காவேரியின் முகப்பில்-1

மாமங்கலையின் மலை-2

இன்னொரு நீண்டபயணம். எப்போதுமே ஒரு பயணம் முடியும்போது இன்னொரு பயணத்தை திட்டமிடுவது எங்கள் வழக்கம், கிருஷ்ணன் இரண்டு பயணங்களாகச் சேர்ந்தேதான் திட்டமிடுவார் என நினைக்கிறேன். நான் நாகர்கோயிலில் இருந்து அக்டோபர் 11 ஆம் தேதி கிளம்பி சென்னை சென்றேன். அதே கிரீன்பார்க். ஆனால் இப்போது இன்னும்கொஞ்சம் தங்குநர்கள் இருந்தார்கள். ஆனால் அதன் புகழ்பெற்ற முன்கூடம் வழக்கமான பரபரப்பை அடையவில்லை. ஓய்ந்தே கிடந்தது.

வழக்கம்போல சென்னை நண்பர்களைச் சந்தித்தேன். கவிஞர் லீனா மணிமேகலையைச் சந்தித்தேன். கனடாவுக்கு ஓரு திரைக்கல்வித் திட்டத்தின் பங்காளராகச் செல்வதற்காக கொரோனா ஓய காத்திருக்கிறார். அவருடைய மாடத்தி என்னும் படம் சர்வதேச அரங்கில்  கவனிக்கப் பட்டிருக்கிறது. தமிழ் திரைச்சூழலில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சாதனை இது – பொதுவாக இங்கே சினிமாவே ஆனாலும் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யாமல் எதுவும் செய்தியாவதில்லை. மாடத்தி தமிழகத்தின் தலித்வாழ்க்கையை தொன்மப்பின்னணியுடன் சொல்லும் திரைப்படம்

அக்டோபர் 14 ஆம் தேதி திருச்சிக்கு வந்தேன். அங்கே நண்பர் சக்தி கிருஷ்ணன் கட்டிய புதுவீட்டில் தங்கினேன். மறுநாள் மதியம் கிளம்பி அவருடைய காரிலேயே ஈரோடு வந்தேன். கிருஷ்ணனைச் சந்தித்து ஒரு டீ குடித்து அளவளாவிவிட்டு ஈரட்டி சென்றேன். 12 ஆம் தேதியே அருண்மொழியும் அஜிதனும் சைதன்யாவும் வந்து ஈரட்டி வனவிடுதியில் தங்கியிருந்தனர். அன்றிரவு ஈரட்டி

மறுநாள் புலரியிலேயே நானும் அருண்மொழியும் அஜிதனும் சைதன்யாவும் சக்திகிருஷ்ணனின் காரில் கிளம்பி தாமரைக் கரை சென்று அங்கே வந்துசேர்ந்திருந்த கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, கதிர் முருகன், ராஜமாணிக்கம் ஆகியோரைச் சந்தித்தோம். கோவை நண்பர் பாலு அவருடைய வண்டியில் அவர்களை அழைத்துவந்தார். மதுரை நண்பர் ஜிஎஸ்எஸ்வி நவீன் சற்று பிந்தி இணைந்துகொண்டார்

இரு வண்டிகளிலாக கர்நாடகம் நோக்கிச் சென்றோம். தாமரக்கரையில் இருந்து பர்கூர் வழியாக கர்கேகண்டி கடந்து கொள்ளேகால் செல்லும் பாதையில் பயணமானோம்.

மீண்டும் கர்நாடகம், மேற்குமலையடுக்கின்மேல் இருக்கும் பர்கூரிலிருந்து கர்கேகண்டி சரிவு வழியாக தக்காணப் பீடபூமிக்குள் நுழைவது ஒரு பச்சைச் செறிவிலிருந்து விரிந்த வான்வெளிநோக்கி நம்மை எறிந்துகொள்வது. மழை செழிப்பாகப் பெய்திருந்தமையால் காணுமிடமெல்லாம் வயல்கள் பசுமைகொண்டிருந்தன. கரும்பு, மக்காச்சோளம்,நெல்.சத்யமங்கலம் கரும்பாலைகளுக்கு வரும் கரும்பில் பெரும்பகுதி இங்கே விளைவதுதான். காவேரியின் கொடை

முதலில் சென்ற இடம் தலைக்காடு. ஏற்கனவே இங்கே இருமுறை வந்திருக்கிறோம். மணல்பெய்து மூடிக்கொண்டே இருக்கும் தலைக்காட்டின் ஆலயங்கள் புகழ்பெற்றவை. அப்போது விடுபட்டுவிட்ட ஓர் ஆலயம் மலெவல்லி[ அல்லது மரேஹல்லி] லட்சுமிநரசிம்மர் ஆலயம். தலைக்காட்டிலிருந்து நாற்பது கிமீ தொலைவிலிருக்கிறது இந்த ஆலயம்.மாமங்கலையின் மலை-2. 

தமிழக வரலாற்றில் இந்த இடத்திற்கு முக்கியமான இடமுண்டு. ராஜராஜசோழனின் மெய்கீர்த்தி இப்படிச் சொல்கிறது

 திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழில் சிங்களர் ஈழமண் டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்
தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள்  கோஇராச கேசரி
வன்மரான ஶ்ரீஇராசராச தேவர்க்கு யாண்டு.

இதில் குறிப்பிடப்படும் கங்கைப்பாடிதான் தலைக்காட்டைச்சூழ்ந்திருக்கும் நிலம். காவேரி தமிழகத்திற்குள் நுழையும் மேட்டுநிலம் இது. இங்கே காவேரியை தடுப்பணை கட்டி திசைதிருப்பும் வாய்ப்புகள் மிகுதி. எனவே வரலாற்றுக்காலம் முதலே சோழர்கள் இப்பகுதிமேல் படையெடுத்து இதை தங்கள் ஆதிக்கத்தின்கீழ் வைத்திருந்தனர். அது காவேரிமேல் முற்றாதிக்கம் செலுத்துவதாகும்.

கங்கமன்னர்கள் கிபி 11 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டிருக்கிறார்கள். பின்னர் அவர்கள் அழிந்து சிதறி இந்நிலம் ஹொய்ச்சாலர்களின் கைக்குச் சென்றது. கிபி பத்தாம் நூற்றாண்டில் கங்கர்களை ராஜராஜ சோழன் வென்றார். தி.வை.சதாசிவ பண்டாரத்தார் அவருடைய ’பிற்காலச் சோழர் சரித்திரம்’ என்னும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்

இராசராச சோழனது படை குடமலை நாட்டைத் தாக்கிற்று. அந்நாடு இக்காலத்தில் குடகு என்று வழங்கும் நாடேயாம். கொங்காள்வார் மரபில் வந்த ஒருவன் அப் போது அதனை அரசாண்டு கொண்டிருந்தான். பணசோகே என்ற இடத்தில் ஒரு பெரும் போர் நடைபெற்றது. அதில் அவன் தோல்வியுற்று ஓடிப்போனான். அப்போரில் வீரங் காட்டிப் போர்புரிந்த மனிஜா என்பவன் செய்கையைப் பாராட்டி, இராசராச சோழன் ஆணையின்படி அவனுக்கு க்ஷத்திரிய சிகாமணி கொங்காள்வான் என்ற பட்டம் வழங்கப் பெற்றதோடு மாளவ்வி என்னும் ஊரும் அளிக்கப்பட்டது. மனிஜாவின் மரபினர் சுமார் நூறாண்டுகள் வரையில் சோழர் கட்கு அடங்கிய குறு நில மன்னராய்க் கொங்காள்வார் என்னும் பட்டத்துடன் குடகு நாட்டில் அரசாண்டு வந்தனர். எனவே, அப்போர் நிகழ்ச்சிக்குப் பிறகு குடமலை நாடு அம் மனிஜா என்பவனுக்கே அளிக்கப்பட்டது”

இதில் குறிப்பிடப்படு மாளவ்விதான் மாளவல்லி என சொல்லப்படுகிறது. இங்குள்ள லட்சுமிநரசிம்மர் ஆலயம் கங்கர்களின் தொடக்ககால கோயில்கலையைச் சார்ந்தது. உருளையால் உருட்டிச்செதுக்கப்பட்ட, சிற்பங்களோ செதுக்குவேலைகளோ இல்லாத தூண்கள் கொண்ட ஆலயம் இது. இதன் முதல் கருவறை எட்டாம்நூற்றாண்டைச் சேர்ந்தது. முதலாம் ராஜராஜன் இதை கற்றளியாக எடுத்துக்கட்டி ராஜஸ்ரய விண்ணகரம் என்று பெயரிட்டார். சுற்றுமண்டபங்களும் முகப்பும் பிற்கால கங்கர்களால் கட்டப்பட்டது.

இந்த ஆலயம் இங்குள்ள முரண்பட்ட கல்வெட்டுக்களால் தொடர்ச்சியாகப் பேசப்படுகிறது. இங்கே கோயில் கருவறையின் அடித்தளத்தில் வட்டெழுத்து, தொடக்கலாகத் தமிழ்,கன்னட எழுத்துருக்களில் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் சோழர்களின் கல்வெட்டு கங்கமன்னர்களை சோழர்கள் வென்று கங்கபாடியை கைப்பற்றியதையும் மலவல்லி ஆலயத்தை கைப்பற்றி அதைப் பேணும்பொருட்டு நிவந்தங்கள் அளித்ததையும் குறிப்பிடுகிறது. நேர்மாறாக கங்கமன்னர்களின் கல்வெட்டுகள் அதேபோரில் சோழர்களை வென்று புறமுதுகிட்டு ஓடச்செய்ததைப்பற்றிச் சொல்கிறது. இருபக்க ஆய்வறிஞர்களும் இரண்டில் ஒரு தரப்பை எடுத்து எழுதியிருக்கிறார்கள்

எது உண்மையாக இருக்கமுடியும்? பண்டைய போர்களெல்லாம் ஒருவகையான அரசியலாடல்கள் என்று புரிந்துகொண்டால் அதில் குழப்பமிருக்காது. இரு காளைகள் போரிட்டால் ஒன்றின் வல்லமையை இன்னொன்று புரிந்துகொள்ளும்வரைதான் அப்போர் நீடிக்கும். கங்கர்கள் அடுத்த நூறாண்டுகள் சோழப்பேரரசின் நட்புநாடாக, உறவுநாடாக நீடித்தனர் என்பதை கருத்தில்கொண்டால் வெற்றி எவருடையது என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் அது கங்கர்களுக்கும் வெற்றிதான் என்றவகையில் அப்போர் அன்று முடித்துவைக்கப்பட்டிருக்கலாம்.

இதைப்போன்ற பதிவுகள் அண்மைக்கால வரலாற்றிலும்கூட உண்டு. திப்புசுல்தான் இரண்டுமுறை திருவிதாங்கூர் எல்லையில் திருவிதாங்கூர் படைவீரர்களான வைக்கம் பத்மநாபபிள்ளையாலும் அமைச்சர் ராஜா கேசவதாஸாலும் தோற்கடிக்கப்பட்டார் என்பது திருவிதாங்கூர் வரலாறு. திப்புவின் குறிப்புகளில் திருவிதாங்கூரை வென்று, முழுக்க கைப்பற்றுவதற்கு முன் ஆங்கிலேயர் ஸ்ரீரங்கப்பட்டினத்தை தாக்கியதனால் திரும்ப நேர்ந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இரண்டுமுறையும் திப்பு சுல்தான் எல்லையிலேயே திரும்பநேர்ந்தது என்பதே வரலாறு

லட்சுமிநரசிம்மர் ஆலயம் தொன்மையின் அழகு கொண்டது. முகக்காப்பு அணிந்த அர்ச்சகர்கள். கருவறைக்கு அருகே ஒவ்வொரு குழுவினரையும் தனித்தனியாக உள்ளே செல்லும்படி சொன்னார்கள். திருவை மடியிலமர்த்திய அரிமுகத்தான். வெள்ளிக்கவசம் அணிந்திருந்தமையால் சிலையை பார்க்கமுடியவில்லை. மிளகுப்பொங்கல் பிரசாதம் கிடைத்தது. துருவியதேங்காய் போட்ட பொங்கல் சுவையாக இருந்தாலும் சர்க்கரைப்பொங்கல் கிடைத்திருக்கலாம் என்று எண்ணாமலிருக்க முடியவில்லை.

கோயிலில் முதன்மையான சிற்பங்களென ஏதுமில்லை. தென்னகத்துச் சோழர் கோயில்களின் அதே அமைப்பு. ஆனால் இரு வாயிற்காவலர் சிற்பங்கள் கன்னங்கரிய எழில்கொண்டவை. அவை பிற்காலத்தையவை, ஹொய்ச்சால கட்டிடக்கலையின் சாயல் உடையவை.

மலவல்லி அக்ரஹாரத்தில் இன்னமும் பழைய கட்டிடங்கள் இருந்தன. இன்று கர்நாடகத்திற்குள் பயணம்செய்வதிலுள்ள மிகப்பெரிய இன்பங்களிலொன்று தூண்களும் விரிந்த திண்ணையும்கொண்ட நூறாண்டு பழமையான கட்டிடங்களைப் பார்ப்பது. ஒவ்வொரு கட்டிடத்திலும் கற்பனையால் ஒருகணம் வாழ்ந்து செல்வது என் வழக்கம். அன்றும் அவ்வாறே சென்றுகொண்டே இருந்தேன். இன்னொரு காலத்திற்கு, இன்னொரு யுகத்திற்கு. நூறாண்டுகளுக்குள் வாழ்க்கை எப்படி மாறிவிடுகிறது.அந்த மாற்றங்களை இல்லங்கள் எப்படி பிரதிபலிக்கின்றன.

இங்கே இன்னமும் பெரும்பாலான வீடுகளில் மாடுகள் உள்ளன. ஆனால் குமரிமாவட்டத்தில் வீட்டில் மாடு வளர்ப்பது பெரும்பாலும் மறைந்துவிட்டது. மாடுவளர்ப்பு மாட்டுப்பண்ணை சார்ந்ததாகவே ஆகிவிட்டது. உழவு பெரும்பாலும் டிராக்டரால்தான். மாடுகளுடன் இணைந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு எப்படியும் பத்தாயிரமாண்டுக் கால வரலாறு இருக்கும். அது மறைந்துவிட்டது.

[மேலும்]

முந்தைய கட்டுரைதியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு வாங்க, வாசிக்க…