தியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதங்கள்

தியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதம்

அன்புள்ள ஜெ.,

தியோடர் பாஸ்கரனின் காணொளி சிறப்பாக இருந்தது. நாய்கள், காடுகள், பல்லுயிர்ப்பெருக்கம், செடிவளர்ப்பு என்று சூழலியலின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காண்பித்த ஒரு பேட்டி. களைகளைப் பற்றிய லோகமாதேவியின் கேள்வி முக்கியமானது. துரதிருஷ்டவசமாக அவரிடம் பதில் இல்லை. இதைக் கேட்டதும் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. பெரியம்மை (smallpox) ஒழிக்கப் பட்டதாக 1980இல் அறிவிக்கப்பட்டபோது அன்றைய வல்லரசுகளான ரஷ்யாவும், அமெரிக்காவும் மாத்திரம் அந்தக் கிருமிகளை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள முடிவு செய்தது செய்தியாக இருந்தது. அவர் சொற்களுக்கிடையே நிறைய இடைவெளி விட்டுப் பேசியது முன்பு வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நினைவு படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக டேவிட் அட்டென்பரோவின் A Life on Earth ஆவணப்படம் (Netflix) பார்த்தபோது நம்மைச் சுற்றி நடக்கும் இந்த பிரபஞ்ச உயிர்க்கொந்தளிப்பும், அதில் நம்முடைய இடமும் பெரும் ஆச்சரியத்தை விளைவித்தது. தன்னுடைய 93 வருட வாழ்க்கையில் தான் கண்முன் கண்ட சூழலியல் அழிவை ஒரு 60 வயது இளைஞனின் உற்சாகத்தோடும், வருத்தத்தோடும் விவரிக்கிறார். ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் மக்கள் தொகை, கார்பன் வெளிப்பாடு பெருகுவதும் காடுகளின் பரப்பு வெகுவாகக் குறைந்து வருவதும் தொடர்ச்சியாகக் காட்டப்படுகிறது. திமிங்கிலம், யானை போன்ற பெருவிலங்குகளைக் கொல்வது உணவுச் சங்கிலியை எவ்வாறு சமன் குலையச் செய்கிறது. இதன் ‘பட்டர்பிளை எபெக்ட்’ ஆக ‘குளோபல் வார்மிங்’ காரணமாக ஆர்டிக்கில் பனிமலைகள் உருகுவதும், பவளப்பாறைகள் வெளுத்து மறைவதும், அதன் காரணமாக நம்மைச் சுற்றி உள்ள இயற்கைச் செல்வங்கள் ஒவ்வொன்றாக மறைவதும் மனதை கனக்கச் செய்கிறது. ‘போச்சு எல்லாம் முடிஞ்சு போச்சு’ என்ற மன நிலையில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மை இப்போதும் மோசம் போகவில்லை என்று தைரியப் படுத்துகிறார். இந்த உலகை கொடுவிலங்குகளாலும் ,காடுகளாலும் நிறையுங்கள் என்கிறார். தம்மைச் சுற்றி 40 கிலோமீட்டர்களுக்கு பசுமை மாறாக் காடுகளில் விதை பயிரிடும் ‘உராங்குட்டான்’ குரங்குகள் போன்ற இனங்கள் அழியாமல் பாதுகாக்கப் படவேண்டும் என்கிறார்.  நிலம், கடல் இரண்டும் பாதுகாக்கப் பட வேண்டும் என்கிறார். அவர் கூறும் அறிவுரைகள் தனிமனிதனுக்கு – ஊன் உணவைக் குறையுங்கள். சூழலியல் உணர்வோடு செயல்படுங்கள் என்பன.அரசுகளுக்கும் அதேதான் – முறைசார்ந்த மீன்பிடிப்பு (Controlled Fishing ) விவசாய நிலங்களைக் குறைத்தல், விளைச்சளைப் பெருக்குதல் மற்றும் இயற்கை வளப்பாதுகாப்பு. மிக முக்கியமாக சூரியசக்தி, காற்று போன்ற இயற்கைசக்திகளின் (Renewable Energy) பயன்பாட்டை அதிகரித்தல். இதெல்லாம் பலரும் சொல்லியதுதான். ஆனால் நீங்கள் கூறுவது போல யார் சொல்கிறார்கள் என்பது முக்கியம். ஒவ்வொரு பள்ளி மாணவனும், ஒவ்வொரு தேசத்தலைவரும் காண வேண்டிய ஒரு படம்.

சூழலியல் ரீதியாக ஈஷா முன்னெடுக்கும் திட்டங்களான Kaveri Calling – தோற்றுவாயில் இருந்து முடியும் வரை கரையின் இரு புறங்களிலும் 5 கிலோமீட்டர்களுக்கு அந்தந்த நிலத்திற்கு உகந்த மரங்களை நடுவது , River Rally, நதிகளைப் பாதுகாப்போம் போன்ற திட்டங்கள் இந்த வகையில் முக்கியமானவை என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

முந்தைய கட்டுரைநிழலெழுத்து- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாவேரியின் முகப்பில்-1