திருமந்திரம் கற்பது
திருமந்திரம் பற்றி…
திருமந்திரம்- இறுதியாக…
அன்பின் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு அன்பும், ஆசியும்
திருமந்திர மெய்ப்பொருளை எடுத்துச் சொல்வதற்கு வேதாந்தி ஒருவரே பொருத்தமாயிருக்கும்என்று நீங்கள் எழுதியிருப்பது மிகவும் சரியானது. திருமந்திரம், திருவாசகம் போலவே மோட்சசாதனம்.வீடுபேற்றுக்கான வழியை விவரிக்கவந்த நூல். அதைப் பன்னிரு திருமுறைகளில் ஒன்றாய்ச் சேர்த்திருப்பதே ஏதோ அதிசயம்தான்.
ஆறுமுகத்தமிழர் என்பவர் மறுதலை என்று எழுதியிருப்பதையும் பார்த்தேன்.எதற்கு மறுதலை? வேதாந்தத்திற்கா மறுதலை! அப்படி சித்தாந்த நூல் எங்காவது ஓரிடம் சொல்கிறதா?’வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம்’ என்பதே சித்தாந்தத்தின் அடிப்படை. வேதாந்தமும் சித்தாந்தமும் நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றவை
திருமூலரே வேட்கை எல்லாம்விட்ட வேதாந்தியிடம் மட்டுமே பாடம் கேட்கச் சொல்லுகிறார்.
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச் சித்தாந்தத்து
வேட்கை விடும்மிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினோன் சற்சீட னாமே.
(திருமந்திரம் ஆறாம் தந்திரம்)
காரணம் இருக்கிறது. சைவத்தில் துறவு என்பது அரிதானது. அது இல்லறத்துடன் என்றும் பிணைந்தது.சைவனிடம் ’ஈசனோடாயினும் ஆசை அறுமின்’ என்ற திருமந்திரவாக்கு செல்லாது. அவனிடம் சிவபெருமானைக் கோயிலில் தேடாதே என்றால் துடித்துப் போய்விடுவான்.ஆனால் திருமூலர் சொல்வார்.
மாடத்து ளானலன் மண்டபத் தானலன்
கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்
வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே.
(திருமந்திரம், எட்டாம் தந்திரம்)
இங்கும் அவர் சொல்வது வேட்கைவிட்டவர் நெஞ்சில் நின்றே அவன் முத்தி நல்குவான்.
அவரே உண்மையான வேதாந்தி. அவரே சத்குரு.
அன்புடன்,
விஜயராஜ் என்ற பிரக்ஞானந்தா
வணக்கத்திற்குரிய பிரக்ஞானந்தாஅவர்களுக்கு
உங்கள் பார்வையை என்னால் ஏற்கமுடியவில்லை. இங்கே வேதாந்தம் என்ற சொல்லில் குறிப்பிடப்படுவது வேதாந்தம் என நாம் இன்று சொல்லும் இரண்டின்மைவாதத்தைத் தானா, அல்லது வேதங்களின் விழுப்பொருள் என்ற பொருளில் சொல்லப்பட்டிருக்கிறதா என்பது ஆய்வுக்குரியது.
ஜெ