பாபர் கும்மட்டம் இடிப்பு -தீர்ப்பு

ராமர் கோயில்

சமகாலப் பிரச்சினைகள் – அயோத்தி

ஜெ

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தற்போது அனைவரும் விடுவிக்கப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும், இது இப்படித்தான் இருக்கும் என்ற அவநம்பிக்கையே இருந்தது. சட்ட புத்தகத்தில் இருக்கும் சரத்துகளை நடைமுறைப்படுத்துவதும், புறவயமான சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதுமே இவ்வமைப்பு. அதைத் தாண்டி வேறு எதையும் இதனிடம் நாம் எதிர்பார்க்க முடியாது.

சதித்திட்டம் தீட்டவில்லை; தற்செயலாகக் கூடிய கூட்டம் உணர்ச்சிவசப்பட்டு அக்கட்டிடத்தை இடித்தது என்று கூறுவது ஒரு வகையில் சரி என்றாலும், சற்று சிரிப்பு வரவழைக்கிறது. பொதுவாக, ஒரு பெருங்கும்பலை  வகுப்புவாத உளநிலையுடன் தயார்படுத்தி அதை மறைமுகமாக வன்முறை நோக்கி அழைத்துச் செல்வதே சதிதான். அனால் இந்தச் ‘சதி’யை நீதிமன்றத்தில் முறையிட முடியாது. இன்னார் இவ்விதமாக சதி செய்தார் என்று ஸ்தூலமாக ஆதாரங்களுடன் முன்வைப்பதே அங்கு செல்லுபடியாகும். நீண்டகால அடிப்படையில் மதவெறுப்பை வளர்த்து வரும் செயலுக்கு சட்டப்படி தண்டனை கொடுத்துவிட முடியாது. வகுப்புவாத உணர்வுடன் வன்முறை நோக்கில் கூடிய ஒரு பெருங்கும்பலை கட்டுப்படுத்துவது கடினம். அது அதன் வகுப்புவாத தலைவர்களாலேயே கிட்டத்தட்ட இயலாத காரியம். மற்றபடி, மசூதியை இடிக்கும் நோக்கமெல்லாம் அவர்களுக்கில்லை என்பதெல்லாம் ஏற்கமுடியாது ஒன்று.

இத்தீர்ப்பின் விளைவின் முக்கியமான அம்சம் வகுப்புவாதத்தின் வளர்ச்சியே. இந்தத் தலைவர்கள் ஒருவேளை குற்றவாளிகளாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட, அதனால் இந்துத்துவம் எவ்வகையிலும் பலமிழக்கப் போவதில்லை. ஆனால் இஸ்லாமிய வகுப்புவாதம் புதிய வேகம் பெறும். ஏனெனில் இந்து மதவாதத்தின் பேரில் கசப்புற்ற முஸ்லிம்கள், மதச்சாற்பற்ற சக்திகளை நோக்கி வரப்போவதில்லை. மாறாக, அவர்கள் இஸ்லாமிய வகுப்புவாத அமைப்புகளை நோக்கியே செல்வார்கள். இங்கு சில இஸ்லாமிய வகுப்புவாத அமைப்புகள் தேர்தலில் போட்டியிடப்போகும் அளவுக்கு இஸ்லாமியர் ஆதரவைப் பெற்றுவருகிறது. கிட்டத்தட்ட எல்லாமே கைமீறிப் போகும் உணர்வே ஏற்படுகிறது. இதில் வருத்தமான விஷயம் என்னவெனில், இன்றைய தலைமுறை இளைஞர்கள் இம்மதவாத உணர்வுகளுக்கு பெருமளவில் ஆட்படுவதுதான்.

விவேக் ராஜ்

அன்புள்ள விவேக்ராஜ்

பாபர் கும்மட்டம் இடிப்பு வழக்கில் எனக்கு ஒரு மெல்லிய நம்பிக்கை இருந்தது. ஆனால் தீர்ப்பு வந்ததும் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்னும் சலிப்பு ஏற்பட்டது. இந்திய நீதிமுறை அல்லது நீதிபதிகள் மீதான அவநம்பிக்கையால் அல்ல. இந்தியாவின் நீதிவழங்கல்முறையிலுள்ள அபத்தமான நடைமுறைகளால்

தொழில்செய்யும் நல்ல வழக்கறிஞர்கள் உங்கள் நண்பர்களாக இருந்தால் ஒன்றை கேட்டு அறியுங்கள். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறத்தக்க வழக்குகளில் அனைத்து மேல்முறையீடுகளுக்கும் மேல் எத்தனைபேர் உண்மையாகவே தண்டனைபெற்று சிறைக்குச் செல்கிறார்கள் என்று. திகைப்பூட்டும் அளவுக்கு குறைவானவர்களே கடைசியாகச் சிறைசெல்கிறார்கள். எப்படிப்போனாலும் பத்து சதவீதத்திற்கும் கீழே. கொலைவழக்குகளிலெல்லாம் இன்னமும் குறைவாகவே அந்த எண்ணிக்கை இருக்கும். உண்மையான புள்ளிவிவரங்களை எவராவது ஆய்வுசெய்து வெளியிட்டால் நம் நீதிமன்றமுறை மேல் நாம் கசப்படைந்துவிடுவோம்.

செய்திகளில் குற்றம்செய்தவர் கைதான செய்தியே வெளியாகிறது. அரிதாக கீழமைநீதிமன்றங்களில் தண்டனை கிடைத்த செய்தி வெளியாகிறது. அரிதினும் அரிதாகவே கீழமை நீதிமன்றங்களில் குற்றவாளிகள் தண்டனை பெறுகிறார்கள். அவர்கள் மிகப்பெரும்பாலும் மேல்முறையீடுகளில் விடுதலை செய்யப்படுகிறார்கள். சமீபத்தில்கூட ஒரு குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலைசெய்யப்பட்டது மக்கள் போராட்டத்திற்கு வழிவகுத்தது. ஆனால் அதுகூட அறுதியாக எந்த விளைவையும் உருவாக்காது

நம் நாளிதழ்கள் எல்லா வழக்குகளையும் கடைசிவரை செய்தியாக்கவேண்டும். ஆனால் அது ஓர் எல்லைக்குமேல் இயல்வது அல்ல. ஏனென்றால் எல்லா வழக்குகளும் நீதிமன்றங்களில் பற்பல ஆண்டுகள் தேங்கிக்கிடக்கின்றன. முதல்தீர்ப்பே பத்தாண்டுகள் வரை பிந்தும். கடைசித்தீர்ப்பு வர மேலும் ஐந்தாண்டுகள். இத்தனை காலம் எந்த நிருபரும் குற்றங்களை நினைவில் வைத்திருக்க முடியாது.

அதற்கு ஒன்று செய்யலாம், நாளிதழ்கள் தங்கள் செய்திகளில் வெளிவந்த முதன்மைக்குற்றங்களுக்கு ஓர் அட்டவணையை உருவாக்கி அவற்றை கணிப்பொறியில் சேமிக்கவேண்டும். ஒரு நல்ல நிரலி கூட உருவாக்கலாம். இதை ஏற்கனவே  அரசு நிறுவனங்களில் ஒப்பந்தங்களுக்காகச் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு படிநிலையிலும் என்னென்ன தண்டனை வழங்கப்பட்டது என அதில் பதிவேற்றம் செய்துகொண்டே இருக்கவேண்டும். அறுதியாக எத்தனைபேர் தண்டனை பெற்றார்கள் என்பதை கணிக்கவேண்டும். செய்தியாக ஆக்கவேண்டும். இது நீதிமன்ற வழக்குகள் மேல் ஒரு மக்கள் கண்காணிப்பாகவும் ஆகமுடியும்.

வேண்டுமென்றால் நீதியை கண்காணிக்கும் ஏதேனும் குடிமக்கள் அமைப்புக்கள் ஒரு சேவையாகக்கூட இதைச் செய்யலாம். தனியார் கூடச் செய்யலாம், எந்த வகையிலும் சட்ட விரோதமல்ல இது.நாம் வருந்துமளவுக்கு செய்திகளே நமக்கு கிடைக்கும். இன்று இது ஒரு குடிமக்கள் கண்காணிப்பாக அமையவேண்டிய அளவுக்கு நிலைமை சீரழிந்துள்ளது

ஏன்? முதல் விஷயம் நீதிமன்றத்தாமதம்தான்.  ஒரு கொலைவழக்கு பத்தாண்டுகள் ஒரு நீதிமன்றத்தில் தேங்கிக்கிடக்குமென்றால் என்ன ஆகிறது? எந்த சாட்சி பத்தாண்டுகள் ஒரு வழக்கின் அத்தனை நுண்ணிய செய்திகளையும் நினைவில் வைத்திருக்க முடியும்? பத்தாண்டுகளுக்கு முன்பு சொன்னதை எப்படி மாறாமல் திரும்பவும் சொல்ல முடியும்? பத்தாண்டுகள் எப்படி சான்றுப்பொருட்களை மாறாமல் பாதுகாக்க முடியும்? பத்தாண்டுகளில் சாட்சிகளில்பலருக்கு அகவை முதிர்ந்துவிட்டிருக்கும். இறந்துபோய்விடக்கூடும். வாழ்க்கையே மாறிவிட்டிருக்கும்

அத்துடன் ஒரு கொலைவழக்கின் சாட்சி பத்தாண்டுகள் எப்போது அழைப்புவந்தாலும் நீதிமன்றம் சென்றபடியே இருக்கவேண்டும். நினைவிருக்கட்டும், குற்றவாளி நீதிமன்றம் வரவேண்டியதில்லை. அவருக்காக வழக்கறிஞர் வந்தால்போதும். அவருடைய எஞ்சிய வாழ்க்கையே அதைச்சார்ந்ததாக ஆகிவிடும். தொழில்செய்பவர் என்றால் தொழிலே பாதிக்கப்படும். அத்தனைக்கும் மேல் அவர் பத்தாண்டுகள் சுதந்திரமாக வெளியே சுற்றும் குற்றவாளியின் மிரட்டலைச் சமாளிக்கவேண்டியிருக்கும். சாட்சிக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. குற்றவாளி தொழில்முறைக்குற்றவாளி என்றால் அவனிடமிருந்து அவர் தன் செல்வாக்கால் தப்பினால்தான் உண்டு. குற்றவாளிக்கு பெரிய பின்னணி இருந்தால் அவர் வாழ்க்கையே அவ்வளவுதான்

இங்கே குற்றவாளிகளைப் பற்றிய செய்திகள் வரும்போது அவர்கள் மேல் ஒன்பது கொலைவழக்குகள் விசாரணையில் இருக்கின்றன என்றெல்லாம் படிக்கிறோம். அதாவது ஒரு கொலை செய்து நீதிமன்றத்தில் அது நிலுவையில் இருக்கையில் அடுத்த கொலை செய்து அப்படியே ஒன்பதாவது கொலை செய்யும்போதுகூட முதல்வழக்கின் விசாரணை முடியவில்லை.தீர்ப்பு அளிக்கப்படவில்லை. ஒன்பது கொலைக்குப்பின்னரும் சம்பந்தப்பட்டவர் வெளியேதான் சுற்றிக்கொண்டிருக்கிறார்

இந்த நீதிமன்றத்தாமதம் நிகழ்வது பலமுனைகளில் இருந்து. காவல்துறை பெரும்பாலும் உடனடியாகவே நீதிமன்றத்துக்கு வழக்கை கொண்டுசென்றுவிடுகிறது என்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொள்ள மிகத்தாமதமாகும். காரணம் எப்போதுமே நீதிபதிக்கான இடங்களில் கால்வாசி காலியாகவே இருக்கும். அவை நிரப்பப்படுவதில்லை.

நாம் பெரும்பாலும் கவனிக்காத ஒன்றுண்டு. குற்றவழக்கில் குற்றம் சாட்டுபவர் அரசுதான், அரசுவழக்கறிஞர்தான் வழக்கை நடத்துபவர். பாதிக்கப்பட்டவர் வேண்டுமென்றால் அவ்வழக்கில் கூட்டாக சேர்ந்துகொள்ளலாம். ‘பிராசிக்குயூஷன் தரப்பு’ என்பது அரசுத்தரப்பு. அரசுவழக்கறிஞர் நியமனம் என்பது இன்று பெரும்பாலும் அரசியல்நியமனம்தான் என்கிறார்கள். திறமையை விட அரசியல்தொடர்பே அரசு வழக்கறிஞர்களை தீர்மானிக்கிறது. அவர்கள் வழக்கை திறம்பட நடத்துவதில்லை. அக்கறை காட்டாமல் வழக்குகளை தாமதிக்க செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

தாமதமே நீதிமறுப்பாக ஆகிவிடுகிறது. குற்றவாளியின் தரப்பு வழக்கறிஞரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் வழக்கை தாமதப்படுத்துகிறார். தாமதிக்கும்தோறும் தன் கட்சிக்காரர் விடுதலையாவார் என அவருக்குத்தெரியும். அதற்கு நீதிமன்றநடைமுறையில் பலவகையான வழிகள் உள்ளன. அசல் சான்றாவணங்களில் ஐயங்களை எழுப்பிக்கொண்டே இருப்பது அதில் ஒரு வழி. விசாரணை முடியும்கட்டத்தில் புதிய சான்றுகளை கொண்டுவருவது வரை பல வழிகள் உள்ளன. இந்த ஓட்டைகளை அடைக்க பலமுறை அரசு முயன்றுள்ளது, அதற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடியது நமக்குத்தெரியும்.

அறுதியாக நீதிமன்றம் முன் என்னென்ன தரவுகள் வைக்கப்பட்டனவோ, என்னென்ன வாதங்கள் முன்வைக்கப்பட்டனவோ அவற்றைக்கொண்டே நீதிபதி தீர்ப்பளிக்க முடியும். அவருக்கு நன்கறிந்த ஒன்றில்கூட அவர் முன் ஆதாரங்கள் வைக்கப்படாமல் அவர் தீர்ப்பளிக்க முடியாது. விடுதலை நிகழும் பெரும்பாலான வழக்குகளில் குற்றத்தை நிரூபிக்க பிராசிக்யூஷன் தவறிவிட்டது என்றுதான் நீதிமன்றம் சொல்லியிருக்கும். நாம் நீதிபதிமேல் ஐயமும் வருத்தமும் அடைகிறோம்.

பாபர் கும்மட்ட இடிப்பு வழக்கு 1993 முதல் கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் கீழமை நீதிமன்றத்திலேயே கிடந்திருக்கிறது. ஒரு அப்பட்டமான குற்றவியல் வழக்கு. எந்த அரசியல்சாசனச் சிக்கல்களும் இல்லாதது. இது ஏன் இத்தனை தாமதமானது? இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 15 ஆண்டுக்காலம் காங்கிரஸ்தான் ஆட்சி செய்திருக்கிறது. இவ்வழக்கு இப்படி தாமதமானதில் அவர்களுக்குத்தானே முழுப்பொறுப்பு?

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சான்றாவணங்கள் பெரும்பாலும் நகல்கள், அசல்கள் முன்வைக்கப்படவில்லை என நீதிபதியே தீர்ப்பில் சொல்கிறார். நகல்களை நம்பி எந்த நீதிமன்றமும் எவரையும் தண்டிக்காது. முப்பதாண்டுகள் வழக்கு நடக்கிறது, ஆனால் அசல்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால் அது எவருடைய பிழை? இந்த நகல்கள் சமர்ப்பிக்கப்பட்டபோதெல்லாம் காங்கிரஸ்தான் ஆட்சியிலிருந்தது.

என்ன நடந்தது? இந்த வழக்கில் அத்வானி முதலியோர் தண்டிக்கப்பட்டால் அவர்கள் தியாகிகளாகி அரசியல் லாபம் அடையக்கூடும் என காங்கிரஸ் எண்ணியது. அது உண்மையும்கூட. ஆகவே வழக்கு கிடப்பில் போடப்பட்டது, சரியாக நடத்தப்படவில்லை. இன்று பாரதிய ஜனதா அரசு அதன் முன்னாள் தலைவர்களை விடுதலைசெய்ய அதை பயன்படுத்திக்கொண்டது.இதுதான் நடந்தது. இதில் நீதிமன்றம் செய்ய ஒன்றுமில்லை

முதல்குற்றவாளி மக்களே. இந்தியாவின் சட்டப்பேரமைப்புக்கு, பொது அறத்துக்கு எதிரான குற்றம் செய்தவர்களை அவர்கள் தலைவர்களாக ஏற்றனர், அவர்களை தியாகிகளாகப் பார்த்தனர். அதுவே அவர்களை தப்பவைத்த முதல் காரணி. உலகில் எங்குமே பெருவாரியான மக்களால் நன்றென ஏற்கப்பட்ட குற்றம் தண்டிக்கப்படுவதில்லை. காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளும்  சிபிஐ, அரசுவழக்கறிஞர் போன்றவர்களும் அடுத்தபடியாகக் குற்றவாளிகள்

ஜெ

முந்தைய கட்டுரைசிலைகள், அமுதம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு,கமல் ஹாசன்