புனைவு, புனைவல்லா எழுத்து

வணக்கம் ஐயா,

தாங்களும் தங்கள் குடும்பமும் நலம் என எண்ணுகிறேன்

என் பெயர் விவேக், புதுச்சேரியில் இருந்து எழுதுகிறேன். இந்த ஆண்டு சென்னை புத்தகத்திருவிழாவில் தங்களுடைய “அறம்” கிடைக்கப்பெற்று வாசித்தேன். அற்புதமான விழுமியத்தை கொண்ட எழுத்தை தந்தமைக்கு நன்றி.

பொழுபோக்கிற்காக வாசிக்க ஆரம்பித்த நான் இப்பொழுது தீவிர எழுக்களை மட்டுமே வாசிப்பது என முடிவு எடுத்துள்ளேன். அதற்கான முயற்சியின் பொழுது Mortimer.J.Adler எழுதிய How to read a book (written on 1939,) என்ற புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது.

அதில் அவர் எழுத்துக்களை இரு வகைகளாக கூறியுள்ளார்.

a. Expository literature (history, science, philosophy).

b.Imaginative literature (Poetry, Fiction, Belles-letters, dramas, novels, lyrics).

முதல் வகையான புத்தக வரைமுறை என்னவென்று என்னால் ஊகிக்க முடிகிறது. என்னுடை ஆர்வம் இரண்டாம் வகை புத்தகங்களில் தான். தங்களுடைய மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி?, லியோ டால்ஸ்டாய், நவீன இலக்கியத்திற்கும் மரபு இலக்கியத்திற்குமான வேறுபாடு, நவீன இலக்கியத்தின் தனித்தன்மை மற்றும் பல  உரைகளை Youtube Shruti TV என்ற சேனல் மூலமாக கண்டு உற்சாகம் அடைந்தேன்

தங்களிடம் என்னுடைய கேள்வி :

  1. நீங்கள் கூறும் நவீன இலக்கியத்தை (ஜனநாயக பண்பு, உலகளாவிய கருத்து, சர்வதேச தன்மை) expository literature என்றும் சங்க இலக்கியங்களை imaginative literature என்றும் புரிந்துகொள்ளலாமா ?
  1. எதற்காக ஒரு imaginative literature (அது எழுத்தாளரின் கற்பனை மட்டுமே என்றால்) வகையான புத்தகங்களை வாசிக்க வேண்டும் ? ஒரு நாவல் வாசகற்கு கற்பிப்பது என்ன? ஒரு நாவல் மனிதனுக்கு என்ன கொடுக்கும் ? அதில் இருக்கும் கருத்துக்களா? இல்லை விழுமியங்கலா?
  1. மேலும் தங்களின் நாவலுக்கும் (விஷ்ணுபுரம்), காப்பியத்திற்கும் (கொற்றவை) உள்ள தனித்தன்மை & வேறுபாடு என்ன? உங்களின் Youtube உரைகளின் மூலமாக இவை அனைத்தும் நவீன இலக்கியம் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள், நவீன இலக்கியம் நிஜமா? கற்பனையா? அதன் மூலமாக ஒரு வாசகன் அடைவது என்ன?

இந்த கேள்விக்கான பதிலை தாங்கள் ஏற்கனவே எங்காவது பேசி இருந்தாலோ, கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தாலோ, தங்களின் புத்தகத்தில் ஏதேனும் ஒன்றில் எழுதி இருந்தாலோ அல்லது வேறு எங்காவது இக் கேள்விக்கு பதில் இடமபெற்று இருந்தால் தயவு செய்து பகிருமாறு கேட்டு கொள்கிறேன்

விவேக்

***

அன்புள்ள விவேக்

இவை தொடக்ககால ஐயங்கள். ஒரு விவாதம் வழியாக எளிதாகக் கடந்து செல்லத்தக்கவை. ஆனால் ஒரு நல்ல விவாதம் வழியாக கடந்துசெல்லப்படவில்லை என்றால் ஆழமான – தவறான- புரிதல்களாக மாறி நிலைகொள்ளவும் கூடியவை. ஆகவே நான் இந்த வகையான கேள்விகளுக்கு திரும்பத்திரும்ப பதில் சொல்கிறேன்.

பொதுவாக  வாசிப்பை இருவகையான பிரிவுகளாக சொல்வது வழக்கம். புனைவு, புனைவல்லாதது. அந்தப்பகுப்பையே இங்கே ஆட்லர் செய்கிறார்.ஒட்டுமொத்த எழுத்தையே இப்படி இரண்டாகப்பிரிக்கலாம்.

இது மிக எளிமையான பகுப்புதானே என்றுதான் தோன்றும். ஆனால் வாசிப்பின் ஆரம்பநிலைகளில் அந்த பகுப்பு பலருடைய உள்ளத்தில் இருப்பதில்லை. அதை விவாதித்து தெளிவுபடுத்திக்கொள்ளாதவரை அது அப்படியே நீடிக்கும்.

என்னுடன் பேசும் பலவாசகர்கள் ஒரு கதையை வாசித்ததும் “இது உண்மையா?” என்று கேட்கிறார்கள்.  ஒரு கதையில் நான் என்று வருமென்றால் அது ஆசிரியனே என நினைத்துக்கொள்கிறார்கள். ஒரு கதையில் நிகழ்வன எங்கோ எவருக்கோ நிகழ்ந்தன என்று எண்ணிக்கொள்கிறார்கள். பெரும்பாலும் அது கதையின் ஆசிரியனுக்கு நிகழ்ந்தது என நம்பி கதையில் வரும் கதைமாந்தர் பற்றிக் கேட்கிறார்கள். இதெல்லாமே கதைக்கும் புனைவல்லா எழுத்துக்குமான வேறுபாடு அவர்களின் உள்ளத்தில் வரையறை செய்யப்படவில்லை என்பதையே காட்டுகின்றன

புனைவல்லாத எழுத்தையே நாம் கட்டுரை என்றோ குறிப்பு என்றோ சொல்கிறோம். அதன் இயல்புகள் சில உண்டு. அதன் அடிப்படை அலகு ஒரு செய்தி, அல்லது ஒரு வரையறுக்கப்பட்ட எண்ணம். அந்தச் செய்தியோ எண்ணமோ தர்க்கபூர்வமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.

அந்த தகவல்கள் புறவயமானவை. அவற்றை ‘தகவலுண்மை’ என்று சொல்லலாம். அவை புறவயமானவை. அதைத்தான் நாம் பொதுவாக ‘உண்மை’ எனச் சொல்கிறோம். பேச்சுக்களில் ஒரு கதையை வாசித்துவிட்டு “இது உண்மையா?” என்று கேட்பவர்  “இந்த கதையிலுள்ளவை தகவலுண்மைகளா?”என்றுதான் கேட்கிறார்.

தகவலுண்மைகள், புறவயத்தர்க்கம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டதே புனைவல்லாத எழுத்து. நாம் அன்றாடம் வாசிக்கும் செய்திகள், ஆய்வுகள், விளக்கங்கள் எல்லாமே இந்தவகையில் வருபவை. நாம் ஒருநாளில் மிகக்கூடுதலாக வாசிப்பவை இவைதான். ஆட்லர் expository literature என்பது இதைத்தான். அதாவது விளக்கும் நோக்கம் கொண்ட எழுத்து. செய்திகளையும் சிந்தனைகளையும் அளிக்கும் எழுத்து அது.

ஒரு புனைவல்லாத எழுத்தின் அடிப்படை அலகு என்பது செய்தி அல்லது எண்ணம். அது அந்த கட்டமைப்புக்குள் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கும். “கோவிட் 19 தொற்றுநோய் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல்” என்ற வரி ஒரு புனைவல்லாத கட்டுரையில் வருகிறது என்று கொள்வோம். இதில் கோவிட் 19, மனிதகுலம் தொற்றுநோய் ஆகிய மூன்றும் பொருள்வயமாக வரையறை செய்யப்பட்டிருக்கும். எதிர்காலம், அச்சுறுத்தல் என்னும் இரு சொற்களும் குணவயமாக வரையறை செய்யப்பட்டிருக்கும்.

கோவிட் 19 என்றால் ஒரு குறிப்பிட்ட நோய். மனிதகுலம் என்றால் பூமிமேல் வாழும் அத்தனை மனிதர்களும் தொற்றுநோய் என்றால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றும் நோய். இவற்றில் எந்த புரிதல்குழப்பமும் நமக்கு வராது. வேறு எவ்வகையிலும் நாம் இச்சொற்களை பொருள்கொள்ள முடியாது.

எதிர்காலம் என்றால் இனிவரும் காலம், பெரும்பாலும் நாம் உடனே அறியச்சாத்தியமான காலம். அச்சுறுத்தல் என்றால் மனிதகுலத்திற்கு பலவகையான தீங்குகள் வரக்கூடும், அழிவுகள் நிகழக்கூடும் என்னும் வாய்ப்பு. இவையிரண்டும் இந்தச் சூழலில் பொதுவாக வரையறை செய்யப்பட்டுள்ளன. நம் புரிதல் கொஞ்சம் வேறுபட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எதிர்காலம் என்னும்போது ஒருவர் ஐம்பது ஆண்டுகள் என நினைக்கலாம் இன்னொருவர் ஆயிரமாண்டுகளை எண்ணிக்கொள்ளலாம். அச்சுறுத்தல் என்னும்போது மனிதகுலமே அழிந்துவிடும் என ஒருவர் நினைக்கலாம்.இன்னொருவர் மனிதகுலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என நினைக்கலாம்.

இந்த குணரீதியான வரையறை அக்கட்டுரையின் பொதுவான போக்கு, அக்கட்டுரை முன்வைக்கப்படும் சூழல், அக்கட்டுரை வாசிக்கப்படும் சூழல் ஆகியவற்றைக்கொண்டு வரையறை செய்யப்படுகிறது.

அதாவது ஒரு புனைவல்லா எழுத்தின் அடிப்படைக்கூறுகள் இவ்வாறு  மிகத்தெளிவாக வரையறைசெய்யப்பட்டுவிடுகின்றன. இப்படி வரையறைசெய்யப்பட்டு நமக்கு அவை ஆசிரியரால் அளிக்கப்படுகின்றன. அதன்வழியாகவே நாம் இந்தக்கூற்றை பொருள்கொள்கிறோம். அதைப்பற்றி மேற்கொண்டு சிந்திக்கிறோம், தொடர்ந்து விவாதிக்கிறோம்.

புனைவெழுத்து அதிலிருந்து முற்றாகவே வேறுபட்டது. அதையே ஆட்லர் imaginative literature என்கிறார். அதன் அடிப்படை அலகு என்பது புறவயமாக வரையறுக்கப்பட்டது அல்ல. அது ஒரு படிமம். அது நம்மால் கற்பனையில் வளர்க்கப்படவேண்டிய ஒன்று. ஆசிரியர் நமக்கு அளிப்பது ஒரு செய்தியையோ எண்ணத்தையோ அல்ல. அவர் நமக்கு அளிப்பது நாம் வளர்த்தெடுக்கவேண்டிய ஒரு படிமத்தை. [இமேஜ்]

புனைவெழுத்திலும் செய்திகளும் எண்ணங்களும்தான் இருக்கும். ஆனால் அவை இங்கே நாம் கற்பனையில் வளர்த்தெடுக்கவேண்டியவையாக இருக்கும். “வைரஸ் மனிதகுலத்தின் மேல் பரவியது, மனிதகுலம் வைரஸின் ஊர்தியாகியது” என்று ஒரு கதையில் ஒரு வரி வருகிறது என்று கொள்வோம். அங்கே வைரஸ் என்று சொல்லப்படுவது வைரஸ் மட்டுமாக இருக்கவேண்டியதில்லை. அது ஒரு தீய எண்ணமாக, தீயவிளைவாக இருக்கலாம்.

அடுத்த வரி இப்படி இருக்கிறது என்று கொள்வோம் “ஒவ்வொருவரும் புவியிலுள்ள பொருட்களை தன்னுடையவை என எண்ணச் செய்தது அது. அதன்பொருட்டு கொல்லவும் சாகவும் செய்தது. பத்தாயிரமாண்டுகளில் தான் விரும்பிய ஓர் உலகை அது மண்மேல் உருவாக்கியது”. அப்படியென்றால் முதல்வரியில் சொல்லப்படும் வைரஸ் என்ன? அது ஓர் உவமை, ஒரு படிமம். அது மனிதனுள் செயல்படும் ஓர் எண்ணத்தையே குறிப்பிடுகிறது.

இப்படி அடிப்படை அலகு கற்பனையால் விரித்த்டுக்கப்படுவதாக இருந்தால்தான் அது புனைவெழுத்து. அது தகவலாக இருக்கலாம், எண்ணமாக இருக்கலாம், உணர்வாக இருக்கலாம். சிலசமயம் திட்டவட்டமான ஒரு தகவல்கூட ஒரு புனைவில் சொல்லப்படும். அப்போதுகூட நாம் அதை கற்பனையால் விரித்தெடுக்கவேண்டும். உதாரணமாக ஒரு கதையில் ஈரோடு என்று வருகிறது. ஐயமே இல்லை, அது ஒரு நகரம். ஆனால் வாசகன் அதை நடுத்தரமான ஒரு தொழில்நகரம் என்றுதான் கற்பனைசெய்துகொள்ளவேண்டும். ஈரோடு மட்டுமாக அல்ல. அப்போதுதான் கதை அர்த்தமாக விரியும்

ஏன் புனைவு தேவைப்படுகிறது? அதை முன்னரும் எழுதியிருக்கிறேன். இப்படிச் சொல்கிறேன். தகவலுண்மைகளுக்கு அப்பால் வேறுவகை உண்மைகள் உள்ளன என நாம் பொதுவாக உணர்வதில்லை. அவை நாம் நம் அகத்தே உணர்பவை, ஆகவே அகஉண்மைகள். அவ்வுண்மைகளை நாம் இன்னொருவர் சொல்லி நாம் அடைய முடியாது. அது தெரிந்துகொள்ளும் உண்மை அல்ல, உணர்ந்துகொள்ளும் உண்மை. அவ்வாறு உணர்ந்துகொள்ளச் செய்வதற்கே நமக்கு புனைவுகள் தேவைப்படுகின்றன

ஒரு புனைவு எப்படி செயல்படுகிறது?ஓர் உவகை சொல்கிறேன். விபத்து எச்சரிக்கைப் பயிற்சிகள் எப்படி அளிக்கிறார்கள்? செயற்கையாக விபத்துபோன்ற சூழலை உருவாக்கி அதில் நம்மை செயல்பட வைத்து தேர்ச்சிபெறச் செய்கிறார்கள். நாம் கற்றுக்கொள்வதும் உணர்ந்துகொள்வதும் நம் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து மட்டுமே. அவ்வனுபவங்களை ஒரு இலக்கியப்படைப்பு நம் கற்பனையில் அடையவைக்கிறது. நேரடி அனுபவங்களில் இருந்து கற்றவற்றை நாம் கற்பனை அனுபவங்களில் இருந்து கற்கிறோம். இதுவே இலக்கியம் அளிக்கும் அறிதல்.

இவ்வாறு நாமே அடையும் உண்மையே அகஉண்மை, அதை இலக்கியம் நமக்கு அளிக்கவில்லை., மாறாக நாம் அதைநோக்கிச் சென்று அதை அடைய வைக்கிறது. அதற்கான வாழ்க்கைச்சூழலை, களத்தை மட்டுமே இலக்கியப்படைப்பு உருவாக்கி அளிக்கிறது.

புறவயமான உண்மையை நமக்கு சொல்ல புனைவல்லாத படைப்புக்கள் தேவை. அகவுண்மையை நாமே சென்று அடைய புனைவுகள் தேவை. தர்க்கபூர்வமாகவும் தகவல்சார்ந்தும் அறிய புனைவல்லாத எழுத்து தேவை. நுண்ணுணர்வால் அறியவும் உணர்வுபூர்வமாக புரிந்துகொள்ளவும் புனைவுதேவை

புனைவு என்பது மிகப்பொதுப்படையான பெயர். அதைத்தான் ஆட்லர் imaginative literature என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் கற்பனையை அடிப்படையாகக் கொண்ட எல்லாமே புனைவுதான். மகாபாரதம், சங்க இலக்கியம், கம்பராமாயணம், பாரதி பாடல்கள் , ஷேக்ஸ்பியர் நாடகங்கள், புதுமைப்பித்தன் கதைகள் எல்லாமே புனைவிலக்கியங்கள்தான்

ஆனால் புனைவு பலவகை. புரிந்துகொள்ளும் வசதிக்காக நாம் அதை நவீன இலக்கியம்- பண்டைய இலக்கியம் என்று பிரித்துக்கொள்கிறோம். சங்க இலக்கியம், கம்பராமாயணம், ஆழ்வார் பாடல்கள் எல்லாமே பண்டைய இலக்கியம். பாரதிக்குப்பிறகு எழுதப்பட்டவை நவீன இலக்கியம் என பிரித்துக்கொள்கிறோம்.

நவீன இலக்கியம் என்பது முதன்மையாக ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலால் உருவானது. காகிதம், அச்சு ஆகியவை புழக்கத்திற்கு வந்து புத்தகம் என்பது உருவானதும் ஒரு நூலை ஓரு வாசகன் அந்தரங்கமாக அவன் மட்டுமே அமர்ந்து வாசிக்கும் நிலை உருவானது. ஆசிரியனுக்கும் வாசகனுக்கும் நடுவே ஒரு தனிப்பட்ட தொடர்பு வாசிப்பின்போது நிகழ்கிறது. அந்த தனிப்பட்ட வாசிப்பே நவீன இலக்கியத்தை உருவாக்கிய அடிப்படை என்று சொல்லலாம்.

அதற்கு முன்னரும் இலக்கியம் இருந்தது. ஆனால் அன்று அச்சு இல்லை, ஆகவே புத்தகமும் பயன்பாட்டில் இல்லை. ஏட்டில் எழுதிவைப்பார்கள், ஆனால் அது அந்த நூல் அழியாமல் காக்கும்பொருட்டு மட்டுமே.அன்றைய வாசிப்பு என்பது கூட்டால வாசிப்பு. நூல்நவில்தல் என்று அதைச் சொல்வார்கள். அது பயில்வதுதானே ஒழிய வாசிப்பது அல்ல.  ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொள்வதே பொதுவான வழக்கம். பலர் கூடி அமர்ந்து நூல்களை பொருள்கொள்வார்கள். நூல்களை பொருள்கொள்வதற்கு உரிய வழிமுறைகள் உண்டு. அவற்றுக்குரிய  இலக்கணமுறைமைகள் உண்டு.

நவீன இலக்கியம் நவீன வாழ்க்கைச்சூழலில் உருவானது. அதன் அடிப்படைகளைப் பற்றியே நான் பேசுகிறேன். அது வாசகனிடம் அந்தரங்கமாகப் பேசுகிறது. வாசகனே நூலை தன் சொந்த அனுபவம் வழியாக பொருள்கொள்கிறான். ஆகவே வாசிப்பு ஓரு ஜனநாயகச் செயல்பாடாக உள்ளது. அதற்கு ஒரு உலகளாவிய தன்மை உருவாகி வந்துள்ளது.

நீங்கள் கொண்ட பொருட்குழப்பம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.  நீங்கள் உலகளாவிய தன்மை ஜனநாயகத்தன்மை என்றதுமே ஒரு புனைவு அதையெல்லாம் ‘சொல்லிக்கொண்டிருக்கும்’ என நினைக்கிறீர்கள். அவ்வாறல்ல, அவை அப்புனைவின் இயல்புகள் மட்டும்தான்.

தெளிவாக மீண்டும் சொல்கிறேன் expository literature என்பது கருத்துக்களையும் செய்திகளையும் சொல்லும் புனைவல்லாத எழுத்து. imaginative literature என்பது புனைவு எழுத்து. அதில் கதை, கவிதை, நாடகம் எல்லாமே வந்துவிடும்.  திருக்குறள் புனைவல்லா எழுத்து [expository literature ]கம்பராமாயணம் புனைவெழுத்து [imaginative literature] இதுதான் வேறுபாடு

புனைவெழுத்துக்குள் எல்லாமே வந்துவிடும். காவியமும் புனைவெழுத்தே. நாவலும் புனைவெழுத்தே. விஷ்ணுபுரமும் புனைவுதான், கொற்றவையும் புனைவுதான், ஏழாம் உலகமும் புனைவுதான். சிலப்பதிகாரம் பண்டைய இலக்கியம் கொற்றவை நவீன இலக்கியம். மகாபாரதம் பண்டைய இலக்கியம், வெண்முரசு நவீன இலக்கியம்.

ஜெ

வாசிப்பின் வழி

இலக்கியம் என்பது என்ன?- மீண்டும்

இலக்கியமும் பிறகலைகளும்

இலக்கியத்தின் தரமும் தேடலும்

இலக்கிய வாசிப்பும் பண்படுதலும்

முந்தைய கட்டுரைகனலி ஜப்பானிய சிறப்பிதழ்
அடுத்த கட்டுரைபுதிய புனைவின் கோபுரவாயில்