வெண்முரசை காவிய நோக்கு எதுவும் இல்லாமல் படிக்கிறேன்.அதனைப் படிப்பதற்கு காவிய நோக்கு அவசியம் இல்லை.இருக்குமாயின் அது ஒருவேளை சிறந்தாகவும் இருக்கலாம்.ஆனால் எனக்கு அது இல்லை.சமகால வாழ்வின் மீதான கூரிய விழிப்பு நிலை இருந்தால் போதுமானது.
வழக்கமாக நூல்களை எவ்வாறாக வாசிப்பேனோ அவ்வாறே வாசிக்கிறேன்.முதலாவது வாசிப்பில் பின்பக்கம் இருந்து கூட சில நேரங்களில் வாசிக்கத் தொடங்குவேன்.நடுப்பகுதியில் இருந்தும் தொடங்குவதுண்டு.ஒரு அத்தியாயம் விட்டு மறு அத்தியாயம் என தாவிக் கடப்பதும் உண்டு.இரண்டாம் வாசிப்பைக் கோருகிற நூல்களுக்கு மட்டும் ஆரம்பத்திலிருந்தே செல்வேன்.வெண்முரசு எப்படி வேண்டுமாயினும் வாசிக்க இயலக்கூடிய ,இரண்டாம் வாசிப்பையும் கோரக் கூடிய ,பல துணை நாவல்களால் படைக்கப்பட்டிருக்கும் பெரு நாவல்.பல உப நாவல்களால் படைக்கப்பட்டிருக்கும் காப்பியம்.
என்னுடைய நினைவுகள் ஒரு நாளுக்குரியவை.நம்முடைய காலத்தின் வரமும் சாபமும் இதுவே.மறுநாள் அதில் பாதி சதமானம் நில்லாது.மறு நாளுக்கும் மறு நாளில் அனைத்தும் அகன்றுவிடும்.குற்றமும் தண்டனையும் நாவலை எடுத்துக் கொண்டால் ,கடவுளுக்கு நிகராக மதுவிடுதியில் தோன்றுகிற குடிகாரன் பெயர் நினைவில் இல்லை.முடிவில் அவன் குதிரை வண்டியில் அடிபட்டுச் சாகும் வீதி அப்படியே நினைவில் உள்ளது.ரஸ்கொல்னிகொவ் பெயர் தவிர்த்து ஒரு பெயரும் எனது நினைவில் கிடையாது.
என்னுடைய வாசிப்பு முறை இப்படித்தான் இருக்கிறது.ஆனால் இதனைக் கொண்டு வெகுசுவாரஸ்யமாக வெண்முரசை வாசித்துச் செல்ல முடிகிறது.வெண்முரசைப் படிக்க ஒருவர் மஹா பாரதத்தை ஏற்கனவே அறிந்திருக்க வேண்டிய ஒரு அவசியமும் இல்லை என்பதற்கு என்னுடைய வாசிப்பு ஒரு சான்று.அதுபோலவே வாசித்து வரும் பகுதிகளைப் பற்றி அவ்வப்போது எழுதி வருதலும் நன்றே.கதாபாத்திரங்களை நினைவில் கொண்டிருந்தால் நன்றுதான்,அதை விட அதன் மனித சாரம் பதிவதே மேலானது.
பீஷ்மரின் சிறுவயது தொடங்கி சிகண்டி ஆயுதப் பயிற்சி மேற்கொள்வது வரையிலான பகுதிகள் வரையிலான வாசிப்பு; ஆறுவிதமான அவதானிப்புகளைத் தருகின்றன.
- வெண்முரசு நாவல் பூரணமான,அல்லது அதிகமான தமிழ் சொற்களால் ஆக்கபட்டிருக்கும் படைப்பு.இதில் உள்ள பல தமிழ் சொற்கள் சுகமானவை,புதுமையானவை.தன்னேற்பாடு,அணுக்கப்பணியாளன்,தொண்டு மகளிர்,ஊன் சோறு,மிச்சிலை,பித்தி இப்படியான தூய தமிழ் சொற்கள்.அசைவம் என்பதற்கு ஊன் சோறு என்கிற சொல் சிறப்பாக பதிலீடு செய்கிறது.நிச்சயதார்த்தம் என்பதற்கு பதிலாக தன்னேற்பாடு என்னும் சொல் மிகவும் சுகமானது.ஒருவர் இந்த நாவலில் இருந்து தனித்தமிழ் சொல்லகராதி ஒன்றினை உருவாக்கிட இயலும்.வெண் முரசின் சிறப்புகளில் ஒன்று
இது.ஒட்டுமொத்தமாக ஜெயமோகன் படைப்புகளில் இருந்தும் ஒருவர் இந்த பணியை மேற்கொள்ளமுடியும்.தமிழில் எழுத வேண்டும் என்கிற உறுதியை ஏற்றிருக்கும் தமிழ் எழுத்தாளர் அவர்.
- அம்பை இந்த நாவலில் கொள்கிற பேருரு நாட்டார் தன்மை நிரம்பியது.இதனை ஒருவகையான காப்பியத் தலைகீழாக்கம் என்று வாசிக்கலாம்.அம்பை கொள்ளும் கோலம் களியங்காட்டு நீலி போன்ற இசக்கியரின் வரலாறு போல இருக்கிறது.
- 3.இந்த காப்பியம் கவிதையால் கடந்து செல்கிறது.முக்குணங்களும் காசி மன்னனிடம் மூன்று மகள்களாக பிறந்திருக்கின்றனர் என்பதிலிருந்து ; பீஷ்மரின் இளமையின் தனிமை,மலையுச்சியின் ஒற்றை மரத்தில் கூடும் தனிமையை ஒத்ததாக இருக்கிறது என்பது தொடங்கி ஒவ்வொரு பகுதியும் கவிதையால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்ற்ன
அம்பை சோர்வுற்று மரணிக்க முயலும் பகுதியில் சுவர்ண தேவதை வந்து அம்பையை மீட்கிறாள்.அந்த பகுதி முழுவதுமே கவிதையால் ஆனது
அம்பையிடத்தே விடுபட்டு விழந்த துளி ஒளி போல சுவர்ணா வந்து நிற்கிறாள்
நான் மொட்டுகளில் வாழும் தேவதை
உடன் பிறந்தவள் சூரியபுத்திரியான சாவித்ரி
அவள் என்னை நோக்கிப் புன்னகைக்கும் போது
மலர்களைத் திறந்து வெளிவந்து
மண்ணில் உலாவுவேன்
காலையொளி பொன்னிறமாக இருப்பது வரையில்
இங்கே இருப்பேன்
பெண்குழந்தைகளின் கனவில் மலர்கொண்டு
காட்டுபவள் நான்
நீ படியிறங்கும் போதெல்லாம்
நான் உன்னுடன் துள்ளிக் குதித்தேன்
பாவாடை சுழன்றாடிய போது
உன்னுடன் இளங்காற்றாய் சுழன்றேன்
நீ சேர்த்து வைத்த குன்றிமணிகளை
வளையல் துண்டுகளை
வண்ண வண்ண விதைகளை
எண்ணினேன்
நூற்றுக் கிழவியாகவும்,முலையுண்ணும்
மழலையாகவும்
மாறிமாறிப் பேசி
நீயுன் அன்னையைப்
பரவசப்படுத்திய போது
அவள் தந்த முத்தங்களை
எல்லாம் நானே
பெற்றுகொண்டேன்
ஜெயமோகன் தாகூருக்கு நிகரான கவியாக, சுவர்ணா ருபம் முளைத்து தாண்டிச் செல்லும் பகுதி இது.இந்த கவிதைகள் தொடர்ந்து நீண்டு செல்கின்றன.
கவியாக ஜெயமோகனைக் கண்டுணர்ந்து சேகரித்துக் கொள்ளும்,தொகுத்துக் கொள்ளும் வாய்ப்பும் வாசகர்குண்டு.
- ஜெயமோகனின் அழகியல் உணர்ச்சியில் குழந்தைமையின் தாக்கம் அதிகம் என்பதை வெண்முரசில் வாசகன் உணரமுடியும்.விஷ்ணுபுரம் முதற்கொண்டு ஆகிவரும் பண்பு இது.
- அம்பையை ஜெயமோகன் உருவாக்கியிருக்கும் விதத்தை ஒரு நேர்மறையான ,ஆழமான பெண்ணிய நோக்கு எனக் கருதும் வாய்ப்பும் வாசிப்பில் இருக்கிறது.
- சமகால வாழ்கையுடன் இந்த காப்பியம் ,அல்லது நாவல்,அல்லது எழுத்து என எப்படி வைத்துக் கொண்டாலும் சரிதான்; கொள்ளும் உறவு அபாரமானது.பீஷ்மர் ,அம்பை எல்லோரும் எல்லா காலத்திலும் இருப்பவர்களே.வேறு வேறு பெயர்களில் வேறுவேறு காலங்களில் என்பதை உணரச் செய்யும் பிரதி இது