இயல்,கனடா- ஒரு வம்பு

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு.

நலம், நலமறிய ஆவல். ஜூலை 10ஆம் தேதி நீண்ட மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன்; உங்களின் மறுமொழிக்காக இன்னமும் காத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.. சரி, அது இருக்கட்டும்.

நேற்று காலச்சுவடு கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் இப்படி ஒரு கருத்தை பதிவிட்டிருந்ததாக்க அறிந்தேன்.. நீங்கள் பத்மஸ்ரீ பட்டம் வேண்டாம் என்று மறுத்ததை நாடறியும்..ஆனால், இயல் விருதுக்காக இறைஞ்சியதாக அவர் சொல்கிறார்.. உங்களது எழுத்துக்களை நேராக எதிர்கொள்ள யாரும் முன்வரதில்லை என்பதோடு, இப்படியான character assassination செய்வது எதற்கு என்று தெரியவில்லை..நீங்கள் இயல் விருது பெற்றது 2014 என்று நினைக்கிறேன்..அதற்காக 2001இல் இருந்தே அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டதாக சொல்வது எதற்காக..? இதன் அடிப்படைதான் என்ன சார்? எனக்கு கொஞ்சமும் புரியவே மாட்டேங்கிறது..

அன்புடன்

மு.விடுதலை

மும்பை

“2001 ஆண்டு சுராவுக்கு டொரோன்டோ பல்கலையும் கனடா இலக்கியத் தோட்டமும் இணைந்து கொடுத்த முதல் இயல் விருது வழங்கப்பட்டது.

இச்செய்தி வெளிவந்ததும் ஜெயமோகன் தவித்தார்; அத்தவிப்போடு தன்னுடைய அயல் தொடர்புகள் பலருக்கும் மின்னஞ்சல் அனுப்பினார்; தான் பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும் தன்னை அமெரிக்கா, கனடாவிற்கு அழைக்க ஒழுங்கு செய்ய வேண்டும் என்றும் இறைஞ்சினார் என அறிந்தேன்.

அவர் விருப்பப்படியே நடந்தது. 2001 இன் பிற்பகுதியில் கனடா பயணமானார். அவர் கிளம்பும் முன்னர் சுரா நாகர்கோவில் திரும்பிவிட்டார். அவர் ஊர் வந்த சில நாட்களில் ஜெயமோகன் வீட்டுக்கு வந்தார். நான் தொலைவிலிருந்து பார்க்கையிலே முகமும் உடலும் மனக்கோணலை வெளிப்படுத்தின. சுராவைப் பிறாண்ட வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.

அன்று மதியம் உணவருந்தும்போது சுரா ஒரு வினோதமான கேள்வியைக் கேட்டார். ‘ஒரே விருதை ஒரே ஆண்டில் இருமுறை கொடுப்பார்களா?’

இந்தக் கேள்வி எங்கிருந்து வருகிறது என்பதை எனக்கு ஊகிக்க முடியவில்லை.

என்ன விஷயம் என்று பொதுவாகக் கேட்டேன்.

ஓரிரு நிமிட மோனத்திற்குப் பின் சொன்னார்,’ஜெயமோகனை கனடா அழைத்திருக்கிறார்களாம். அங்கு அவருக்கும் இந்த ஆண்டு இன்னொருமுறை இயல் விருது கொடுக்கப்போவதாகச் சொன்னார்’ என்றார்.

எனக்குச் சிரிப்பு வந்தது.”

*

அன்புள்ள விடுதலை,

இந்த ஒரு மாதத்தில் மட்டும் இதைப்போல எவ்வளவு வந்திருக்கிறது என்று பாருங்கள். இந்த ஜூலையில் நான் வெண்முரசு எழுதி முடித்தேன். தமிழில் மட்டுமல்ல உலக இலக்கிய அளவிலேயேகூட அது ஒரு சாதனை. அளவிலும் தரத்திலும். எவர் என்ன சொன்னாலும் அது தமிழில் என்றுமிருக்கும்

இப்படி ஓர் ஆக்கத்தை இன்னொரு எழுத்தாளர் எழுதியிருந்தால் அவரை முதலில் பாராட்டுபவன் நானாகவே இருந்திருப்பேன். அதற்காக ஒரு விழாவே எடுத்திருப்பேன். ஆனால் அதைப்பற்றி தமிழில் ஒரே ஒரு இதழில் மட்டும் ஒரு கட்டுரை வந்தது. எந்த எழுத்தாளரும், எந்த இதழாளரும், எந்த வம்பாளரும் வாயை திறக்கவில்லை. சில்லறை நக்கல்களுக்கு அப்பால் கருத்து என்றே எதுவும் பதிவாகவில்லை

ஆனால் இதைப்போன்ற வம்புகளை மட்டும் முழுமூச்சாகச் செய்கிறார்கள். இதற்கு என ஒரு வாசகர்வட்டம் உள்ளது என நினைக்கிறேன். அலையலையாக வந்துகொண்டே இருக்கும் இவற்றுடன் எவராலும் போராடமுடியாது. காலச்சுவடு இதை தொடங்கி பத்திருபது ஆண்டுகளாகின்றது

முதலில் ‘2001ல் ஜெயமோகன் மன்றாடியதனால் இரண்டுபேருக்குமே இயல் விருது அளிக்கப்பட்டது’ என்று எழுதிவிட்டு ,நண்பர் சரவணன் விவேகானந்தனின் தகவல்சார்ந்த மறுப்புக்குப் பின், ‘கொடுக்கப்படப்போவதாகச் சொல்லிக்கொண்டார்’ என மாற்றிக்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். இது இன்னும் சிலநாட்களில் அப்படியே எங்கோ போய்விடும். ஆனால் இந்த அவதூறு மட்டும் அரட்டைகளில் அப்படியே நீடிக்கும். ஒவ்வொன்றுக்கும் பதில்சொன்னால் நான் வேறுவேலையே செய்யமுடியாது.

முதலில் இயல்விருதுக்கான யோசனையே என் கட்டுரை ஒன்றிலிருந்து வந்தது என அ,முத்துலிங்கம் சொல்லியிருக்கிறார். அமெரிக்காவில் தமிழன்னைக்குச் சமாதி என்ற கட்டுரை முதலில் ஒரு குழுமத்தில் வந்து பின்னர் திண்ணையில் வெளிவந்தது. புலம்பெயர்ந்த செல்வந்தர்களான ஈழத்தவர்கள் செல்வத்தை அப்படி வீணடிப்பதை கடுமையாக விமர்சனம்செய்திருந்தேன்.

இயல்விருது நிறுவப்பட்டபோதே அதன் அணுக்கக்குழுவில் இருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் என் சிபாரிசுகளை விரிவான அறிக்கைகளாக அளித்திருக்கிறேன். சுந்தர ராமசாமிக்கு முதல் விருது என்பதுகூட என் சிபாரிசிலும் இருந்தது அவரைப்பற்றிய ’சைட்டேஷனில்’கூட என் வரிகள் உண்டு. அதன்பின் வந்த விருதுகளில் தமிழகத்தில் விருதுபெற்றவர்களை பெரும்பாலும் நான் சிபாரிசு செய்திருந்தேன்.

நான் முக்கியமாக சிபாரிசு செய்த படைப்பாளிகள் பொருட்படுத்தப்படாமல் வெறும் பேராசிரியர்களுக்கு பேராசிரியர்கள் அடங்கிய நடுவர் குழுவே பரிசை கொடுத்ததை கண்டித்து இயல்விருதின் மரணம் என்ற கட்டுரையை கடுமையான மொழியில் எழுதினேன். என் பெருமதிப்புக்குரிய நண்பரான அ.முத்துலிங்கம் அவர்கள் அதனால் வருந்தினார். ஆனால் அடுத்த ஆண்டே என் பரிந்துரையில் இருந்த இருவருக்கு விருது ஒரே ஆண்டில் அளிக்கப்பட்டது. ஞானி, ஐராவதம் மகாதேவன். அவ்விருதை வழங்கி உரையாற்றியிருக்கிறேன்

இயல்விருதை வழங்குவதற்காகவே கனடா சென்றிருக்கிறேன். எஸ்.பொன்னுத்துரைக்கு அவ்விருதை வழங்கி உரையாற்றினேன். இப்படைப்பாளிகள் அனைவரைப்பற்றியும் மிக விரிவான விமர்சனங்களும் எழுதியிருக்கிறேன். சொல்லப்போனால் அவர்களைப் பற்றிய விரிவான கட்டுரைகளை நான் மட்டுமே எழுதியிருக்கிறேன்

பரிந்துரை என்கிறேன், அது அறிவார்ந்த பங்களிப்பு மட்டுமே ஒழிய செல்வாக்கு அல்ல. இயல்விருதுக்கான நடைமுறைகளும் விதிகளும் நன்கு வரையறுக்கப்பட்டவை. அவர்களுக்கு இலக்கியச் சூழலில் முக்கியமானவர்களைச் சுட்டிக்காட்டுவதை மட்டுமே செய்திருக்கிறேன். அவர்கள் மேல் எந்த செல்வாக்கையும் நான் செலுத்தமுடியாது. நான் சுட்டிக்காட்டிய பலர் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமில்லை.முடிவு அவர்கள் உருவாக்கும் நடுவர்குழுவுக்குரியது மட்டுமே.

இயல்விருது எனக்கு 2014ல் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கும் நான்காண்டுகளுக்கு முன்னரே அ.முத்துலிங்கம் எனக்கு அதை வழங்கும் எண்ணம் நடுவர்களுக்கு இருப்பதாகச் சொன்னார். ஆனால் எனக்கு தயக்கம், அவ்விருதில் எனக்கிருக்கும் பங்களிப்பு பற்றி பொதுவாக அனைவருக்கும் தெரியும். நானே அதைப் பெற்றுக்கொள்வது என்பது சங்கடமானது என நினைத்தேன். ஆனால் அ.முத்துலிங்கம் அவர்கள் ஏற்கனவே எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது அளிக்கப்பட்டது, நான் பெற்றபின்னரே அடுத்த தலைமுறையினருக்கு விருதுகள் அளிக்கப்பட முடியும் என்றார்.அதன்பின்னரே அதை ஏற்றுக்கொண்டேன்.இவை சார்ந்த மின்னஞ்சல்களும் உள்ளன.

நான் கனடா சென்றது 2001ல். ஆனால் 1999 லேயே அதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. அ,முத்துலிங்கம் தனிப்பட்ட முறையில் என்னை அழைத்திருந்தார். ஆனால் என்னிடம் ரேஷன் கார்டு இருக்கவில்லை. ஆகவே பாஸ்போர்ட் பெற முடியவில்லை. பலவகையிலும் முயன்றும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. இறையன்பு ஐ.ஏ.எஸ் வழியாகக்கூட முயன்று பார்த்தேன். முடியாமல் விட்டுவிட்டேன்

அடுத்த ஆண்டு மீண்டும் ரேஷன்கார்டு விண்ணப்பிக்க வாய்ப்பு வந்தபோது அ.கா.பெருமாள் முயற்சியில் ரேஷன்கார்டு கிடைத்தது. அதன்பின்னரும் நேட்டிவிட்டி சர்டிபிகெட் என ஏதோ சிக்கல். அடுத்த சிக்கல் எங்கள் அலுவலக அனுமதி. அன்றெல்லாம் அது மிக அரிதானது. தியடோர் பாஸ்கரன் உதவியால் அதைப்பெற மீண்டும் ஆறுமாதம் ஆகியது. அதன்பின் கனடா நாட்டு விசா. அது இருமுறை மறுக்கப்பட்டது.

அன்று கனடாவிசா டெல்லியிலிருந்து மட்டுமே பெறமுடியும். என் வருமானத்தைப் பார்த்து ‘இந்த வருமானத்தில் எப்படி உயிர்வாழ்கிறீர்கள்?”என்று தூதரகத்தில் ஓர் அம்மாள் கேட்டாள். பலமுறை முயன்றபின் நண்பர் மு.கி.சந்தானம் [அன்று அவர் நேஷனல் புக் டிரஸ்டில் இருந்தார். பால் காரசின் காஸ்பல் ஆஃப் புத்தா நூலை மொழியாக்கம் செய்தவர்] முயன்று விசா கிடைத்தது. அவ்வாறு 1999ல் ஆரம்பித்த முயற்சி 2001ல் நிறைவேறியது

நடுவே பல சோர்வுகள். நான் மனம் தளரும்போதெல்லாம் அ.முத்துலிங்கம் அவர்கள் “நம்புங்க, நீங்க எப்டியும் கனடா வருவீங்க…” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நான் சென்ற முதல் வெளிநாட்டுப் பயணம். அன்று அகதிகள் கனடாவுக்குள் சென்றுகொண்டே இருந்தமையால் கெடுபிடிகள் மிகுதி. மத்திய அரசிலும் வெளிநாடு செல்வதற்கான கெடுபிடிகள் மிகுதி. என்னுடைய வீட்டுக்கு கடன் வாங்கியிருந்தேன். மொத்தக் கடனுக்கும் ஷூரிட்டி கொடுத்தபின்னரே அனுமதி கிடைத்தது.

அவ்வாறு கனடா சென்றேன். இந்த நாலந்தர வம்பர்களால் நினைவூட்டப்பட்டாலும் இதை எழுதும்போது அந்த முதல்பயணத்தின் பரவசம் நெஞ்சை நிறைக்கிறது

ஜெ

இரட்டைமுகம்

இரட்டைமுகம் -அரசியல்சழக்குகள்-கடிதங்கள்


அமெரிக்காவில் தமிழன்னைக்கு சமாதி!

‘இயல்’ விருதின் மரணம்

முந்தைய கட்டுரைபொருள்முதல் எதிர் கருத்துமுதல்
அடுத்த கட்டுரைமழைப்பாடலும் மழையும்