கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு

ஆசிரியருக்கு,

உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறன், கி.ராஜநாராயணன் மே ஒரு தீண்டாமை வன்கொடுமை குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. கி.ரா அவர்கள் சண்டே இந்தியா என்ற இதழுக்கு அளித்த பேட்டியில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யவேண்டி கதிரேசன் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுவும் நீதிமன்றத்தால் விசாரனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த குற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி திரு. கி.ரா, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இறுதியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் கி.ரா அவர்கள் மேல் தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது அனைவருக்கும் தெரிந்திருக்கும். சில நாளிதழ்களிலும் செய்தியாக வந்தது.

ஆனால் இந்த வழக்கின் முக்கிய அம்சம் என்பது இந்த குற்ற வழக்கை ரத்து செய்ய தீர்ப்பில் கொடுக்கப்பட்ட காரணங்கள். இந்த தீர்ப்பை அளித்தவர் நீதிபதி G.R.சுவாமிநாதன். சட்டநுணுக்கங்கள் அறிந்த, திறமையான, நேர்மையான, சட்ட புத்தகங்கள் மட்டுமின்றி மற்ற புத்தகங்களையும் படிக்கக்கூடிய நீதிபதி.

பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் கூறப்படும் குற்றச்சாட்டானது குறிப்பிட்ட சட்டப்பிரிவின் வரையறைக்குள் வருகிறதா இல்லையா என்பதை மட்டும் தான் நீதிமன்றம் பார்க்கும். சில அரிதான தருணங்களில் வழக்கின் பொருண்மைகளை (Facts) கவனத்தில் கொண்டு வழக்கை தீர்மானிப்பார்கள்.

இந்த வழக்கில் கி.ரா அவர்கள் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இதுதான். சண்டே இந்தியாவிற்கு பேட்டியளிக்கையில், நீங்கள் ஏன் தலித் வாழ்க்கையை பற்றி எழுதவில்லை என்ற கேள்விக்கு, “அவன்” மொழி (dialect) எனக்கு தெரியாது ஆகவே அதை எழுத நான் முயலவில்லை என்கிறார். “அவன்” என்று ஒருமையில் கூறி தாழ்த்தப்பட்ட சமூகத்தை அவர் இழிவுபடுத்திவிட்டார், இதன் மூலம் SC & ST Act பிரிவு மூன்றின் படி குற்றம் இழைத்துள்ளார் என்பது குற்றச்சாட்டு. இதற்கு குறைந்தது ஆறு மாதம், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கலாம்.

இந்த வழக்கிலும் நீதிபதி கூறப்பட்ட குற்றச்சாட்டானது சட்டப் பிரிவின் வரையறைக்குள் வருகிறதா என விவாதிக்கிறார். அவன் என்று ஒருமையில் கூறுவது இழிவுபடுத்துவது ஆகுமா என்பதை திரு. ஜெகநாத் என்ற இளம் தமிழ் அறிஞர் உதவியுடன் சங்க காலம் முதல் இன்றைய காலம் வரை “அவன்” என்ற சொல் எவ்வாறு பொருள்படுகிறது என ஆராய்கிறார். புறநானூற்றில் ஆரம்பித்து திருக்குறள், திருவாசகம், திருவாய்மொழி, பெரியபுராணம், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் வரை உள்ள பாடல்களில் அவன் என்ற சொல் குறிப்பிடும் அர்த்தத்தை விளக்குகிறார்.
மேலும் வழக்குகளில் இதுபோன்ற தருணங்களில் முன்பே உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு, கி.ரா அவர்கள் அவன் என்று கூறியது தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் சொல்லப்பட்டது அல்ல என்று கூறி ,அதனால் அவர் மேல் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதோடு நின்றிந்தால் இந்த வழக்கு மற்ற வழக்குகள் போல் ஆயிரத்தில் ஒன்றாக மாறியிருக்கும் .ஆனால் இது சிறப்பு பெறுவதற்கு காரணம், இன்று இப்படிப்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு எவ்வாறு பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் ஒடுக்கப்படுகிறது என்று கூறி; அதற்கு எதிராக கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் அவற்றை நீதிமன்றங்கள் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் மிக விரிவாக விளக்குகிறார் என்பதுதான்.

பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர் திமோதி கார்டன் ஆஷ், எழுத்தாளர்  V.S.நைபால், அமெரிக்காவின் மிக போற்றத்தக்க நீதிபதிகளில் ஒருவரும் பல பிரபலமான சட்ட புத்தகங்களை எழுதியவருமான ஹாரி கால்வென் போன்றோர்கள் கருத்து சுந்திரத்தை பற்றி கூறிய புகழ் பெற்ற மேற்கோள்களை குறிப்பிடுகிறார்.

மேலும் சமீபத்தில் ராமச்சந்திர குகா, அபர்ணா சென், மணிரத்தினம் போன்ற முக்கிய ஆளுமைகள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக பிரதம அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை காரணம் கூறி அவர்கள் மேல் ஒருவர் வழக்கு தொடுத்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 49 ஆளுமைகள் பெயரிலும் குற்ற வழக்கு பதியப்பட்டமை [ அதுவும் தேச துரோக வழக்கு] எவ்வாறு அறிவார்ந்த சமூகத்தில் கணிசமான கலக்கத்தை உண்டுபண்ணியது என்பதையும் குறிப்பிடுகிறார்.

ஹுசைன் அவர்கள் மீது அவரின் ஓவியத்திற்காக நாடு முழுதும் தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளையும், பிறகு அவற்றை தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையும் பதிவு செய்கிறார். பெருமாள் முருகன் வழக்கை பற்றியும் கூறுகிறார். மிக முக்கியமாக கருத்துச் சுதந்திரத்தை பற்றிய மகாத்மா காந்தியின் வார்த்தையை எடுத்து கூறி, அவற்றை பாதுகாக்க நீதிமன்றங்களின் கடமையையும், பொறுப்பையும் வலியுறுத்திக்கிறார்.

இவை அனைவற்றையும் விட இந்த தீர்ப்பின் மணிமகுடம் என்று நான் கருதுவது கி.ரா என்ற மகத்தான இலக்கிய ஆளுமையை அங்கிகரித்து கவுரவித்தது.  ஞானபீட விருது அளிக்கப்படவேண்டிய மிக தகுதிவாய்ந்த நபர் கி.ரா என்று பலர் விரும்புவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். உச்சமாக, இந்த வழக்கை ரத்து செய்வதன் மூலம் இந்த குறைந்தபட்ச மரியாதையையாவது கி.ரா அவர்களுக்கு அளிக்கும் கடன்பட்டுள்ளது இந்த நீதிமன்றம் என்று முடிக்கிறார்.

இந்தவகையில் இதை வரலாற்றின் முக்கியமான ஒரு தீர்ப்பாக நான் பார்க்கிறேன். ஆனால் பெருமாள் முருகன் வழக்கு போல் இது அவ்வளவாக விவாதிக்கப்படவில்லை. (முக்கியமான வழக்கு தீர்ப்புகளை படிந்துவிடும் கிருஷ்ணன் கூட இதை தவறவிட்டுவிட்டார்) .இந்த வழக்கின் தீர்ப்பு அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. குறைந்தபட்சம் இலக்கிய உலகில் இருபவர்களாவது.

http://164.100.79.153/judis/chennai/index.php/casestatus/viewpdf/722032

வி.செ.செந்திகுமார்

ஜி.ஆர்.சுவாமிநாதன்

அன்புள்ள செந்தில்குமார்

இந்தவழக்கை நான் இப்போதுதான் முழுமையாக கவனிக்கிறேன். ஐயமே இல்லாமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. இலக்கியம், சிந்தனை எதற்கும் எந்த மதிப்பும் இல்லாத தமிழ்ச்சூழலில் நீதிமன்றத்தில் இருந்து இப்படி ஒரு தீர்ப்பு வந்திருப்பது வியப்பளிக்கிறது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுச்சூழலின் நன்றிக்குரியவர். தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றில் இதன்பொருட்டே அவர் பெயர் என்றுமிருக்கவேண்டும்.

கி.ராஜநாராயணன் தமிழகத்தின் வரலாற்றுநாயகர். நம் சந்ததிகள் எண்ணி பேசப்போகும் ஆளுமை. இன்றிருப்போர் மாய என்றுமிருக்கும் பெயர்களில் ஒன்று. இப்படி ஒரு வழக்கு அவர்மேல் தொடுக்கப்பட்டது என்பதே எதிர்காலத்தில் நம்மை எண்ணி நாம் கூசுவதற்கு வழிவகுக்கும். அவர் அடிப்படையில் இடதுசாரி. மானுடம்பேசிய தலைமுறையைச் சேர்ந்தவர். மானுட சமத்துவத்திற்காக, விடுதலைக்காக போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறைசென்றவர். எந்நிலையிலும் சொல்லில் அல்லது எண்ணத்தில் ஒரு பிழை நிகழாத தற்கோப்பு கொண்டவர். அவர் மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சொல்பவருக்கு அவர் எவரென்றே தெரியாதென்பதுதான் உண்மை

கீழமைநீதிமன்றங்களில் எவரும் எதையும் வழக்காகப் போட்டு எவரையும் அலைக்கழிக்க வைக்கமுடியும் என்னும் நிலை இன்று நிலவுகிறது. இதைப்போல கருத்துரிமைக்கும் அறிவுச்செயல்பாட்டுக்கும் எதிரான செயல்பாடு வேறில்லை. ஒரு கருத்து உண்மையா, அறமுள்ளதா என்பதை நீதிமன்றம் கூறவேண்டும் என்றால்; எல்லாவற்றையும் ஆதாரபூர்வமாக நீதிமன்றங்களில் நிரூபிக்கவேண்டும் என்றால் இங்கே எவர் எதைப்பேசமுடியும்? அதிலும் ஆண்டுக்கணக்காக நீதிமன்றங்களில் ஏறி இறங்கி ஒவ்வொரு சொல்லையும் நிறுவவேண்டும் என்றால் அதன்பின் என்ன இலக்கியம், என்ன கருத்துப்போர்?

தமிழ் இலக்கியச்சூழலில் இந்த வகையான நீதிமன்றநடவடிக்கைகள் எப்போதுமே இருந்ததில்லை.மிகக்கடுமையான பூசல்கள் நிலவிய எழுபதுகளில்கூட. முதன்முதலாக அதை இலக்கியச் சூழலில் அரங்கேற்றியவர் ‘காலச்சுவடு’ உரிமையாளர்  கண்ணன். அவருக்கு தமிழ் இலக்கியச்சூழல், அறிவுச்சூழல் பற்றி அன்றும் இன்றும் எந்த அறிதலும் இல்லை. ஆனால் அவரே இந்தப்போக்குக்குத் தொடக்கம் என்பது ஒரு வகை வரலாற்று இடம்தான்.

தொண்ணூறுகளில் காலச்சுவடுக்குமேல் எளிமையான விமர்சனத்தை முன்வைத்தவர்களுக்கெல்லாம் வழக்கறிஞர் அறிவிக்கைகள் அனுப்பப்பட்டன. சுந்தர ராமசாமியின் நெடுநாள் நண்பரும், மூத்த விமர்சகருமான வெங்கட் சாமிநாதன்கூட தப்பவில்லை. வழக்கறிஞர் அறிவிக்கை கண்டு கலங்கி, மன்னிப்பு கோரி கண்ணனுக்குக் கடிதம் எழுதிவிட்டு, அவர் வருந்தி தொலைபேசியில் என்னிடம் பேசியதை நினைவுகூர்கிறேன். நான் சுந்தர ராமசாமியிடம் அதைப்பற்றிப் பேசவேண்டும் என அவர் கோரினார். எனக்கே பேச்சுவார்த்தை இல்லாமலாகிவிட்ட நிலை என நான் அவரிடம் சொன்னேன்.

அங்கே தொடங்கியது இந்தப்போக்கு. அதன்பின் அந்த நஞ்சு காலச்சுவடுக்கே திரும்ப அளிக்கப்பட்டது. ‘பிள்ளைகெடுத்தாள்விளை’ என்னும் கதை தொடர்பாக சுந்தர ராமசாமியை வன்கொடுமைச் சட்டம்கீழ் கைதுசெய்யவேண்டும் என்று ஆதவன் தீட்சண்யா என்ற எழுத்தாளருடன்  ஒரு குழு கிளம்பியது. முதிய வயதில் சுந்தர ராமசாமியை கலங்கவைத்த நிகழ்வு அது. வசை அவருக்குப் புதிதல்ல, ஆனால் கைதுசெய்யப்படலாம், சிறுமைசெய்யப்படலாம் என்னும் அச்சம் அவரை அலைக்கழித்தது. அவர் நீண்டநாள் அமெரிக்காவிலேயே இருக்கநேர்ந்தது. ஒருவகையில் அவர் உளச்சோர்வடைந்து சாவை நோக்கிச் செல்ல அது ஒரு காரணம்

என்னைப்பொறுத்தவரை எந்த ஒருவசைக்கும் எந்த ஒரு அவதூறுக்கும் உச்சகட்ட எதிர்வினை என்பது மௌனம்தான். என்மேல் அவதூறு வழக்குகள் போடப்பட்டன. எஸ்.வி.ராஜதுரை விடுத்த வழக்கு நிலுவையிலுள்ளது. ஆனால் அவர்மேல் ஓர் அடிப்படை மதிப்பு இருப்பதனால் நான் அவருக்கு எதிராக எந்த வழக்கும் தொடுக்கவில்லை. உண்மையில் கடைசிநேரத்தில் தயங்கிவிட்டேன். என்றோ ஒருநாள் அவர்மேல் நான் வழக்குதொடுத்தேன் என வரலாற்றுப் பதிவு வந்துவிடலாகாது என எண்ணினேன்.மற்றபடி அவதூறு வழக்குகளை எதிர்கொள்ளும் வழி என்பது திரும்ப வழக்கு தொடுப்பது மட்டுமே.

இந்த தீண்டாமை வழக்குகள் அறிவுஜீவிகள்மேல் ஏவப்படுவதை [கொள்கையளவில்] தொடங்கிவைத்தவர் ஆதவன் தீட்சண்யா. தீண்டாமை ஒழிப்பு முன்னணி அம்பேத்கர் பற்றி ஒரு கருத்தைச் சொல்லிவிட்டார் என்பதற்காக வசுமித்ர என்னும் கவிஞர்மேல் தீண்டாமை வழக்கு தொடுத்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.

அதாவது அம்பேத்கர் பற்றி எந்த எதிமறைக் கருத்து சொன்னாலும் அது வன்கொடுமைக்குற்றம், பிணையில் வரமுடியாதபடி கைதுசெய்யவேண்டும் என்கிறார்கள் இவர்கள். இந்திய அரசியல்சட்டத்தில் பேச்சுரிமையை அடிப்படை உரிமையாகச் சேர்த்த, ஜனநாயகத்தின் அடிப்படைகளை வகுத்த ,அம்பேத்கரின் பெயரால் இந்த கருத்துவன்முறை நிகழ்த்தப்படுகிறது. இது இன்று ஒரு பொதுப்போக்காக, ஒருவகை பொதுவெளி மிரட்டலாகவே ஆகிவிட்டிருக்கிறது.

இதனால் முதன்மையாகப் பாதிக்கப்படுபவர்கள் தலித்துக்கள்தான். உண்மையில் இன்னமும் ஊர்களில் கடுமையான தலித் ஒடுக்குமுறை நிலவுகிறது. இன்னமும் எளிய மானுடஉரிமைகள் அளிக்கப்படுவதில்லை.  வன்கொடுமைத் தடைச்சட்டம் என்பது அந்த ஒடுக்கப்படும் தலித்துக்களுக்கு உதவும்பொருட்டு உருவாக்கப்பட்டது. அதை இப்படி மிரட்டலுக்காகவும் அரசியல்நோக்கங்களுக்காகவும் அப்பட்டமாகப் பயன்படுத்தினால் அச்சட்டம் மேல் அவநம்பிக்கை உருவாகிறது. அதன் மானுடநேய அடிப்படையே மறுக்கப்படுகிறது. தலித்துக்கள் உண்மையிலேயே ஒடுக்கப்படும் சூழலில் இந்த வழக்கு போடப்பட்டால்கூட பொதுமக்கள் அதை போலிவழக்கு என எண்ணவே இது வழிவகுக்கும்.

இதைப்பற்றி இன்று உண்மையில் கவலைப்படவேண்டியவர்கள் திருமாவளவன் போன்ற தலித் தலைவர்கள்தான். நீண்டகாலப் போராட்டங்கள் வழியாக தலித்துக்கள் வென்றெடுத்த உரிமை வன்கொடுமைத் தடுப்புச்சட்டம். அது இப்படி பயன்படுத்தப்பட்டால் அதன் உண்மையான நோக்கமும் பயனும் இல்லாமலாகும். அடைந்ததெல்லாம் வீணாகும்.

சுந்தர ராமசாமி ஆதவன் தீட்சண்யா போன்றவர்களால் வேட்டையாடப்பட்டபோது ரவிக்குமார் போன்றவர்கள் சுந்தர ராமசாமிக்கு ஆதரவாக இருந்தனர். அவருக்காக பேசினர். தமிழ்ச்சூழலில் இருக்கும் அடிப்படையான அறிவுநாணயத்தின் வெளிப்பாடாக அது அமைந்தது. இங்கே கருத்துரிமைக்கும் அறிவுச்செயல்பாடுகளுக்கும் காவலாக அது என்றும் திகழவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைதிருமூலரும் வேதாந்தமும்
அடுத்த கட்டுரைமழைப்பாடல்- சுரேஷ் பிரதீப்