பிரம்மம்- கடிதங்கள்

பின்தொடரும் பிரம்மம்

மோகன்,

‘பின்தொடரும் பிரம்மம்’ இன்னும் வெகு நாட்களுக்கு என்னைப் போன்ற (நம்மைப் போன்ற) நாய்க்கோட்டிகளைப் பின் தொடர்ந்தபடியே இருக்கும். நீங்கள் எழுதியிருப்பது எத்தனை உண்மை! “நாய் நம் கனவில் வருவதுபோல எந்த விலங்கும் வருவதில்லை. சொல்லப்போனால் நெருக்கமான உறவினர்களேகூட நாய் அளவுக்கு நம் கனவில் வருவதில்லை”. இதை நாய் வளர்க்காதோர் நாயை விரும்பாதோர் புரிந்து கொள்வது கடினம். நம்மை ஒருமாதிரியாகப் பார்ப்பார்கள்.

அசோக் நகரில் நண்பர் பாஸ்கருடன் நடந்து வந்து கொண்டிருந்தேன். எதிரே போலீஸ் கட் முடியுடன் செதுக்கிய மீசையும், டி ஷர்ட், டிரவுசர் அணிந்த 60 வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் தனது லேப்ரடார் நாயுடன் வந்து கொண்டிருந்தார். சற்று தூரத்திலேயே லேப்ரடார் பயல் என்னை இனம் கண்டுகொண்டு லேசாக சிரிக்க ஆரம்பித்தான். நெருங்க வர வர இருவருமே சிரிப்பில் பொங்கினோம். அருகில் வந்ததும் என் மீது இயல்பாகத் தன் கால்களைத் தூக்கிப் போட்டான். வழக்கம் போல கொஞ்சித் தள்ளினேன். பெரியவர் பொறுமையாக நின்றார். கொஞ்சி முடித்ததும் ‘போலாமாப்பா?’ என்று கேட்டுவிட்டு என்னிடம் சொன்னார். ‘நீங்க யாரோ எவரோ எனக்குத் தெரியாது. அது எனக்குத் தேவையுமில்லை. ஆனா நாமெல்லாம் உறவுக்காரர்கள்’ என்று ஆங்கிலத்தில் சொல்லி எனக்கு கைகுலுக்கி விட்டுச் சென்றார். நண்பர் பாஸ்கருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் நாய்ப்பிரியரும் இல்லை. நாய் வெறுப்பாளரும் இல்லை. அதனால் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

இதை கோலப்பனுக்குச் சொன்னேன். அவருக்குப் புரிந்தது. பிறகென்ன? ஒரு மணிநேரத்துக்கு பைரவபுராணம்தன். அந்த மனநிலையுடன் கோலப்பனைப் பற்றி பைரவ ப்ரியம்  http://venuvanam.com/?p=545  என்றொரு கட்டுரை எழுதி மகிழ்ந்தேன்.

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மனதுக்குள் மட்டும் நாயுடன் வசிக்கும் என்னைப் போன்ற நாய்க்கோட்டிக்கு,  சக கோட்டிகளான உங்களைப் போன்ற, கோலப்பனைப் போன்ற நண்பர்கள் மீது  எப்போதுமே ஏக்கத்துடனான பொறாமை உண்டு. ‘பின் தொடரும் பிரம்மம்’ என் மன ஏக்கத்தை அதிகரித்துவிட்டது. இன்று என் கனவில் எங்கள் வீட்டு லியோ, ஜாக் மற்றும் உங்கள் வீட்டு ஹீரோ எல்லோரும் வருவார்கள். நான் அவர்களுடன் பேசிக் கொள்கிறேன்.

சுகா

***

அன்புள்ள ஜெ,

வணக்கம்.

உங்கள் அன்றாடம் பற்றிய பதிவுகள் அனைத்தும் பிடிக்கும். நாய்களைப் பற்றிய தகவல்களுடன் எழுதப்பட்ட பின்தொடரும் பிரம்மம் அவற்றின் மகுடம். பூனைகள்போல் அல்லாது  நாய்கள்  புதியவர்களை விரும்பி நெருங்குகின்றன, குறைந்தபட்சம் ஒருமுறை முகரவாவது.  நெடுநாள்  பிரிவிற்குப்பின் சந்திக்கையில் உடலில்  வெளிப்படும் துள்ளலும், முகம் நக்குதலும் நமக்கு உடல் ஒரு தடை எனச் சொல்ல வைக்கும்.

பதிவைப்  படித்தபின் இந்தச் சிறு காட்சி நினைவுக்கு வந்தது, கூடவே  உங்கள்  ‘அகம் மறைத்தல்’ கட்டுரையும்.

https://mobile.twitter.com/IAMNERDIShare/status/1313776663277170688

அன்புடன்,

விஜயகுமார்.

***

வணக்கம் திரு. ஜெயமோகன்,

“பின்தொடரும் பிரும்மம்” வாசித்தேன். நான் உலகில் உள்ள மனிதர்கள் அனைவரையும் இரு வகையினராகவே மட்டுமே பிரிக்கின்றேன். நாய்களின் மேல் பாசம் உள்ளோர் /அல்லாதோர்.

இரண்டாம் வகையினரை தனிப்பட்ட வாழ்வில் தவிர்த்தே வருகின்றேன்.. இதற்கு வெறும் வறட்டு நாய்பாசம் மட்டும் காரணம் அல்ல. அவர்களின் ரசனை மற்றும் மனப்போக்கு எவ்வகையிலும் எம்முடன் பொருந்திப்போகாது என்பதே காரணம்.

நன்றி

சிவா

மெல்பெர்ன்

***

முந்தைய கட்டுரைமுற்போக்கு எழுத்தாளர் சங்கம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசுந்தர ராமசாமி பிராமண மேட்டிமைநோக்கு கொண்டவரா?