மலைநிலத்து குமரன்

அன்புள்ள ஜெ,

தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம் கேரளாவில் பரவலாக அறியப்பட்ட கதை. கண்ணகிக்கு கோவிலும் உண்டு. ஆனால் ஏன் தமிழ் கடவுள் முருகனுக்கு கேரளாவில் கோவில்களே இல்லை?

நன்றி.

ஸ்ரீராம்

கொடுந்தர முருகன் கோயில்

அன்புள்ள

இச்செய்தியை எவர் சொன்னார்கள்? குறைந்தது விக்கிப்பீடியாவிலாவது இதைச் சரிபார்த்தீர்களா? கேரளத்தின் முருகன் ஆலயங்கள்- விக்கிப்பீடியா

கேரளத்தில் ஏராளமான முருகன் ஆலயங்கள் உண்டு. அங்கே சுப்ரமணிய க்ஷேத்ரங்கள் என்பார்கள். முருகன் என்ற பெயர் மட்டுமல்ல பையன் என்ற பெயரே உண்டு. முக்கியமான முருகன் கோயில் இருக்கும் ஓர் ஊரின் பெயரே பையன்னூர்தான்

பெரளச்சேரி முருகன்கோயில் குளம்

மலையாளிகள் மிகப்பழமையான முருகன் கோயில் கேரளத்தில்தான் உள்ளது என்று நம்பிச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஹரிப்பாடு சுப்ரமணிய ஆலயம். கேரளத்தின் பேராலயங்களில் ஒன்று இது.

முருகன் வழிபாடு கேரளத்தில் எப்போதுமே வலுவானதாக இருந்திருக்கிறது. ஐயப்பன், பகவதி வழிபாடுகள் மேலே தெரிவதனால் அது அதிகமாக வெளியே தெரிவதில்லை. ஆனால் முருகபக்தர்கள் ஏராளம். வேலப்பன்,வேலாயுதன்,வேலு ஆகிய பெயர்கள் கேரளத்தில் நிறையவே உண்டு. குமாரன் என்ற பேரும் மிகப்பரவலாக உள்ளது

நாராயணகுரு சுப்ரமணிய கோயில் ஒன்றை திருவனந்தபுரம் அருகே குந்நும்பாற என்ற ஊரில் நிறுவினார். சுப்ரமண்யாஷ்டகம் என்னும் துதிப்பாடலையும் எழுதியிருக்கிறார். அழகிய ஆலயம் இது.

உதயபுரம் முருகன் கோயில்

முருகன் கோயில்கள் வழியாக மட்டுமே செல்லும் ஆலயப்பயண வட்டம் ஒன்று உண்டு. நான் அப்படி ஒன்றை நிகழ்த்தவேண்டும் என பல ஆண்டுகளாக எண்ணிவருகிறேன். உதிரியாக பல கோயில்களுக்குச் சென்றிருந்தாலும் ஒரே வீச்சில் சென்றால் எப்படி இருக்கும் என்று ஓர் ஆவல்.

முதலில் தொடங்கவேண்டியது நாகர்கோயில் அருகே இருக்கும் வேளிமலை முருகன்கோயில், அல்லது குமாரகோயில். என் எண்ணப்படி தமிழகத்திலும் கேரளத்திலும் மிகத்தொன்மையான முருகன் கோயில் இதுவே. ஆய்வேளிர் வழிபட்ட முருகன். ஆய் அண்டிரன் கல்வெட்டுக்களே கிடைத்துள்ளன. பாண்டியர்களுக்கும் மூத்தவன்

பெருந்ந முருகன் கோயில்

அதாவது சங்ககாலம் முதல் தொடங்கும் தெள்ளத்தெளிவான தொல்லியல் சான்றுகள் வேளிர்மலை முருகன் கோயில் பற்றி கிடைத்துள்ளன. மலைநின்ற நெடுந்தோற்றம் கொண்டவன். அந்த மலைக்கே வேள்மலை, வேளிர்மலை, வேளிமலை என்றுதான் பெயர். அதன் அடிவாரத்தில் நான் வாழ்கிறேன். கேரளத்தின் அரசர்கள் முறைமீறாது வழிபட்ட தொன்மையான ஆலயம். பெரிய ஆலயமும் கூட.

திருவனந்தபுரத்திலுள்ள உள்ளூர் முருகன்கோயில் புகழ்பெற்றது. அப்பால் கொடுந்தரா சுப்ரமணிய சுவாமி கோயில் பத்தனம்திட்ட மாவட்டத்தில் அச்சன்கோயில் ஆற்றின் கரையில் உள்ளது .பழைமையானது, கேரள கட்டிடக்கலைக்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லப்படுவது.

கொதும்பு முருகன் கோயில்

சங்கனாச்சேரி அருகே உள்ள பெருந்ந சுப்ரமணிய ஆலயம் தொன்மையானது, கேரளக்கட்டிடக்கலைக்கும் தொன்மையான சுவரோவியங்களுக்கும் புகழ்பெற்றது

கோட்டையம் மாவட்டத்தில் உள்ள கிடங்கூர் முருகன் கோயில் சிறியது, ஆனால் அது தொன்மையானது. கேரள தாந்த்ரீக வழிபாட்டு முறையில் முக்கியமானது என்கிறார்கள். வைக்கம் அருகே உள்ள உதயணபுரம் முருகன் கோயில் திருவிதாங்கூர் அரசர்கள் சில குறிப்பிட்ட வழிபாடுகள் நிகழ்த்தும் முதன்மையான அலயம்

கோட்டையம் அருகே உள்ள நீண்டூர் என்னும் இடத்திலுள்ள முருகன் கோயில் முக்கியமான ஒன்று என சோதிடர்கள் சொல்வதுண்டு. பெரிய கோயில். நீண்டூரப்பன் என முருகன் அழைக்கப்படுகிறார். அவர் தன் வேலாயுதத்தை தலைகீழாக பிடித்திருக்கிறார். தாந்த்ரீக முறைப்படி அதற்கு முக்கியத்துவம் உண்டு.

ஹரிப்பாடு முருகன் கோயில்

நீண்டூர் ஒரு பரிகாரத்தலம் என்கிறார்கள். இங்கே முருகன் உக்கிர மூர்த்தியாக இருக்கிறார். பகைமுடித்த முருகன் என்று தொன்மம்- இப்படி ஒரு முருகன் எங்குமே இல்லை என்கிறார்கள். இங்கே முருகனுக்கு ஒற்றைநாரங்காமாலை வழிபாடு [ஒற்றை எலுமிச்சைமாலை] செய்யப்படுகிறது. முருகனை குளிர்விப்பதற்கான சடங்கு என நம்பிக்கை.

பாலக்காடு அருகே உள்ள கொதும்பா முருகன் கோயில் தமிழகப்பாணியிலானது. தமிழ்முறைப்படி பூசை செய்யப்படுவது. கொங்கர்களுக்கு முன்பு இங்கே சில உரிமைகள் இருந்தன என்கிறார்கள். கொதும்பா முருகன் கோயிலைப் பற்றிய பழைய இலக்கியக்குறிப்புகளும் உண்டு.

மலையாளிகள் பழனி முருகனை கேரள முருகன்கோயில்களின் பட்டியலில் சேர்ப்பார்கள். அதைக் கட்டியது சேரமான்பெருமாள் என்று சொல்லப்படுகிறது. பழனிக்கு காவடிகட்டி வருவது கேரளத்தில் முந்நூறாண்டுகளாக இருக்கும் வழக்கம்.

தாழேக்கரை முருகன் கோயில்

வடகேரளத்தில் பள்ளிக்கரை, பெரளச்சேரி முருகன் கோயில்கள் முக்கியமானவை. கேரளத்தின் பெரிய ஆலயங்களின் பட்டியலில் வருபவை.  காசர்கோடு அருகே உள்ள பையன்னூர் முருகன் கோயில் கேரளத்திலேயே முதன்மையான ஆலயங்களில் ஒன்று.ஊரே முருகனால் பெயர் பெற்றது.

வடக்கே காசர்கோட்டிலுள்ள குமாரமங்கலம் முருகன் கோயிலும் தொன்மையும் பெருமையும் உள்ளது. ஆனால் அது கர்நாடக சிற்ப முறைப்படி அமைந்தது. குமிழிவடிவமான கோபுரம். குமிழிவடிவ தேர். வழிபாட்டுமுறைகளும் கர்நாடக பாணியில்தான்.

நீண்டூர் முருகன் கோயில்

குமாரமங்கலம் முதல் வடக்கே செல்லும் கர்நாடக முருகன் கோயில்களின் நீண்ட பட்டியல் உள்ளது. சுப்ரமணியா என்ற பேரிலேயே ஊர் அமைந்த சுப்ரமணியன் ஆலயம் தவிர்க்கப்படக்கூடாத ஒன்று

வடக்கே பெரும்பாலான இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அவை உடைசல்களாக அருங்காட்சியகங்களில் உள்ளன. ஒரிசாவிலும் மத்தியப்பிரதேசத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் பிகாரிலும் இருந்த ஆலயங்களின் சிதைந்த சிற்பங்களை நாம் புவனேஸ்வர், போபால், காசி,மதுரா, பாட்னா அருங்காட்சியகங்களில் காணலாம். அங்கெல்லாம் மிக அற்புதமான முருகன் சிலைகள் உண்டு. கார்த்திகேயானாக மயிலுடன், தேவசேனாபதியாக பன்னிரு கைகளுடன், வேலேந்தி மலைநின்ற கோலத்தில். சொல்லப்போனால் இந்தியாவின் அழகான முருகன் சிலைகள் ஒரிசா அருங்காட்சியகத்திலேயே உள்ளன

முருகனில்லாத இடம் இந்தியப்பெருநிலத்தில் இல்லை

ஜெ

முந்தைய கட்டுரைதர்மபுரி காந்தி உரை, காணொளி
அடுத்த கட்டுரைஅஞ்சலி: கே.எஸ்.