வெண்முரசு,கமல் ஹாசன்

அன்புள்ள ஜெயமோகன்,

விஜய்டிவி நிகழ்ச்சியில் நான் கமல் அவர்கள் உங்கள் வெண்முரசு நாவலைப்பற்றிச் சொன்னார். நான் அதை வாசிக்க விரும்புகிறேன். ஆனால் எனக்கு பொருளாதார வசதி இல்லை. அதை நான் வாசிக்க என்ன வழி? நூல்களை பெற்று வாசித்துவிட்டு திரும்பித்தருகிறேன்

ஸ்ரீகிருஷ்ணசாமி

***

அன்புள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி

https://venmurasu.in/ என்ற இணையதளத்தில் தொடர்ச்சியாக வெண்முரசை இலவசமாக வாசிக்கலாம்.தரவிறக்கம் செய்துவைத்துக்கொள்ளலாம். தனித்தனி நூல்களாக வெண்முரசின் எல்லா பகுதிகளும் அதில் தொகுக்கப்பட்டுள்ளன. செல்பேசி இருந்தாலே போதுமானது

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்

நான் அமிகோ கணேச சொக்கலிங்கம், மலேசியா அம்பாங்கில் இருந்து எழுதுகிறேன். கமல்ஹாசன் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் வெண்முரசு நாவல் பற்றி மிக உயர்வாகச் சொன்னார். 25000 பக்கம் நீளமுள்ள நாவல்தொடர் என்று சொன்னார். அதை நாங்கள் வாசிக்க விரும்புகிறோம். இந்நாவல் ஆங்கிலமொழியாக்கத்தில் உள்ளதா என்றும் அறியவிரும்புகிறோம்

அமிகோ கணேசசொக்கலிங்கம்

அம்பாங்

***

அன்புள்ள கணேச சொக்கலிங்கம்

வெண்முரசு நாவல்களை மின்நூல்களாக அமேசான் இணையதளத்தில் வாங்கலாம். கிண்டில் வடிவில் வாங்க: https://amzn.in/dFTj7xN/.
அமேசானில் கிடைக்கும் அச்சு புத்தகங்களை வாங்க: https://amzn.in/2U4yCNq  அச்சுநூல்களாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தொடர்புக்கு: https://dialforbooks.in/product-category/venmurasu/

முழுமையாக இலவசமாக இணையத்தில் https://venmurasu.in/ என்னும் தளத்திலும்  என்னுடைய https://www.jeyamohan.in/ தளத்திலும் வாசிக்கலாம். வெண்முரசை புரிந்துகொள்ள உதவியாக அமையும் கடிதங்களையும் கட்டுரைகளையும் https://venmurasudiscussions.blogspot.com/ என்னும் தளத்தில் வாசிக்கலாம்

வெண்முரசு ஆங்கிலத்தில் இல்லை. ஆங்கில மொழியாக்கம் எளிதல்ல, அதற்குத்தேவையான அளவுக்கு இருமொழித் தேர்ச்சி கொண்டவர்கள் இன்று எவரும் இல்லை. எதிர்காலத்தில் நிகழலாம்.

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

உங்கள் நாவல்கள் எதையும் நான் வாசித்ததில்லை. வெண்முரசு என்னும் பெரிய நாவல் பற்றி கமல் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சொன்னார். அதனால் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் 25000 பக்கம் நீளம் என்று சொன்னதும் ஒரு அச்சமும் உருவானது. என்னால் அவ்வளவு பக்கம் படிக்கமுடியுமா? ஆனாலும் ஆர்வமும் உள்ளது

எஸ்.கே.ராமகிருஷ்ணன்

***

அன்புள்ள ராமகிருஷ்ணன்

உங்களுக்கு ஏற்கனவே கொஞ்சமாவது நூல்களை வாசிக்கும் பழக்கமிருந்தால் வெண்முரசை எளிதில் படித்துவிடலாம். முதல்நாவலான முதற்கனலை முடித்த பெரும்பாலானவர்கள் முழு நாவல்தொடரையும் முடித்திருக்கிறார்கள். ஏனென்றால் வெண்முரசு தொடர்ச்சியான, ஆர்வமூட்டும் கதையோட்டம் உடையது.

கதையின் பொதுப்போக்கு நாம் ஏற்கனவே அறிந்ததுதான், ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கதையில் நீட்சியும் புதிய கோணமும் உள்ளது. அது தொன்மையான கதையாக இருந்தாலும் அதன் கதைமாந்தர்களின் இயல்புகளும் , அவர்களின் உணர்ச்சிகளும், பேசப்படும் பிரச்சினைகளும் இன்றைய காலத்தவையாக உள்ளன. இந்தியப் பாரம்பரியம், இந்துமதம் சார்ந்த தேடல் கொண்டவர்கள் அவர்களின் அறிதல்களை விரிவாக்கிக்கொள்ளலாம்

ஆகவே நீங்கள் தைரியமாகத் தொடங்கலாம்

ஜெ

***

அன்புள்ள நண்பர் ஜெ,

வணக்கம். நலமா? நாங்கள் இங்கே நலமே!

உங்களுடைய இணையத்தளத்தை இன்று பார்க்க முடியவில்லை. இதுபோல முன்னரும் நடந்துள்ளது. தொழில் நுட்பக் கோளாறா அல்லது வேறு ஏதாவது சிக்கல்களா?

எல்லோருக்கும் எங்கள் நிறைந்த அன்பு.

அன்புடன்,

***

அன்புள்ள கருணாகரன்,

மிக அரிதாக அவ்வாறு நிகழும். முன்பு ஒரேகணத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இணையதளத்திற்குள் நுழைய முயன்றால் இணையதளம் நின்றுவிடும். முன்பு அப்படி அடிக்கடி ஆகியது. ஆகவே மேலும் செலவுசெய்து இப்போது கிளவுட் தொழில்நுட்பத்திற்குச் சென்றுள்ளோம். இப்போது ஆயிரம்பேர் வரை தாங்கும். நேற்று கமல்ஹாசன் இந்த தளம் பற்றி குறிப்பிட்டதனால் அப்படி ஆகியிருக்கலாம். ஓரிரு நிமிடங்கள் கடந்து ரிஃப்ரஷ் செய்தபின் பார்த்தால் இணையதளம் மீண்டும் தெரியும்

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? திட்டமிட்டபடி எல்லாம் நடந்திருந்தால் இந்நாளில் இலங்கை வந்து மீண்டிருப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைபாபர் கும்மட்டம் இடிப்பு -தீர்ப்பு
அடுத்த கட்டுரைஅ.கா.பெருமாள்- சந்திப்பு காணொளி