என்னைப் போன்று வெளியே நின்று பார்க்கும் ஒருவருக்கு ஒரே அமைப்பின் வேறுவேறு முகங்கள் என்ற எண்ணமே எஞ்சும். இரு அமைப்புக்களும் இவ்வளவு பெரிய கொள்கை மாறுபாடுகளுடன், நடைமுறை வேறுபாடுகளுடன் செயல்படுவது தெரியாது.
எனக்கு வந்த ஒரு கடிதம் என்ன சொல்கிறதென்றால், 25-9-2016 அன்று தமுஎகச மாநிலக்குழு சார்பில் தேனியில் நடைபெற்ற மாநில இலக்கியப் பரிசளிப்பு விழாவில் எஸ்.வி.ராஜதுரைக்கு அளிக்கப்பட்ட விருதுத்தொகையை அவர் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு அளித்தார். அவ்விழாவில் எஸ்.வி.ராஜதுரையை அவமதிக்கும் விதமாக வசுமித்ர பேசினார். அவர்மேல் வழக்கு தொடுக்கப்பட்ட பின்னணி இதுதான். கிட்டத்தட்ட இம்மாதிரி வசுமித்ரவும் எழுதியிருக்கிறார் என்கிறது அக்கடிதம். ஆனால் அம்மாதிரியான அதியூகங்களுக்குள் செல்ல நான் விரும்புவதில்லை.
என் பொதுவான புரிதல் இரு அமைப்பும் ஒரே கொள்கைமுகாம் என்பதே. அப்படி அல்ல என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என புரிந்துகொள்கிறேன். தமுஎகச தன்னை தீண்டாமை ஒழிப்பு முன்னணியிலிருந்து விலக்கிக்கொள்கிறது, அவர்களுடன் முரண்படுகிறீர்கள் என்கிறீர்கள் இல்லையா? உங்கள் சொல்லை எடுத்துக்கொள்கிறேன், என் குறிப்பை திருத்திக்கொள்கிறேன்.
[தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடுத்த அந்த வன்கொடுமை வழக்கு பற்றி தமுஎகச மற்றும் உங்கள் கருத்து என்ன? தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அச்செயலுக்கு உங்கள் தரப்பில் முறைப்படி ஏதேனும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதா?]
ஆதவன் தீட்சண்யா பற்றி நீங்கள் சொல்வனவற்றுக்கும் அவர் எனக்கு எழுதியிருக்கும் கண்டனக் கடிதத்திற்கும் முரண்பாடுகள் உள்ளன. சுந்தர ராமசாமி பற்றியும் பிள்ளைகெடுத்தாள்விளை கதை பற்றியும் அவர் அன்று சொன்னவற்றை அதே மூர்க்கத்துடன் இன்றும் சொல்கிறார்.
சுந்தர ராமசாமி பற்றி கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அவரை கடுமையாக தாக்கி கட்டுரைகள் எழுதப்பட்டன. அவரை கண்டித்து பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. வன்கொடுமை வழக்கு தொடுப்போம் என அறைகூவலும் விடப்பட்டது. அதை ஆதவன் தீட்சண்யா எனக்கு எழுதிய கடிதத்திலும் உறுதி செய்கிறார். நான் சுட்டிக்காட்டுவது அதையே.
ஆதவன் தீட்சண்யா தமுஎகச பொறுப்பில் இருந்தபோது தொடுத்த தாக்குதல் அது. இன்றும் பொறுப்பிலிருக்கிறார் என நினைக்கிறேன். அவருடைய கருத்துக்களை ஆதரித்து அன்று எழுதியவர்கள் பெரும்பாலும் தமுஎகச அமைப்பைச் சேர்ந்தவர்கள். சரி, அவரையும் தமுஎகசவையும் பிரித்துக்கொள்ளவேண்டும் என நீங்கள் சொல்லவருகிறீர்கள். அதிலும் உங்கள் சொல்லையே எடுத்துக்கொள்கிறேன். என் குறிப்பை திருத்திக்கொள்கிறேன்.
சுந்தர ராமசாமி பற்றி ஆதவன் தீட்சண்யாவும் அவருடன் சேர்ந்துகொண்டவர்களும் தொடுத்த தாக்குதல் அநீதியானது. முதலில் அந்தக்கதை தலித்துக்களைப் பற்றியது அல்ல. இரண்டாவது, அவர்கள் அதை புரிந்துகொண்டதுபோல அது எந்தச் சாதியையும் இழிவுசெய்யவுமில்லை. இவர்கள் ஒருகோணத்தில் மொண்ணையாக வாசித்து அதை அவர்மேல் சுமத்துகிறார்கள்.
இத்தனை விளக்கங்களுக்குப் பின்னரும், முன்பு செய்ததைத்தான் ஆதவன் தீட்சண்யா மீண்டும் செய்கிறார். அதேபோன்ற கடுந்தாக்குதல்களைத் தொடுக்கிறார். அதுதான் உண்மையில் அவதூறு என அவருக்கு தெரியவுமில்லை. அந்த தாக்குதல்கள், குறிப்பாக கைதுசெய்யவேண்டும் என்னும் கோரிக்கை, சுந்தர ராமசாமியை எந்த அளவு துன்புறுத்தியிருக்கும் என அவருடன் தொடர்பில் இருந்த நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
சுந்தர ராமசாமி என்றும் தன்னை இடதுசாரியாக எண்ணியவர், இடதுசாரி இயக்கத்திலிருந்து உருவானவர் என்றும் அறிந்திருப்பீர்கள். தமிழகத்தில் அடித்தள மக்களைச் சார்ந்து இலக்கியம் திசைதிருப்பப் படவேண்டும் என்று கோரிய முன்னோடி முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர் அவர். அன்று அதன்பொருட்டே அவர் தகழி சிவசங்கரப் பிள்ளையின் ‘தோட்டியின் மகனை’ மொழியாக்கம் செய்தார். பின்னர் வந்த அத்தனை தலித் எழுத்துக்களிலும் அதன் செல்வாக்கு உண்டு.
சுந்தர ராமசாமியின் புனைவுலகை மேலோட்டமாகவேனும் அறிந்த ஒருவர் அவருடைய அரசியலென்ன என்று அறிந்திருப்பார். என்றும் அடித்தள மக்களின் விழிப்புணர்வுக்காக, விடுதலைக்காகவே அவர் எழுதியிருக்கிறார். அவருடைய ஐம்பதாண்டுக்கால இலக்கியச் செயல்பாட்டின் சாரம் அது. அவரைப்பற்றி இப்படி ஒரு அவதூறு முன்வைக்கப்படும்போது நீங்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினீர்கள்? கண்டனம் தெரிவித்தீர்களா? ஆதவன் தீட்சண்யாவின் அக்கருத்து பற்றி உங்கள் தரப்பு என்ன?
மதிப்பிற்குரிய தமிழ்ச்செல்வன், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீதான குற்றச்சாட்டுக்காக கொதிப்படைகிறீர்கள். முன்னோடி முற்போக்கு எழுத்தாளர்களை அவதூறுகளில் இருந்து காக்கவும் இதே கொதிப்பை காட்டியிருக்கலாமே?
சுந்தர ராமசாமி முதிர்ந்த அகவையில் குளிர்காலத்தில் தொடர்ந்து அமெரிக்காவில் இருக்கநேர்ந்ததும் அதன்விளைவாக உருவான விண்டர் ப்ளூஸ் போன்ற நோய்களுக்கு எடுத்துக்கொண்ட மருந்துகளுமே அவருடைய விரைவான இறப்புக்குக் காரணம். அத்தகைய மொண்ணையான, மூர்க்கமான தாக்குதல்களை எழுத்தாளர்கள்மேல் தொடுக்கையில் இனிமேலாவது கவனம் தேவை.
அன்புள்ள தமிழ்ச்செல்வன், என்றும் உங்கள்மேல் மதிப்புடன் இருப்பவன் நான். தமுஎகசவின் பணிகள் பற்றி முப்பதாண்டுகளாக உயர்கருத்து அன்றி இன்னொன்றை பதிவுசெய்ததில்லை, என் நூல்களில் அதை நீங்கள் காணலாம். இலக்கிய அழகியல் சார்ந்து எனக்கிருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் அதற்கு தடையாக இருந்ததில்லை.
உங்கள் சங்கடம் புரிகிறது. திமுக போன்ற கட்சிகள் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் ஆகியோரின் குரலாகவே மக்களிடம் ஒலிக்கும். ஆனால் அந்த அநாகரீகம், மூர்க்கம் ஆகியவற்றைப்பற்றி நாம் கேள்விகேட்டால் ‘அவர்களை எதற்குப் பார்க்கிறாய், அன்பழகன் அப்படிப் பேசுவாரா ?’ என்பார்கள்.
பாருங்கள், உங்கள் அறிக்கை வெளியான இணையதளங்கள், முகநூல்பக்கங்களிலெல்லாம் உங்கள் அமைப்பினரின் எதிர்வினை என்னவாக இருக்கிறது. திரும்பத்திரும்ப புளித்தமாவு என்னும் வசை, கூடவே வன்முறை ததும்பும் சொற்தாக்குதல்கள். எப்போதுமே எந்த வகையான விமர்சன அணுகுமுறையும் காணக்கிடைத்ததில்லை.
ஒரு இருபதாண்டுகளுக்குப்பிறகு, நான் இல்லாமலானபின், ஓர் இலக்கிய வரலாற்றாசிரியர் ‘ஜெயமோகன் அவர் எழுத்துக்களிலெல்லாம் தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பங்களிப்பை மதிப்புடன் எழுதியிருக்கிறார். ஆனால் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தவர் அவர் ஒரு குற்றவாளியால் தாக்கப்பட்டபோது அதை மகிழ்ந்து கொண்டாடினர்” என்று எழுதுவார். அன்று நீங்களோ இன்னொருவரோ அது சங்கத்தின்மீதான அவதூறு என கொதித்துக் கிளர்வீர்கள் இல்லையா?
ஒரு பேச்சுக்கு சொல்கிறேன், முற்போக்கு முகாமைச் சார்ந்த எந்த எழுத்தாளராவது இப்படி தாக்கப்பட்டு அதற்கு நான் மகிழ்ச்சி தெரிவித்திருந்தால் நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்? அப்படி என்னால் செய்யமுடியும் என்றேனும் உங்களால் நம்பமுடியுமா?
தமிழகத்தில் ஓர் எழுத்தாளர் தாக்கப்பட்டால் அது தமுஎகசவுக்கு எப்படி ஒரு கொண்டாட்ட நிகழ்வாக ஆகிறது? அவர் எந்த தரப்பைச் சேர்ந்தவரானாலும்? அவருடன் நிலைகொள்வதல்லவா உங்கள் வழியாக இருக்கவேண்டும்? தனிப்பட்ட முறையிலேனும் இதைப்பற்றி உங்கள் அணியினரிடம் ஒரு சொல் பேசுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
உங்கள் அணியினரால் உணரமுடியாது, உங்கள் அகம் ஒருவேளை எங்காவது உணர்ந்திருக்கும், நான் தமிழின் தலைசிறந்த படைப்பாளி. உலகின் எந்தமொழியில் எழுதினாலும் அம்மொழியின் முதன்மைப் படைப்பாளியாகவே கருதப்படுவேன். சுந்தர ராமசாமிக்கும் கிராவுக்கும் நிகழ்வதே எனக்கும் நிகழ்கிறது.
எவ்வாறாயினும் உங்கள் மேல், தமுஎகச மேல் என் மதிப்பை மீண்டும் உறுதிசெய்கிறேன். கட்டுரையிலுள்ள தமுஎகச சார்ந்த சொற்களை நீக்கிவிடுகிறேன்.
ஜெ
திரு. ஜெயமோகன்,
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் உள்ளவாறு, உங்களது பதிவில் என்னையும் தமுஎகச அமைப்பையும் அவதூறு செய்யும் விதமாக எழுதியுள்ளீர்கள். அதற்காக வருத்தம் தெரிவிப்பதுடன் அவற்றை உடனே நீக்குமாறு இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆதவன் தீட்சண்யா
திரு ஜெயமோகன்,
தங்களது இணையதளத்தில் அக்டோபர் 15, 2020 அன்று “கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத் தீர்ப்பு என்கிற தலைப்பில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறீர்கள்.
இப்பதிவில்,
“பிள்ளைகெடுத்தாள் விளை’ என்னும் கதை தொடர்பாக சுந்தர ராமசாமியை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யவேண்டும் என்று ஆதவன் தீட்சண்யா என்ற எழுத்தாளர் தலைமையில் ஒரு குழு கிளம்பியது. முதிய வயதில் சுந்தர ராமசாமியை கலங்கவைத்த நிகழ்வு அது. வசை அவருக்குப் புதிதல்ல, ஆனால் துசெய்யப்படலாம், சிறுமை செய்யப்படலாம் என்னும் அச்சம் அவரை அலைக்கழித்தது. அவர் நீண்டநாள் அமெரிக்காவிலேயே இருக்கநேர்ந்தது. ஒருவகையில் அவர் உளச்சோர்வடைந்து சாவைநோக்கிச் செல்ல அது ஒரு காரணம்”
-என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் தமது அறிவுழைப்பால் மேலெழுந்து வருவதை காணச் சகியாதவர்கள், புனைவுக்குள் ஒளிந்துகொண்டு அவர்களை எவ்வளவு வன்மமாகவும் கீழ்மையாகவும் சித்தரிக்கலாம் என்கிற இறுமாப்பில் எழுதப்பட்ட அந்தக் கதை, நியாயவுணர்வும் கூருணர்வுமுள்ள பலரது விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் ஆளானது. இயல்பாகவே நானும் எனது விமர்சனத்தையும் கண்டனத்தையும் வெளிப்படையாக பதிவு செய்தேன். அதுதொடர்பாக சென்னையில் நடைபெற்ற கூட்டத்திலும் பங்கேற்றுபேசினேன். அக்கதை குறித்து இரண்டு கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். என்னளவில்இவை சரியான நடவடிக்கைகளே. அந்தக்கதை குறித்த எனது விமர்சனமும் கண்டனமும்சரியே என இப்போதும் கருதுகிறேன்.
உண்மை இவ்வாறிருக்க, என் தலைமையில் ஒருகுழு கிளம்பியது என்கிறீர்கள் உங்கள் பதிவில். நான் தலைமையேற்று கிளப்பிவிடுவதற்கான யாதொரு தேவையுமின்றியே சுயசிந்தனையுள்ளவர்கள் கண்டித்திட கிளம்பினர். நானும் அவர்களோடு முழுமனதுடன் இணைந்து கண்டித்தேன். ஆகவே என் தலையையில் ஒரு குழு கிளம்பியது என்று நீங்கள் எழுதியிருப்பது தவறு.
பிள்ளைகெடுத்தாள்விளை தொடர்பாக குமுதம் இதழில் வெளியான என் பேட்டியிலும் எனது கருத்தை உறுதிபட தெரிவித்திருந்தேன். இதில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தைநான் தவறாக பயன்படுத்தியதாக நீங்கள் கூறுவதற்கான முகாந்திரம் எதும் இல்லை. தவிரவும், இவ்வாறான மொழி, கருத்தியல் மற்றும் உடல்சார் வன்கொடுமைகளையும் அவமதிப்புகளையும் தடுப்பதற்காகவே அச்சட்டம் இருக்கிறது என்பதை தலித்துகளின் கையில் உள்ள மிரட்டல் ஆயுதமாக திரித்துக்கூறி அவர்களுக்கு எதிராக ஒடுக்கும்சாதியினரை தூண்டிவிட்டு ஒரு சமூக மோதலை உருவாக்குவதே உங்களது பதிவின் உட்கிடக்கையாக இருக்கிறது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்கிற சாதிய ஒடுக்குமுறையாளர்களின் அநீதியான கூப்பாட்டிற்கு ஆதரவளிப்பதற்கான சமிக்ஞைகளையும் அவர்களை நயந்து நிற்பதற்கான முனைப்பையும் நீங்கள் என்னை வசைபாடும் வேகத்திலும் சொற்களிலும் உணரமுடிகிறது.
குறிப்பிட்ட ஒரு கதையின் மீதான எனது நிலைப்பாட்டிற்கு உள்நோக்கம் கற்பித்து, சுந்தரராமசாமி அமெரிக்கா போனதற்கும் அவர் அங்கேயே நீண்டநாள் இருந்ததற்கும் அவர் உளச்சோர்வடைந்து சாவை நோக்கிச் செல்ல இதுவும் ஒரு காரணம்- அதாவது என்தலைமையில் கிளம்பிய குழு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய மேற்கொண்ட முயற்சியும் அவர் சாவுக்கு ஒரு காரணம் என கொலைப்பழிச் சுமத்தும்குற்றச்சாட்டை பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறீர்கள். அவர் என் தலைமையிலானகுழுவின் வேட்டையாடலுக்கு அஞ்சி அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் புகுந்தார் என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கும் உங்களது அருவருப்பான முயற்சிக்கும் எனக்கும் எவ்விதமான தொடர்புமில்லை.
“இந்த தீண்டாமை வழக்குகள் அறிவுஜீவிகள்மேல் ஏவப்படுவதை தொடங்கிவைத்தவர் ஆதவன் தீட்சண்யா. அவர் சார்ந்திருக்கும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அம்பேத்கர்பற்றி ஒரு கருத்தைச் சொல்லிவிட்டார் என்பதற்காக வசுமித்ர என்னும் கவிஞர்மேல்தீண்டாமை வழக்கு தொடுத்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன்”
– என்கிறீர்கள். நான் இதுகாறும் யார் மீதும் தீண்டாமை வழக்கு எதையும் தொடுத்திராத நிலையில் “இந்ததீண்டாமை வழக்குகள் அறிவுஜீவிகள் மேல் ஏவப்படுவதை தொடங்கிவைத்தவர் ஆதவன்தீட்சண்யா” என்று எழுதியிருப்பது அப்பட்டமான அவதூறு, உண்மைக்கு மாறானது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்கிற பொய்யைப்பரப்புவதற்கு எனது பெயரை பயன்படுத்தியிருகிறீர்கள். நான் தொடங்கிவைத்தேன் என்றால் யார் மீது வழக்கு போட்டு தொடங்கி வைத்தேன் என்று சொல்வதல்லவா அறிவுநாணயம்?
மேலும், நான் பொதுச்செயலாளராக பொறுப்பு வகிக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இதுகாறும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அல்லது வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு எதையும் தொடுத்திருக்காத நிலையில்
“…அவர் சார்ந்திருக்கும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அம்பேத்கர் பற்றி ஒரு கருத்தைச் சொல்லிவிட்டார் என்பதற்காக வசுமித்ர என்னும் கவிஞர்மேல் தீண்டாமை வழக்கு தொடுத்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன்”
என்று குறிப்பிட்டிருப்பதும் அப்பட்டமான அவதூறே. கருத்துரிமையையும் அவதூறையும் பகுத்தறியும் பண்புள்ள எமது அமைப்பு கருத்துரிமைக்காக தொடர்ந்து குரலெழுப்பிவரும் நிலையில் அதன்மீது இவ்வாறு குற்றம்சாட்டியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. கேள்விப்பட்டேன் என்று நழுவலாக சொல்வதன் மூலம் அதைப் பகிர்ந்த குற்றத்திலிருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ள முடியாது. கேள்விப்பட்ட ஒரு தகவலை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாமல் பொதுவெளியில் பகிர்வது நேர்மையீனம், என்னையும் அமைப்பையும் இழிவுபடுத்தும் உள்நோக்கமுடையதும் கூட.
உறுதிப்படுத்திக்கொள்ளாத ஒரு தகவலை பரப்புவது நற்சிந்தனையும் நன்னோக்கும் கொண்டவர்கள் செய்யத்துணியாத செயல். அத்தகைய பண்பை உங்களிடம் நான் வீணே எதிர்பார்க்கவில்லை என்றாலும், எனக்கு தனிப்பட்டமுறையில் மன உளைச்சலை ஏற்படுத்துவதற்காகவே உங்களால் எழுதப்பட்டுள்ளஇப்பதிவில் என் தொடர்பாகவும் தமுஎகச தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளஎந்தவொரு செய்தியும் உண்மையல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
“சுந்தர ராமசாமி ஆதவன் தீட்சண்யா வகையறாக்களால் வேட்டையாடப்பட்டபோது”-
என்கிறீர்கள். இதிலே வகையறா என்ற சொல் எதை அல்லது யாரை குறிப்பிடுகிறது?மேற்சொன்ன கதையில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ள சுந்தர ராமசாமியின் சாதியவன்மத்தைச் சுட்டிக்காட்டுவதும் கண்டிப்பதும் எப்படி வேட்டையாடுவதாகிவிடும்? ஒடுக்கப்பட்ட மக்கள் கருத்தியல் ரீதியாகவோ அல்லது நேரடியாகவோ தம்மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைக்கு எதிராக குரலெழுப்புவதை “வேட்டையாடுவதாக” இட்டுக்கட்டி அவர்களையே குற்றவாளிகளாகக் காட்டும் உள்நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ள இந்தக்கூற்றும் ஏற்கத்தக்கதல்ல.
கி.ரா. மீதான வழக்கின் தீர்ப்பை வரவேற்பதற்காகவோ சுந்தர ராமசாமியின் மீது கரிசனம் காட்டவோ கருத்துரிமையை உயர்த்திப் பிடிக்கவோ நீங்கள் இந்தப் பதிவை எழுதவில்லை என்பதும், இவற்றை மேற்கூடாக வைத்துக்கொண்டு என்னைப் பற்றியும் தமுஎகச பற்றியும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவோர் பற்றியும் அவதூறு செய்து களங்கம் கற்பிக்கவே எழுதியிருக்கிறீர்கள் என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே, ஆதாரமின்றி அபாண்டமாக என்மீதும் நான் சார்ந்துள்ள தமுஎகச மீதும் மேற்கண்டவாறு குற்றம்சாட்டி அவதூறு செய்துள்ளமைக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் என்னால் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட பகுதிகளை உடனே நீக்க வேண்டும் என்றும் இதன்மூலம் தெரிவிக்கிறேன்.
இப்படிக்கு
ஆதவன் தீட்சண்யா
அன்புக்குரிய ஆதவன் தீட்சண்யா,
உங்கள் கடிதத்தை பலமுறை வாசித்தேன். உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. அவதூறு என்கிறீர்கள், ஆனால் நான் உங்கள் செயலைப்பற்றி என்ன சொன்னேனோ அதையேதான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். அவதூறு என்பது மிகப்பெரிய சொல். ஒருவர் என்ன செய்தாரோ அதையே சுட்டிக்காட்டுவது எப்படி அவதூறாகும்? அதன் விளைவு என்ன என்று சொல்வது எப்படி அவதூறாகும்?
நீங்கள் பிள்ளைகெடுத்தாள்விளை கதையை உங்கள் கோணத்தில் விளங்கிக் கொண்டீர்கள், அப்பொறுப்பை சுந்தர ராமசாமி மேல் சுமத்தி கட்டுரைகள் எழுதினீர்கள், உங்களை ஆதரித்து பலர் எழுதினார்கள், சுந்தர ராமசாமியை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டப்படி கைதுசெய்யவேண்டும் என அறைகூவினீர்கள். இதையெல்லாம் நீங்களே இக்கடிதத்தில் சொல்கிறீர்கள். அந்நிலைபாடே இப்போதும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். நான் சொன்னதும் இதைத்தானே? இங்கே அவதூறு எங்கே வந்தது?
அதில் தமுஎகசவின் பங்களிப்பு இல்லை, நீங்கள் தமுஎகச பொறுப்பில் இருந்தாலும் தனிப்பட்ட முறையிலேயே அதை செய்தீர்கள் என்று சொல்லவருகிறீர்களா? உங்களுடன் இணைந்து அன்று எழுதியவர்களுடன் இணைந்து செயல்படவில்லை என்கிறீர்களா? அல்லது நீங்கள் அப்படி குற்றம்சாட்டியதனால் சுந்தர ராமசாமி மனம் வருந்தவில்லை என வாதிடுகிறீர்களா?
சுந்தர ராமசாமி பற்றி கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அவரை கடுமையாக தாக்கி கட்டுரைகள் எழுதப்பட்டன. அவரை கண்டித்து பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. வன்கொடுமை வழக்கு தொடுப்போம் என அறைகூவலும் விடப்பட்டது. இதையெல்லாம் நீங்களே சொல்கிறீர்கள். எந்த அமைப்புப் பின்புலமும் இல்லாத ஒரு தனி எழுத்தாளரை எதிர்த்து இதையெல்லாம் செய்வது ‘வேட்டையாடுவது’ என்றால் அது உங்களுக்கு அவதூறாக தெரிகிறது வியப்பே.
நீங்கள் சுந்தர ராமசாமியை அடித்தீர்கள், அதை நீங்களே சொல்கிறீர்கள். நீங்கள் அவரை அடித்தீர்கள், அதனால் அவருக்கு வலி ஏற்பட்டது என்று நான் சொல்கிறேன். நாங்கள் அடித்தது உண்மை ஆனால் அவருக்கு வலித்தது என்பது அவதூறு என வாதிடுகிறீர்கள். என்ன சொல்ல!
நீங்கள் வன்கொடுமை வழக்கு தொடுக்கவில்லை, ஏனென்றால் அக்கதையில் சாதியக்குறிப்பே இல்லை. ஆகவே வழக்கு தொடுக்க முகாந்தரமே இல்லை. வழக்கறிஞர்களிடம் விசாரித்து வழக்கு தொடுக்க முடியாது என்று தெரிந்து வெறுமே அறைகூவல் விடுப்பதுடன் நின்றுகொண்டீர்கள். ஆனால் வழக்கு தொடுக்கவேண்டும் என்று சொல்வதே வழக்கு தொடுக்கும் செயலை ஆதரிப்பதும், சட்டமிரட்டல் விடுப்பதும்தானே?
சரி, கொள்கையளவில் இலக்கிய விவாதங்களில் அல்லது கருத்தியல் விவாதங்களில் அப்படி சட்டமிரட்டல் விடுவது சரியல்ல என இப்போதாவது கருதுகிறீர்களா? உங்கள் கடிதத்திலேயே அது ஓர் ஆயுதம் என்றும் அதை கைவிட மாட்டோம் என்றும்தானே சொல்கிறீர்கள்? தலித் மீதான வன்முறை வேறு இலக்கிய- கருத்தியல் செயல்பாடுகள் வேறு என்ற தெளிவு இப்போதாவது உங்களிடமுள்ளதா?
ஒரு கதையை வாசகன் தன் கோணத்தில் புரிந்துகொண்டு அதன்பொருட்டு ஆசிரியனை குற்றம்சாட்டி சட்டப்போருக்கு இழுப்பது வன்முறை என இப்போதாவது உணர்கிறீர்களா? அது பொதுவாகவே அத்தனை கருத்துச்செயல்பாடுகளையும் சீரழிக்கும் என்றும், அது அம்பேத்கர் அளித்த கருத்துரிமை என்னும் கொடைக்கு எதிரானது என்றும் புரிந்துகொண்டிருக்கிறீர்களா?
உங்கள் தேவைப்படி ஒரு வாசிப்பை நிகழ்த்தி சுந்தர ராமசாமி போன்ற மூத்த- முற்போக்கு எழுத்தாளரை அவமதிப்பது பிழை என நீங்கள் உணரவில்லை. அதையே கி.ராஜநாராயணன் போன்ற ஒரு பெரும்படைப்பாளிக்கும் செய்கிறார்கள் என்றுதான் நான் சுட்டிக்காட்டுகிறேன். இதைச் செய்தபின் இடதுசாரிகள் மற்றும் எழுத்தாளர்கள் மீது அரசோ வலதுசாரிகளோ முன்வைக்கும் தாக்குதல்களை கண்டிக்கும்படி எப்படி மக்களிடம் கோரமுடியும் என்றாவது நீங்கள் எண்ணிப்பார்க்கலாம்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உங்கள் கொள்கைகளுக்கு அணுக்கமான அமைப்பு. உங்களுக்கும் நெருக்கமானது. அப்படி அல்ல என்று இப்போது சொல்வீர்கள் என்றால் அவர்கள் வசுமித்ர வழக்கு தொடுத்தது தவறு என ஒரு அறிக்கை வெளியிடுங்களேன். இந்த விஷயத்துக்கு இப்படி ஒரு கட்டுரை எழுதிய நீங்கள் அதைச் செய்வதிலென்ன தடை?
எப்படியாயினும் உங்கள் அமைப்பின் மேல் என் மதிப்பை மீண்டும் பதிவுசெய்கிறேன். எழுத்தாளர்களுக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் போக்கு, அதில் மகிழ்வுகொண்டாடும் இழிவு அதில் படியலாகாது என விழைகிறேன்.
ஜெ