ஓர் அமெரிக்கக் குழந்தை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.  நேற்று மதியம், எனது மகன் ஜெய்யுடன், பள்ளிக்கு மற்றும் கல்லூரிக்கு சென்ற அவனது தோழி, இணையத்தில் எழுதி வந்த பதிவுகளின் தொகுப்பாக வெளியுட்டுள்ள புத்தகம் என் கைக்கு வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமென வாசித்ததில், படிக்கலாம் போல என முழுப்புத்தகத்தையும் வாசித்துவிட்டேன். அமெரிக்காவிற்கு புலம்பெயர்பவர்களின் குழந்தைகளுக்கு என்று ஒரு உலகம் உள்ளது. அவர்களுக்கென ஒரு சிக்கல் உள்ளது. இந்த நூலை வாசிப்பதில் , நிறைய பெற்றொர்களின் கண் திறக்கும் அல்லது தன் வீட்டில் வளரும் குழந்தையின் மனம் புரியும் என நினைக்கிறேன். புத்தகம் பற்றி நேற்று எனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டேன். அதை உங்களின் பார்வைக்கும் அனுப்புகிறேன்.

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

ஆஸ்டின்

 அவளை அறிந்துகொள்ள ஒரு புத்தகம்  

(the years float on – Tina Dam)

அவள் இந்தியப் பெண்ணல்ல. இடுங்கிய கண்களில்சிரிப்பையும், தலைக்குள் இருக்கும் மூளையில் ஞானத்தையும் சேமித்து வைத்திருப்பவள். என் மகனின் தோழி, டீனா டாம். பத்தாம் வகுப்பு அல்ஜீப்ரா பாடத்தின்போது “ நான் , உன்னுடன் அமர்ந்து கொள்ளட்டுமா?” என்று என் மகனிடம் கேட்டுவிட்டு அமர்ந்தவள்.  வீட்டிலிருந்து எடுத்து வந்த சாப்பாட்டில் உனக்குக் கொஞ்சம் வேண்டுமா என்று ஜெய்யிடம் முதன் முதலில் கேட்டவள். என் மகனைப் பார்க்க எங்கள் வீட்டிற்கு வருபவள், இந்தியர்கள் இவர்கள் என்பதால், “அங்கிள்” என்று என்னையும், ஆன்டி என ராதாவையும் அழைப்பவள். ஜெய்க்கு அவளைப் பிடிக்கும். அவளுக்கு ஜெய்யைப் பிடிக்கும். எங்களுக்கு அவளைப் பிடிக்கும். இன்று மதியம் எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்த அவள் எழுதி வெளியிட்ட புத்தகத்தில், தனக்கு ஆஸ்டினில் பிடித்தமான இடங்களில் ஒன்று ஜெய்யின் வீடு என்று இருக்க அவளுக்கு எங்களது வீட்டைப் பிடிக்கும் என அறிந்தேன். பொதுவாக, ஒரு ஊரில் பிடித்த இடம் என்றால், பூங்கா, உயரமான கட்டிடம், ஏரி,குளம் என்று இருக்கும், இந்தப் பெண் என்னடாவென்றால், தன் நண்பர்களின் வீட்டைப் பிடிக்கும் என எழுதியிருக்கிறாள் என்று, அப்படியே படிக்க உட்கார்ந்துவிட்டேன்.

நூறு பக்க புத்தகத்தில், கனவுகள், நினைவுகள், நிகழ்வுகள், கவிதைகள் என இந்த இருபத்தைந்து வயது பெண் தன் அகத்தை திறந்து வைத்திருக்கிறாள். ஒரு அணியின் மனப்பான்மையுடன் இருப்பதுதான் காதல் என மிக எளிமையான விளக்கத்தை வைத்து வியக்க வைக்கிறாள். வாழ்க்கையை நேசிக்கிறாள். விமானத்தில் டொரான்டோவிலிருந்து வந்து இறங்கினாலும் சரி, வேறு எங்கு போய்விட்டு வந்து இறங்கினாலும் சரி, நியூயார்க் நகரை மேலிருந்து ரசிப்பதில் அவளுக்கு சலிப்பே இல்லை. இப்போதைய அவள், அவளின் மற்ற பருவத்தில் இருந்தவளுடன் விளையாட நேர்ந்தால் என்ன சொல்லுவேன் என சொல்லியிருப்பது , வாழ்வின் தரிசனத்தை தொட்டுவிட்டவளாகத் தெரிகிறாள். உதாரணங்கள்: ஆறு வயதுப் பெண்ணிடம், ஆங்கிலத்தை தப்பாகப் பேசுவதில் தவறில்லை என்கிறாள். பதினான்கு வயதுப் பெண்ணிடம் , நீ அப்படி ஒன்றும் முட்டாள் இல்லை என்கிறாள். பதினெட்டு வயதுப் பெண்ணிடம், என்ன செய்யவிருக்கிறோம் என்று தெரியாமல் விழிப்பதில் தவறில்லை என்கிறாள்.

கொலம்பியா பல்கலைக் கழகப் படிகளில் அமர்ந்துகொண்டு, நியூயார்க் ஸப்வே-யில் பயணம் செய்துகொண்டு, தனது அபார்ட்மென்டில் தனியாக அமர்ந்து சீரியல் சாப்பிட்டுக்கொண்டு அவள் பழைய நினைவுகளில் சென்று மீண்டு வரும்பொழுது எனக்குத் தெரிந்த அந்தச் சிறுமியை நானும் மீட்டெடுக்கிறேன். படித்து வேலை பார்க்குமிடத்தில், வணிக வாழ்க்கையின் அழுத்தம் தாங்கமுடியாத ஒரு நாளில், மிகக்கடுமையான நாட்களில் ஒன்று என குறிப்பு எழுதுகிறாள்.

ஜெய்க்கு அந்தி நேரத்தைப் பிடிக்கும். அவனது தோழிதானே இவளும். நிறைய குறிப்புகளில், மாலை நேரத்தின் மீது அவளுக்கு இருக்கும் ரசனை தெரிகிறது. இரயிலில் பயணிக்கும் சக பயனியின் அழகை கண் கொட்டாமல் ரசித்துவிட்டு வெட்கப்படுகிறாள். ‘லா லா லேண்ட்’ பாட்டில் தன்னை மறக்கிறாள். மொத்தத்தில் வாழ்வை ரசிக்கிறாள்.

அவளுக்கு நண்பர்கள் உண்டு. அவர்களுடன் தோள் மேல் கைபோட்டு நடக்கவும் பிடிக்கிறது. ஆனாலும், ஏதாவது ஒரு நாள் அவளுக்கே அவளுக்கென்று ஒரு நாளை எடுத்துக்கொண்டு தனியாக சாப்பிட்டு தனக்கே தனக்கென்று ஒரு நாளை வைத்துக்கொள்கிறாள்.

வாழ்வை ரசிப்பவள், சாப்பாட்டை மட்டும் விட்டு வைப்பாளா என்ன? சிறுவயதில் தம்பியுடன் என்ன சாப்பிடுவேன் என்பதிலிருந்து, ஒரு மதிய நேரத்தில் சாப்பிடும் சான்ட்விட்ச் என அங்கங்கே குறிப்பிட்டு நாவில் எச்சில் வரவைக்கிறாள். அவள் கோபப்படும் நாட்களும் உண்டு. எதற்காக பிறந்தோம்? என்ன சாதிக்கவிருக்கிறோம் என கேள்விகள் கேட்கும் நாட்களும் உண்டு. நான் பார்க்க வளர்ந்த பெண், டீனா டாம் , எழுதியுள்ள நூல்தான் என்றாலும், The years float on பெண்ணெனும் ஒரு மனுஷியைப் புரிந்துகொள்ளும் நூலெனவே இதைப் பரிந்துரை செய்கிறேன்.

-வ.சௌந்தரராஜன்

09/14/2020

The years float on Paperback – September 3, 2020

முந்தைய கட்டுரைகல்வி, பொன்னீலன், ஒரு நினைவு- சோ.தர்மன்
அடுத்த கட்டுரைசுந்தர ராமசாமி மார்க்ஸியரா?